வை.அஹ்மத் உருவாக்கிய புதிய சிந்தனை ஒழுங்கு-முஹம்மது றிழா

Spread the love

14448894_1771433536437565_4726507411863660461_n1992 டிசம்பர் 26ம் திகதி கல்வியியளாரும், சமூக ஆர்வலருமான வை. அஹமது கண்ணி வெடிக்கு இலக்காகி உயிரிழந்தார். அவரது இழப்பு சமூகத்தளத்தில் பெரும் அதிர்வினை தந்த வண்ணமேயுள்ளது. இவ்வதிர்வுக்கான பிரதான காரணம் வை.அஹமதின் சிந்தனை முறையாகும். 1960களில் அறிவு உலகத்திற்குள் வருகிறார். அவரிடமிருந்த சிந்தனைகள் புதிய உலக ஒழுங்கொன்றைத் தோற்றுவிக்க விளைந்துள்ளது.

தான் பெற்ற பன்னாட்டு அனுபவங்களை தான் வாழ்ந்த சூழலிலுள்ள கதாபாத்திரங்களை வைத்து படைப்பிலக்கியங்களாக அவர் வெளிப்படுத்திய முறையிலிருந்து இதனைப்புரிந்து கொள்ள முடிகிறது. சமூகத்தளத்தில் புதிய சிந்தனை முறைகளைத் தோற்றுவித்து, அதற்காக உழைக்கின்ற வலு பெரும்பாலானோருக்கு கிட்டுவதில்லை. ஒரு சிலர் தோற்றுவிக்கின்ற சிந்தனைகளை அச்சொட்டாக பற்றிப்பிடித்துக் கொண்டு வாழுகின்றவர்களே அதிகமாகவுள்ளனர். இவ்வாறு பின்பற்றும் சமூக மரபை உடைத்துக்கொண்டு வை.அஹமது வெளியான விதம் அவரின் சிந்தனா சக்தியை வெளிக்காட்டுகின்றது.

பன்னாட்டு அனுபவங்களில் தாக்கங்களை தனது சொந்த வாழ்வுடன் பொருத்திப்பார்க்கும் போது, எழுகின்ற புதிய சிந்தனைகளை நிலவின் நிழலில் (1968), புதிய தலைமுறைகள், கிராமத்துப்பெண் ஆகிய நாவல்களிலும், புரட்சிக்குழந்தை, தரிசனங்கள் ஆகிய குறுநாவல்களிலும், அடித்த கரங்கள், நெஞ்சில் ஓர் நினைவு, முக்காடு, மதியம் தப்புகிறது, நிறங்கள், உப்புக்கரித்தது, தண்ணீர் தண்ணீர், முள்வேலி, புனித பூமியிலே…போன்ற 26 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும், ஆய்வுக்கட்டுரைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

காலணித்துவத்திற்குப் பின்னரான இலங்கையின் புதிய போக்கும், போரின் போதான புதிய போக்கும் இவரை வெகுவாகப் பாதித்துள்ளதை அவரது சிந்தனையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 1989 நவம்பரில் பேர்ளின் சுவர் அழிக்கப்பட்டு, ஜனாதிபதிகளான மிக்கைல் கொர்பச்சோவும் ஜோர்ஜ் புஷ்ஷூம் சோவியத் யூனியனின் போர்க்கப்பலில் சந்தித்து பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கு பற்றி புதிய தீர்மானங்களை எடுத்த அத்தருணங்களில் வை. அஹமதின் இடதுசாரீய சிந்தனையில் புதிய புரிதல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஏக காலத்தில் இலங்கையில் அடையாளம், மதம், ஆள்புல எல்லை, விடுதலை, தனி நாடு போன்றன விடயங்கள் உக்கிரமடைந்து இன முரண்பாடு வலுப்பெறலானது. இப்புதிய சூழலை வை. அஹமது புரிந்து கொண்ட விதமானது, அவரது சிந்தனைத் தெளிவையையும் சமூக ஒழுங்கில் அவர் காட்டிய அக்கறையையும் பிரதிபலிப்பதுடன், அவரது சிந்தனைப்பரப்பில் புதிய பாய்ச்சலையும் தோற்றுவித்துள்ளது.

போரால் அகதியாக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது பிள்ளைகளின் கல்விக்காகவும், மீள்குடியேறி வாழ முடியாது தங்களது குடியிருப்பை இழந்த மக்களின் சொந்தக்காணிகளை காப்பாற்றுவதற்காகவும் அயராதுழைத்த ஒரு செயல் வீரனாக அச்சிந்தனைகளை தனது வாழ்வில் பிரதிபலித்திருந்தார்.

ஆக்க சிந்தனையும் சமூக உழைப்புமுள்ள மனிதனாக வாழ்ந்துள்ளார். இவ்வாறு வாழுகின்ற மனிதர்கள் மிகக்குறைவு என்பதை இவரின் இழப்பு எமக்குத்தோலுரித்துக் காட்டுகின்றது.

வை.அஹமதின் மறைவுக்குப் பின்னர் அவரது வெற்றிடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லையென்பதை உறுதியாகக்கூற முடியும். இந்த உறுதியான நம்பிக்கை எழக்காரணம் வை. அஹமது வாழ்ந்த மண்ணிலிருந்து பெயர் போன சிந்தனையார்கள் உருவாகியுள்ளார்கள். அதே போல செயற்பாட்டாளர்களும் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், இரண்டையும் இணைத்துக்கொண்டு வாழ யாரும் ஆசை கொள்ளவில்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிகச்செயலாளராகவும் கடமையாற்றிய வேளையில், இவரது சந்தித்த சவால்கள் கடினமானவை. கடினமான சவால்களை எதிர்கொள்ளும் போது, அதை எதிர்கொள்ளும் மன வலிமையும் தைரியமும் ஒருவரின் ஆளுமையைப் பிரதிபலிக்கின்றது.

இத்துனை இடர்களுக்கும் ஈடுகொடுத்து, சமூகப்பணிகளையும் துணிந்து செய்வது கடினமானதே. ஆனால், இந்த ரிஸ்க்கையும் வை.அஹமது எடுத்திருப்பது மூலம் அவர் இச்சமூகத்தை நோக்கிச்சொல்ல வந்த செய்தி எதுவென்பதை ஆராய வேண்டிய ஆர்வத்தைத் தருகின்றது.

வை.அஹமது ஒரு புதிய சிந்தனை ஒழுங்கொன்றை அவர் பெற்ற அறிவு, அனுபவங்கள் மூலமாக சமூகத்திற்குள் விதைக்கவே முற்பட்டுள்ளார். சமூக அசைவு என்பது இவ்வுலகில் வாழ்ந்த அனைவரினதும் வாழ்வியல் ஒழுங்குகளைக் கொண்ட தொகுதி தான். ஒருவர் பெற்ற அனுபவங்களின் தொடர்ச்சி அடுத்த தலைமுறைக்கு புதிய சிந்தனைகள் வடிவமைத்துக் கொடுக்கின்றது. பின் நவீனம் நிராகரிப்பது போன்று காலாவதியான சிந்தனைகள் என்று எதையும் புறமொதுக்கி விடமுடியாது.

வை. வாழ்ந்த போர்க்காலச்சூழல் மாறி உலமயமாக்கலின் மூச்சுத்திணரல்களுக்குள் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க, சீன தொழிற்சாலைப் புகைகளால் இலங்கையில் வாழும் நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாது நிலையில் அல்லல்லுருகிறோம்.

தனி மனிதனின் சிந்தனை இந்நாட்டிற்கு ஏக உரிய சிந்தனையாக எண்ணி பூஜா துாக்கும் அநியாய அரசியல்வாதிகள் மீண்டும் அதே கதிரைகளுக்கு அனுப்பும் செக்கு மாடுகளாக மாறி வருகின்றோம். இந்த புதிய அடக்கு முறைகளிலிருந்து விடுபட்டு, எம்மை நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து புதிய வாழ்வியல் ஒழுங்கை படைக்காத வரை வை. அஹமதின் சிந்தனைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுவதில் எந்தக்குற்றமுமில்லை.

வை. அஹமது ஓர் அஞ்சலோட்ட வீரன் போல தனது சிந்தனைப்பொல்லை சமூகத்தின் முன் நீட்டிக்கொண்டே நிற்கின்றார். இதைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தற்போதுள்ள புதிய உலக ஒழுங்கிக்கேற்ப சமூகத்தை வழிநடாத்த புதிய செயல்வாத ஒழுங்காளர்கள் எமக்குத் தேவையாகவேயுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*