இவ்வார கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் இணைகிறார் அதிபர், எழுத்தாளர் சாய்ந்தமருது றிப்கா அன்ஸார் அவர்கள்-நேர்காணல் உள்ளே….

Spread the love

147520739515635நேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரம்  பெண் படைப்பாளி ஒருவரைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 48வது படைப்பாளியாக இணைகிறார் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதைச்சேர்ந்த றிப்கா அன்ஸார்  அவர்கள்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் இவர், ஒரு  சிறந்த  எழுத்தாளராகவும் வலம் வருகின்றார். இவரது  எழுத்துக்களையும் திறமையையும் கண்டு, கல்குடா  நேசனின் நேர்காணலுக்காக நாடினோம்.

இலக்கியம், பாடசாலை, கல்வி, மாணவ சமூகம், ஆசிரிய சேவைபற்றிய தெளிவு, குடும்பம் எனப்பல்வேறு பயன்மிக்க விடயங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். தனது ஆளுமை பற்றியும் வெற்றியின் ரகசியம் பற்றியும்  குறிப்பிடும் இவரின் கருத்துக்கள் வளரும் இளம் சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் வளர்ந்தவர்களுக்கு ஆலோசனையாகவும் அமைந்திருக்கின்றது. இவ்வருமையான நேர்காணலோடு இப்போது  இணைந்து கொள்ளலாமா?

கவிதாயினி ராஜ்சுகா: தங்களைப்பற்றி?

 றிப்கா அன்ஸார்: இந்நேர்காணலுக்கு என்னை அழைத்தமைக்கு முதலில் உங்களுக்கு எனது வந்தனங்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் அம்பாறை  மாவட்டத்திலுள்ள வடக்கே கல்முனை எனும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும்  சூழப்பட்ட சாய்ந்தமருது எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவள். என் பெற்றோருக்கு இரண்டாவது பிள்ளை.

ஆரம்பக்கல்வி, உயர் கல்வி இரண்டையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றேன். அதே பாடசாலையில் எனது தந்தையும் ஆங்கில ஆசானாகக் கடமையாற்றினார். பின்னர் கல்விக்கல்லூரியில் கற்று அதே பாடசாலையிலேயே ஆசிரியத்தொழிலில் இணைந்து, பின் கல்விமாணிப்  பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து, பின்னர் அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று அதிபர் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, தற்போது சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தற்போது முதுமாணிப் பட்டத்திற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன். மென்மேலும் கற்க வேண்டுமென்ற ஆர்வமிருக்கின்றது. அத்துடன், வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளராக இருக்கின்றேன்.

இதே ஊரைச்சேர்ந்தவர் என் கணவர். இருவரும் இல்லற வாழ்வில் இன்பமாய் இணைந்தோம். தென் கிழக்குபல்கலைகழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். தற்போது PHT கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறார். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரு ஆண் மகன். குடும்பம் ஒரு கதம்பம் என்பது போல மனம் நிறைந்த வாழ்க்கை அமைந்ததை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா: அதிபராகக் கடமையாற்றும் உங்களுக்கு தற்கால மாணவர்களின் ஒழுக்க நிலை பற்றி எவ்வகையான அபிப்பிராயம் காணாப்படுகின்றது?

றிப்கா அன்ஸார்: கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, தற்கால மாணவர்களின் ஒழுக்க நிலை வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதாகவே உணர்கின்றேன்.
இதற்கு மாணவர்களை மாத்திரம் நாம் குறை கூறிப்பிரயோசனமில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்களும் தான் இவ்விடத்தில் பிழை விடுகின்றனர்.

பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆன்மீகத்துறைக்கு  கொடுப்பதில்லை. உலகாயுதக் கல்வியில் பெற்றோர் அதிக கவனஞ்செலுத்துவதால் ஆன்மீக வழியில் அவர்களின் கவனம் குறைகிறது. வணக்கத்தலங்களுடன் பிள்ளைக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தால் தானாக அவர்களின் மனம் நல்ல விடயங்களை நாடிச்செல்லும்.

மேலும், ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், தாம் கற்பிக்கும் வகுப்புக்களில் தினமும் காலையில் 5 நிமிடமாவது அறிவுரைகள் வழங்குவதற்காக ஒதுக்க வேண்டும். அத்தோடு, மாணவர்கள் விடும் தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டித் தடுக்க வேண்டும். பிழைகளைக்கண்டு கொள்ளாமல் விடுவதும் ஆசிரியர்கள் விடும் பெரிய தவறாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நவீன தொடர்பு சாதனங்களின் செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுவதாலும் இன்றைய மாணவர்களின் ஒழுக்க நிலை குன்றிக்காணப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் காதல் பற்றிய உணர்வுகள் மிக சாதாரணமாக தற்காலத்தில் ஏற்படுகிறது. இதற்கு சாதகமான சூழலும் சில குடும்பங்களில் நிலவுகின்றன. தனது மகன் காதல் வலையில் விழும் போது, தனக்கு கிடைக்காத விடயம் தனது பிள்ளைக்கு கிடைத்து விட்டதே எனப்பூரிப்படையும் முட்டாள் தனமான பெற்றோர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர் .

எனவே மாணவர்கள் மாத்திரமன்றி, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தற்கால மாணவர்களின் ஒழுக்க நிலை குன்றக் காரணமாயிருக்கின்றனர்.

கவிதாயினி ராஜ்சுகா: வரலாற்றில் சாதனை படைத்த எத்தனையோ சாதனையாளர்கள் பாடசாலை, ஆசிரியர்களால் புற‌க்கணிக்கப்பட்டவர்கள் என வரலாறு கூறுகின்றது. படிப்பில் ஆர்வங்குறைந்த மாணவர்களை எவ்வாறு அணுகலாம்? அணுகுகின்றீர்கள்?

றிப்கா அன்ஸார்: படிப்பில் ஆர்வம் குறைந்து செல்வதற்கு முக்கிய காரணம் விருப்பமின்மையாகும். பிள்ளை கற்கும் சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும். தற்போது பாடசாலைகளை பிள்ளை நேய பாடசாலைகளாக (ஊhடைன குசநைனெடல ளுஉhழழட) மாற்றுவதற்கு அரசு பல திட்டங்களையும்கொள்கைகளையும் வகுத்தாலும் சில விடயங்கள் கொள்கையளவில் மாத்திரமே காணப்படுகிறது.

ஒரு மாணவன்  சிறப்பாக கற்கிறான் என்றால் அவனுக்கு நல்லதொரு ஆசிரியர் வாய்த்திருக்கிறார் என்றும் நல்லதொருசூழல் அமைந்திருக்கிறது என்றும் அர்த்தம் . அதேவேளை ஒரு மாணவனின் வரவு ஒழுங்கீனமாக காணப்படுவதற்குபாடசாலை சூழல் மகிழ்ச்சிகரமற்றதாக காணப்படுவதும் ஒரு காரணமாகும் . எனவே ஆசிரியர்கள்தான் அச் சூழலைமாணவனுக்கு சாதகமானதாக மாற்றிக்கொடுக்க வேண்டும்.

மேலும் மாணவர்களுடன் ஆசிரியர்கள்  சாதகமான அணுகுமுறையுடன் (Positive Approach) நடந்து கொள்ள வேண்டும். எடுத்ததுக்கெல்லாம்  எரிந்து விளககூடாது.  இவ்வாறான விடயங்கள் எமது பாடசாலை ஆசிரியர்களுக்கும்  வலியுறுத்தி வருகின்றோம்.

பிள்ளையுடன் ஒரு சிநேகபூர்வ உறவைப் பேணி வருவது சிறந்ததாகும். ஆனால், அதற்கு ஒரு அளவை வைத்துக் கொள்ள வேண்டும். எதுவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகி விடும்.

முக்கியமான விடயம் தனது வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரைப் பற்றிய முழு விபரங்களையும் அவ்வவ் வகுப்பாசிரியர் விலாவாரியாகத் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.  இது தரம் 1 இல் மாணவர்களை அறிந்து கொள்வோம் எனும் செயற்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தான், அவனுடைய இயலும், இயலாமை, விருப்பு, வெறுப்பு என்பவற்றுக்கேற்றாற்போல் நாம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

மேலும், கற்பித்தல் நடவடிக்கையின் போது, சிறந்த, மாணவர்கள் விரும்பக்கூடிய கற்பித்தல் அணுகுமுறைகளைக் கையாண்டால், கற்பித்தல் வெற்றியளிக்கும். அதாவது, இலகுவிலிருந்து கடினத்துக்கு கொண்டு செல்லல் முறை, விளையாட்டு முறை போன்றன மாணவனுக்கு ஆர்வத்தை அதிகரிக்கக் கூடிய முறைகளாகும்.

இவற்றின்  மூலம் கற்பித்தலை வெற்றிகரமாக்கலாம். மேற்கூறிய அணுகுமுறைகளை நாம் பயன்படுத்தும் போது, படிப்பில் ஆர்வங்குறைந்த மாணவர்களை ஆர்வமுள்ள மாணவர்களாக நிச்சயமாக மாற்றலாமென்பது எனது நம்பிக்கை.

கவிதாயினி ராஜ்சுகா: தற்போது மாணவர்களை “கண்டிப்பதில்” ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றார்கள். பெற்றோர்களிடமிருந்தான எதிர்ப்பு, அதற்கேற்ப சட்டங்கள் மற்றும் எந்தவித கண்டிப்பையும் ஆலோசனைகளையும் மாணவர்கள் உள்வாங்கிக் கொள்ள முடியாமையுமே. இது மாணவ சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதா?

றிப்கா அன்ஸார்: முதலில் கண்டித்தல் ஏன் அவசியமென்பதைப் பார்ப்போமானால், அது பிழை செய்யும் அல்லது குற்றஞ்செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான ஒரு வழியெனக் கூறப்படுகின்றது. மாணவர்கள் தவறிழைப்பது சகஜம். ஆனாலும், தவறு செய்வதற்கான வாயில்களை ஓரளவேனும் அடைத்தோமேயானால், கண்டிப்புக்கு வாய்ப்புக்குறைவாகக் காணப்படும்.

மாணவர்களைக் கண்டித்தல் சட்ட விரோதமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். எனினும், இலகுவான கண்டிப்பு, கடினமான கண்டிப்பு என வகைப்படுத்தி நாம் இலகுவான கண்டிப்பைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அது மாணவனைத் திருத்துவதற்கு உதவியாகவும் அமைகின்றது.

இவ்வாறான நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால், நாம் சில யுக்திகளைக் கையாளலாம்.

முதலாவது, சில பாடசாலைகளிலுள்ள அதிகரித்த மாணவர் நெருக்கடிகளைக் குறைக்க வேண்டும். மாணவர் தொகை பாடசாலை வளத்துக்கேற்றவாறு சமப்படுத்தப்படல் வேண்டும். ‘விரலுக்கேற்ற வீக்கம்’ இருந்தால் தான் மாணவர்களிடையே பிழைகளை ஓரளவு குறைக்கலாம்.

இரண்டாவது விடயம் ஒருவன் பிழை செய்கிறான் என அறிய வரும் போது, அதை தீர விசாரித்த பின்பே கண்டிக்க வேண்டும். ஏற்கனவே தவறு செய்வதற்குப் பழக்கப்பட்டவனாக இருந்தாலும் கூட.

மூன்றாவது, இவ்விடயத்தில் சில ஆசிரியர்கள் விடும் தவறு என்னவென்றால், மாணவர்களின் பிழைகளைக் கண்டும் காணாது விடுவதாகும். அவர்களை திருத்தாமல், ஆலோசனை, வழிகாட்டல் செய்யாமல் தொடர்ந்தும் அப்படியே விடுவதால், அவன் தொடர்ந்தும் குழப்பக்காரனாகவே இருந்து வர வாய்ப்பாகவுள்ளது.

நான்காவதாக, இந்த விடயத்தில் பெற்றோர் பக்கம் பார்க்கும் போது, தன் பிள்ளை மீதான அதீத நம்பிக்கை, அவர்களுக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலை பிழைக்கு இட்டுச்செல்கிறது. மாறாக, பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு வழங்கப்பட்ட தண்டனையை நியாயப்படுத்தியோ அதனைக் கொண்டு அவர்களை திருத்த முயன்றாலோ பிழையிலிருந்து தவிர்க்கலாம்.

ஐந்தாவது விடயம் என்னவென்றால், சம காலத்தில் ஆசிரிய சமூகத்தின் மீதான நம்பிக்கையீனம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தனியார் வகுப்புகள் மீதான மோகம்.  இதனை அவர்கள் மனதிலிருந்து களைய வேண்டும்.

எந்தவொரு மாணவனும் தான் செய்த பிழையை  பிழை என்று ஏற்றுக் கொள்ளாத வரை அவன் திருந்தமாட்டான். சிறந்ததொரு ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், கண்டிப்பு அங்கே அவசியம். ‘அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி உதவமாட்டான் ‘ என்ற ஆன்றோர் வாக்கை சும்மாவா சொன்னார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா: அதிகரித்து விட்ட பிரத்தியேக வகுப்புக்களால் உண்மையில் மாணவர்கள்பயனடைகின்றார்களா? மாணவர்களை விட பெற்றார்கள் இவ்வகையான வகுப்புக்களில் அதிக ஆர்வங்காட்டுவதாக ஒரு தகவலும் இருக்கின்றது. இது பற்றி உங்கள் கருத்து?

றிப்கா அன்ஸார்: தற்போது கல்வி ஒரு வியாபாரப்பொருளாக மாறி வருவதனால், பிரத்தியேக வகுப்புகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 10 வீதமான நன்மையையே அடைகின்றனர். மாணவர்களை மொத்தமாக வைத்துக் கற்பிப்பதால் உரிய விடயம் எல்லா மாணவர்களுக்கும் சென்றடைவதில்லை. அதனால் சிறந்த Productivity காணப்படுவதில்லை.

பெற்றோர்களைப் பொறுத்த வரையில், பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்களை முடக்கி விட்டு அவர்கள் ஆறுதலைடைகிறார்கள் என்பதே உண்மை. பாடசாலை விட்டு வீடு வரும் பிள்ளைக்கு வழியிலேயே சாப்பாடும் மாற்று உடையும் காத்துக் கொண்டிருக்கும். பெற்றோருடனோ சகோதரர்களிடமோ ஒரு வார்த்தையேனும் கதைப்பதற்கு நேரமிருக்காது. தமது தேவைகள், எண்ணங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்காமல் மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தமது பிள்ளை ஓடியோடிப் படிப்பதாக நினைத்து பெற்றோர் பெருமையடைகிறார்கள்.

உண்மையில் பாடசாலையில் வழங்கப்படுகின்ற ஆளணி, பௌதீக வளங்களை உச்சளவில் பாடசாலை பயன்படுத்துகின்ற போது, இந்த பிரத்தியேக வகுப்புகளுக்கு எந்தத் தேவையுமில்லை. இதற்கு பாடசாலை அதிபர் ஒரு சிறந்த முகாமையாளராக இருந்தால் செயற்படுத்தலாம்.

கவிதாயினி ராஜ்சுகா: இலக்கியத்தின் மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

றிப்கா அன்ஸார்: சிறு வயதிலிருந்தே கலை, இலக்கியத்துறையில் எனக்கு ஆர்வம் நிறைய இருக்கிறது. தெரியாது என்பது என் அகராதியில்  இருக்கக்கூடாது என்பது என் கொள்கை. பாடும் திறமையும் ஓரளவு உண்டு. அத்துடன், ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ வாசித்தால் நாமும் ஏன் இதனைப்போல் எழுத முயற்சிக்க கூடாதென்ற எண்ணம் எனக்குள் வந்ததால், இயல்பாகவே எழுதத் தொடங்கி விட்டேன்.  பல படைப்புகளை யாத்துள்ளேன்.

என் ஆர்வத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முதலாவதாக என் அன்புத்தந்தையும் அடுத்ததாக என்னுயிர்க்கணவரும் முக்கிய காரணமாக அமைந்தார்கள். என் தந்தை ஒரு கவிஞரும் வரலற்றாசிரியருமாவார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பற்றிய வரலாற்று நூலும் எமது குடும்ப வரலாறும் மற்றும் கடந்த கால அரசியல்வாதிகளின் வரலாறுகளும் எழுதியுள்ளார்.

திருமணத்திற்கு முன் என் தந்தை எனக்கு கொடுத்த ஊக்கம் என் வெற்றிக்குப் படிக்கற்களாக அமைந்தன. இதன் நிமித்தம் பல விருதுகளையும் பெற்றுள்ளேன்.

2015 ஆம் ஆண்டு தடாகம் கலை, இலக்கிய வட்ட பன்னாட்டு அமைப்பினால் நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று, கவித்தீபம் பட்டமும் எனது கலை இலக்கியத்துறையை பாராட்டி “கல்விச்சுடர்“ என்ற விருதும் இதே தடாகம் கலை இலக்கிய வட்டத்தால் வழங்கப்பட்டது.

தடாகம் கலை இலக்கிய  வட்ட நிர்வாக உறுப்பினராகவும் செயற்படுகிறேன். அத்துடன் LACSDO MEDIA NETWORK SRILANKA வினால் கலைத்தீபம் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அவ்வமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறேன்.

நிலா முற்ற முகநூல் குழுமத்தினரால் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் வெற்றி பெற்று நிலா கவிஞர் பட்டமும் விருதும் வழங்கப்படவுள்ளது.

பல வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும்  இலக்கியப்பயணம் எனக்கு மன நிறைவைத் தருகின்றது. இலக்கியத்தைத் தொடர்ந்தும் சுவாசித்து வரும் நான், சமுதாய சீர்திருத்தத்தை மையமாக கொண்டே என் சகல ஆக்கங்களும் அமையுமென்பதில் ஐயமில்லை.

கவிதாயினி ராஜ்சுகா: இதுவரை உங்கள் படைப்புக்கள் வெளிவந்த ஊடகங்கள் ?

றிப்கா அன்ஸார்: வெளியிடப்படாத அதிகமான கவிதைகள் ஆரம்ப காலத்தில் என்னுள்ளே புதைந்து கிடந்தன. அதற்குரிய களங்கள் இப்போது எனக்குக் கிடைத்து, என் ஆக்கங்கள் வெளிவருகின்றன.

தினகரன், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி, தமிழ்த்தந்தி, விடிவெள்ளி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் ஒளி அரசி, கல்விமாணி, எங்கள் தேசம் போன்ற இன்னோரன்ன சஞ்சிகைகளிலும் மற்றும் பல இணையதளங்களிலும் புத்தகங்களிலும் எனது கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்த வண்ணமுள்ளன.

“சீதனச்சீரழிவுகள் ” எனும் கவிதை மூலம் கவிதாலோகத்திற்குள் நுழைந்தேன். இது அப்போது அமோக வரவேற்பைபெற்றது. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், மரபுக்கவிதைகள் போன்றனவும் கல்வி, மருத்துவம், சமய விழுமியம் சார்ந்த கட்டுரைகளும் என்னால் எழுதப்பட்டுள்ளன.

கவிதை முகநூல் குழுமம், இணையத்தளங்கள் என்னுள் மறைந்திருந்த ஆற்றலை வெளிப்படுத்த, பகிர களம் தந்தன. தடாகம் இலக்கிய வட்டத்தின் ஆசிரியராகப் பயணிக்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: இலக்கியத்துறையில் பெண்களின் பங்கு பற்றியும், அவர்களுக்கான சுதந்திரம் பற்றியும் கூற முடியுமா?

றிப்கா அன்ஸார்: பெண் இலக்கியவாதிகளுக்கு தற்காலத்தில் நிறையவே சுதந்திரம் காணப்படுகின்ற போதும், அவர்களின் ஆக்க வெளியீடு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. பிள்ளை வளர்ப்பு, குடும்ப நிர்வாகம், வருமான வழிகளைத்தேடல் போன்றவற்றுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை பல திறமை வாய்ந்த பெண்கள் தமது இலக்கியத்துறைக்குக் கொடுப்பதில்லை.

திறமை வாய்ந்த பெண்களுக்கு சமூகத்தின் தேவையை உணர்ந்து, அவர்களின் இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், சமூகமும் ஒத்துழைப்பு வழங்கினால், அவர்களின் இலக்கிய வெளியீடுகள் இலை மறை காயாகாது.

சிறு சிறு விடயங்களிலும் அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கின்ற போது, மென்மேலும் அவர்களின் ஆற்றல்கள் வளம் பெறும்.

பெண்களின் வளமான இலக்கியங்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டிக் கௌரவிக்கப்படுகின்ற போது, தரமான பெண் இலக்கியவாதிகளை எமது சமூகத்துக்கு இனங்காட்டலாம். சுதந்திரம் என்பது தற்கால தொழிநுட்பத்திலும் இவர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. பெண்களின் ‘முன்வருதலே’ இங்கு முக்கிய தேவையாகயுள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா: 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மிக அதிகளவில் திருமணம் செய்கின்றனர். இளவயதுத் திருமணம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

றிப்கா அன்ஸார்: இன்றைய கால கட்டத்தில் படிப்பறிவு மிகவும் குறைவான பகுதிகளிளேயே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. இள வயதுத்திருமணங்கள் ஆண்களை விடவும் பெண்களிடையே தான் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் காணக்கிடக்கிறது.

இது பெண்களில் குடும்ப மட்டத்திலும், சமூக மட்டத்திலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், உடலியல், உளவியல் ரீதியாக பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இளவயதுத் திருமணங்கள் சில பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்தாலும், அவற்றை குறைத்துக் கொள்வதே நல்லது.

கவிதாயினி ராஜ்சுகா: பெண்கள் தங்களுக்கான ஆளுமைகளை, தனித்துவத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டுமென எண்ணுகின்றீர்கள்?

றிப்கா அன்ஸார்: பெண்கள்  தம்மை தாமே வளர்த்துக்கொள்ள  வேண்டும். அதன் முதற்படியாக நமது கல்வித்தகைமையை வளர்த்துக் கொள்வதோடு, நம்முள் உள்ளார்ந்திருக்கும் ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், பெண்கள் தம்முடைய சுய கௌரவம் குறித்த விழிப்புணர்வுடையவர்களாய் மாற வேண்டும். தாம் வெறுமனே ஒரு பாலியல் பண்டமாக, அலங்காரப்பதுமையாக, வெற்று உடலாகப் பார்க்கப்படுவதை பெருமைக்குரியதாகக் கருதும் அறியாமையிலிருந்து பெண்கள் மீள வேண்டும். கிணற்றுத் தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி, நாட்டு நடப்பு, உலக நடப்பு என்பன குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.

சமூக அக்கறை, மானிட நலன் என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும், ஆற்றலிலும், ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும் வளர வேண்டும்.

அதே நேரத்தில், பெண்களுக்கே உரித்தான வகையில் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வரம்பு மீறும் போது அதுவே எமக்குப் பிரச்சினையாகவும் அமையலாம்.

கவிதாயினி ராஜ்சுகா: தொழில், இலக்கியம், குடும்பப்பொறுப்பு இவற்றில் உங்களுக்கு குடும்பத்திடமிருந்து கிடைக்கும் ஆதரவு ஒத்துழைப்புப் பற்றி?

றிப்கா அன்ஸார்: முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். எனக்கு இவ்வாறான ஒரு வாழ்க்கை கிடைத்தமையையிட்டு. மகிழ்ச்சியான, மங்கலமான, அடுத்தவர் பொறாமைப்படும் படியான வாழ்க்கை எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஒருவரின் உயர்ச்சிக்கு குடும்ப ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஒத்துழைப்பு இல்லையென்றால், நாம் zero தான்.

என் தந்தைக்குள்ள இலக்கிய ஆர்வம், வாசிப்பில் ஆர்வம் எனக்குள் வந்தது. அதனால், தந்தையிடமிருந்தான பூரண ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கிறது.

இதன் விளைவாக எனது வீட்டின் மேல் மாடியில் நூலகமொன்று அமைத்திருக்கிறோம். ‘Cassim Library’ எனும் பெயரில் ஆயிரக்கணக்கான நூல்கள் அதில் காணப்படுகின்றன.

என் சுமையை தன் சுமையாக நினைத்து என் பொறுப்புகளைப் பொறுப்பெடுத்து நடத்தும் தாய் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என் தந்தையின் உயர்ச்சிக்கு கூட தோளோடு தோள்  நின்று  ஒத்துழைத்தார். அண்மையில் வானொலியில் எனது பேட்டி ஒன்றிலும் எனது தாய் பற்றிக்கூறும் போது ‘ She is an exact role model to be a wife’ என்று குறிப்பிட்டேன். அந்தளவுக்கு குடும்பத்துக்கொரு அச்சாணியாக தொழிற்பட்டு வருகிறார்.

தந்தை ஆங்கில மொழிக்கல்வி, தாய் தமிழ்  மொழிக்கல்வி. இருப்பினும், இரு துருவங்களை ஒரு துருவமாக்கினார்.

கணவன் பற்றி சொல்லவே தேவையில்லை. அவரின்றேல் நானில்லை. என்னுடைய அத்தனை முயற்சிக்கும் ஊன்றுகோலாக அமைபவர்.

குறிப்பாக, இலக்கியத்தில் அவருக்கு ஆர்வமுள்ளது. ஆங்கிலக்கவிதை எழுதுவதில் வல்லவர். அவர் ஒரு யதார்த்தவாதி என்பதால் பேர், புகழுக்கு ஆசைப்படாதவர். எழுதப்பட்ட பல கவிதைகள் வெளிவராமல் தன்னுள்ளே வைத்திருக்கிறார். அண்மையில் என் பிறந்த நாளுக்காக எழுதப்பட்ட கவிதை.

I know you were born to be my wife
and to lead a happy life.
As radiant as the sun’s beams,
you have always been the girl of my dreams.
I love you not only for what you are
but for what I am when I am with you.
I didn’t know what to get for you on your birthday
since I figured that diamonds would be too cheap
and gold too common
when compared to a jewel like you.

இவரின் ஆங்கிலத்திலான பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூல் வெளியீடுகள் நடைபெற்றன. மூன்றாம் வெளியீடு அண்மையில் நடைபெறவுள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா: நீங்கள் கொண்டுள்ள இலட்சியங்கள், உங்களது இலக்குகள் என்பவற்றைத் தெரிந்து கொள்ளலாமா?

றிப்கா அன்ஸார்: இலட்சியமில்லா வாழ்வு துடுப்பில்லா ஓடம் போன்றது. எனது வாழ்வின் முதலாவது குறிக்கோள் சுவனம் செல்வது. கணவனுக்கு ஒரு சிறந்த மனைவியாகவும், நல்லதொரு குடும்பப்பெண்ணாகவும், சமுதாயத்திற்குப் பிரயோசனமான ஒருவராகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

அடுத்தது சிறந்த பாடசாலையொன்றுக்கு அதிபராக இருந்து மாணவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது.

எனது ஆக்கங்களை நூல்களாக வெளியீடு செய்வதுடன், பல இலக்கிய நூல்களின் வெளியீடுகள் செய்ய வேண்டும். இவற்றிற்கு இறைவனும் துணை புரிய வேண்டும். தற்போது மகன் சிறியவனாக இருப்பதால் வேலைப்பழு சற்று அதிகம். ஓரிரு வருடங்களில் இவை நிறைவேறும் என நம்புகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா: வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

றிப்கா அன்ஸார்: மனிதன் மனிதனாக, மனிதத்தன்மையுடன் இருந்தால் மற்றவையெல்லாம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நயவஞ்சகமில்லா நட்பாக இருப்பதில் கவனமாக இருங்கள். யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள்.

வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். போலித்தனங்களுக்கு அடி பணிய வேண்டாம். போட்டி பொறாமையிலிருந்து விடுபட்டு நேர்மையான வாழ்வைத்தேடுங்கள். பிரபலத்துக்கு அடிமையாகி பொய்யான வாழ்வை வாழக்கூடாது.

கல்குடா நேசன் என்ற இணையத்தளத்தில் என் நேர்காணலை இடம்பெறச்செய்த கவிதாயினி ராஜ்சுகா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்கள் இந்த நேர்காணல் பகுதியை  செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது. இது ஆற்றலுள்ள மனிதர்களுக்கான ஒரு களம். சந்தர்ப்பமளித்துத் தந்த கல்குடா நேசன் இணையத்தளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.20160917_170631 img-20160406-wa0000 mc-naslin-rifca-photo rifca-10

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*