கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 46வது படைப்பாளியாக இணைகிறார் அக்கரைப்பற்று ஏ.எம்.சஜீத் அஹமட் அவர்கள்-நேர்காணல் உள்ளே…

Spread the love

14080890_914525001986591_748928783_nகவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 46வது படைப்பாளியாக இணைகிறார் சஜீத்  ஏ.எம்.சஜீத் அவர்கள்.

இவர்  கவிதை, கட்டுரை, பத்திகள், நாவல், விமர்சனம் என இலக்கியத்தில் மிகத்தீவிரமாக அதே வேளை, காத்திரமாக கால்பதித்து வரும் இளம் படைப்பாளி.  இன்றைய இளையவர்கள் மத்தியில் குன்றிப்போய்க்கொண்டிருக்கும் வாசிப்பனுபவத்தைப்பற்றி குறைபட்டுக்கொள்ளுமிவர், வாசிப்பனுபவத்தில் நமக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். இவர் பற்றிய‌ இன்னும் பல சுவாரஸ்யங்களை நேர்காணலில் வாசித்து  அவருக்கான வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வோம்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களது குடும்பம், தொழில், திறைமைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

தாய், தந்தை, ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் என மன நிறைவான குடும்பம். அக்கரைப்பற்று மாநகர சபையில் நூலக உதவியாளராகத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

எழுத்துலக பிரவேசம்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

எழுத்துல பிரவேசம் என்கின்ற போது, அது எனது சகோதரர்ஆசிரியர் எம். அப்துல் றஸாக் மூலமாகவே ஆரம்பித்தது எனலாம். நான் வாசித்த முதல் நாவல் அவருடைய வாக்கு மூலம் தான். எழுத்தினை எப்பொழுதும் ஒரு ஹாஷ்யமாகக் கருதும் எனக்கு நீண்ட வாசிப்பின் அவசியம் தேவைப்பட்டது. அதனால் ஊரிலுள்ள நூலகங்ளை நன்கு பயன்படுத்திக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் வாசித்தேன். அவ்வாசிப்பின் நீட்சியே எழுத்தின் சாம்ராஜ்ஜியத்திற்குள் என்னைப் புக வைத்தது. 16 வயதில் “விசித்திர சித்திரம்” எனும் எனது முதலாவது சிறுகதை பெருவெளி இதழில் வெளி வந்தது. அதுவே எனது எழுத்துக்களைப் பிரசவித்த இடமாகும்.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்வெவ் இலக்கியங்களைப் படைத்து வருகிறீர்கள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இலக்கியம் என்பதினைப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும், மாமூலான சில விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு இவ்வகைப் பிரிப்புக்கள் அவசியமாகின்றன என நினைக்கிறேன். அதனடிப்படையில், கவிதை, கட்டுரை, பத்திகள், நாவல், விமர்சனம் என மனதின் உணர்வுகளாய் எனது இலக்கியங்கள் படைப்புப் பெற்று வருகின்றன.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றைய வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும், காத்திரமான படைப்புக்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அதிருப்தியினை வலைத்தளங்களில் காணக்கூடியதாய் இருக்கின்றது. இது பற்றி?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இவ்வுலகில் நாம் கற்க வேண்டிய பரப்புக்கள் முடிவற்றதும் மிக நீண்டதுமாய் இருப்பதினை நாம் உணரலாம். பல படைப்புக்கள் வெளி வந்தாலும், காத்திரமான படைப்புக்களைக் கண்டு கொள்வது தான் எமக்கிருக்கின்ற பெரும் சவால். எல்லோருடைய பார்வைகளும் ஒரே நோக்காய் இருப்பதில்லை. ஒவ்வொருவரினதும் ரசனைக்கும் வாசிப்பிற்கும் ஏற்ப படைப்புக்களின் காத்திரம் கணிப்பிடப்படுகிறது.

வலையத்தளங்களில் காத்திரமான படைப்பு என்று கூறப்படும் இலக்கியப் பிரதிகளை சிலர் காத்திரமற்றது என்பர். சிலருக்கு காத்திரமற்ற பிரதிகள் காத்திரமானதாக இருக்கும். என்னைப் பொறுத்த வரை காத்திரம் என்ற சொல் ஆரோக்கியமானதா? என்பதில் பெரிய மயக்கம் இருக்கிறது.

கவிதாயினி ராஜ்சுகா

ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிப்போக்கு பற்றிய உங்களது பார்வை?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இலங்கையின் இலக்கியப்படைப்புக்கள் எப்பொழுதும் வளர்ச்சிப்போக்கில் தான் இருக்கின்றன. தமிழ் கூறும் வரலாற்றின் முற்பகுதியிலிருந்து தற்காலம் வரை பல வகையான படைப்புக்கள் இலங்கையில் வெளிவந்தபடியே இருக்கின்றன. ஆனால், அப்படைப்புக்களின் மீது தீவிர கரிசணை கொண்டு, அதனை ஆராய முற்படாத எழுத்தாளர்கள் இருக்கும் வரை இலங்கையில் இலக்கிய வளரச்சி இருக்கிறதா? எனும் கேள்வி தவிர்க்க முடியாததாக மாறி விடும். மற்றப்படி ஈழத்து பூதந்தேவனார் தொட்டு தற்காலப் படைப்பாளிகள் வரை எமது வளர்ச்சி எமக்குள்ளே மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.

கவிதாயினி ராஜ்சுகா

எமது இலக்கியத்திற்கு நம்மவர்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பு காணப்படுகிறது?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

நான் முன்னர் கூறிய பதில் இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நமது படைப்புக்களை நம்மவர்கள் வாசிப்புச் செய்வதில் காட்டுகின்ற அசமந்தப் போக்கானது எமது படைப்புகளுக்கு செய்யப்படுகின்ற பெரும் இருட்டடிப்பாகும். இதில் வரவேற்பு எனும் நிலைப்பாட்டினை விட, வசைபாடும் நிலைப்பாடே மிக அதிகமாகவுள்ளது. நம்மவர்களின் பிரதிகள் பற்றிய விமர்சனப் பார்வையினை எழுதுவதற்கு கூச்சப்படும் நம்மவர்கள், உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருப்பார்கள். இதனால் எம்மவர்களின் காத்திரமான படைப்புக்கள் வெறும் காகிதங்களாக நூலகங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்கின்றன.

கவிதாயினி ராஜ்சுகா

உங்கள் நூல்கள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

நிறம் பூசும் குழந்தைகள் (கவிதைத்தொகுப்பு) , பஞ்ச பூதம் (நாவல்)

கவிதாயினி ராஜ்சுகா

பெண் படைப்பாளிகள் அவர்களின் வளர்ச்சிப்போக்கு பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

பெண் படைப்பாளிகள் அவர்களின் வளர்ச்சிப்போக்கு என்பன இன்று பெண்ணிய அரசியலாக வலுப்பெற்றிருப்பது பெரு மகிழ்வே. தளர்வான மொழிகளிலிருந்து விலகி காத்திரமான விடயங்களினை தங்களது படைப்புக்களின் மூலம் வெளிக்காட்டும் பெண்கள் பல சவால்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

இருப்பினும், அச்சவால்களைத்தாண்டி வெளிப்பட்ட பெண்களும் அவர்களின் படைப்புக்களும் புதியதொரு இலக்கிய ரம்மியத்தினை எமக்குத்தருவது அவர்களின் வளர்ச்சியினையே காட்டுகிறது. இதில் துயரம் யாதெனில், பல பெண் படைப்பாளிகள் சவால்களின் முன்னே மறைந்து போகிறார்கள் என்பது தான்.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்ணியம் என்றதும் உங்கள் மனதில் எழுவது?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இது மிகவும் சிக்கலான கேள்வி என்றே நினைக்கிறேன். பெண்ணியம் என்றதும் என் மனதில் ஆண்களே வந்து செல்கிறார்கள். இச்சொல் உருவாகுவதற்கு பெரும் காரணம் ஆண்கள் தான். அதிகாரம் ஆணியம் எனும் ஆக்கிரமிப்பின் எதிர்த்திசையாக உருவாக்கப்பட்ட பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தின் வரம்புகளில் வலிந்து நடப்பட்ட ஒன்று. இன்று அதிகம் பாவிக்கப்படும் பெண்ணியம் என்பது பெண்களுக்கு உரிமையல்ல. மாறாக, ஆண்-பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய கடமையினை ஞாபகப்படுத்தும் ஒரு சொல்லாகும்.

கவிதாயினி ராஜ்சுகா

பல ஆண் படைப்பாளிகள் பெண்ணியம் பேசுகிறார்கள். இது எத்தனை தூரம் வெற்றியளிக்கிறது? பெண் உணர்வுகளை முழுமையாக அவர்களால் வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

பெண்ணியம் பற்றி பேசுகின்ற ஆண்கள் தங்களை ஆணாதிக்கத்தின் எதிரிகளாக பிரகடனப்படுத்துகிறார்கள். இதனை வெற்றியின் தூரம் என்பதை விட ஒரு அதிகாரக்குவியல் மீதான எதிர்ப்புணர்வு என்றே கூறலாம். பெண் உணர்வுகளை பெண் வெளிப்படுத்துவதால், இங்கு எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை.

மாறாக, பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு ஆணின் அனுமதி தேவைப்படுகிறது எனும் போது தான் பெண்ணியம் பேசுகின்ற ஆண்கள் தோல்வியடைகிறார்கள். பெண்ணியம் பெண் உணர்வுகள் என்பது பெண்களின் சுய நிர்ணயம் பற்றியது. இதில் ஆணிற்கு இருக்கின்ற பங்கு தனக்கான அதிகாரக்குவியலினை தகர்த்து விடுவது மாத்திரம் தான்.

கவிதாயினி ராஜ்சுகா

பெண்களுக்கெதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் ஏற்பட காரணம். அதற்கெதிரான உங்களது ஆலோசனைகள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்று அதிகரித்த நிலையிலிருப்பதாக புள்ளி விபரவியல் கூறுகின்றது. இதற்காக பல காரணங்களினை முன்வைக்க முடியும். எவ்வாறு இருப்பினும், இவ்வாறான துஷ்பிரயோகங்கள் மீதான பாதுகாப்பு விடயத்தினை பெண்கள் கற்றுக்கொள்வது மிக அவசியமாகிறது.

எமது பேச்சுக்கள், ஆடைகள், செயற்பாடுகள் போன்றவற்றில் பெண்கள் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். துஷ்பிரயோகங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற போது அதிலிருந்து தப்புவதற்கான வழி வகைகளையும் சேர்த்து பாடங்களினைப் புகட்டுவது அவசியமாகிறது. துஷ்பிரயோகம் நிகழ்ந்ததன் பிறகு கூப்பாடு போடுவதை விட, அவ்வகையான துஷ்பிரயோகங்கள் நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து அதற்கு முட்டுக்கட்டை போடுவதே இன்றைய தேவையாகும்.

கவிதாயினி ராஜ்சுகா

நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகளில் எம்மவர்களின் ஆர்வம் பற்றி?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இன்று நூல் வெளியீடுகளும் இலக்கிய நிகழ்வுகளும் வேகமாக நடைபெற்றாலும், அங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. வழமையாகப் பங்குபற்றுகின்ற குறைந்தளவிலான இலக்கியவாதிகளே மாறி மாறி நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இலக்கிய நிகழ்வுகள் அரசியல் மேடைகளாக தோற்றம் பெற்றதே இதற்கான காரணம் என நினைக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களுடைய வாசிப்பனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

வாசிப்பே எனது தேடலாகும். வாசிப்பின் மீதான ஆர்வமே எழுத்துக்களினை செப்பனிடுகின்றன. மொழி பெயர்ப்புக்கள் நாவல்கள் விமர்சனங்கள் பத்திகள் மீதான ஆர்வமும் நீட்சியான வாசிப்பும் மட்டுமே என்னை எழுதுவதற்கு தூண்டியது. குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்கள் வாசிக்கிறேன். அது ஒரு போதையாகவே மாறி விட்டது.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றைய இளைஞர்களிடம் வாசிப்பனுபவம் எவ்வாறு காணப்படுகிறது?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

இன்றைய இளைஞர்களின் வாழ்வு இணைய வாழ்வாக மாறியிருப்பதனால் வாசிப்பின் தாக்கம் சோர்வடைந்த நிலையில் தான் காணப்படுகிறது. வாசிக்கின்ற இளைஞர்களின் வட்டம் குறுகிய வட்டமாகவே இருக்கின்ற கால நிலையில் இம்மந்த நிலைப் போக்கானது வாசிப்பின் வீழ்ச்சியினை உணர்த்தியுள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா

விரைவில் ஒரு சிற்றிதழ் வெளிவரப்போவதாக அறிந்தோம். அது பற்றி?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

நிச்சயமாக… இலங்கையில் எழுந்த நம்மவர்களின் படைப்புக்கள் பற்றிய விமர்சன இதழாக அது இருக்கும். அவ்விதழின் வருகையின் பின்னர் நம்மவர்களின் படைப்புக்களை நாமே பேசுகின்ற ஒரு களம் உருவாக்கப்படுமென நினைக்கிறேன். கனவுகள் மெயப்பட வேண்டும்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது கதைகளில் புதிய நுட்பங்களைக் காணக்கூடியதாக இருந்தது. எந்தத் தாக்கம் இவ்வகையாக எழுதத்தூண்டியது?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

வாசிப்பின் தாக்கமே எழுத்துக்களில் நுணுக்கங்களை உட் புகுத்துவதற்கான காரணமாய் அமைந்தது. இதில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களின் வருகை மேலும் எனது எனது எழுத்துகளுக்கு உரமூட்டுகிறது என்றே நினைக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்வாறான வித்தியாசங்களை உங்கள் படைப்புக்களில் புகுத்த நினைக்கிறீர்கள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

வித்தியாசங்கள் என்பதினை விடவும் மனித உணர்வுகளையும் அதன் வெளிப்பாட்டுத் தன்மைகளையும் காத்திரமான மொழியழகியலுடன் சொல்வதற்கு எனது எழுத்துக்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். அப்பரிசோதனையினை எனது நாவலான பஞ்ச பூதத்தில் செய்து பார்த்திருக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் வியக்கின்ற இலங்கைப் படைப்பாளிகள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

நிறையவே இருக்கிறார்கள். அவர்களை பட்டியல் படுத்தத்தொடங்கினால் அது மிக நீண்ட பட்டியலாக இருக்கும். பட்டியலில் உடன்பாடற்றவன் எனும் வகையில் எல்லா இலங்கைப்படைப்பாளிகளையும் கண்டு வியக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களைப் பாதித்த இலக்கியங்கள் (இலங்கையைத் தவிர்த்து)

ஏ.எம்.சஜீத்  அஹமட்

ஏராளமான இலக்கியங்கள் இந்த வகையினில் உண்டு. குறிப்பாக, வைக்கம் முகம்மது பஷீரின் நாவல்கள் அருந்ததி ராயின் படைப்புக்கள் எஸ்.ரா கி.ரா சாரு என அனைவரின் இலக்கியங்களும் என்னைப் பாதித்திருக்கின்றன.

கவிதாயினி ராஜ்சுகா

இன்று திறமையுள்ளவர்களுக்கான களம் தாராளமாகக் கிடைக்கப் பெறுகின்றது. இக்களத்தினை வழங்குகின்றவர்கள் தகுதியானவர்களயே தெரிவு செய்கின்றார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

சில வேளைகளில் தரமானவர்களும் களத்தினைப் பெறுகிறார்கள். தரமற்றவர்களும் களத்தினைப் பெறுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் தரமானவர்களுக்கு கிடைக்கப்பெற்ற களங்கள் வளர்ச்சியடைந்த நிலையிலும், தரமற்றவர்களுக்கு கிடைத்த களங்கள் மறைந்து விட்ட நிலையிலும் காணப்படும். எனவே, களத்தினை வழங்குபவர்களே அதனை மதிப்படுவது நல்லது.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களுக்கு கிடைத்த விருதுகள், பரிசு, பாராட்டுக்கள் பற்றி?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

2012 ல் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித்தினப்பேச்சு மற்றும் விவாதப்போட்டியில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றேன். நிறம் பூசும் குழந்தைகள் எனும் கவிதைத்தொகுப்பிற்காக கிழக்கு மாகாண சாஹித்திய விருது கிடைத்தது. குறும்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

கவிதாயினி ராஜ்சுகா

இலக்கியம் மீதான விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

அது இலக்கியம் மீதான விமர்சனமாக மட்டும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தனி மனித சீண்டல்களாக இருக்காமல் பிரதி பற்றிய மதிப்பீடாக விமர்சனங்கள் இருக்கின்ற போது அவை ஆரோக்கியமானதாக அமையும். பிரதியினைப் பற்றி விமர்சிக்கின்ற போது, அப்பிரதி கூறும் அரசியல், ஆசிரியனின் படைப்பாக்க சூழல் என்பன பற்றியெல்லாம் விமர்சனப்பரப்புகள் நீண்ட கதையாடல்களை உருவாக்க வேண்டும். அப்பிரதியிலிருந்து பல மேற்கோள்களைக்காட்ட வேண்டும். இதுவே விமர்சனத்தின் பண்பு என நினைக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள், ஆலோசனைகள்?

ஏ.எம்.சஜீத்  அஹமட்

வாசியுங்கள்… வாசியுங்கள்… காத்திரமானவற்றைத் தேடி வாசியுங்கள்.13957434_1521215257904346_341030897_n 14112011_914528195319605_559605587_n 14159878_914522395320185_837049900_n 14182203_914525528653205_209672018_n 14182212_914524035320021_1286789062_n 14182294_914526138653144_354056955_n 14182494_914526488653109_756916069_n 14193598_914527341986357_213261040_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*