அரசியலமைப்பு சட்டமாற்றம் – பாகம் 8 -வை.எல்.எஸ்.ஹமீட்

Spread the love

Untitledஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

அதிகார பங்கீடு  (DISTRIBUTION /DISPERSAL OF THE POWERD).

நாம் இது வரை ஜனாதிபதி ஆட்சி முறையின் சாதகத்தன்மை, தொகுதிமுறை தேர்தலிலுள்ள பாதகங்கள், விகிதாசாரத்தேர்தல் முறையிலுள்ள சாதகங்கள் தொடர்பாக பார்த்தோம். தேர்தல் சீர்திருத்தத்தைப் பொறுத்த வரை ஆட்சியாளர்கள் முன்மொழியக் கூடிய சாத்தியமான முறைகள், நாம் முவைக்க கூடிய மாற்று யோசனைகள் தொடர்பாக இன்ஷா அல்லாஹ் அதிகாரப்பங்கீடு தொடர்பாக ஆராய்ந்த பின்னர் பார்ப்போம்.

அதிகாரப்பங்கீட்டைப் பொறுத்த வரை எங்களுக்கு முன்னாலுள்ள கேள்விகள்.
01- முஸ்லிம்களைப் பொறுத்த வரை அதிகாரப்பங்கீடு சாதகமா? அல்லது பாதகமா?
02- பாதகமானால் மாற்றுத்தீர்வுண்டா? அவை எவை?
03- சாதகமானால் அது அதிகபட்ச அதிகாரப்பங்கீடா? அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பங்கீடா?
04- சமஷ்ட்டி ஆட்சி சாதகமா? அல்லது பாதகமா?
05- தலைப்பை `ஒற்றை ஆட்சி` என்று போட்டு விட்டு விடயதானங்களை சமஷ்ட்டியாக உள்வாங்கப்படுவதை நாங்கள் எவ்வாறு பார்க்கின்றோம்?
06- வடகிழக்கு இணைப்பு சாதகமா? அல்லது பாதகமா?
07- தனி அலகு சாத்தியமா? அது சாதியமானால், பாதகமா? அல்லது சாதகமா?
08- அதிகாரப்பகிர்வின் விடயங்களில் எவ்வகையான விடயங்கள் மத்தியிடம் இருக்க வேண்டும் ? எவ்வகையான விடயங்கள் மாகாணத்திடம் இருக்க வேண்டுமென்பதில் எமது நிலைப்பாடு என்ன?
09- குறிப்பாக பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படுவதில் எமது நிலைப்பாடு என்ன?
10- ஆளுனரின் அதிகாரம் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன?
11- தமது சுய நிர்ணய உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டுமென்று சம்பந்தன் ஐயா அடிக்கடி கூறுகின்றார். சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? அது அவர் கோருவது போல் அங்கீகரிக்கப்பட்டால், அது வடகிழக்கு முஸ்லிம்கள் மீது செலுத்தக்கூடிய தாக்கம் என்ன?
12- நாம் ஒருமித்து ஒரு தீர்வை முன்வைத்து, அது சில வேளை அரசினால் ஏற்றுக்கொள்ளப்படாத விடத்து, எமது அதிகுறைந்த நிலைப்பாடு ( Fall Back Option) ஒன்று தயாரிப்பதில் நமது நிலைப்பாடு என்ன?
13- நாம் நமக்குரிய மேற்கூறிய வகையிலான நிலைப்பாடைத் தயாரித்து, ஆட்சியாளர் முன்வைத்து அதனை உள்வாங்கும் விதத்தில் (pro active) ஆக செயற்பட்டப் போகின்றோமா? அல்லது ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் முடித்து ஒரு வரைபை முன்வைக்கும் பொழுது, அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கின்றவர்களாக (reactive) ஆக செயற்படப் போகின்றோமா?
14- அவ்வாறு நாங்கள் pro active ஆக இருக்க விரும்பினால், அரசியல், சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டையெடுத்து, அதை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சந்தைப்படுத்த வேண்டியது அவசியமில்லையா?
15- அல்லது காண விழையப்படுகின்ற அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்கில்லை என்பது எமது நிலைப்பாடா?
16- அவ்வாறு சந்தைப்படுத்துவதற்கு ஒரு திட்டம் தேவையில்லையா ?என்பனவாகும்.

இக்கேள்விகள் தொடர்பாக இன்ஷா அல்லாஹ் சில தெளிவுகளை ஏற்படுத்த இத்தொடர் கட்டுரை முயற்சிக்கின்றது. இந்நோக்கம் வெற்றி பெற எல்லம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

அதிகார பங்கீடு

அதிகராப் பங்கீடு தொடர்பாக பேசும் பொழுது, யாருடைய அதிகாரத்தினைப் பங்கிடுவதென்ற  கேள்வி எழுகின்றது. பதில் மத்திய அரசினுடைய அதிகாரம் என்றால், அரசினுடைய அதிகாரம் என்ன? அதற்கு முன் ‘அரசு’ என்றால் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.

இவற்றிற்குரிய விடை-

மூன்று துறைகள்  சேர்ந்தது அரசு எனப்படும்.

அவைகள்
01- சட்டவாக்கத்துறை
02- நிறைவேற்றுத்துறை
03- நீதித்துறை

இம்மூன்று துறைகளும் அதிகாரமுள்ள துறைகளாகும். இம்மூன்று துறைகளையும் சேர்த்து அரசு என அழைக்கப்படும் பொழுது, இம்மூன்று துறைகளுக்குமுரிய அதிகாரங்களைச் சேர்த்து, அரச அதிகாரம் என அழைக்கப்படும்.

எனவே, அரச அதிகாரத்தினைப் பங்கிடுவது எனும் பொழுது இம்மூன்று துறைகளின் அதிகாரங்களைப் பங்கிடுவதினை குறிக்கும். ஆனால், எல்லா கட்டங்களிலும் இம்மூன்று துறைகளினதும் அதிகாரங்களை ஒன்றாகப் பங்கிடுவதில்லை.

சில நேரம் ஒரு துறையினுடைய அதிகாரம் மட்டும் பங்கிடப்படும். சில நேரங்களில் இரண்டு துறைகளின் அதிகாரங்களும், சில நேரங்களில் இம்மூன்று துறைகளின் அதிகாரங்களும் பங்கிடப்படும்.

இவற்றில் சில துறைகளின் அதிகாரங்களை உப பிரிவுகளாகப் பிரித்து, அந்த உப பிரிவுகளை மாத்திரம் பங்கிடுவதும் இந்த அதிகாரப்பங்கீட்டில் உள்ளடக்கப்படும்.

அதாவது சட்டவாக்கத்துறை அதிகாரத்தினை சட்டவாக்க அதிகாரம் (power of legislation)  உப சட்டவாக்க அதிகாரம். (power of subsidiary legislation) எனப்பிரிக்கப்படும். இந்த உப சட்டவாக்க அதிகாரத்திலும் படித்தரங்கள் இருக்கின்றன. உபவிதிகள் (By-laws) ஆக்குகின்ற அதிகாரமும் இவற்றில் அடங்கும்.

அதே போன்று, நிறைவேற்றுத்துறை அதிகாரத்தினை (Executive Power)  நிறைவேற்றுத்துறை அதிகாரம். மற்றும் நிருவாக அதிகாரம் (Administrative Power) எனப்பிரிக்கப்படும். நீதிதுறை அதிகாரம் இவ்வாறு பிரிக்கப்படுவதில்லை.

எந்தெந்த துறையின் அதிகாரங்கள் பங்கிடப்படுகின்றன. அவை எவ்வளவு தூரத்திற்கு அல்லது அவற்றின் உப பிரிவுகளின் எந்த மட்டம் வரை பங்கிடப்படுகின்றன என்பவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மாறுபடுகின்றன.

பொதுவாக உலகில் பின்வரும் வகையான அதிகாரப்பங்கீடுகள் காணப்படுகின்றன.
01- Division of power அதிகாரப்பிரிப்பு/ வேறாக்கம்
02- Devolution  of  power அதிகாரப்பகிர்வு
03- Power of  local government உள்ளூராட்சி அதிகாரம்
04- decentralization of power பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரப்பரவலாக்கம்
05- De concentration of power அதிகாரப்பரவலாக்கம்/ அதிகாரச்செறிவு நீக்கம்
(முடிந்தளவு ஆங்கிலப்பதங்களோடு பொருந்தக்கூடிய, ஆங்கிலப்பதங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய தமிழ் பதங்கள் தரப்படுகின்றன. ஆனாலும், இவற்றின் சரியான பதங்களை ஆங்கிலப் பதங்களைக் கொண்டு அடையாளங்காண்பது சிறந்தது)

மேற்கூறப்பட்ட அதிகாரங்களை  இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

01- கிடையான அதிகாரப்பங்கீடு (Horizontal  Distribution of power)
02- செங்குத்தான அதிகாரப்பங்கீடு( Vertical Distribution of power)

முதலாவது பிரிவான கிடையான பகிர்வின் கீழ், decentralization of power (பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கம்) மற்றும் De concentration of power (அதிகாரப்பரவலாக்கம் ) என்பன உள்ளடங்கும்.

இரண்டாவது பிரிவான செங்குத்தான அதிகாரப்பங்கீட்டின் கீழ்
01- Division of  power அதிகாரப்பிரிப்பு
02- Devolution of  power அதிகாரப்பகிர்வு
03- Power of  local government உள்ளூராட்சி அதிகாரம் ஆகியன உள்ளடங்கும்.

இக்கட்டுரை தொடரின் பிரதான இலக்கு செங்குத்தான அதிகாரப்பங்கீட்டைப்பற்றி, குறிப்பாக Division of  power (அதிகாரப்பிரிப்பு),  Devolution of  power (அதிகாரப்பகிர்வு )ஆகியவற்றை ஆராய்வதாகும்.

தெளிவிற்காக ஏனையவற்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, குறித்த இரண்டு பிரிவுகளையும் ஆழமாக ஆராயலாம். ஏனெனில், இவை தொடர்பான  சிறிய தெளிவு ஏனைய இரண்டையும் விரிவாகப் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

செங்குத்தான மற்றும் கிடையான அதிகாரப் பங்கீடுகளுக்கிடையான அடிப்படை வித்தியாசம் என்னவெனில், செங்குத்தான அதிகாரப் பங்கீடு பிராந்தியங்கள் (territory) குறித்தான அதிகாரப் பங்கீடாக இருக்கின்ற அதே வேளை, கிடையான அதிகாரப்பங்கீடு நிர்வாகத்தை இலகுவாக்க, நிறைவேற்று மற்றும்  நிர்வாக அதிகாரங்களைப் பிரித்து கீழ் மட்டத்திற்கு வழங்குவதாகும்.

De concentration of power (அதிகார பரவலாக்கம்/ செறிவு நீக்கம் )

இங்கு நிறைவேற்று அதிகாரத்தின் (Executive power ) ஒரு உப பிரிவான நிர்வாக அதிகாரம் administrative power நாட்டின் நாலா பகுதிகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றது. இறுதி பொறுப்புக்கூறல் அத்திணைக்கள /நிறுவனத் தலைவருடைய கடமையாகும்.

இவ்வாறு நிர்வாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகின்ற பிரதேச நிர்வாகம் அப்பிரதேசத்தினைச் சேர்ந்த எந்தவொரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபைக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடில்லை. மாறாக, மத்திய ஆட்சிக்கே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

இவ்வாறான கட்டமைப்புக்கள் விஷேட சட்டங்கள் எதன் மூலமும் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, நிறைவேற்று /நிர்வாக அதிகாரங்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.

இங்கு நிறைவேற்று அதிகாரத்திற்கும் (Executive  power)  நிர்வாக அதிகாரத்திற்கும் (administrative power) இடையிலுள்ள வித்தியாசத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைத்தீர்மானம் (policy decisions) எடுக்கின்ற அதிகாரம் நிறைவெற்றுத் துறையாகும். அக்கொள்கைத் தீர்மானத்தினை அமுல்படுத்துகின்ற பொறுப்பு நிர்வாகத்துறைக்குரியது.

இவ்வகையான அதிகாரப்பரவலாக்கம் (De concentration  of power) இற்கான உதரணமாக அரசாங்க அதிபர் காரியாலையம், காணிப்பதிவாளர் காரியாலையம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Decentralization of power (பன்முகப்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு)

இதன் பிரதான அம்சங்கள்.

இங்கு நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பங்கிடப்படுகின்றன. நிறைவேற்றதிகாரம் என்கின்ற பொழுது, பாரிய கொள்கைத் தீர்மானம் (major policy decisions) எடுக்கின்ற அதிகாரமல்ல. மாறாக, சிறிய கொள்கைத்தீர்மானம் ( minor policy decisions ) எடுக்கின்ற அதிகாரம் மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்படும்.

இந்த வகை அதிகாரத்தினைப் பயன்படுத்துபவர்களும் தமது செயற்பாடுகள் தொடர்பாக  மத்திய  அரசிற்கு பதில் கூறக் கடமைப்பட்டவர்களே. இவ்வதிகாரக் கட்டமைப்பில் சில வேளை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இருக்கலாம். ( அவ்வாறிருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை).

ஆனால், இவ்வாறான சபைகள் ஆலோசனைகள் வழங்குகின்ற  அல்லது விடயதானங்களை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுகின்ற பணிகளைத்தவிர, நிதியை சுயமாகப் பெற்றுக்கொள்ளும் விடையத்திலோ அல்லது ஏனைய விடயங்களிலோ குறிப்பிடத்தக்க அதிகாரமில்லை.

சில நேரங்களில் சிறிய சட்டவாக்க அதிகாரம் (marginal legislative power) குறிப்பாக, உப விதிகளை ஆக்குகின்ற விடயங்களில் அதிகாரம் வழங்கப்படலாம். அறிஞர்கள் 1980ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபையை (District Development Council )ஐ இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்கள்.

குறிப்பு 1

மாவட்ட அபிவிருத்தி சபை பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப்பட்டது.

குறிப்பு-2

மாவட்ட அபிவிருத்திச் சபையும் பிராந்தியங்கள் தொடர்பானது தானே! ஏன் அதனைச் செங்குத்தான அதிகாரப்பகிர்வின் கீழ் கொண்டு வர முடியாதென்ற ஒரு கேள்வி எழலாம். வெளிப்படையில் அவ்வாறு தோன்றினாலும், மாவட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள செய்யப்பட்டமையுமே அதனைக் கிடையான பங்கீட்டின் கீழ் கொண்டு வரக்காரணம்.

உள்ளூராட்சி அதிகாரம்( Power of local government )

நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு வகையும் கிடையான அதிகாரப்பகிர்வாகும். உள்ளூராட்சி அதிகாரம் என்பது செங்குத்தான அதிகாரப்பகிர்வாகும்.

இதன் பிரதான அம்சங்கள்.

• பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இது உருவாக்கப்படுகின்றது.
• அதிகாரம், பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்றது. ( territorial distribution of power)
• ஒரு சிறியளவு சுய ஆட்சி (self government) தன்மையை வெளிப்படுத்துகின்றது.
• மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையினைக் கட்டாயமாகக் கொண்டது.
• அச்சபை மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக்கொண்டது.
• முன்கூறிய இரு வகையைப்போன்று மத்திய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டியதாக இல்லா விட்டாலும், மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தக்கூடியது.
• அதிகாரப்பகிர்வுள்ள நாடுகளில் சில வேளைகளில் பிராந்திய அலகுகளால் கட்டுப்படுத்தப்படலாம்.
• மத்திய அரசாங்கம் விரும்பும் போது, உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களை சுயமாக மீளப்பெறலாம் அல்லது மாற்றலாம். அதிகாரப்பகிர்வுள்ள நாடுகளில் (devolution or division of power) அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரத்தின் தன்மையைப் பொறுத்து சுயமாக என்ற பதத்தில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
• தங்களுக்குறிய நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஓரளவு சுதந்திரமும் அதிகாகாரமும் இருக்கின்றது. இருந்தாலும், மத்திய அல்லது பிராந்திய அரசுகளின் நிதியிலும் கணிசமானளவு தங்கியிருக்கின்றது.
• அதே நேரம் சில தத்துணிவு அதிகாரங்களும் இருக்கின்றன.
• சட்டவாக்க அதிகாரத்தின் (உப விதிகளை உருவாக்ககூடிய  அதிகாரம் By laws )ஒரு சிறு பகுதியும் நிறைவேற்று அதிகாகாரத்தின் சிறு பகுதியும் வழங்கப்படுகின்றது.
• அவர்களுக்கு வழங்கப்படும் உப விதிகளை ஆக்கக்கூடிய சட்டவாக்க அதிகாரம் மத்திய அல்லது மாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது.

மேற்படி மூன்று வகையான அதிகாரப் பகிர்வுகளையும் பார்த்தால், ஒன்றில் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு சிறுபகுதி அல்லது நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரத்தின் ஒரு சிறு பகுதி ஆகியன தான் இங்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஒரு விடயத்திலாவது முழுமையான சட்டவாக்க அதிகாரமோ அல்லது நிறைவேற்று அதிகாரமோ வழங்கப்படுவதில்லையென்பதனை கவனிக்கலாம்.

மறு புறத்தில் இம்மூன்று வகையான அதிகாரப்பங்கீடும் ஒன்றில் சாதாரண சட்டத்தின் மூலம் அல்லது நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரத்தின் மூலமே செய்யப்படுகின்றன. இவற்றில் எதுவும் அரசியல் அமைப்புச்சட்டத்தினூடாகச் செய்யப்படுவதில்லை.

அதே நேரம், நாங்கள் ஆழமாகப் பார்க்க இருக்கின்ற இரு வகை அதிகாரப்பங்கீடும் அரசியலமைப்பு சட்டத்தினூடாக வழங்கப்படுபவையாகும்.

குறிப்பு:-  

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் சில நாடுகளில் அரசியலமைப்புச் சட்டத்தினால் வரையறை செய்யப்படுகின்றன. இலங்கையிலும் அவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தினால் வரையறை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*