சிவசேனா அமைப்பும் கல்குடா முஸ்லிம்களும்

Spread the love

sivasena-vavuniya-091016-seithyமுஹம்மத் றிழா

சிவசேனா அமைப்பு இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சைவத்தமிழர்களின் அடையாளம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைத்தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்துத்தெரிவித்துள்ளார்.

சைவத்தமிழர்களின் நலன்களுக்காக உலக நாடுகளிலுள்ள அமைப்புகளுடனான நீண்ட கலந்துரையாடல்களின் பின்னரே இவ்வமைப்பு தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள சிவசேனாக்கும் தமக்கும் நெருக்கமான தொடர்புள்ளதாகவும் ஏனைய இந்துத்துவ அமைப்புகளுடனும் உறவுகளைப் பேணுவதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ள கருத்தினால், இலங்கைத்தமிழர் மத்தியிலும் ஏனைய பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடையே விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

சிவசேனா அமைப்பின் நோக்கங்கள் இலங்கைத் தமிழர்களை மேலும் பிழவுபடுத்தும் வகையில் மறைமுக சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளதென்ற வாதம் புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், இக்கருத்தினையே தமிழீழ ஆதரவாளர்களும் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சிவசேனா அமைப்பின் மூன்று இணைத்தலைவர்களில் ஒருவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்குடாத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும், அத்தெரிவின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்து வருகின்றமையும் அவரது தொகுதியில் சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.

சீ.யோகேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்ததில் பின்வருவன கூர்ந்து கவனிக்கத்தக்கவை, “நாங்கள் அண்மையில் வவுனியாவிலே இலங்கையிலிருக்கின்ற இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், சமயப்பெரியார்கள் போன்ற முக்கியமானவர்களை அழைத்து ஒன்று கூடலொன்றை நடாத்தினோம். இதில் மலையகம், கொழும்பு, வடக்கு, கிழக்குப் பகுதிகளைச்சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பில் நாங்கள் மூன்று இணைத்தலைவர்கள் இருக்கின்றோம். திருகோணமலையைச் சேர்ந்த அகத்தியர் சுவாமிகளும், கிழக்கு இந்து ஒன்றியத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய நானும் சச்சிதானந்தம் அடிகளாரும் இருக்கின்றோம். இது ஒரு மத அமைப்பு. எமது பகுதியில் பலவிதமான அச்சுறுத்தல்களை சைவத்தமிழர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாங்கள் ஆர்வங்காட்டவும் நடவடிக்கையெடுக்க வேண்டியும் இருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் பொது பலசேனா அமைப்பு இந்த நாட்டின் தேசிய இனங்களுக்கு பல வழிகளில் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டும், மத உரிமைக்கெதிராகவும் செயற்படுகின்றது. இந்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கெதிராக குரல் கொடுப்பதோடு, அகிம்சை வழியில் சென்று எமது இனத்தினதும் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் நாங்கள் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்” என்றார்.

சீ.யோகேஸ்வரன் மேலோட்டமாகச் சொல்லி விட்டுச்சென்ற கருத்துக்களில் பலவித பின்புல நிகழ்ச்சி நிரலுள்ளதை அவதானிக்க முடிகிறது. சிவசேனா கிழக்கில் வேகமாகப் பரவுவதற்கான சாத்தியச்சூழல் உள்ளதாகவே கருத்துக்கள் தெரிவித்தாலும், கிழக்கை மையப்படுத்தி இதனை வளர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலும் தயார்படுத்தப்பட்டுள்ளதை ஊகிக்க முடிகிறது.

பௌத்த மதத்துடன் இவ்வமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றது என்ற எதிர்பார்ப்புகள் ஒரு புறமிருக்க, தமிழர்களுடன் பின்னிப்பிணைந்து வாழும் கிறிஸ்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றார்கள் எனும் எதிர்பார்ப்பு மேற்கிளம்ப ஆரம்பித்துள்ளது.

முஸ்லிம்களுடன் உள்ள விரோத மனப்பாங்கு மேலும் அதிகரிக்கும் வகையில், இவ்வமைப்பு செயற்படுமென்றே கருதப்படுகின்றது. குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் இதன் இணைத்தலைவராக உள்ளது மாவட்ட கிறிஸ்தவ, முஸ்லிம்களிடையே அவர் மீதான எதிர் மனப்பாங்கைத் தோற்றுவித்துள்ளது.

மட்டக்களப்பு முஸ்லிம்களுடன் யோகேஸ்வரன் நடந்து கொள்ளும் முறையும், போரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்தக் கிராமங்களில் குடியமர்த்தத் தடையாக இருப்பதும், கோறளை பிரதேச செயலகங்களிலுள்ள காணிப்பிரச்சினைக்குத்தீர்வு எட்டுவதைத் தடுக்கும் அறமற்ற செயல்களும் என்றிருந்த இவர், தற்போது சிவசேனாவுக்குத் தலைமை வகிப்பது, அவர் மீதான எதிர் மனப்பாங்கை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

அதே நேரம், இவ்வமைப்பில் யோகேஸ்வரன் தொடர்ந்தும் இயங்குவாராக இருந்தால், நாட்டில் ஏற்படப்போகும் தொகுதிவாரித்தேர்தல் முறை மாற்றத்தின் பின்னர், இவருக்கான பாராளுமன்றப்பிரவேசம் கேள்விக்குறியாகுமென்பது வெளிப்படையானவொன்றாகும்.

எனவே, இவ்வாறான அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் அல்லுண்டு போவதைத்தடுத்து, இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, வளப்பங்கீடு, சகஜீவணத்தை வளர்த்தெடுப்பதில் நாம் முன்னின்று உழைக்க எம்முள் மனமாற்றங்களைக் கொண்டு வருவோமாக.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*