நிலம் குடித்து வற்றாத நீர்

Spread the love

75201464562முஹம்மது றிழா

சூரியனின் கட்டியான வெப்பத்தால் நிலம் ரொட்டிக் கல்லின் வெப்பத்தில் கருகி, சுருண்டு போன ரொட்டி போலிருந்தது. மழை நீர் பூமியை வந்தடைந்து தாகம் தீர்க்காதா? என்ற ஏக்கத்தில் தவம் கிடக்கிறது அந்த நிலம்.

ஒக்டோபர் வந்தால் புது மாப்பிள்ளை போல மல்லாக்க படுத்து கற்பனைக் கோட்டைக்குள் மூழ்கிப்போய்க்கிடக்கும். அடுத்ததடுத்த மாதம் நெருங்க நெருங்க மழைத்துளிகள் நனைத்த நிலம் சொக்லேட் கலவை போல மாறி விடும். குமருப்பிள்ளைக்கும் சுருக்கம் விழுந்த கிழவிக்கும் யாருக்குத்தான் வித்தியாசம் தெரியாது. அதே நிலை தான் நிலத்திற்கும்.

நிலம் மழை நீரைக்காணும் வரை குமரி. மழை நீரைக்கண்டு விட்டால் கிழவி என்று தான் றாஸிம் நிலத்தைப் புரிந்து கொண்டான். றாஸிம் சிறு வயதிலிருந்தே நிலத்தின் மீது ஒரு வகை கலாதியானவன். நிலத்தில் உருண்டு, புழுதி குடித்து, கக்கா போய், அப்பம் சுட்டு, மணல் வீடு கட்டிய வாழ்க்கை யாருக்குத்தான் கிடைக்காமலில்லை.

மனிதர்களுக்கு நிலம் உற்ற நண்பன். தன் புரடி மீது மனிதனைச் சுமந்திருக்கும் நிலம், அவன் மரணித்த பிறகு தன் வயிற்குள்ள வைத்து பாதுகாக்கிறது. இருந்தும், சிறு வயதில் மணலோடு கொண்ட அன்பை வளர்ந்ததும் மனிதன் மறந்து விடுகிறான். நிலத்திற்காக போலிச் சண்டையிடுகிறான். ஆனால், விவசாயி கொண்ட அன்பினால் தான் நிலம் எம்மில் கொண்ட கோபத்தை ஓரளவு தனிக்கச்செய்கின்றது.

விவசாயி நிலத்துடன் கொண்ட அன்பைப்பார்க்க றாஸிம் கொண்ட அன்பு புதினமானது. அவன் மாரி காலத்தை எண்ணி அஞ்சுகின்ற ஒரு இளைஞன். விவசாயிக்கு மாரி காலம் வரமாட்டாதா? என்ற கவலை அதிகம். சூரியனோடு சண்டையிட்டுக் கொள்ளும் மனிதர்களுள் விவசாயிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஆனால், றாஸிம் சூரியனோடு அன்பானவன். அவனுக்கு வெயில் சுடும் என்று தெரியாது. சூரியனை வழியனுப்பி விட்டுத்தான் அவன் வீடு வந்து சேருவான்.

றாஸிம் பத்தாம் தரம் கற்கும் மாணவன். அவன் படிக்கும் பாடசாலையை மட்டிட முடியாதளவு நேசித்தான். அதிபர் தொடக்கம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை அவன் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களின் அன்பை றாஸிம் ஐயத்துடனே அணுகினான்.

அவர்களின் அன்பை அவன் சலுகையாகவும் பயன்படுத்தியது கிடையாது. இருந்தும், அவன் அந்தப் பாடசாலையை தன் உயிரிலும் மேலாக நேசித்தான்.

றாஸிம் வாழும் நகரத்தில் அந்தப்பாடசாலை கொண்டுள்ள நிலப்பரப்பு விசாலமானது. நிழல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. சுழன்றடிக்கும் காற்றில் கட்டடங்கள் மயிர் புல்லெரிக்க நிமிர்ந்து நின்றன. பாடசாலையின் வயிற்றுப்பாட்டில் கிறவலிடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த விளையாட்டு மைதானம் தான் றாஸிமின் சொத்து. பாடசாலைப்பற்றி யாரும் கதைத்தாலும் அவன் கண் முன் அந்த விளையாட்டு மைதானம் வந்து நிற்கும். அது அவனுக்கு மச்சி முறை.

றாஸிம் வீட்டிலில்லை என்றால் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நிற்பான். அவனைத் தேடி வரும் நண்பர்களுக்கும் இது தெரியும்.

“மா.. றாஸிம் இருக்கானா..”
“இல்ல மன”
“ஆ.. கிரோன்ஸ்ல பாக்கம்” என்ற குரல் கேட்டு சலிப்படைந்து நிற்கும் முற்றது மல்லிகை அதற்கு சாட்சி.

றாஸிம் விளையாட்டு மைதானத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவன் விளையாடும் கிரிக்கட்டில் காட்டியது குறைவு. அணியில் நடு வரிசை ஆட்டக்காரனாக பல வருடம் இருந்து வருகிறான். நாள் தவறாது பயிற்சியெடுக்கும் வீரன் இவன். மூன்று மணிக்கெல்லாம் விளையாட்டு மைதானத்திற்குள் நிற்பான்.

கிரிக்கட் பெட்டுடன் வீட்டை விட்டு வெளியாகும் வேளையில், “இந்த வேகாத வெயில என்னத்த கிழிக்கப்போறானோ” என்று அவனது உம்மா புலம்பிக்கொள்வாள். உம்மாவின் வாய் முணுமுணுத்ததை வரி தவறாது றாஸிமும் உரத்து சொல்லிக் கொண்டே வீட்டின் முன் வழியை டப் என்ற சத்ததுடன் அடைத்து விட்டு புழிதி பறக்க ஓடுவான்.

விளையாட்டு மைதானமே கெதி என்று கிடந்த றாஸிமின் இலட்சியம் பாடசாலை கிரிக்கட் அணியில் இடம்பிடிப்பது தான். இது அவனுக்கு சுலபமான ஒன்றாகவே இருந்தது. தனது திறமையைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்ற உள்ளாசையை அவன் யாரிடமும் வெளிக்காட்டியது கிடையாது.

வழமை போல பாடசாலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டு புத்தகப்பை இருக்கும் மேசையை நோக்கி வந்தான். மேசையின் ஓரத்தில் கவலைக்கிடமாக இருக்கும் புத்தகப்பையை உற்றுப்பார்கிறான். பாடசாலைக்குப் போக அடம்பிடிக்கும் பிள்ளையை உம்மா இழுத்து செல்லுவது போல, அந்த புத்தகப்பையை இழுத்துக் கொண்டு பாடசாலைக்குச் செல்கிறான். “மகன் நல்லா கவனிச்சு படிக்கனும்” என்ற உம்மாவின் குரல் கேட்டதும் அவன் முதுகின் மேலிருந்த புத்தகப்பை சிரித்துக் கொண்டு சென்றது.

அடுத்த வருடம் பெப்ரவரியில் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகுமென்ற செய்தியை காலைக்கூட்டத்தில் அதிபர் ஏனைய அறிப்புகளோடு இதையும் ஒன்றாக இணைத்துக்கொண்டார். வரிசையாக கைகட்டி நிற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரின் காதுகளிலும் ஒலி அலை பாய்ந்து சென்றது. பாய்ந்து சென்ற ஒலி அலை றாஸிமின் காதில் கூச்சமிட்டு சென்றது. காலைக்கூட்டம் முடிந்ததும் விளையாட்டு ஆசிரியர் முன்னால் விரைந்து சென்று தகவலை உறுதிப்படுத்திக் கொண்டான் றாஸிம்.

தகவல் உறுதியாக செய்தி கேட்டதும் அவனது முகம் கவலையைச் சுமந்து கொண்டது. தான் விளையாடும் மைதானம் மாரி மழையால் படும் அவதியை எண்ணித்தான் அவன் கவலையடைந்தான். அவன் கவலை நியாயமானது.

மூன்றாம் தவணைப்பரீட்சை முடிவுகளுடன் ஆசிரியர்கள் அலைந்து திரிந்தார்கள். “றாஸிம் உன்ட பெயர் பத்துக்குள்ள இருக்காம்” என்று சக மாணவர்கள் சத்தமிட்டு அலைந்தார்கள். ஆனால், றாஸிமின் முகம் விடிந்தபாடில்லை. வானம் வெளித்தபாடுமில்லை.

மாரி மழையால் விளையாட்டு மைதானம் உழவடித்த வயல் நிலம் போலிருந்தது. கிறவல் கரைந்து மழை நீரை இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்தது.

காதலித்த பெண்ணை தூர நின்று பார்ப்பது போன்று, விளையாட்டு மைதானத்தையும் தூர நின்று பார்த்தான் றாஸிம். வாகனங்களின் டயர் மைதானத்தை பதம் பார்த்து விட்டிருந்தது. பள்ளமும் படு குழியும் நிரம்பிக் காணப்பட்ட மைதானத்தில் தேங்கி நின்ற வெள்ள நீரில் காகங்கள் குளித்து மகிழ்ந்து பறந்து சென்றன.

பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பை அதிபர் ஒலிவாங்கி மூலம் அறிவித்தார். மாணவர்களை அனைவரையும் ஒன்று கூட்ட முடியாதளவு இருக்கும் விளையாட்டு மைதானம் பற்றிய கவலை அவருக்கு இருக்கவில்லை. பாடசாலை கிரிக்கட் அணியை தனது காரியாலம் வருமாறும் அவ்வழைப்பின் இறுதியில் அவர் கூறினார்.

எல்லா கிரிக்கட் வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக அதிபர் காரியாலயத்திற்கு சென்றனர். அதிபர் சீரியஸாக வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த சிற்றூழியன் மாணவர்களின் முகம் நேரே நீட்டிய கையுடன் வட்டமாக்கி கொண்டிருந்தான். காது முட்ட சத்தமிட்டு அவ்வீரர்களை அவன் வட்டமாக்கினான். அமைதி அமைதி என்று கூறிக்கொண்டான். முடிவில் அதிபரைக் கதைக்குமாறு சைகை காட்டினான்.

“எமது பாடசாலை தொடர்ச்சியாக சம்பியனாக திகழ்கின்றது” என்று பேச அதிபர் ஆரம்பித்த போது றாஸிம் அதிபர் மேசைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருந்த ஏ.சீ.யை பார்த்துக் கொண்டே நின்றான். குழாய் ஒன்று யன்னல் வழியாக தொங்கியது. அதிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாக ஒழுகியது. ஏ.சி.க்கும் குழாய்கும் உள்ள தொடர்பை அவன் புரிந்து கொண்டான்.

ஏ.சீ.யிலிருந்து நீரை வெளியேற்ற முடியுமென்றால், ஏன் விளையாட்டு மைதானத்திலிருந்து தேங்கிக் கிடக்கும் நீரை வெளியேற்ற முடியாது என்று றாஸிம் எண்ணிக் கொண்டான். மாணவர்கள் அதிபர் காரியாலயத்திலிருந்து வெளியாகும் போது தான் கூட்டம் நிறைவடைந்து செய்தி அவனுக்கு தெரிந்தது. எவற்றைக் கதைத்தாரோ தெரியாது மைதானம் பற்றி அவர் கதைத்திருக்கமாட்டார் என்பது அவனுக்கு நன்றாத் தெரியும்.

போலியான பதவி தான் அவருடையது. எல்லோரையும் புரிந்து கொள்ள முடியாதவர் அவர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம் என்று சொல்லித்தந்தவருக்கு சித்திரத்தை எங்கிருந்து நாம் கொடுப்பது என்று எண்ணிக் கொண்ட றாஸிம், மழை நீருக்கு கரையாமல் கம்பீரமாக நிற்கும் அதிபர் காரியலாயத்தை பார்த்தபடி வீடு செல்கின்றான்.
2012.05.23

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*