கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 47வது படைப்பாளியாக இணைகிறார் கவிஞர், பாடலாசிரியர் அட்டாளைச்சேனை சஹாப்தீன் முகம்மது சப்றீன் அவர்கள்

Spread the love

12494864_862588313867230_9127245615546501610_nநேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளி ஒருவரைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 47வது படைப்பாளியாக இணைகிறார் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட  அட்டாளைச்சேனையூரைச்சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான  வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான சஹாப்தீன் முகம்மது சப்றீன் அவர்கள்.

மிக இளவயதில் தனக்கான  இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் ஓர்  துடிப்புள்ள இளைஞனை இவ்வார நேர்காணலுக்காக சந்தித்தோம். அவரது  முழுமையான  கருத்துக்கள் இதோ….

கவிதாயினி ராஜ்சுகா

தங்களைப்பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

எனது பெயர் சஹாப்தீன் முகம்மது சப்றீன்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்ட கரையோரப்பகுதியின்  அட்டாளைச்சேனையூரில் பிறந்தேன். அட்டாளைச்சேனை முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலையத்தில் சாதாரண தரம் வரை படித்தி விட்டு, அக்கரைப்பற்று நெனசலா அறிவகத்தில் உடல் நலம் மற்றும் பாதுகாப்புப் பொறியிலாளர்  டிப்ளோமாவை முடித்து விட்டு, தற்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா

கலைத்துறையில் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

சிறிய வயதிலிருந்தே. முடிவெட்டும் சலூன் கடைகளுக்குப்போனால், பத்திரிகையில் வெளிவரும் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகளை வாசிப்பதுண்டு.

பருவ வயது வந்ததும்
பத்திடிச்சு காதல் குச்சி
காயம் நூறு கண்டதும்
முத்திடிச்சு கவிதை உச்சி

எனக்குள்ளே பல சோகங்கள்
அதுக்குள்ளே சில ஏமாற்றங்கள்
இவைகளை உடைத்தேன்
இலக்கியத்துறையால்
என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் ஈடுபடும் இலக்கியத்துறைகள் பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

ஆரம்பத்திலிருந்தே கவிதைகளை முகநூல் வாயிலாகத்தான் எழுதி வந்தேன். பலராலும் பார்வையிட்டு பல வாழ்த்துக்களும் ஊக்குவிப்புகளும் குவிந்தன. பத்திரிகையிலும் இணையத்தளத்திலும் எனது படைப்புகளை வெளியிட்டு, எனது முகநூல் உள் பெட்டிக்கு அனுப்பியும் வைப்பார்கள். எனக்கு ஆர்வம் அதிகமாக வந்தது.

இளம் கவிஞர் என அழைத்தார்கள். இசையமைப்பாளர்கள் கவி வரிகளைப் பார்த்து விட்டு, அவர்களது இசையில் பாடல் எழுதும் வாய்ப்புகளையும் வழங்கினார்கள். அதனைச்சரியாகப் பயன்ப‌டுத்தினேன். நான் எழுதிய பாடலுக்கு வரவேற்பு ரொம்பவே கிடைத்தது. இளம் பாடலாசிரியர் என அழைத்தார்கள். தற்போது இவை இரண்டுக்கும் அதிகம் ஈடுபாடாக இருக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

கவிஞர் பாடலாசிரியர் இந்த இரு முகங்களுக்கும் எவ்வாறான ஒற்றுமை, வேற்றுமை காணப்படுகின்றது?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

கவிதைகள் பாடல்கள் இரண்டுமே ஒரு கருவை வைத்துத்தான் அமையும். அதனாலே அதில் ஒற்றுமை காணப்படுகிறது. ஒரு கருவை வைத்து எழுதி விட்டு, அதனைப் பந்தியாக அமைத்தால் கவிதையாக இனம் காணப்படும். ஆனால், பாடல் எழுதும் போது அதற்கு அதிகம் விதி முறைகள் உள்ளன. பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவை வார்த்தையில் சந்தம் அதிகம் இருக்க வேண்டும். இசைக்கெதிராக அமைய வேண்டும். இதில் வேற்றுமையுள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா

உங்கள் முயற்சியில் உருவான பாடல்கள் பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

தனது ஊரிலே தேசிய மட்டத்தில் பல சாதனைகள் படைத்த சோபர் என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டுக்கழகம் உள்ளது. சமூகத்துக்கு உதவி செய்வதில் அதிகம் ஈடுபாடாக இருப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் வழங்க அதிகம் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பார்கள்.

அந்த விளையாட்டுக் கழகத்துக்கே எனது சொந்த முயற்சியில் நடையில் வீரம் பயிற்சியின் தேகம் என்று ஆரம்பிக்கும் துள்ளலான பாடலை எழுதி, முகநூல் வாயிலாக வெளியிட்டேன். அதிகமான ரசிகர்களின் பார்வைக்கு எட்டியது. அதன் பிறகு தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு. கபிலேஷ்வரின் இசையில் காதல் பாடல் எழுத வாய்ப்புக்கிடைத்தது.

அதனையும் வெற்றிகரமாக எழுதினேன். பல தரப்பட்ட தமிழ் வானொலிகளில் அந்தப்பாடலை வெளியிட்டு நல்லதொரு வரவேற்புக்கிடைத்தது. அந்த பாடலுக்கு மிக விரைவில் ஒரு  அங்கீகாரம் கிடைக்கப்போவதாக ஒரு விருது வழங்கும் தரப்பினர் பேசிக் கொண்டார்கள். சந்தோஷப்பட்டேன். இப்படி இன்னும் மூன்று பாடல்கள் வெளிவரவிருக்கிறது. காதல் மற்றும் கிராமத்துக்காதல் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறோம்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது கலைத்துறைப்பயணத்திற்கு உந்துசக்தியாக இருப்பவர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

மிகவும் முக்கியமானதொரு கேள்விக்கு வந்திருக்கிறீர்கள் சகோதரி. எனது முகநூல் தான் எனது இலக்கியத்துறைக்கு முதற்படி. அதற்காக முகநூல் நிறுவனர் மார்க்குக்கு இந்தத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

எனது கவிதைகளை விரும்பிப் படிக்கும் முதல் ரசிகன் எனக்குள்  இருக்கும் திறமைகளை  வெளிக்கொண்டு வருவதற்கு பல ஆதரவுகளை வழங்கும் எனது உடன் பிறந்த சகோதரர் ஆசிரியர் ஜெஸீல் சகோதருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் இத்தருணத்தில். அத்தோடு, மிகவும் முக்கியமானது.

இது என்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்த எனது இலக்கிய ஆசான், தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதிக்கலக்கிக் கொண்டிருக்கும் ஈழத்து கவிஞர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் தான் எனக்கு பல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் வழங்கி, என்னையும் இந்த உலகில் மின்ன வைத்தார்.

அவர் மூலம் தான் பல தென்னிந்திய  இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் போன்ற பல கலைஞர்களுடன் அறிமுகமானேன். அவருக்கு நன்றிகள் ஈடாகாது. ஆனாலும் காலத்தை நம்புகிறேன். அவருக்கு ஈடுகொடுப்பதை எண்ணி தேடுகிறேன் எதயோ. ஆனாலும், இத்தருணத்தில் நன்றிகள் கோடி என் ஆசானுக்கு.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது பாடல்களுக்கு எவ்வாறான அங்கீகாரம் கிடைத்தது?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

தற்போது மத்திய கிழக்கில் பணி புரிவதால் அங்கீகாரத்துக்கான சந்தர்ப்பத்தை நான் தேடவில்லை. ஆனாலும், பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, போட்டியிட்டு பல பரிசுகள் எனது வீட்டுக்கதவைத் தட்டியதுண்டு. அதில் அதிகமான பரிசுகள் இந்தியாவிலிருந்து வந்ததுண்டு. ஆனால், ஒரு பாடல் எழுதி, அதனை இலக்கியச்சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வதால் வாய்ப்புகளைப்பெற்றுக் கொண்டு வருகிறேன். ஒரு நிலையான அங்கீகாரம் மிக விரைவில் வரும் என நம்புகினேன்.

கவிதாயினி ராஜ்சுகா

நீங்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

ஆரம்பத்தில் கவிதைகளை எழுதி முகநூலில் வெளியிட்டேன். அதனைப்பார்த்து விட்டு எனது நண்பர்கள் எங்கு திருடிய கவிதையிது எனக்கேட்டார்கள். சிலர் வைரமுத்து பாவம்டா ஏன்டா அவர்ர கவிதையெல்லாம் கொப்பி பண்றாய் என்று சொன்னவருக்கெல்லாம் நான் சொன்னேன். நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதிகம் இயற்கையோடு பேசிக் கொள்கிறேன். உங்களுக்கு
காலம் பதில் சொல்லும் என்றேன். நான் சொன்னது போன்று காலம் பதில் சொல்லி விட்டது. சொல்லிக் கொண்டே இருக்கிறது. புரிந்தவர்கள் மன்னிப்போடு வாழ்த்துச் சொன்னார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா

தங்களது கவிதை நூல் வெளியீடு பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

எனது கவிதைகள் அடங்கிய “எனக்குள் நான்” என்ற பெயரில் நான் தாயம் சென்றதும் தனது சொந்த ஊரிலே எனது முதலாவது நூல் வெளியிடவிருக்கின்றேன். ஆதரவுக்கு பஞ்சமில்லை என நினைக்கிறேன். வெற்றிகமாக நூலை வெளியிடலாம் என நம்புகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களது கவித்திறமை, மொழியாளுமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

எனது திறமைகளை வளர்ப்பதற்கு நான் அதிகம் புத்தகங்களை வாசிப்பேன். ஒரு கலைஞர் மேல் உயர்ந்து போவதற்கு அடிப்படையாக அவர்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும். அந்த வாசிப்புத்தான் நாளை அவர்களை வாசிக்கும். எனது தேடலில் அதிகம் வாசிப்புத்தான். அந்த வாசிப்புதான் என்னை மேலுயர்த்தும்.

கவிதாயினி ராஜ்சுகா

எவ்வகையான நூல்களை வாசிக்கின்றீர்கள்? உங்களைக்கவர்ந்த எழுத்தாளர்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

நான் அதிகம் கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களது நூல்களை விரும்பி வாசிப்பேன். புதுமையான வரிகளைக்கொண்டு, அருமையன கருவை உருவாக்கி, படைப்பார். எவ்வகையான தரப்பினர் என்றாலும் அவர்கள் இலகுவாக வாசித்து, புரிந்து கொள்வார்கள்

மரபுக்கவிதையில் மறைந்திருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கவிஞர் பொத்துவில் அஸ்மினின் நூல்களை வாசித்தால் புரியும்.

கவிஞர் வைரமுத்து, மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் இவர்களின் படைப்புகளை விரும்பி வாசிப்பேன். நான் வாசிப்பில் நூல் வகைப்படுத்துவதில்லை. கிடைக்கும் நூலை எனக்குள் வாசித்து அடக்குவேன்.

கவிதாயினி ராஜ்சுகா

மிக இலகுவாக இணைய வழிப்போட்டிகளில் பரிசுகள், விருதுகள் கிடைக்கின்றது. இது எத்தனை காத்திரம் என நினைக்கின்றீர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

முழுமையாகச் சொல்லப்போனால், இவ்வாறான போட்டிகளுக்கு நான் அதிகம் போட்டியிடுவதில்லை. எனக்கு நேரம் கிடைத்தால், அந்த நேரத்தில் வாய்ப்புகள் இருந்தால், போட்டி விதிமுறைகளை அறிந்து கொண்டு நான் போட்டியிடுவேன். ஆனாலும், சிலர் நன்றாகச் செயற்படுகிறார்கள்.

கவியுலகப்பூஞ்சோலை, ஒரு கவிஞனின் கனவு போன்ற சில அமைப்புகள் நன்றாகச் செயற்படுகிறார்கள். சிலர் ஒரு குழுவாக இருந்து கொண்டு, அவர்கள் இவ்வாறான போட்டிகள் நடாத்தி, கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்து, அந்த கலைஞர்களைப் போட்டியிட வைத்து, ஏற்பாட்டுக்குழுமத்திலுள்ளவர்களுக்கே அதிகம் பரிசு வழங்குவதை என்னால் காணக்கிடைக்கிறது. இவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்றால், அவர்களது வளர்ச்சியை பட்டை தீட்டவே இந்த முயற்சி எனக்கூறலாம்.

கவிதாயினி ராஜ்சுகா

காதல் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

இன்றைய தலைமுறைக்கு காதல் பாடல்கள் தான் அதிகம் பிடிப்பதுண்டு. எந்தத்தலைமுறையென்றாலும், காதலை ஓரங்கட்ட முடியாது. நான் காதலின் வலிகளை நன்குணர்ந்தவன். என்னைப்போல் பலர் காதலின் வலிகளைச்சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

என்னை எழுத வைத்ததும் காதல் தான். காதலுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பது ஏன்? காதல் ஏமாற்றம் எதனால் ஏற்படுகின்றன? இவ்வாறான விடயங்களை பாடல் மூலம் காதலர்களுக்கும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென்பதே எனது முயற்சி. அதனாலே அதிகம் காதல் பாடல்கள் எழுதுகிறேன். நான் பாடல் எழுதும் போது எவ்வாறான கதை வருகின்றதோ, அந்தக்கதையினை பாடலுக்குள் கொண்டு வருவது தான் எனது முயற்சியும் காரணமும்.

கவிதாயினி ராஜ்சுகா

பெரும்பாலும் எம் நாட்டு பாடலாசிரியர்கள் தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதையே பெரிதும் விரும்புகின்றார்கள். இது ஏன்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

எமது நாட்டில் எந்தத்துறைகளை எடுத்தாலும், அதற்குள் அரசியல் நுழைந்து, திறமைகளைச் சீரழித்து விட்டு, படைப்பாளிகளை படுக்க வைப்பதும் பழி வாங்குவதுமாகவே இருக்கிறது.

இலங்கையில் எந்த ஆட்சி வந்தாலும், இந்த செயல் நிறுத்தப்படப்போவதில்லை. இப்படியான செயல்களால் தான் இலங்கையிலுள்ள திறமைசாளிகள் அவர்களது திறமைகளை பறைசாற்ற வெளிநாட்டை நாடுவது இலங்கையிலுள்ள கலைஞர்கள் தென்னிந்திய திரைப்படம் போன்று எடுப்பதற்கு அதிகமான இயற்கை வழங்களை வைத்திருந்தும், போதிய பொருளாதார வசதியில்லாததால் அவர்கள் தென்னிந்தியாவில் அவர்களின் திறமைகளைப் பறைசாற்றி அங்கீகாரம் பெறுகிறார்கள். இதனால்த்தான் தென்னிந்தியாவை நாடுவதும்
தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதுவதும்.

கவிதாயினி ராஜ்சுகா

தொழிலுக்கு மத்தியில் கவிதைத்துறையில் எப்படி உங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றீர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

எப்படித்தான் தொழில் செய்தாலும், ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் போதும் ஒரு நிலையான கவிஞன் மூன்று சிறந்த கவிதை படைக்கவே. அவ்வாறு தான் நான் நேரத்தைச் சரியாக வைத்து, இயங்கி வருகிறேன். அப்பப்போ தூக்கத்திலுள்ள நேரத்தில் ஒரு மணித்தியாலத்தைக் களவாடுவதுண்டு. இப்படித்தான் எனது கலைப்பயணம் பயணிக்கிறது.

கவிதாயினி ராஜ்சுகா

இன்று பல படைப்பாளிகளின் ஆரம்பம் முகநூலாகக் காணப்படுகின்றது. இதில் அனைவரின் எழுத்துக்களும் தரமானது எனக்கொள்ளலாமா?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

முகநூல் மூலம் கவிதைகளை வாசிப்பவர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள். நாம் எதாச்சும் எழுதிப்போடலாமென நினைத்து எழுதுவார்கள். அவர்கள் படித்த கவிதையிலுள்ள சிறிய கருவை வைத்து, சொற்களை மாற்றி, இரண்டு மூன்று வரிகளை அந்தக்கருவிலுள்ள ஒரே காத்திரத்தை வேறு சொற்க்களில் கொண்டு வருவார்கள்.

சிலர் யாரோ ஒருவர் எழுதிய முழுக்கவிதையில் இடையிலுள்ள பந்திகளைக்கொப்பி செய்து, அவர்களின் முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பல கோலத்திலிருக்கின்றனர். எனது வரிகளைச்சுட்டவர்களை இனங்கண்டு, நான் எச்சரிக்கை செய்த அனுபவமும் உண்டு.

கவிதாயினி ராஜ்சுகா

இன்றைய இளைஞர்கள் எல்லா விடயங்களிலும் மிகவும் அவசரமாகவே செயற்படுகின்றார்கள். இது ஆரோக்கியமானதா? அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

அவசரமாகச் செயற்படுதல் என்றால், இரண்டு வகையில் பார்க்க வேண்டும். ஒன்று நிதானமாக போ. இரண்டாவது நிற்காமல் ஓடு. சில விடயங்களிடம் நெருங்கும் போது நிதானமாகத்தான் நெருங்க வேண்டும். சில விடயங்களை நிற்காமல் ஓடித்தான் அடைய வேண்டும்.

இன்றைய தொழிநுட்ப‌ வளர்ச்சி அதிகம் அந்த வளர்ச்சி போல நாமும் செயற்பட வேண்டும். எந்தவொரு விடையத்தையும் தொடரும் போது, நாம் தொடர்ந்த அந்த விடயம் யாருக்காவது இடைஞ்சலாக இருக்கிறதா? அல்லது அந்த விடயம் வெற்றிகரமாக முடியுமா? என நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்து. அதில் கிடைப்பது எதுவென்றாலும், உனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு அடித்தள அனுபவமாக இருக்கும் தோல்விகளை அதிகமாக தனிமையில் கொண்டாடு. தோல்விக்குப் பிறகு தான் வெற்றிக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

உனது வெற்றிக்கு நீ பாடுபடுவதை விட, உன்னோடு போட்டியிடும் அந்தத் தரப்பினரின் தோல்விக்கு நீ பாடுபடு. உன்னைத்தேடி தானாக  வெற்றி வரும். இதுவே எனது வெற்றியின் ஆயுதம். இவ்வாறு இன்றைய இளைஞர்கள் செயற்பட்டால், நியாயமான அங்கீகாரத்தை அடைய முடியும்.

கவிதாயினி ராஜ்சுகா

சமூகத்தின் எந்த அவலங்களைக்கண்டு தங்கள் படைப்புக்களில் கொதித்தெழும்புகின்றீர்கள்?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்களின் செயற்பாட்டை நடு நிலையாகச் சிந்தித்து, எனது பேனா சீறும். இப்படிச்செய்தால், என்னை ஓரங்கட்டும் அந்த அரசியல் என்று நன்கறிந்த விடயம் தான். ஆனால், எந்த ஓரத்தில் என்னை ஒதுக்கினாலும் நான், எனது எழுத்துக்கு ஓய்வு கொடுக்கப்போவதில்லை. எனது வாயை உடைத்தாலும், எனது விரல்கள் பேசும். விரல்களைக் வெட்டினாலும்
உயிரைக் கொன்றாலும் எனது நூல்கள் பேசிக் கொண்டே இருக்கும்.

கவிதாயினி ராஜ்சுகா

உங்களுக்கான வாய்ப்புக்களில் இலங்கை ஊடகங்களின் பங்களிப்பு?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

ஊடகங்கள் சிலர் பணத்துக்காக செயற்படுகிறார்கள். சில ஊடகங்கள் இனத்துக்காகச் செயற்படுகிறார்கள். இலக்கியத்தை நேசிக்கும் ஊடகம் தான் என்னை வாசிக்கிறார்கள். காலம் கடந்து போகும் போது, என்னில் மாற்றம் வரும். ஊடகமெல்லாம் என்னை நாடி வரும். தேடி வரும் . தற்போது இப்படித்தான் நடக்கிறது. இன்னும் இருக்கிறது சில ஊடகங்கள் என்னை நாடுவதற்கு. மிக விரைவில், என்னை நாடுவார்கள் அதற்கான‌ முயற்சியில் பயணிக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா

எதிர்காலத்திட்டங்கள் பற்றி?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

அதிகமான நூல்கள், பாடல்கள் வெளியிடத்திட்டம் போட்டிருக்கிறேன். தென்னிந்திய சினிமாவை என் பக்கம் திரும்ப வைத்து. அந்த இடத்தை நாடுவதற்குச் செயற்பட்டு வருகிறேன். அதற்கான பயிற்சியிலிருந்து விடை பெறும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஒருவரால் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகக் காத்திருக்கிறேன். காத்திருப்பு ஒரு அழகு. கற்பனை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு காத்திருப்பது தான்.

கவிதாயினி ராஜ்சுகா

கல்குடாநேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

சஹாப்தீன் முகம்மது சப்றீன்

கல்குடா நேசன் போன்ற இணையத்தளங்களை வாசகர்கள் அதிகம் வாசிக்க வேண்டும். வாசிப்பதோடு நிறுத்தி விடாமல், ஏனைய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறந்த நோக்கத்தோடும், சீரான திட்டமிடலோடும், முற்றிலும் சமூகத்துக்காகவே செயற்பட்டு வருகிறார்கள். இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு கல்குடா நேசன் ஒரு வரமெனக்கூறலாம்.

படைப்பாளிகளை இனங்கண்டு, அவர்களை இந்த உலகத்திற்கு அடையாள‌ப்படுத்தி, அறிமுகஞ்செய்து வருவதைக்கண்டு மகிழ்ந்தேன்.

எனக்கும் வாய்ப்பினைத்தந்து, காத்திரமான கேள்விகளைச் சுமந்து வந்த கவிமெட்டு சகோதரி ராஜ்சுகாவுக்கும் கல்குடா இணையத்தள செயற்பாட்டாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ நன்றிகள்.

மேலும் கல்குடா நேசன் பல வளர்ச்சிகளை எட்ட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.14238304_975543205905073_5668115266357877229_n 14333223_975540572572003_5863358206404830491_n13592251_923626751096719_1664218354985450873_n 14137851_964086123717448_2049957436_n 14159105_964071243718936_1627260647_n 14159234_964071270385600_114433072_n 14159887_964083277051066_441479883_n 14159918_964084620384265_1563321187_n 14169585_964071227052271_1886558764_n 14182311_964074987051895_1620183165_n 14182470_964071257052268_1857885065_n 14182492_964071283718932_704809028_n 14182565_964071300385597_254813987_n 14193676_964084637050930_278243424_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*