கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 44வது படைப்பாளியாக இணைகிறார் கவிதாயினி ராஹிலா ஹலாம் அவர்கள்-நேர்காணல் உள்ளே…

Spread the love

14719381853303கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர் பெண் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா  நேசனின் 44வது படைப்பாளியாக இணைகிறார்  சிறுகதை எழுத்தாளர் கவிதாயினி ராஹிலா ஹலாம் அவர்கள்.

“பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று ‘பெண்’ என்பதே. ஆணாதிக்கமில்லையென்று கூறினாலும், மறைமுகமாக சில இடங்களில் வெளிப்படையாகக்கூட  ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும்” என பெண்ணியக் கருத்துக்களோடும் குடும்பம், சமூகம், குழந்தைகள் பற்றியும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். இவரின் வித்தியாசமான பதில்களுடன் நேர்காணலில் இணைந்து கொள்ளலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களது கல்வி தொழில் குடும்பம் பற்றி?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

நான் கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். உயர் தரப்பரீட்சைக்குப் பிறகு பெண்களுக்குரிய இரசனை மிகுந்த சமையற்கலை, துணிகளில் நிறங்களைக் கொண்டு வரைதல், மட்பாண்டங்களில் வரைதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். பின்னர் தட்டச்சு முறையாகப்பயின்று சான்றிதழ் பெற்றேன்.

அதனைத்தொடர்ந்து, தனியார் அறிவிப்பாளர் பயிற்சி விளம்பரமொன்றினைப் பத்திரிகையொன்றில் கண்டதன் பிறகு அந்தப்பயிற்சியினைப் பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றேன். 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில், வானொலிகளும் அதன் அறிவிப்பாளர்களும் மிகவும் பிரபல்யமாக இருந்த காலமது. ஒரு வேளை என்னுடைய இந்த பயிற்சிக்கு அதுவும் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.

அந்தப்பயிற்சியினைத் தொடர்ந்து, 2003ம் ஆண்டு இணைய தமிழ் வானொலியொன்றின் அறிவிப்பாளராக இணைந்து கொண்டேன். சில இடைவெளிகள் ஏற்பட்டாலும், அதுவே எனது விருப்பத்துக்குரிய தொழிலாக அமைந்து விட்டது.

எனது குடும்பம் என்றால், எனது பெற்றோர், கணவர், இரண்டு செல்ல மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம். எனக்கு ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

எனது பெற்றோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். எனது கணவர் கணக்காய்வாளராகத் தொழில் புரிகிறார். மூத்த மகன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் தரம் 2ல் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார். இளைய மகனுக்கு 2 வயது பூர்த்தியாகியுள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா

எப்போது தங்களுக்கு இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டது?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

அநேகமாக சாதாரண தரம் கற்கையில் பாடசாலையில் அதிகளவான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிட்டியதே இலக்கியத்தில் எனக்கு ஆர்வமேற்பட வித்திட்டதெனலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

இதுவரை சுமார் எத்தனை படைப்புக்களைப் படைத்திருப்பீர்கள்? அவை வெளிவந்த தளங்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

அதிகளவில் இல்லை. நூறிற்கு மேல் கவிதைகளும், ஒரு சில சிறுகதைகளும், இரண்டு நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். நான் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம் என்பன தினகரன், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் பயில் நிலம், சிறகுகள், பேனா, நீங்களும் எழுதலாம், பூங்காவனம், வண்ண வானவில், கொழுந்து போன்ற சஞ்சிகைகளிலும் ஒரு சில இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன. என்னுடைய இரண்டு கவிதைகள் என்னுடைய குரலில் பதிவாகி இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

முக்கியமாக என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் ‘ஆஷிகா’ என்ற புனைப்பெயரிலேயே எழுதி வருகிறேன். 2012ம் ஆண்டு கொழுந்து சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரத்துவமான மலையக சமூக சேவகி திருமதி இராஜேஸ்வரி கிருஷ்ணசுவாமி ஞாபகார்த்த பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப்போட்டியில் 65 பெண் எழுத்தாளர்கள் பங்குபற்றினார்கள். அதில் 3வது பரிசு ‘குப்பை வண்டி’ என்ற என்னுடைய சிறுகதைக்கு கிடைத்தது.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்விலக்கிய வகைகளை எழுதுகின்றீர்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை போன்றவைகளை எழுதி வருகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது படைப்புக்களில் எவ்வகையான விடயங்களை வெளிக்கொணர விரும்புகின்றீர்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

என்னுடைய படைப்புக்களில் சமூகத்தில் நடக்கின்ற, நான் காணுகின்ற விடயங்களையும், அறியாமல் பலர் விடும் தவறுகளையும் வெளிக்கொணர விரும்புகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

நூல் வெளியிடும் எண்ணம் பற்றி?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

நூல் வெளியிடும் எண்ணம் நிரம்பவே இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன் அதற்கான ஆயத்தங்களும் மேற்கொண்டேன். ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன். சந்தர்ப்பம் அமையும் பொழுது என்னுடைய கன்னி நூலை வெளியிடுவேன்.

கவிதாயினி ராஜ்சுகா

தற்போது உங்களுக்கு ஏனிந்த இலக்கிய ஈடுபாட்டில் ஓய்வு?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

சரியாகச்சொன்னால், தற்காலிக ஓய்வு என்று தான் கூற வேண்டும். சிறிய மகனைப் பராமரிப்பதில் நேரம் சரியாகவுள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நான் எழுதுவதற்கு பேனா எடுத்தால் அதைப் பறிப்பதிலேயே அவர் கவனமாக இருக்கிறார். வெகு விரைவில் மீண்டும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு எழுத ஆரம்பிப்பேன்.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்கள்  தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வற்கும் தம்மை வெளிப்படுத்துவதிலும் குடும்ப வாழ்க்கை தடையாக இருக்கின்றதென நினைக்கின்றீர்களா?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

இல்லை. முதலில் அது தற்காலிகத்தடையே. குடும்பத்தினர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் தடையே இல்லை. அவர்களின் உதவியுடனேயே திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தம்மை வெளிப்படுத்தவும் முடியும். அதனால் தான் இன்று தமிழ் மொழி உலகில் பல பெண் எழுத்தாளர்கள், கவிதாயினிகள் உலா வருகிறார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா

பல தடைகளைத்தாண்டியே பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையாக நீங்கள் காண்பது?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று பெண் என்பதே. ஆணாதிக்கமில்லையென்று கூறினாலும், மறைமுகமாக, சில இடங்களில் வெளிப்படையாகக்கூட  ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும். அடுத்து, பொருளாதாரத்தடை. இக்காலத்தைப் பொறுத்த வரை பொருளாதாரமென்பது ஒரு விடயத்தைச் சாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த காரணியாக நேரத்தைக் குறிப்பிடலாம். ஒரு பெண் குடும்பத்தை நிர்வகித்துக்கொண்டு சாதிப்பதென்பதே ஒரு பெரிய சாதனை தான்.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்களுடைய வளர்ச்சிகளில் நீங்கள் பெருமைப்படும் விடயம் மற்றும் விசனப்படும் விடயம் பற்றிக் கூற முடியுமா?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

பெண்களுடைய வளர்ச்சியில் பெருமையென்று கூறினால், அதிகளவான பெண்கள் விளையாட்டுத்துறை, இலக்கியத்துறை எனப்பல்வேறு துறைகளில் சாதிக்கின்றார்கள். விசனம் என்னும் போது பெண்கள் விளம்பரப்பொருளாக மாறி வருவதையிட்டுக்கூறலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்ணியம் பற்றி தங்களது பார்வை?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

பெண்ணியம் என்பது என்னுடைய பார்வையில் தற்காலத்தில் பெண்கள் பெண்களாக மதிக்கப்படுவதில்லை. சினிமாவிலும், கதைகளிலும் குறிப்பிடுவது போன்றல்லாமல் பெண்களுக்குரிய இடம் வழங்கப்படுவதில்லை.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்ணியத்துக்குள் எவ்வெவ் விடயங்கள் பேசப்பட வேண்டுமென எண்ணுகின்றீர்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

பெண்ணியத்துக்குள் பெண்களுக்குரித்தான அனைத்தும் பேசப்பட வேண்டும். உதாரணமாக, பெண்ணுரிமை, சுதந்திரம், விருப்பு, வெறுப்பு, உணர்வு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அநுபவம் பற்றி?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

சில இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். நூல் வெளியீடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். இது  ஓர் சிறந்த அனுபவம் பல படைப்பாளிகளை நேரடியாகச் சந்தித்து இலக்கிய  விடயங்கள் பற்றிப்பேசவும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களைக்கவர்ந்த இலங்கைப் படைப்பாளர்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

மூத்த எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி, அஷ்ரப் ஷிஹாப்தீன், கிண்ணியா அமீர் அலி, வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ ரிஸ்னா போன்றவர்கள் என்னைக்கவர்ந்த எழுத்தாளர்கள்.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றைய  பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அளவுக்கதிகமான‌ கல்வி மற்றும் இதர வகுப்புக்களில் திணிப்பதால் சிறுவர்கள் மானசீகமாகப் பாதிக்கப்படுவதோடு, இறுக்கத்துடன் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது  இது பற்றி?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

நிச்சயமாக. அதிகளவான கல்வித்திணிக்கைகளால் சிறுவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் மற்றவர்களிடம் பாராட்டைப்பெற பேராசை படுவதால் சிறுவர்கள் அதிகளவில் புள்ளிகள் பெற வேண்டும். இதனால், ஓய்வின்றி பல வகுப்புகளுக்கு இந்த சிறார்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

முடிவில் இந்த சிறுவர்கள் ஒரு வித மன இறுக்கத்துக்கு ஆளாகி உளவியலாகப் பாதிப்படைகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அதி சிறந்த புள்ளிகளை எதிர்பார்க்காது, பிள்ளைகள் அடுத்த வகுப்புக்கு சித்தி எய்தக்கூடிய புள்ளிகளைப்பெற அவர்களுக்கு இலகு கல்வியினை வழங்க வேண்டும். புள்ளிகளைப் பாராது, உள்ளங்களைப் பார்த்தால் ஆரோக்கியமான மனநிலை கொண்ட எதிர்காலச் சந்ததியினரைக் காணலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

வேலைக்குச் செல்லும் பெற்றாரினால், பிள்ளைகள் அரவணைப்பு எனும் விடயத்தினை இழந்து போகின்றார்கள். இதனால், பல பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்கான வழியாக நீங்கள் கூற விரும்புவது?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

ஆம். பல குடும்பங்களில் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையேற்படுகிறது. இதனால், பல குழந்தைகளின் பாதுகாப்புத்தொடர்பான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அரவணைப்புக்கு ஏங்கக்கூடிய குழந்தைகளாகவும், முரட்டுச்சுபாவமுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெற இதுவே காரணமாக அமைகிறது. குழந்தைகளை உரிய பாதுகாப்பான முறையில் அவர்களைப் பராமரிப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்குச்செல்வதே சிறந்தது.

கவிதாயினி ராஜ்சுகா

சிறுவர்கள், தொலைக்காட்சி, கணனி, இன்டநெட் போன்ற விடயங்களில் அதீத ஈடுபாட்டைக் காட்டுகின்றார்கள். இது எல்லா நேரங்களிலும் நன்மை பயக்கின்றதா? ஓர்  தாயாக ஏனைய பெற்றோருக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

நவீன காலத்தைப் பொறுத்த வரையில், நற்பலன்களைப் பெறுவதை விட, இலகுவாக கெடுதியானவைகளே எங்களை வந்தடைகின்றன. இது போன்று தான் குழந்தைகளையும் தொலைக்காட்சி, இணையம், கணனி என்பன தீயவைகளால் ஆள முயற்சிக்கின்றது. எல்லா நேரங்களிலும் நன்மை பயப்பதில்லை.

அளவோடு அவர்களுக்கு அதனை வழங்குவதுடன், எப்பொழுதும் நாமும் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு உகந்த கார்டூனா? உகந்த பாடலா? இதன் மூலமாக அவர்களுடைய மனதில் வன்முறை போன்ற தீய எண்ணங்கள் உருவாகுமா? என நாம் எப்பொழுதும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

கவிதாயினி ராஜ்சுகா

குழந்தை வளர்ப்பில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றி உங்களது அனுபவத்தினூடாகக் கூறுங்கள்?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

குழந்தை வளர்ப்பு என்பது இனிமையான ஒரு கலை. ஒவ்வொருநாளும் ஒரு பாடத்தினைக் கற்கலாம். தினம் தினம் புதுப்புது யுத்திகளைக் கையாள வேண்டும். குழந்தைகளின் அதி புத்திசாலித்தனமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது திணறுவதும் ஒரு இனிமையான சந்தர்ப்பம் தான். நாளுக்கு நாள் அவர்களுடைய வளர்ச்சியினைப் பார்ப்பதும் சுவாரஸ்யமே. மொத்தத்தில் நம்மை அறியாமலே நாட்கள் கடந்து விடும். குழந்தை வளர்ப்பு.சுவாரஸ்யமான நூல் வாசிப்பு.

கவிதாயினி ராஜ்சுகா

குடும்பம், இலக்கியம் உங்களது  தனிப்பட்ட  திறமைகள் தொடர்பாக இருக்கும் கனவு பற்றி?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

மூன்றும் ஒன்றாய் கலந்த, கைகோர்த்த கனவு. நூல் வெளியீடு, தொடர்ந்தும் வானொலி அறிவிப்பாளினியாகக் கடமை புரிதல், இன்னும் அதிகம் அதிகமாக எழுத வேண்டுமென்கின்ற அவா, என்னுடைய பிள்ளைகளும் இந்த ஆற்றல்களைப் பெற்றவர்களாக எதிர்காலத்தில் வர வேண்டுமென்கின்ற கலவையான கனவு எனக்குள்.

கவிதாயினி ராஜ்சுகா

கல்குடாநேசன்  வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

கவிதாயினி ராஹிலா ஹலாம்

கல்குடாநேசன் வாசகர்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. வாசகர்களாகிய உங்களுக்குள்ளும் பல திறமைகள் மறைந்திருக்கும். அவற்றை முடியுமானவரை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் மனதை இலகுவாக்கும். அப்போது தான் எமது திறமையை மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள்.

“சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது…..
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது….

உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட‌
முன் வந்து நின்றால் தான் முகங்காட்டும் இங்கே….

மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்…..” என்ற பாடல் வரிகள் கூட அதனையே உணர்த்துகின்றது. உங்கள் திறமையினை வெளிப்படுத்துவதால் உள்ளம் மகிழ்கிறது. அதனால், ஆரோக்கியமாக வாழ முடியுமாகின்றது. உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும் ராஜ்சுகாவுக்கும் நன்றிகள். வணக்கம்.13957434_1521215257904346_341030897_n 14009837_1520967047929167_2060188524_n 14018020_1525464204146118_1122351584_n 14030654_1483893198303507_5168842_n 14030710_1525463484146190_1118494988_n14055661_1525447700814435_1651999564_n 14030939_1525450950814110_1103992861_n 14030984_1525450977480774_576653464_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*