அரசியலமைப்பு சட்டமாற்றம் – பாகம் 9 -வை.எல்.எஸ்.ஹமீட்

Spread the love

nbஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

அதிகாரப் பங்கீடு.

கடந்த தொடரில் நாம் மூன்று வகையான அதிகாரப்பங்கீடு தொடர்பாகப் பார்த்தோம். அவைகள் ஒன்றில் பாராளுமன்றத்தின் சாதாரண சட்டங்களினூடாக அல்லது நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களினூடாக செய்யப்பட்டதனையும் பார்த்தோம்.

அதே நேரம் நாம் விரிவாக ஆராயவிருக்கின்ற ஏனைய இரு வகை அதிகாரப்பங்கீடுகளும் (Division Of Power, Devolution Of Power) அரசியலமைப்புச் சட்டத்தினூடாகச் செய்யப்படுகின்றன எனவும் பார்த்தோம்.

ஏன் இவ்வாறான அதிகாரப்பங்கீடுகள் அரசியலமைப்புச் சட்டத்தினூடாகச் செய்யப்படுகின்றன? அவற்றின் சாதக, பாதகங்கள் என்ன? அரசியலமைப்புச்சட்டம் என்றால் என்ன? அதன் அடிப்படைத்தன்மைகள் என்ன? என்பவற்றைப்பற்றி நாம் ஆராய வேண்டும்.

இவற்றை ஆராயுமுன் இவற்றுடன் தொடர்புபட்ட இன்னும் சில அடிப்படை விடயங்கள் சம்பந்தமாகவும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

இங்கு நாம் முக்கியமாக அதிகாரப்பங்கீடு தொடர்பாக ஆராய்வதற்கான காரணம் இவ்வதிகாரப்பங்கீடு நம் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டதென்பதாகும். இதனை நம்மில் பலர் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு கிழக்கிற்கு விஜயம் செய்த பொழுது பல முஸ்லிம் அமைப்புக்களும், தனி நபர்களும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். இது முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கின்றதென்பதனைக் காட்டுகின்ற நல்லதொரு சமிக்கையாகும்.

அதே நேரம், அவ்வாறான முன்மொழிவுகளில் சில முஸ்லிம்களுக்குப் பாதகமான அம்சங்களையும் கொண்டிருந்தன. ஒரு முன்மொழிவில், ஒற்றை ஆட்சியாக இருக்க வேண்டுமென்று மேலே கூறி விட்டு, கீழே அவர்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் சமஷ்ட்டித்தன்மை வாய்ந்ததாக இருந்தன.

அரசும் ஒற்றையாட்சி என்று குறிப்பிட்டு விட்டு விடயதானங்களில் சமஷ்டித்தன்மையை உள் வாங்கவிருப்பதாக பலமான ஊகம் இருக்கின்றது என்று நாம் இத்தொடரின் ஒரு பாகத்தில் குறிப்பிடிருந்தோம்.

அவ்வாறு உள்வாங்கினால் சாதாரண பொது மக்கள் அதனைப்புரிந்து கொள்ளமாட்டார்கள். எனவே, வெளிப்படையாக ஒற்றையாட்சி என்று கூறிக்கொண்டு நடைமுறையில் சமஷ்டியைக் கொண்டு வர வேண்டுமென்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகின்றது.

எனவே, நாமும் அவ்வாறான முன்மொழிவுகளைச் செய்வதன் மூலம் அறியாத்தனமாக அரசுக்கு துணை போகின்றோமா? அல்லது அறிந்தே செய்கின்றோமா என்ற கேள்வியெழுகின்றது.

அதே போன்று, ஒரு பிரதியமைச்சரின் ஆலோசனைக்குழு என்ற பெயரில் ஒரு குழுவினர் 70 விகிதத்தொகுதியும் 30 விகித விகிதாசாரத்தேர்தல் முறையும் தேர்தல் சீர்திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டுமென்று கேட்டிருந்தனர்.

இந்த 70:30 விகிதம் என்பது தினேஷ் குணவர்த்தன தலைமையிலான தெரிவுக்குழு கடந்த காலங்களில் முன்வைத்த சிபாரிசாகும்.

இதனை இருபதாவது திருத்தத்தில் ஆரம்ப முன்மொழிவாக அரசு கொண்டு வந்த பொழுது, அதனை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் எதிர்த்ததினால் அதனை கைவிட்டு விகிதாசாரத்தினுள் தொகுதி முறை என்ற இன்னுமொரு முன்மொழிவினை அரசாங்கம் செய்தது. ( இந்த 70:30 என்ற விகிதாசாரம் 10 தொகுதி முறை என அழைக்கப்படும்). இது தொடர்பாக தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராயும் பொழுது விரிவாகப் பார்க்கலாம்.

ஆனால், அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் எதிர்த்து குப்பைக் கூடைக்குள் போடப்பட்ட ஒரு விடயத்தை பிரதியமைச்சரின் ஆலோசனைக்குழு என்று அடையாளப்படுத்துகின்றவர்கள் முஸ்லிம்களுக்காக முன்மொழிந்திருக்கின்றார்கள் என்றால், இது எதனைக்காட்டுகின்றது? என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே தான், அதிகாரப்பங்கீடு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் போன்றவற்றின் அடிப்படைத் தன்மைகளை விளங்கி, அது தொடர்பான போதுமான தெளிவு எம்மிடம் இருந்தால், ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் உள்ள சாதக, பாதகங்களை உணர்ந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டினை அடைய அது ஏதுவாக இருக்கும்.

இந்த அடிப்படையில் தான் இக்கட்டுரை சற்று ஆழமாக எழுதப்படுகின்றது. இருந்தாலும், இதனைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக முடிந்தளவு இலகுபடுத்த முயற்சிக்கப்படுகின்றது. ஆனாலும், ஒரு மட்டத்திற்கு கீழ் இதனை இலகுபடுத்த முடியாது. அவ்வாறு முயற்சி செய்தால், இதன் இலக்கையடைய முடியாமல் போகலாம். எனவே சற்று முயற்சியெடுத்து இதனைப்புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு வருவதற்கு முன் அதனோடு தொடர்புபட்ட சில விடயங்களை முதலில் பார்ப்போம். அவ்விடயங்களில் மிகவும் பிரதானமானது “இறைமை” என்பதாகும்.

இறைமை.

நாம் இறைமையுள்ள மக்கள். இறைமையுள்ள நாடு. இறைமையுள்ள அரசு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இறைமை என்றால் என்ன?

நாம் இன்று பேசுகின்ற அரசியல் யாப்பு பாராளுமன்றம், அரசாங்கம், அதிகாரப்பகிர்வு, ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி இவை அனைத்தினதும் அடிப்படை மூலம் இந்த இறைமை என்ற வார்த்தை தான் என்பது எம்மில் பலருக்குத்தெரியாமல் இருக்கலாம் .

இறைமைக் கோட்பாடு

இந்த இறைமை என்ற கோட்பாடு (Concept of sovereignty) வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே விவாதத்திற்குட்பட்டு வருகின்றது.

இறைமை என்ற எண்ணக்கருவின் அர்த்தம் தொடர்பான சர்ச்சையை விடவும், அதிகம் சர்சையுள்ள எண்ணக்கருவொன்று பெரும்பாலும் இருக்காது என்கின்றார் லாசா ஓப்பன் ஹெய்ம் (Lasa Oppenheim) என்கின்ற அறிஞர். (1)

இன்று வரை சர்வதேச ரீதியில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் இறைமை என்ற பதத்திற்கு இல்லை என்றும் அவர் கூறுகின்றார்.(2)

இதன் பொருள் இறைமை என்ற பதத்திற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் அல்லது பொருள் தான் இல்லையே தவிர, வரைவிலக்கணங்கள் அல்லது அர்த்தங்களே இல்லை என்பதல்ல.

உதாரணமாக கல்வி என்ற பதத்திற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் இன்று வரை இல்லை. அதற்காக வரைவிலக்கணங்களே இல்லாமலில்லை. அதே போன்று தான், இறைமை என்ற பதமும்.

இறைமை என்பதன் அடிப்படை அர்த்தம் அதிகாரம் என்பதாகும். ஆனால், அதன் ஆழம், அகலம், வீச்சு என்பவற்றில் தான் கருத்து வேறுபாடு இருக்கின்றது.

நாம் வரலாற்றில் மன்னராட்சி பற்றி அறிந்திருக்கின்றோம். மன்னரின் அதிகாரம் உச்சக்கட்டமானது. (Supreme authority)

அதனைக் கேள்விக்குட்படுத்த முடியாது.(Unchallengeable)
மன்னன் யாருக்கும்  பொறுப்புக் கூற வேண்டியவனல்ல. ( unaccountable)
மன்னன் கூறியது தான் சட்டம், immutable law)
மன்னன் எல்லா சட்டங்களுக்கும் மேலானவன்.,( above the law)
மன்னன் பிழை செய்ய முடியாதவன்., king can do no wrong) .

இவ்வாறெல்லாம் மன்னனின் அதிகாரம் தொடர்பாக சாதாரணமாக நாம் அறிந்திருக்கின்றோம். மனித அறிவு வளர்ச்சியின் பலனாக இவ்வதிகாரம் பல வகையில் வரைவிலகணப்படுத்தப்பட்டு அவை பல மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

வரலாற்று ரீதியாக  ரோமானிய ஜுரிஸ்ட் உல்பியன் Jurist Ulpian என்பவர், “மக்களின் அதிகாரம் அரசனுக்கு வழங்கப்படுகின்றது. அரசன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டவனல்ல. அவனுடைய வார்த்தை சட்டமாகும்” என்றார்.

இவருடைய கூற்றில் தொனிக்கின்ற இரண்டு விடயங்கள்.
01- அதிகாரம் மக்களுடையது.
02- அது அரசனுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றது.

இந்த இரண்டு விடயங்களும் இன்றைய நவீன வரைவிலக்கணங்களிலும் நேராகவும், எதிராகவும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த பதங்கள் அரசியலமைப்புக் கோட்பாட்டுடன் மிகவும் தொடர்புபட்டிருக்கின்றன. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தினடிப்படையினைப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பதங்களைஅறிந்து கொள்வது அவசியமாகும்.

மத்திய காலப்பகுதியில் ( medieval period)  ஐரோப்பிய அரசர்கள் முழுமையான இறைமையை (அதிகாரத்தினை) கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய அதிகாரம் பிரபுக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

16 நூற்றாண்டளவில் சிவில் யுத்தங்கள் மத்திய ஆட்சியில் ( at the centre) பலமான அதிகாரத் தேவையை  உணர்த்திய சூழ்நிலையில், இறைமை கோட்பாடு மீண்டும் எழுந்தது. இந்தக் கால கட்டத்தில் மன்னர்கள் பிரபுக்களிடமிருந்த அதிகாரத்தினை மீண்டும் தம் கைகளுக்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறு தான் Modern Nation  State உருவாக ஆரம்பித்தது.

1&2  Oppenheim International Law cited in “The Evolution of State Sovereignty- A Historical Overview- M P Ferreira Snyman ” p-1

(பத்தாம்  பாகம் தொடரும்).

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*