அரசியலமைப்புச் சட்டமாற்றம் பாகம் -10- வை.எல்.எஸ்.ஹமீட்

Spread the love

nbஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

இறைமை  என்பதன் பாரம்பரிய ரீதியான அர்த்தம்..(Traditional understanding of sovereignty )

இறைமை என்பதற்கான பாரம்பரிய அர்த்தத்தின் சொந்தக்காரராக  Jean Bodin (1530-1596)  என்ற அறிஞர் கருதப்படுகின்றார். அவர் தனது Six Books of The Republic இல் குறிப்பிட்டதன் படி, இறைமை என்பது முழுமையான சுயமாக சட்டம் உருவாக்கும் தத்துவத்தைக் கொண்டது என்று கூறுகின்றார்.  (Sovereignty primarily entails the absolute and sole competence of law making within the territorial boundaries of a state) 1

அதே நேரம் Bodin அதிகாரம் மக்களிடமிருந்து மன்னனுக்கு செல்கின்றதென்பதை நிராகரிக்கின்றார். தெய்வீச் சட்டம் (Divine Law) மற்றும் இயற்கை சட்டம் (Natural Law) ஆகியவையே மன்னனுக்கு இறைமையை வழங்குகின்றது.எனவே, அவன் அந்த சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். வேறெந்த மனிதச்சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல என்பது அவரது கருத்தாகும்.

(இங்கு தெய்வீக மற்றும் இயற்கைச்சட்டங்களை விரிவாக விபரிக்க முனையவில்லை. சுருக்கமாக , இறைவனால் அருளப்பட்ட சட்டங்கள் உதாரணமாக, மூசா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ” பத்துக்கட்டளைகள்” ( Ten Commandments ) மற்றும் தௌறாத் வேதம் , ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “இன்ஜீல் வேதம் “போன்றவற்றில் அல்லது வேறு வேத நூல்களில் குறிப்பிடப்பட்ட சட்டங்கள் தெய்வீகச்சட்டமெனவும் இவற்றிலிருந்து மனிதப்பகுத்தறிவு சரிக்கும் பிழைக்குமிடையில் வித்தியாசத்தைக் காட்டுகின்ற விடயத்தில்  புரிந்து கொண்டதாகக் கருதப்பட்டவை இயற்கைச் சட்டமெனவும் அழைக்கப்பட்டது)

(இதிலிருந்து, உலக சட்டங்கள் அனைத்தினதும் மூலம் இஸ்லாம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் )

இங்கு கவனிக்க வேண்டியது ரோமானிய jurist உல்பியன், மக்களின் அதிகாரம் (இறைமை) அரசனுக்கு வழங்கப்படுகின்றது. அது முழுமையானது (absolute ) என்று கூறுகின்றார். Bodin கூறுகின்றார், அதிகாரம் (இறைமை) மக்களிடமிருந்து மன்னனுக்குச் செல்லவில்லை. மாறாக, தெய்வீகச்சட்டம், இயற்கைச்சட்டம் ஆகியவற்றின் மூலமாகவே மன்னனுக்கு இறைமை செல்கின்றது. அது மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்பட முடியாதது என்று.

Bodin இனுடைய இறைமைக் கோட்பாட்டை பல அரசியல்துறை எழுத்தாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், இறைமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தினாலும் ஏனைய மனிதச்சட்டங்களினாலும் கட்டுப்படுத்தப்படலாம் என்ற கருத்தில் இருந்தனர். 2

Social Contract (சமூக ஒப்பந்தம்)

இந்தப் பின்னணியில் சமூக ஒப்பந்த கோட்பாட்டிற்கமையவே இறைமை உருவாக்கப்படுகின்றதென்ற கருத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைக்கின்றது.  குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பிரித்தானியாவிலும் ஓரளவு ( சுருக்கம் கருதி சமூக ஒப்பந்தக் கோட்பாடிற்குள் செல்லவில்லை. அரசனுக்கும் மக்களுக்குமிடையில் எற்படும் உடன்பாடென்பது அதன் அர்த்மாகும்)

Thomas Hobbes

தோமஸ் ஹோப்ஸ் என்ற அறிஞர் அவரது Leviathan (1651) என்ற நூலில் Bodin அவர்களின் இறைமைத் தத்துவத்தை உள்வாங்கி சமூக ஒப்பந்தக்கோட்பாட்டின் முதல் நவீன வடிவத்தினை உருவாக்கினார்.

அதாவது, மக்கள் தங்கள் இறைமையை மன்னனுக்கு கொடுக்கின்றார்கள். அதற்குப்பகரமாக அவர் மக்களைப் பாதுகாக்க வேண்டும். தவறின், மக்கள் அந்த ஒப்பந்தத்தை மீளப்பெற்று புதிய ஒப்பந்த்ததினூடாக தங்களைப் பாதுகாக்க கூடியதாக இருக்க வேண்டுமென்பதாகும்.

Hobbes அவர்கள் Bodin யை விட ஒரு படி மேலே சென்று இறைமையுடய அரசன் எதற்கும் கட்டுப்பட வேண்டியவனல்ல. மாறாக, சமயம் உட்பட அனைத்தின் மீதும் அவனுக்கு உரிமையிருக்கின்றது என்றார். 3

இங்கு அவதானிக்கக்கூடியது என்னவென்றால், Bodin கூறினார். அரசன் தெய்வீக மற்றும் இயற்கைச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டவன் என்று. ஆனால், Hobbes கூறுகின்றார். அந்த சட்டங்களுக்கும் மன்னன் கட்டுப்பட்டவனல்ல என்று.

இங்கு தான் நாங்கள் absoluteness (முழுமை )என்ற சொல்லின் அர்த்தத்தைப் புரிகின்றோம். இறைமை என்றால் முழுமையான அதிகாரம். Absolute power. அதாவது யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாத அதிகாரம்.

ஆங்கில அகராதியான Black’s Law Dictionary (Sixth Edition)  கூறுகின்றது. இறைமை என்பது The Supreme , absolute and Uncontrollable Power என்று. அதாவது,  உச்சமான, முழுமையான, கட்டுப்படுத்த முடியாத அதிகாரம்.

Bouvier’s Law Dictionary (1856 Edition) கூறுகின்றது. It is the power to do everything   in a state without accountability. அதாவது யாருக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லாமல், ஒரு நாட்டில் எதையும் செய்யக்கூடிய அதிகாரம் தான் இறைமையாகும்.

நாம் இதுவரைப் பார்த்ததில் புரிந்து கொள்ள வேண்டியது, இறைமை என்கின்ற அதிகாரம் முழுமையானதும், யாராலும் கேள்விக்குட்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாததுமாகும் என்பதாகும்.

அதே நேரம், pufendorf (1632-1694) என்பவர் இறைமை என்பது அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கியதென்பதனை மறுக்கின்றார். இறைமை என்பது உச்ச அதிகாரமே ( Supreme power) தவிர, முழுமையான அதிகாரம் (Absolute Power) அல்ல. மறுபக்கத்தில், இறைமை என்பது அரசியல் அமைப்பு ரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடியதென்பது அவரது வாதமாகும்.

Jean Jacques Rousseau (1712-1778)

அதே நேரம், ரூசோ Rousseau வின் கருதுகோளின் படி, மக்களே உண்மையான இறைமையுடையவர்கள். மேலும், இறைமை பிரிக்க முடியாதது.

இவ்வாறு இன்னும் பலர் இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் (இவர்களுள் Hugo Grotius, John Locke, Montesquieu போன்றவர்கள் முக்கியமானவர்கள்)

நாம் இதுவரைப் பார்த்த கருத்துகளைப் பார்த்தால்,

இறைமை மக்களிடமிருந்து அரசனுக்குச்செல்கின்றது என்கின்றார் ரோமானிய jurist  Ulpian. (classical period).

இல்லை தெய்வீக மற்றும் இயற்கை சட்டங்களே அரசனுக்கு இறைமையை வழங்குகின்றது. எனவே, அச்சசட்டங்களுக்கு மட்டுமே அரசன் கட்டுப்பட்டவன் என்கின்றார் Bodin (1530-1596. )

இல்லை. தெய்வீகச்சட்டங்களுக்கும் கட்டுப்படுத்த தேவையில்லை. இது Hobbes (1588-1679)

இறைமை என்பது முழுமையானதே இல்லை. அது உயர்வானது மட்டுந்தான். இது Pufendorf 1632-1694 இன் கருத்து.

இறைமை மக்களுக்குரியதே -ரூசோ (1712-1778.)

(அதே நேரம் இலங்கை அரசியல் யாப்பின் மூன்றாம் சரத்தின் படி, இறைமை என்பது மக்களுக்குரியதும் பிரிக்க முடியாததுமாகும்)

எனவே , எவ்வாறு இறைமை என்ற சொல்லின் அர்த்தம் மாற்றத்திற்குட்பட்டு வந்திருக்கின்றதென்பதைப் பார்க்கலாம்.

இங்கு இரண்டு பிரதான விடயங்களைக் கவனிக்கலாம்.

01- இறைமை மக்களுக்குரியது. எனவே, ஆட்சியாளன் மக்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக, நடக்கின்ற பொழுது அவனை வீழ்த்தி விட்டு, புதிய ஆட்சியாளனைக் கொண்டு வரலாம்.(public sovereignty ) இதை தான் இன்று ஜனநாயக ரீதியாகச் செய்கின்றோம்.

02- இறைமை முழுமையானதல்ல. மாறாக, உயர்வானது. இறைமை அரசியலமைப்புச்சட்டம் மர்றும் ஏனைய சட்டத்தினூடாகக் கட்டுப்படுத்தலாம் என்பது ஒரு புறம். மறுபுறத்தில் இறைமையை (முழுமையாக கேள்விக்குட்படுத்த முடியாத எல்லையற்ற அதிகாரம்) மக்கள் வைத்துக்கொண்டு வழங்ககூடிய அதிகூடிய அதிகாரத்தை ஆட்சியாளர்களுக்கு வழங்குவது.

இங்கு கவனிக்க வேண்டிய அடுத்த முக்கிய விடயம், இறைமை மக்களிடமிருந்தால் என்ன?ஆட்சியாளர்களிடமிருந்தால் என்ன? அந்த நாட்டிற்கு இறைமை இருக்கின்றது. எனவே, வேறு எந்த நாடோ அல்லது வெளிச்சக்தியோ அந்த நாட்டில் தலையிடவோ அல்லது அந்த நாட்டை கேள்விக்குட்படுத்தவோ முடியாது என்கின்ற நிலை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதைத்தான் வெளியக இறைமை (external sovereignty ) எனப்படும். முன்னையது உள்ளக இறைமை (internal sovereignty ) எனப்படும்.

அதாவது, ஆரம்பத்தில் முழுமையான இறைமை என்பது ஒரு நாட்டிற்குள் அந்த ஆட்சியாளனின் அடிப்படை அதிகாரத் தன்மையை குறித்தது. பின்னர் அடுத்த நாடுகளுடனான உறவுகளில் அந்நாட்டின் இறைமையை குறித்து நிற்கின்றது எனக்கூறப்படுகின்றது.
(Initially the concept of absolute sovereignty referred to an attribute of a ruler inside the state, but later it came to be regarded  as an attribute of the state in its relations  with other states. ) 5 அதாவது, அரசனின் இறைமை என்ற நிலையிலிருந்து நாட்டின் இறைமை என்ற நிலையையடைகின்றது.

இதன்படி, ஒரு நாட்டிற்குள் எவ்வாறு சகல பிரஜைகளும் சமமோ, அதே போன்று சர்வதேச அரங்கில் சகல நாடுகளும் சமமாகும்.
எனவே, ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தலையிட முடியாது. அந்நாட்டின் உள்ளக விவகாரங்கள் எதுவாக இருந்தாலும், அதைத் தீர்மானிகின்ற அதிகாரம் அந்த நாட்டிற்கு இருக்கின்றது. அதே போன்று, சர்வதேசச் சட்டங்கள் ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த முடியாது. எந்தவொரு நாடும் அந்த நாட்டுடன் ஒப்பந்த ரீதியாகத்தான் தலையிட முடியும்.

இறைமை தொடர்பான இன்றைய நிலை.

இன்று ஒரு நாடு சர்வதேச சட்டத்திற்கு அல்லது ஏற்பாட்டிற்கு உடன்பாட்டால் ஒழிய  அல்லது ஒரு தரப்பு அல்லது பல் தரப்பு ஒப்பந்தங்களினூடாக ஏதாவது விடயங்களில் உடன்பாடு காணப்பட்டால் ஒழிய, எந்தவொரு நாடோ அல்லது சர்வதேச ஸ்தாபனங்களோ ஒரு உள்நாட்டின் விவகாரங்களில் தலையிட முடியாது என்ற நிலைப்பாடு இருக்கின்றது.

மறுபுறத்தில் அவ்வாறு முழுமையான இறைமை எங்குமில்லை. ஏனெனில், சகல நாடுகளும் சர்வதேச மற்றும் மனித உரிமை சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது. அதே நேரம் எந்தவொரு சர்வதேசச் சட்டமும் தானாக இன்னுமொரு நாட்டில் செல்லுபடியாவதில்லை. அது அந்த நட்டால் ஏற்றுகொள்ளப்பட்டு (அந்த நாட்டு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற) என்ற வாதமும் இருக்கின்றது.

உள்நாட்டு, சர்வதேச சட்டங்களின் நிலை.

Dualist Doctrine என்றால் என்ன?

உள்நாட்டுச்சட்டம் என்பது அந்த நாட்டால் உருவாக்கப்படுவதாகும். சர்வதேசச் சட்டம் என்பது சர்வதேச நாடுகள் தாமாக விரும்பி உருவாக்குவது. (Municipal law is derived from the particular law of the state,while international law finds its source in the common will of the States. In order to give an international rule effect in municipal law, it must be transformed into a rule of municipal law by an act of national legislation.)

சர்வதேசச்சட்டம் சர்வதேச மட்டத்தில் உருவாக்கப்பட்டு, அவை குறித்த நாடுகளிலுள்ள சட்ட ஏற்பாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகின்ற அதாவது இரட்டை அங்கீகாரம் தேவைப்படுகின்ற நிலை தான் Dualist Doctrine எனப்படும்.

மோசமான யுத்தங்களின் காரணமாக இறைமைக் கோட்பாட்டிற்கெதிரான கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் முனைப்புக்காட்டத் தொடங்கின.

அவை இந்த Dualist Doctrine இற்கு பதிலாக, நாடுகளின் உடன்பாட்டுடன் உருவாக்கப்படுகின்ற சர்வதேசச்சட்டம் உள்நாட்டு சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகின்ற தேவைக்ககுட்படுத்தப்படாமல் நேரடியாக அந்நாடுகளுக்கு செல்லுபடியாகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். உள்–வெளிநாட்டுச் சட்டங்களுக்கான மூலம் ஒன்றாக அமைய வேண்டும் (Monistic Approach) என்ற கருத்து எழுந்தது. இக்கருத்தை முன்வைத்தவர்களுள் Krabbe, Doguit, Kelson போன்றவர்கள் முதன்மையானவர்கள். 8

அதே நேரம், Krabbe என்பவர் சர்வதேசச்சட்டம் சர்வதேச நாடுகளின் விருப்பம் அல்லது உடன்பாடு Will of the states என்பதற்குமப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார் (அதன் விபரங்களுக்குள் இங்கு செல்ல விரும்பவில்லை)

எது எவ்வாறாக இருந்தாலும், சர்வதேசச்சட்டம் என்பது ஒரு நாட்டில் வாழ் சமூகத்தை விட, (சர்வதேச சமூகம் என்ற) ஒரு பாரிய சமூகத்திற்குரிய சட்டமாகும். எனவே, தேசிய சட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு வழி விட வேண்டும். International Law takes precedence over the national law என்பது அவரது கருத்தாகும். 9

சர்வதேச அரசு (world State)

Krabbe இன் கருத்துப்படி, இறுதியில் ஒரு உலகு அரசு (world State) உருவாக வேண்டும். அவ்வாறான அரசு உருவாகும் பொழுது, இன்றிருக்கின்ற தனித்தனி அரசுகள் ( Individual state) என்பது இல்லாமல் போகலாம் அல்லது அவர்கள் உலக சமூதயத்தின் நோக்கங்களை நிறைவேற்றுகின்ற அதிகாரிகள் என்ற மாட்டத்திற்கு இறங்கலாம் என்பது அவரது கருத்தாகும் .

இதே போன்று தான் Kelsen என்ற அறிஞரும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை நீக்க வேண்டும். ஓரே விதமான சட்டத்தினடிப்படையில், ஒரு உலக சமூதயத்தினை உருவாக்க வேண்டும். இறுதியாக, உலக அரசினை ஸ்தாபிக்க வேண்டும். அவ்வாறு அமையும் போது, அனைத்து உள்நாட்டுச்சட்டங்களும் சர்வதேச ( அரசின் ) சட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.11

முதலாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் League of Nations உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் United Nations  organization உருவாக்கப்பட்டது.

எதிர்காலத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் ஒன்று ஏற்பட்டு, அவ்வாறு ஒரு உலக அரசு (world State )உருவானாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறு உருவாக்கப்பட்டால், நம் சமூகத்திலும் தேசியத்தலைவர்களுக்கு பதிலாக  உலகத்தலைவர்கள் இருப்பார்கள்.

இந்த கட்டுரையின் நோக்கம் இறைமை என்பதன் பொருள் பற்றிய ஓரளவு தெளிவினை தருவதாகும். ஆனால், ஆர்வமுள்ளவர்களுக்காக இறைமை பற்றிய சில மேலதிகத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதே நேரம், பல விடயங்கள் விடப்பட்டிருக்கின்றன அல்லது மேலோட்டமாக மட்டுமே தொடப்பட்டிருக்கின்றன.

எனவே நாம் இதுவரை பார்த்தவற்றின் சுருக்கம் இறைமை என்பது முழுமையான கேள்விக்குட்படுத்தப்படாத அதிகாரமாகும். ஆனால், இன்று அவ்வாறான இறைமை இருக்கின்றதா? எதிர்காலத்தில் இந்த இறைமை என்ற பதத்திற்கு என்ன நடக்கலாம்? என்பது தொடர்பாகவே நாம் மேலதிகத் தகவல்களை வழங்கியிருந்தோம்.

அதே நேரம் உள்ளக இறைமை எனும் பொழுது அது மக்களிடமிருக்கின்றது. அரசுக்கு வழங்கப்படுவது உச்ச அதிகாரமே (Supreme Power) தவிர இறைமையின் அடிப்படையான (Absolute Power) முழுமையான அதிகாரமல்ல. இதனால் தான் அரசியலமைப்பொன்று தேவைப்படுகின்றது. அந்த அதிகாரங்கள் எவை என வரையறை செய்வதற்கு .

அந்த வரையறையை ஏன் அரசியலமைப்புச் சட்டத்தினூடாகச் செய்ய வேண்டும். அந்த அதிகாரத்தைப் பாராளுமன்றத்திற்கு வழங்கினால் பாராளுமன்றம் காலத்திற்கேற்ற வகையில் அந்த வரையறைகளை செய்ய முடியாதா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இதன் பொருள்  சட்டவாக்க அதிகாரத்தை மக்கள் பாராளுமன்றத்திற்குக் கொடுக்கின்ற பொழுது அரசியலமைப்புச்சட்டம் ஒன்று தேவை தானா?என்பதாகும்.
அல்லது அவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தினூடாக வரையறை செய்தாலும், இறைமையுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் வேண்டிய நேரத்தில் தேவையான திருத்தங்களை எதுவித சிரமமுமின்றிச் செய்ய முடியாதா? என்பது அடுத்த கேள்வியாகும்.

இந்தக்  கேள்விகளில் இருந்து பிறந்த தலைப்புத்தான் அரசியலமைப்புச் சட்டம் உயர்வானதா? அல்லது பாராளுமன்றம் உயர்வானதா? என்பதாகும். தொடரின் அடுத்த பாகத்தில் அது தொடர்பாகப் பார்க்கலாம்.

குறிப்பு:- இந்த கட்டுரையின் நோகத்தோடு தற்போது நேரடியாகத் தொடர்பு படாத போதும், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கோரி நிற்கின்ற சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆராயும் போது, தேவையென்பதால் கீழ் வரும் விடயம் தரப்படுகின்றது. தயவு செய்து இதனை ஊன்றி வாசித்து மனதிலலிருத்தவும். ஏனெனில், இதில் குறிப்பிடப்படும் விடயத்திற்கும் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கும் தொடர்பிருக்கின்றது.

The Nation State

பிராந்தியம், இனம், வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, சுய நிர்ணைய உரிமை கோருகின்ற ஒரு சமூகம் அப்பிராந்தியத்தினை ஓர் இறைமையுள்ள பிராந்தியமாகக் கட்டமைத்தும், ஒரு Nation State ஐ உருவாக்கலாம். அவ்வாறு உருவாக்கினால், அது சில வேளை முழுமையான இறைமையுடைய சுதந்திர நாடாக இல்லாவிட்டாலும், ஒரு தன்னாதிக்கப் பிராந்தியமாக அங்கீகரிகப்படலாம்.

இக்கு கவனிக்கப்பட வேண்டியது:- இறைமைக்கும் தமிழ் த்ரப்பு கோருகின்ற சுய நிர்ணய உரிமைக்கும் இடையேயுள்ள தொடர்பு. Nation (தேசியம்) என்ற சொல்லும் State (அரசு அல்லது நாடு )என்ற சொல்லுக்கும் இடையேயுள்ள தொடர்பு மற்றும் தேசியம் என்பதன் பொருள் போன்றனவாகும். இவைகள் தொடர்பாக பின்னர் ஆராய்வோம்.

பதினொராம் பாகம் தொடரும்………….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*