கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 45வது படைப்பாளியாக இணைகிறார் மருத்துவ நிறுவன முகாமையாளர், அறிவிப்பாளர் லிந்துலை தனபாலசிங்கம் அவர்கள்-நேர்காணல் உள்ளே…

Spread the love

14159954_1274939005850876_1494708452_nகவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா  நேசனின் 45வது படைப்பாளியாக இணைகிறார் மருத்துவ நிறுவனமொன்றின் முகாமையாளரும், இணைய வானொலி அறிவிப்பாளருமான லிந்துலை தனபாலசிங்கம்  அவர்கள். தற்போது குறும்பட இயக்குநராக வெளிப்பட்டுக்கொண்டே சமூக சேவைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளும் இவர், மலையகம், இளைஞர்கள், அறிவிப்பு தொடர்பான  பல்வேறு  சுவாரஸ்யமான  அனுபவங்களோடு  இணைந்துகொள்கின்றார். இவரது  முயற்சிமிக்க வாழ்க்கை அனுபவக்களோடு   நாமும் இணைந்து கொள்ளலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களை  எமது வாசகர்களோடு அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா?

 லிந்துலை தனபாலசிங்கம்

ஆம். கட்டாயமாக, எனது  பெயர்  தனபாலசிங்கம். சொந்த இடம் லிந்துலை சென் ரெகுலர்ஸ், அப்பா  பெயர் கந்தையா அம்மா தனபாக்கியம் எனக்கு  09  சகோதர்களும் ஒரு சகோதரியும் இருக்கின்றார்கள். நான் எனது ஆரம்பக்கல்வியை  நு/சென் ரெகுலர்ஸ் தமிழ் வித்தியாலயத்திலும்  6 ம் தரம் தொடக்கம் உயர் தரம் வரை நு/ஹோல்புரூக் கல்லுரியிலும் கற்றேன். அதன் பின்னர், முகாமைத்துவம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், டிப்ளோமா ஊடகக்கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இளங்கலைப் பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களது  தொழில், திறமைகள் பற்றி?

 லிந்துலை தனபாலசிங்கம்

தொழில் திறமை என்பவற்றில் எனக்கு இரண்டு துறைகளில் அனுபவமிருக்கின்றது 01. மருத்துவத்துறை, இதில் முகாமைத்துவ‌ம்  சாதாரணமாக ஆரம்பித்த தொழில் முகாமையாளராக உயர்த்தியது. நிறுவனம் என் மீது வைத்த நம்பிக்கை நான் தொழில் மீது வைத்த அக்கறை தன் நம்பிக்கை படி படியாக உயர்த்தியது. ஆனாலும், இன்னும் இதில் கற்று கொண்டே இருக்கிறேன். மற்றையது ஊடகம். பகுதி நேரமாக இருந்தாலும், முயற்சியின் காரணமாக குறுகிய காலத்தில் ஜனாதிபதி ஊடகத்தில் பணி புரிய வாய்ப்புக்கிடைத்தது. அதே போல, 04 ற்கும்  மேற்பட்ட‌ இணைய வானொலிகளில் அறிவிப்பாளராகக் கடமை புரிந்திருக்கிறேன். ஊடக துறையில் 07 வருடங்களாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன் குறும்பட இயக்கமும் அடங்கும்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்கள் திறமைகளுக்கு கிடைத்த  வெற்றிகளாக நீங்கள் கருதுவது?

 லிந்துலை தனபாலசிங்கம்

எங்கள் நிறுவனத்தில் நான் முகாமையாளராக இருப்பதும், நீங்கள் ஒரு பிரபல்யமான எழுத்தாளர், கல் குடா நேசனில் நிறைய படைப்பாளிகள் அடையாளங்கண்டு அறிமுகப்படுத்துகின்றீர்க‌ள். இங்கே உங்கள் கண்ணில் நானும் பட்டிருக்கேன் என்றால், இதுவும் ஏதோ ஒரு வகையில் ஒரு வெற்றி தான்.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் முன்னெடுக்கும்  சமூகச்செயற்பாடுகள்  குறித்து?

லிந்துலை தனபாலசிங்கம்

நிறைய உண்டு. நான் மருத்துவ நிறுவனம் மூலம் அரச தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோருக்கு நீரிழிவு நோய், உடற்பயிற்சி , உணவுக்கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, அதே போல மலையகப்பகுதிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு வேலை வாய்ப்புகளைத்தேடிக் கொடுத்தல். அங்குள்ள பாடசாலைகளுக்குத் தேவையான முடிந்த உதவிகளை வழங்குதல், சமூக அபிவிருத்தி நிறுவங்களோடு சேர்ந்து மக்களுக்கு சேவைகளை வழங்குதல்.

கவிதாயினி ராஜ்சுகா

ஊடகத்தில் எவ்வாறு  ஆர்வம் ஏற்பட்டது?

லிந்துலை தனபாலசிங்கம்

பாடசாலைக் காலங்களிலிருந்து ஆர்வமிருந்தது. எனினும், ஊடகத்துறைக்கு வருவதற்கு என் நண்பியும்  ஊடகவியளாலருமான‌, நடிகை அகல்யா தான் எனக்கு அடித்தளத்தைப் போட்டுத்தந்தவர்.

கவிதாயினி ராஜ்சுகா

அதில் நீங்கள் சாதிக்க நினைப்பது?

லிந்துலை தனபாலசிங்கம்

ஒரு நேர்மையான ஊடகவியாளனாக இருக்க வேண்டும். ஊடகம் என்ற பெரும் பரப்பை நன்றாகக் கற்று, அதனுடாக சமூகத்து நல்ல விடயங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது அறிவிப்பு, அனுபவங்கள் பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

07 வருடங்களுக்கு மேல் இணைய வானொலிகளில் அறிவிப்பாளராக அனுபவமுண்டு. உள்நாட்டு, வெளிநாட்டு இணைய வானொலிகளில் கடமை செய்திருக்கிறேன். அதே போல, மேடைகளில் நூல் வெளியீடுகள் கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனாலும், மூத்த அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்பதுண்டு. அவர்களிடம் நிறையக் கற்றுக்கொள்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்? எதனால் அவ்வபிமானம் ஏற்பட்டது?

லிந்துலை தனபாலசிங்கம்

பல மூத்த அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீத், ஜெய கிருஷ்ணா, அபர்ணா, லோஷன், நவா, பரணி அண்ணா இப்படி பல பேர். இன்னும் நிறைய  இளம் அறிவிப்பாளர்கள். இவர்களிடம் காணப்படும் மொழி ஆளுமை, திறமை, தங்களுக்கென தனி நடை என்பவற்றைக்கூறலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றைய இளம் அறிவிப்பாளர்களிடம் சினிமாச்சாயல் காணப்படுகின்றதே, தமக்கான தனிப்பாணியைத் தக்க வைத்துக் கொள்ளவில்லையே இது பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

இங்கு ஆர்வம் காரணமாக அறிவிப்பாளர்களானவர்கள் அதிகம். ஆனாலும், அதை முழுமையாகக் கற்றுக்கொண்டவர்கள் அல்லது நல்ல திறமையான மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலில் வந்தவர்கள் மிகவும் குறைவு.  நல்ல தேடலுள்ள திறமையான அறிவிப்பாளர்களும் இப்பொழுதிருகின்றார்கள். இங்கு சினிமாப்பாணி என்பது வானொலிகளைப் பொறுத்த மட்டில், தவிர்க்க முடியாதவொன்றாகக் காணப்படுகின்றது. சினிமா இல்லையென்றால், வானொலிகள் இல்லை என்ற நிலைக்கு சினிமாவின் ஆதிக்கம் வானொலி என்ற ஊடகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஆகையால், வானொலி அறிவிப்பாளர்கள் பெரும்பாலானோர் ஒரே மாதிரிப் பயணிக்கின்றார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா

ஆரம்பகாலங்களில் இலங்கை வானொலிக்கு  உலகளவிய  ரீதியில் பாரிய அபிமானமும் வரவேற்பும் இருந்தது. அதற்கான  முக்கிய காரணம் “தனிப்பாணியே” அந்தத்தகைமை இது போன்ற வேறு பாதிப்புக்களால் சிதைவடைகின்றதே இது பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

இது நல்லதொரு கேள்வி ஆரம்ப காலங்களில் இலங்கை வானொலி உள்நாட்டில் மாத்திரமன்றி கடல் கடந்தும் பிரபல்யமடைந்து காணப்பட்டது. குறிப்பாக, தென் இந்தியாவில் இதற்கு முக்கிய காரணம் தென்னிந்திய சினிமாப் பாடல்களை முதலில் வானொலியில் ஒலிபரப்பிய பெருமை இலங்கை வானொலிக்கே உண்டு.

ஆகையால், அக்கால சினிமா பிரபல்யங்களான எம் .ஜீ.ஆர், சிவாஜி கணேஷன் கூட எம் வானொலிக்கே நேயர்களாக இருந்திருக்கின்றார்கள்.  தனித்தமிழ் நடையுடன் மிகவும் திறமையான அறிவிப்பாளர்கள் இக்கால கட்டத்தில் வானொலி ஊடகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகித்து வ‌ருக்கின்றார்கள்.

அதே போல, இன்றும் கூட இந்தியாவில் கே.ஸ் .ராஜா, இராஜேஸ்வரி சண்முகம் போன்றவர்கள் பேசப்படுபவ்ர்களாக இருப்பதோடு, திரு PH.அப்துல் ஹமீது இன்றும் கூட உலகைச்சுற்றி வரும் உலக கதாநாயக அறிவிப்பாளராக  வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் சரியான ஆரம்பம் திரு மயில் வாகனம் போன்றோர் மறக்க முடியாதவர்கள். ஆனாலும், காலப்போக்கில் தொலைக்காட்சி வளர்ச்சி, தனியார் வானொலிகளின் ஆதிக்கம் மக்களின் இரசனையில் மாற்றம் போன்றன வெகுவாகப் பாதிக்க ஆரம்பித்தது. ஆகையால், ஆரம்ப கால வானொலி கலாசாரத்தைத் தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

கவிதாயினி ராஜ்சுகா

அறிவிப்பிலும், இரசிகர்களை கவர்வதற்கான நுணுக்கங்கள் காணப்படுகின்றதா? அதில் உங்களது அனுபவம், தனித்தன்மை பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

நிச்சயமாக நுணுக்கங்கள் இல்லாவிடின் தொடர்ந்து நேயர்கள் மனதில் இடமில்லாமல் போய் விடும். வானொலியைக் கேட்பவர்கள் பெரும்பாலும் பாடல்களை க் கேட்கவே  விரும்புகின்றனர். இந்நிலையில், ஒரு அறிவிப்பாளர்களுக்காக கேட்கின்ற  நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றது.

அதற்குக்காரணம் அவர்களின் நுணுக்கம், தனி நடை, குரல் வளம் போன்றன. ஆனாலும், இணயத்தள வானொலிகளைப் பொறுத்த மட்டில் இணையத்திலிருப்பவர்கள் மாத்திரம் கேட்க முடிகிறது. ஆகவே. கேட்கும் அந்நேயர்களை தன் வசப்படுத்த புதுமையாகவும் அவர்கள் விரும்பும் விதத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது, தொடர்ந்தும்  அவர்கள் எங்களோடு இருப்பதோடு, தங்களுடைய இணைய நண்பர்களையும் கேட்க வைக்கின்றார்கள். இந்த வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகின்றோம். இணைய வானொலி அறிவிப்பாளர்களை ப் பொறுத்தமட்டில் நேயர்களோடு நல்ல நெருங்கிய தொடர்பும் அவர்களின் நிகழ்ச்சிக்கு வெற்றி வாய்ப்பைத்தேடித் தருகின்றது.

கவிதாயினி ராஜ்சுகா

இணைய  வானொலிகளுக்கு மக்களிடம் காணப்படும் வரவேற்பு எப்படியானது?

லிந்துலை தனபாலசிங்கம்

பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள், வெளிநாட்டில் தொழில் புரிவோர் அதிகமாக விரும்பிக்கேட்பார்கள். அதே போல, இங்கே இணைய வானொலிக்கென்றே பல ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். அதே போல ஸ்மார்ட் போன்கள் பாவனை இணைய வானொலி ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்வகையான  நிகழ்ச்சிகள் ரசிகர்களைக் கவர்வதாக இருக்கின்றது?

லிந்துலை தனபாலசிங்கம்

நல்ல பாடல் தெரிவுள்ள நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இணைய வானொலிகளில் ரசிகர்கள் விரும்புகின்ற நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.

கவிதாயினி ராஜ்சுகா

வெறுமனே பாடல் நிகழ்ச்சிகளால் சமூக மாற்றத்துக்கான வழி உண்டாகுமா?

லிந்துலை தனபாலசிங்கம்

நிச்சயமாக இல்லை. இணைய வானொலி  நிகழ்ச்சிகளைப் பொறுத்த மட்டில் பாடல்கள் தான் முக்கியத்துவம்  பெறுகின்றன. நல்ல  பாடல் தெரிவுகள் நேயர்களை அதிகரிக்கும் இப்படி நேயர்கள் எங்களுடைய  நிகழ்ச்சிகளைக்கேட்க‌  ஆர்வம் அதிகரிக்கும் போது, பாடல்களுக்கிடையே சமூக முன்னேற்றக் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது, ஏதேனும் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

சமூக மாற்றத்தை விரும்பும் துடிப்புள்ள இளைஞன் என்ற வகையில், எவ்வகையான மாற்றங்களைக் காண விழைகின்றீர்கள்?

லிந்துலை தனபாலசிங்கம்

ஊடகங்கள் எப்பொழுதுமே மக்களுக்கானதாகச் செயற்பட வேண்டும். கோப்பி பாஸ்ட் கலாசாரமில்லாத உண்மையான, உறுதியான தகவல்களை வழங்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் புதுமையோடு வழங்க வேண்டும்.

கவிதாயினி ராஜ்சுகா

சமூகம் தொடர்பான சேவையில் ஈடுபடும்போது  நீங்கள் சந்தித்த அனுபவங்கள் பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

நிறைய அனுபவங்கள் உண்டு. நாங்கள் செய்கின்ற சேவையைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு முழுமையாக சென்றடையாத போது , எங்களது நேரம் காலம் எல்லாம் வீணாகி விடுகின்றது. அதே போல மக்களுக்கு நிறைய அடிப்படையான விஷயங்கள் குறிப்பாக சாதாரண மக்கள் மருத்துவம் சார்ந்த விடயங்கள் அவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை. தங்களுக்கு இப்படியான பிர‌ச்சனைகள் இருக்கிறதென்பதை  காலம் தாமதமாகி தெரிந்து கொண்டு வேதனைப்படுகின்றனர். அதே போல  மக்களுக்கு சேவைகளை  வழங்கும் போது அந்த மக்கள் பெறுகின்ற இன்பம் மனதுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தருகின்றது

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் முன்னெடுக்கும் சமூக நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு செல்ல எவ்வாறான  விளம்பரங்களை முன்னெடுக்கின்றீர்கள்?

லிந்துலை தனபாலசிங்கம்

பெரும்பாலும் நண்பர்கள், நிறுவன மனித வள முகாமையாளர்கள் மூலமும் இதனைத்தவிர்த்து  எங்களது இணையத்தளம், சமூக இணையதளத்தில் பதிவிடுவது சில நேரங்களில் பத்திரிகை விளம்பரங்களுமுண்டு.

கவிதாயினி ராஜ்சுகா

மலையகத்து  இளைஞர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி உங்கள் பார்வையில்?

லிந்துலை தனபாலசிங்கம்

சொல்ல முடியாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பெரும்பாலும் எல்லாத்துறைகளிலும்  அவர்கள் இப்பொழுது வளர்ச்சி பெற்று விட்டார்கள். குறிப்பாக, சமூக இணையத்தளங்களை நன்றாகப் பயன்படுத்துகின்றார்கள். அரசியல்வாதிகளுக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் மலையகம் முன்னேற வேண்டுமென்று ஒவ்வொரு பகுதியிலும் சமூக அமைப்புகளை உருவாக்கி தேவையான நேரம் போராட்டங்களையும் நடத்துகின்றனர்.

கல்வி  மாத்திரமன்றி, விளையாட்டு விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இப்பொழுது அங்கு பல இளம் சுய தொழில் உற்பத்தியாளர்கள் இருக்கின்றார்கள். அதே போல பல்கலைக்கழக‌ம் தெரிவாவோரின் வீதமும் முன்பை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

கவிதாயினி ராஜ்சுகா

இன்னும் முன்னேற்றப்பட வேண்டிய  விடயங்கள் பற்றி?

லிந்துலை தனபாலசிங்கம்

இன்னும் முன்னேற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, தொழில்நுட்பக் கல்வியில் முன்னேற்றம் அவசியம். அதே போல, தேடலும் அவசியம் வாசிப்புத்திறனை அதிகரிக்க வேண்டும். உயர் தரத்தில் கலைப்பிரிவையும் தாண்டி, விஞ்ஞான, வர்த்தக, கணிதப்பிரிவில் ஆர்வஞ்செலுத்த வேண்டும்.

உயர் தரம் முடித்தவர்கள் அத்தோடு, நிறுத்தி விடாமல் அடுத்த கட்ட கல்வியை நாட வேண்டும். குறிப்பாக, வெளிவாரி பட்டப்படிப்புகள் தொழில்நுட்பக் கல்லுரி பாடநெறிகளைத்தேடி கற்க வேண்டும். அதே போல பெண்களுக்கான தொழில் கல்விகளை அவர்கள் தேடிக்கற்பது காலத்தின் தேவையாகும்.

கவிதாயினி ராஜ்சுகா

மலையகத்து பிரச்சனைகளாக நீங்கள்  காண்பது?

லிந்துலை தனபாலசிங்கம்

மக்களுக்கானஅடிப்படை பிரச்சனைகள் இன்னும் சரியாகத் தீர்க்கப்படவில்லை. சம்பளப்பிரச்சனையில் மக்களுக்கு இன்னும்  சரியான தெளிவின்மை, இளையயோர் மத்தியில் அதிகரித்து வரும்  மதுப்பாவனை, இங்குள்ள  விவசாயிகளுக்கு ஏனைய மாவட்டங்களைப் போல அரசாங்கம் சலுகைகளை வழங்குவதில்லை.

கவிதாயினி ராஜ்சுகா

குறுந்திரைப்பட  இயக்குநராகவும் உங்களை அடையாளப்படுத்தினீர்கள். குறுந்திரைப்படம் இயக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏன் ஏற்பட்டது?

லிந்துலை தனபாலசிங்கம்

வேகமான தொழிநுட்பக்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு முழு நேர திரைப்படத்தைப் பார்ப்பதற்கு  நேரம் கிடைப்பதில்லை. ஆனால், நேரம் கிடைக்கும்  போது குறுந்திரைப்படங்களைப் பார்க்க விரும்புகின்றனர். காரணம் ஒரு கொஞ்ச நேர அளவில் ஒரு நல்ல கதையை  இதில் சொல்லி முடிக்கின்றனர்.

ஆகவே, எனக்கும் நடை முறையில் நடக்கின்ற விஷயங்களை இந்த குறுந்திரைப்படங்கள் மூலம் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் இரண்டு திரைப்படங்களை எடுத்திருக்கின்றேன். ஒன்று இளம் தலைமுறையினரின் முறையான உணவுப்பழக்கம் உடற்பயிற்சியின்மை காரணமாக ஏற்படும் நீரிழிவு நோய் பற்றி சொல்லும். Silent Killer.

மற்றது சமூக இணையதள ஆர்வத்தால் ஏற்படும் பிரச்சனையொன்றினைச் சொல்லும் Uploding. இரண்டு படங்களை எடுத்திருக்கின்றேன் . இன்னும் ய‌தார்த்தமான சமூக விழிப்புணர்வு குறும்படங்களை எடுக்கலாமென்று எண்ணியிருக்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா

கல்குடாநேசன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

லிந்துலை தனபாலசிங்கம்

கல்குடா நேசனைப் பொறுத்த மட்டில் நிறைய படைப்பாளிகளை அடையாளப்படுத்தி வருகின்றது. இது புதிய படைப்பாளர்களைப் பொறுத்த மட்டில் ஆரோக்கியமான விடயமாகும்.

முதலில் என்னையும்  அடையாளப்படுத்த நினைத்த கல்குடா இணையத்தளத்துக்கும் நேர்கண்ட கவி மங்கை ராஜ்சுகாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நல்ல நோக்கமுடைய இணையதளங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது வாசகர்களின் கடமையாகும். கல்குடா நேசன் நல்ல வாசகர்களின் இணையதளம். அதே போல copy paste  கலாசாரத்தை தடுப்பது வாசகர்களால் தான் முடியும்.14123371_1274948615849915_649064360_o 14137836_1274949839183126_2027240438_n 14137910_1274942152517228_1015424816_n 14138375_1274942422517201_1509014954_n 14138398_1274940922517351_1919193990_n 14138563_1274942715850505_748009034_n 14139307_1274946639183446_535564761_o 14151739_1274944082517035_1385791299_o 14159066_1274943642517079_1050789662_n 14159765_1274942719183838_1129040062_n 14159820_1274948205849956_656627575_n 14159954_1274939005850876_1494708452_n 14169685_1275040599174050_553948246_n 14171953_1274947422516701_1955058260_n 14172002_1274944872516956_576125219_n 14182327_1274945549183555_227672136_n 14194492_1275040605840716_1987474250_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*