கல்குடா முஸ்லிம் பிரதேச குடிசனப்பரம்பல்-அல்ஹாஜ் AMA. காதர்

Spread the love

Captureஓட்டமாவடி அஹமட் இர்ஷாத்

தொகுப்பு : அல்ஹாஜ் AMA. காதர் (ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்)
மீள் வாசிப்புக்காக வை.எல்.மன்சூர்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்றை ஆராய்கின்ற போது, இலங்கைக்கு அறாபியர் குடியேறிய காலப்பகுதியிலேயே இங்கும் குடியேறியதை பல வரலாற்று ஆய்வு நூற்களும் இப்னு பதூதா போன்றோரின் பயணக்குறிப்புகளும் குறித்து நிற்கின்றன.

மட்டக்களப்பு எனும் போது தற்போது குறிக்கப்பட்டுள்ள அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சேர்த்தே குறிப்பிடப்பட்டது.

இலங்கையின் புராதன காலந்தொட்டே மட்டக்களப்பு பிரதான துறைமுகங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் காணக்கிடக்கின்றது.

தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானத்திற்கு முக்கிய வழி கோலிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தது கல்குடா துறைமுக நகரமாகும் என்பதனை FXC.. நடராசா உட்பட பல வரலாற்றாசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். FXC. நடராசா தனது “மட்டக்களப்பு மாண்மியம்” என்ற தொகுப்பில் பாசிக்குடாவிலிருந்து ஏழு துறை தாண்டி கொட்டியாரம் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விட அமைப்பை வைத்து நோக்கும் போது, தற்போதைய கல்குடாப்பிரதேசம் பிரதான துறைமுக வர்த்தக மையமாக இருந்ததுடன், மட்டக்களப்பு வாவியிலிருந்து திருகோணமலைத்துறைமுகம்  வரையான பிரதேசத்தின் இணைப்பு பிரதேசமாகவும், இழைப்பாறு தளமாகவும் இப்பிரதேசம் அமைந்திருந்தது.

எனவே தான் இவ்விரு பிரதான நகர்களையும் இணைக்கும் கல்குடாவூடான பாதையமைப்பு பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டிருக்கிறது.

இப்பின்னணியில் கல்குடாப் பிரதேச முஸ்லிம்கள் பூர்வீக வரலாற்றை ஆராய முற்படுகின்ற போது, எக்கால எல்லையில் இப்பிரதேசத்தில் குடியேறினார்கள் என்று திட்டவட்டமாக கூறிச் செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லாத போதும், பன்னெடுங் காலமாக அவர்கள் இங்கு ஜீவனோபாயம் நடாத்தியிருக்க வேண்டுமென குறிப்புகள் தொட்டுச் செல்கின்றன.

குறிப்பாக, கி.பி.05ஆம் நூற்றாண்டிற்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் முக்குவர் திமிலர் பிணக்கின் போது ஆயிரம் பேர் கொண்ட முஸ்லிம் சேனை முக்குவருடன் இணைந்து திமிலரை வெருகல் கங்கைக்கு அப்பால் விரட்டிச் சென்றதாக பண்டிதர் V.C. கந்தையா “மட்டக்களப்பு தமிழகம்” எனும் நூலில் எழுதியுள்ளார்.

திமிலரை விரட்டிச்சென்று இறுதியாக கற்தூண் ஒன்றை நாட்டி எல்லை இட்டதாகவும், இது தான் இன்று வரை பனிச்சங்கேணியில் எல்லைத் “துாண்டி” எனும் பெயர் கொண்டு அழைப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே கல்குடாப் பிரதேசத்திலும் அவர்கள் வாழ்ந்தனர்..

அதாவது “பால் வளவு” (தற்போது அமைந்துள்ள பிரதேசம்) க்குள் இப்படைவீரரில் ஒருவர் “முக்குவப்” பெண் ஒருவரை திருமணம் முடித்து குடியிருந்துள்ளார். பின்னர் பள்ளிமடுப்பிரதேசத்தில் சென்று வாழ்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருந்த போதும், கல்குடா முஸ்லிம் பிரதேசம் எனும் போது இன்று பெற்றமைந்துள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, ஹிஜ்ரா நகர், பாலைக்காடு பிரதேசங்களை மாத்திரம் கவனத்திற் கொள்வது பூர்வீகம் பற்றிய தெளிவான முடிவினைக் கொண்டமையாது.

மாறாக, கோறளை எனும் பதங்கொண்டே நோக்க வேண்டும். ஏனெனில், ஒல்லாந்தர் மேற்குக்கரையில் ஆட்சி செலுத்திய வேளை, கண்டியாட்சிக்குட்பட்ட கிழக்கு கடலோரப்பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்தனர் எனக்குறிப்பிடும் பேராசிரியர் K.W.குணவர்த்தன மட்டக்களப்பு பிரதேசம் கோறளைப்பிரிவுக்குள் அடக்கப்பட்டிருந்தது எனக்குறிப்பிடுகிறார்.

எனவே, பாசிக்குடா, கோறளை முஸ்லிம் பிரதேசங்கள் எனும் போது மேற்கே வெருகல் கங்கையும் கிழக்கே பாசிக்குடா கடலும் ஏனைய எல்லைகளாக கதுருவெல (கந்தோர் வெலி) உன்னிச்சை, கிரான் ஆகிய இடங்களே எல்லைகளாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இப்பிரதேச முஸ்லிம்களின் ஏனைய தூரப்பிரதேசங்களுடனான தொடர்புகள் அவர்களது நீண்ட கால இருப்பை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன. கண்டிய முஸ்லிம்கள் நாவுல ஊடாக இங்கு தொடர்புற்றிருந்துள்ளனர்.

1766 வரை திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு, கற்பிட்டி, புத்தளம் போன்ற பிரதேசங்கள் கண்டிய ராசதானி ஆளுகையிலேயே காணப்பட்டதனால், கண்டியை மையமாகக் கொண்டு பங்குரான ஊடாக கொட்டியாரத்திற்கும், நாவுல, பிபிலை ஊடாக சம்மாந்துறை, இறக்காமம், சாய்ந்தமருது போன்ற கரவாகுப்பிரதேசத்துடனும், நாவுல, மின்னேரிய, அக்குறாண ஊடாக கல்குடா, மட்டக்களப்பு பிரதேசங்களுடனும் முக்கோண தொடர்புற்று “தவளம்“ வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டது போலவே குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டு சுதேசிகளும் இவர்களும் காடு வெட்டி, பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இதனை “குயிரோஸ்“ பாதிரியாரின் குறிப்புகளும், 1760 இல் கண்டிக்கு விஜயம் செய்த ஆங்கிலேயத்தூதுவன் “ஜோன் பைபஸி“ன் குறிப்புகளும் எடுத்துக்காட்டுகின்றன.

முக்குவர் காலம் தொட்டே முஸ்லிம்கள் இன்றைய கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் இருந்த போதும், கண்டி, கொட்டியாரம், கரவாகுப் பிரதேச தொடர்பின் காரணமாக முஸ்லிம்கள் இங்கு குடிபெயர்ந்ததோடு, முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்ததாலேயே சிங்கள மன்னர்களும் இப்பிரதேசத்தில் முஸ்லிம் குடிகளை அமைத்தனர்.

குறிப்பாக, ஐரோப்பியர் வருகையை அடுத்து இலங்கையின் முக்கிய கரையோர துறைமுக நகரங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இவர்களது அடக்குமுறைக்கும், பலாத்கார இனச்சுத்திகரிப்புக்கும் பயந்து பாதுகாப்புத்தேடி மலை நாட்டு சிங்கள மன்னர்களை நோக்கி இடம் பெயர்ந்தனர்.

கண்டி அரசர்கள் முஸ்லிம்களோடு நல்லுறவு கொண்டிருந்ததனாலும், தமது படைப்பலத்தைப் பெருக்கவும், தமது பொது எதிரிகளான ஐரோப்பியரை எதிர்க்கவும் வேண்டி முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் குடியமர்த்தினர்.

கண்டி மன்னன் செனரத் (கி.பி. 1604 – 1635) கி.பி. 1626யில் 4000 முஸ்லிம்களைக் குடியமர்த்தினர் என ‘குயிறோஸ்’ பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

V.C. கனகரத்தினம் ‘மட்டக்களப்பு மாவட்டம் பற்றிய விபரத்திரட்டில் 1871ல் கொழும்பில் 42529 முஸ்லிம்களும், மட்டக்களப்பில் 1738 பேரும் கண்டியில் 19321 பேரும், திருகோணமலையில் 7703 பேரும், மாத்தளையில் 5223 பேரும் வசித்தனர் என்பதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே மட்டக்களப்பில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென்பது ஒப்பீட்டளவில் இக்கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருகின்றது.

பிரதான முஸ்லிம் குடும்பங்களும் குடியேற்றமும்

தற்போது குறிக்கப்பட்டுள்ள கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் தொன்மையாகவே முஸ்லிம்கள் வாழ்ந்த போதும், சுமார் 350 – 400 வருடங்களுக்குள்ளாகவே ஏனைய பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்து இப்பிரதேசங்களை நோக்கி நகரந்து வந்துள்ளனர் என்ற குறிப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன. இதனை இன்று இப்பிரதேச மக்களிடத்தில் காணப்படும் குடும்பப்பெயர் கொண்டே காணக்கூடியதாகவுள்ளது.

அக்குறாணையார் குடும்பம்
அக்குறாணையார் குடும்பம் (சந்தியாற்றார் குடி) இவர்கள் அக்குரணையிலிருந்து கண்டி மன்னனால் இங்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்களது வருகை தொடர்பாக ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகின்றது. நாவுல ஊடாக பிபிலை, கரவாகு பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்த கண்டிய வியாபாரக்கும்பலை இடைமறித்து கொலை, கொள்ளையில் ஈடுபட்ட சங்கரன் தலைமையிலான சுதேச வேடுவர் கொள்ளைக்கும்பலை அடக்குவதற்கு கண்டி மன்னன் மகுலியார் பிள்ளை விதானையின் மகன் முதலிப்பிள்ளை விதானை தலைமையில் ஒரு குழுவினரை அனுப்பி வைத்தான்.

இவர்கள் (சந்தியாற்றைக்கடந்து) அக்குறாணை எனும் பிரதேசத்தை அடைந்து கொள்ளைக்கும்பலை ஒழித்து, அங்கேயே ஒரு குடியிருப்பையும் ஏற்படுத்தினர்.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்று நூல் குறிப்பிடுவது போன்று அக்குறாணையில் பலம் வாய்ந்த முஸ்லிம் படையணி கண்டிய அரசனால் குடியமர்த்தப்பட்டிருந்தது. எனவே, இவர்களே இக்கலகக்காரர்களை அடக்கப் பொருத்தமானவர்கள் என கண்டிய அரசன் கருதியிருக்கக்கூடும். அக்குரணையைச் சேர்ந்தவர்கள் அக்குறாணையில் குடியமர்ந்ததால் ஆரம்பத்தில் சின்ன அக்குறணை என்ற பெயரே சின்ன அக்குறாணை என மருவலாயிற்று.

பின்னர் இவர்கள் புணாணை, ஊர்முனைத்திடல் (தற்போதைய வாகனேரிக்குளப்பகுதி) போன்ற நீர்நிலைகளை நோக்கி நகரலாயினர்.

வனவிலங்குகளின் தொல்லையும், துறைமுக வசதியும் ஓட்டமாவடித்துறை (தற்போதைய காகித நகர்ப்பகுதி)யை நோக்கி நகரச்செய்தது.

மீண்டும் அவர்கள் மாதுறு ஓயா கிளையாற்றைக் கடந்து வெள்ளமாவடி துறையூடாக ஓடக்கரை (பதுறியா-மாஞ்சோலை-மீராவோடை) ஓட்டமாவடி பிரதேசங்களில் குடியேறியுள்ளனர்.

கொட்டியாரக் குடும்பம்
கல்குடாத்துறைக்கும் கொட்டியாரத்துறைக்குமிடையேயான வர்த்தகத் தொடர்பு காரணமாக கொட்டியாரத்திலிருந்து முஸ்லிம்கள் கிண்ணியா ஊத்துப்பிட்டி வழியாக பனிச்சங்கேணி, காரமுனை பகுதிகளில் குடியேறி வாழ்ந்துள்ளனர். இத்தொடர்பை உறுதிப்படுத்துவதாகவே “மட்டக்களப்பு மான்மியம்” பாசிக்குடாவிலிருந்து ஏழு துறைதாண்டி கொட்டியாரம் சென்றதாகக் குறிப்பிடுகின்றது.

பனிச்சங்கேணியிலுள்ள“அவக்கர்குடா” “மீரானாத்தீவு” “ஆலிமுட ஊத்து” போன்ற இன்றும் கூட முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் உறுதிப்பத்திரங்களுடன் காணப்படுகின்றது.

காரமுனைப்பிரதேசத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்துள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.

அண்மைக்காலம் வரையாக முஸ்லிம்கள் காரமுனை பள்ளிவாயலின் “ஷியாரத்தை” சுற்றியுள்ள காணியைத்துப்பரவு பண்ணி, அதனை “கபுரடி வரவைகள்” என பெயர் சூட்டியழைத்தனர். இக்காணி மூலம் வரும் விளைச்சலை ‘கந்தூரி’ செலவுக்காகப் பயன்படுத்தினர்.

இங்கு காணப்படும் “ஷியாரம்” தொடர்பாக ஓர் ஆய்வு நிகழ்வு தொடர்புபடுகின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆய்வாளர் சஹாப்தீன் என்பவர் ஒரு வரலாற்று ஆய்வு தொடர்பாக இங்கு வந்தார்.

தமது மூதாதையர்கள் தொடர்பாக தமக்குக் கிடைத்த குறிப்பேட்டின் படி 300 ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்த இஸ்லாமியப் போதகர்களில் இருவர் இலங்கையில் தங்கியதாகவும், அவர்களில் ஒருவர் “மட்டக்கொழும்பு” (மட்டக்களப்பு பழைய பெயர்) பகுதிக்கு வந்து மேற்குப்பகுதியை நோக்கிப் பயணித்ததாகவும் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று கூறி கல்குடா கோறளையில் காணப்படும் அனைத்து ”ஷியார”ங்களையும் ஆராய்ந்த பின்னர், காரமுனைக்குச்சென்று அங்கு காணப்படும் ஷியாரங்களையும் அதனருகில் காணப்படும் நான்கு புளியமரங்களையும் ஆராய்ந்தார்.

அத்தோடு, இம்மரங்கள் சுமார் 250 – 300 வருடங்களுக்குட்பட்ட மரம் இது சிறு தடிகளாக நான்கு தூண்களுக்கு பதிலாக நாட்டப்பட்டுள்ளது. எனவே, போதகர் தமது அந்திம வயதில் குடிசை செய்து நிரந்தரமாக தமது இருப்பிடத்தை அமைத்திருக்க வேண்டும். இந்நிலையில், அவருக்கு ஐம்பது வயதிலேயே அவர் நிரந்தர இருப்பிடத்தை அமைத்திருப்பார்.

எனவே, இவை சுமார் 300 ஆண்டுகள் பழைமையைக் காட்டுகின்றது. எனவே, எமது குறிப்பேட்டில் குறிப்பிட்டவர். இந்த மேலதிக ஆவணங்கள் இவர் சந்தித்து தகவல் பரிமாறிய மர்ஹூம் வை. அஹமத்திடத்தில் காணப்பட்டது. அவை பயங்கரவாதிகளால் வை. அஹமத் (மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்) கொலை செய்யப்பட்ட போது, அபகரித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று குப்பிளாவாடி, பனையடி முறிவு, குராத்தையடி உட்பட பல பிரதேசங்களிலும் கொட்டியாரத்திலிருந்து வந்தவர்கள் சேர்ந்து குடியிருப்புக்களை அமைத்தனர்.

சீக்கிரியா வருட்டுத்தத்தி
“சீக்கிரியா வருட்டுத்தத்தி” எனும் பேச்சு வழக்கு சீக்கிரிய குடும்பம் எனும் கருத்தைக்குறிக்கும். அதாவது நோச்சல் போடியார் என்பவர் தலைமையில் சீக்கிரியாவிலிருந்து ஓட்டமாவடி துறையூடாக இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவரே மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயல், ஓட்டமாவடி பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு தலா 18 ஏக்கர் காணி வழங்கியதாக குறிப்புகள் கிடைக்கின்றன.

இவை முஸ்லிம்கள் சீக்கிரியாவுடன் கொண்ருந்த தொடர்பைக் காட்டுகின்றது. இதனால் தான் ‘கந்தோர் வெளி’ (கதுருவெல தற்போதைய மருவல்) என முஸ்லிம்கள் கதுருவெலயை அழைக்கலாயினர்.

ஏனெனில், அங்கு புராதன அரச அலுவலகம் (கந்தோர் ஒன்று இயங்கியதாலேயே இப்பெயர் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இத்தொடர்பு காரணமாகவே புதூர் (பொலன்னறுவையிலுள்ளது) போன்ற இடங்களில் முஸ்லிம்கள் குடியேறலாயினர். இப்பரம்பரையினர் நெற்செய்கையில் சிறப்புற்றிருந்தனர். எனவே தான், நோச்சல் போடியார் என்பவருக்கு ‘பூமிபாலன்’ (பூமிபுத்ர) புகழ் நாமம் வெள்ளையர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிக்கர் குடும்பம்
பணிக்கர் என்போர் யானைகட்டி அதனைப் பயிற்றுவிப்போரைக் குறிக்கும். இவர்கள் கண்டியரசர்கள் காலத்தில் “ஹரிஸ்பத்து” கஹவத்தை பிரதேசத்தில் வசித்தனர். இவர்கள் மன்னார் மாவட்ட முஸ்லிப்பிரதேசம், திருகோணமலை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களுடன் தொடர்புற்றிருந்ததோடு, அப்பிரதேசங்களிலும் வசித்து வந்தனர். எனக் ”கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இந்த வகையில், இப்பிரதேசத்திலும் பன்னெடுங்காலமாக யானைகளைக் கொண்டு வந்து கட்டி வைத்து கண்டிய வியாபாரிகளுக்கு விற்றுப் பிழைப்பு நடத்திய பணிக்கர் குடும்பம் காணப்படுகின்றது.

வனவிலங்கு காப்புச்சட்டம் அமுலில் வரும் வரை இங்கு தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதை வைத்து நோக்கும் போது, இறக்காமம், கண்டிப்பிரதேசங்களுடன் இவர்கள் தொடர்புற்றிருந்ததால், இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என உறுதியாகக் கூற முடியாதுள்ளது.

கரவாகுக் குடும்பம்
இவர்கள் கரவாகுக் குடும்பம் என்ற பேச்சு வழக்கினிலே அழைக்கப்படுகின்றனர். தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள கரவாகுப் பிரதேசமான சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்து இப்பிரதேசத்தில் இருப்புக்களை அமைத்தவர்களே இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாயினர்.

இன்றும் பெருவெட்டை, தொப்பிக்கல் மலைச்சாரல், கழுதாவளை ஊடாக இவர்கள் பயணம் செய்த காட்டு வழிப்பாதைகள் காணப்படுகின்றது.

மீராவோடையில் ஜூம்ஆப் பிரசங்கம் நிகழ்த்தி விட்டு மாலைப்பொழுதில் குதிரை மூலம் நிந்தவூரை கதீப் வந்தடைந்ததாக சில வாய்மொழிக் கதைகள் குறிப்பிடுகின்றன. ஒகுது லெப்பை எனும் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்த மார்க்கப்பெரியார் மருதமுனையைச் சார்ந்தவர் என்பது இத்தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது.

குளத்துப் போடியார் குடும்பம்
ஊர்முனைத்திடலில் வசித்த சுதேச வேடுவர்களில் (வாகனேரிக்குளம்) இஸ்லாத்தை தழுவி பின்னர் பள்ளத்திட்டி (பழைய ஹிஜ்ரா நகர் – தற்பொழுது பதுறியா நகர்) யை வந்தடைந்தவர்கள்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கு வந்து மார்க்கப்பிரச்சாரம் செய்த இஸ்லாமியப் பெரியார்களே காரணமாகும். இவர்கள் பற்றி ஒரு தகவலும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து சன்மார்க்கப் போதனைக்காக ஏழு பேர் கொண்ட குழு புணாணை, குடியிருப்பட்டை, வாகனேரி, மக்குழடி, குப்பளாந்தவனண, காரையடிப்பட்டி, உச்சோடக்கல் போன்ற இடங்களில் சென்று போதனை புரிந்ததாகும். அவர்கள் மரணித்த பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டு ஷியாரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகள் நீர் நிலைகள் அண்டிய பகுதியாகவுள்ளதால் குடியிருப்புக்களும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டன.

காட்டுவிதானையார் குடும்பம்
மஹ்மூத் லெவ்வை விதானை என்பவரின் குடும்பத்தைக்குறிக்கின்றது. இவர் வாகனேரிக்கண்ட மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தார். இதனால், காட்டுவிதானை என அழைக்கப்பட்டார். இவர் இப்பதவியை பெற ஒரு வரலாற்று நிகழ்வு காரணமாகியது. பிரிட்டிஸாரின் ஆட்சிக்காலப்பகுதியில் மட்டக்களப்பு ஆளுனராகவிருந்த ‘பிறைன்’ துரை (Brain) என்பவர் தனது மனைவியுடன் வாகனேரிக்குளத்திற்கு சென்றிருந்தார்.

தற்செயலாக இவரது மனைவி குளத்தில் வீழ்ந்து முழ்கலானார். அவ்விடத்தில் இருந்த மஹ்மூத் லெவ்வை குளத்தில் குதித்து ‘பிறைனின்’ மனைவியைக் காப்பாற்றினார். இதற்கு நன்றி செலுத்துமுகமாக ‘பிறைன்’ மஹ்மூத் லெவ்வைக்கு வன்னியன் (தற்போதைய DRO பதவி) பதவியுடன் விதானைப்பதவியை பரம்பரைக்கு உரித்தானதாக எழுதிக்கொடுத்தார். பின்னர் இவர் சுகயீனமுற்ற போது ‘வன்னியன் பதவி’ ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹூம் புஹாரி விதானையின் தந்தைக்கு கிடைக்கக் கூடியதாகவிருந்தது.

ஆனால், விதானைப்பதவி வழி வந்த பதவியாகையால் மஹ்மூத் லெவ்வையின் மகள் அவ்வா உம்மாவுக்கு ஓரிரு நாட்கள் வழங்கப்பட்ட பின், இவரது சகோதரர் மகனுக்கு இப்பதவி வழங்கப்பட்டது. இதனால், இவர் கூட வெட்டுற ‘காட்டுவிதானையார்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட சில அரசியல் போட்டியும் காழ்ப்புணர்வுகளும் வேறு ஒரு பரம்பரையினருக்கு இப்பதவி சொந்தமானதாக மாறியமைந்தது.

ஓடாவிக்குடி
இவர்கள் காத்தான்குடியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் தச்சுவேலை, கொத்தன் வேலைகளில் சிறப்புற்றிருந்தனர். குண்டர் குடியோடு ஏற்பட்ட உறவுக்கலப்புக் காரணமாக வர்த்தகத்திலும் சிறப்புற்றிருந்தனர். “கல்லப்பா” என்பவரே இக்குடியின் ஸ்தாபகத் தலைமையாகக் கருதப்படுகின்றார். ஏனெனில், இவர் செங்கற்களைக் கொண்டே வாழைச்சேனையில் ‘போக்கு’ (நீரோட்டக்குழாய்) கட்டியுள்ளமை இவர்களது கட்டடத்திறமையை வலுப்படுத்துகின்றது.

இவர்களது ‘சாவன்னா’ பரம்பரையினரே கிரான் குடியில் (தற்போதைய கிரான்) சேரடி முனை என்ற பகுதியில் குடியிருப்பை அமைத்திருந்தனர். இங்கு 1899 பங்குனி 7ம் திகதி முகம்மதியா பாடசாலை 19 பேருடன் இயங்கி வந்துள்ளதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. நில அளவையாளர் படத்தின் 3501ம் இலக்க 1892 தை 27ல் 29 ஏக்கர் நிலத்தில் பாடசாலை இயங்கியதாக உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு பல இடப்பெயர்களும், அதனோடு தொடர்பான புதூர்ப்போடியார், சின்னப்போடியார், பெரிய போடியார் போன்ற குடிப்பெயர்களும் இப்பிரதேசத்தில் இன்று வரை நிலவி வருவதனைக் காண முடிகின்றது.

தற்போதைய இட அமைவுகள்
தற்போதைய சூழலில் காணப்படும் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் கி.பி. 5ம் நூற்றாண்டு (முக்குவர் திமிலர் பிணக்குக்காலம்) தொடர்ந்தே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்க முடியுமாக இருந்தும் கூட, அவை பற்றிய பூரண தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. என்ற போதும், இப்பிரதேசங்களின் பெரும் பகுதி காடும் காடு சார்ந்த பகுதியாகவே இருந்துள்ளது. இதன் பின்னர் கல்குடா முஸ்லிம் பிரதேசங்கள் பல இடப்பெயர் கொண்டு அழைக்கப்படலாயிற்று.

வாழைச்சேனை
வாழைச்சேனை வரலாற்றினை ஆராய முற்படுகின்ற போது, பழமை வாய்ந்த இறங்கு துறையைக் (தபால் துறை) கொண்டமைந்ததாகவுள்ளது. இதன் காரணமாக, இந்திய வர்த்தகர்கள் உட்பட யாழ்ப்பாணியர்களும் இங்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனடியாகவே காத்தான்குடி வர்த்தகக்கும்பலும் இங்கு தொடர்புறலாயிற்று.

குறிப்பாக, இன்றைய வாழைச்சேனையின் பிரதான குடிகளில் ‘அம்முப்’ போடியார் (அகமது லெவ்வை ஹாஜி) என்பவர் பிரதான இடத்தினை வகிக்கின்றார். குறிப்பாக, 18ம் கட்டை (கும்புறு மூலை) யிலிருந்து கல்குடா, வாழைச்சேனை, வெள்ளமாவடித்துறை (தற்போதைய ஓட்டமாவடித்துறை) வரையான கரையோரப்பிரதேசங்கள் இவரது குடியேற்றப் பிரதேசமாகவே இருந்தது.

அதைப்போல அலி உடையார் குடியும் பரந்த  ஆதனத்தைக் கொண்டிருந்தது. அவர்களோடு உமர் லெப்பைப் போடியார், உ.ப. ஹாஜியார் போன்றோரும் வாழைச்சேனையில் பாரிய நிலச்சொந்தக்காரர்களாக இருந்துள்ளனர். கல்குடா, பாசிக்குடா பிரதேசங்களில் முஸ்லிம்களுக்குரிய பெருமளவு காணிகள் இன்றும் காணப்படுவதிலிருந்து முஸ்லிம்கள் பரந்து விரிந்து வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

இது தொடர்பாக 75 வயதுடைய பெண்மணி கூறும் தகவல் “எனது பாட்டனார் தனது குடும்பத்தோடு பாசிக்குடா கடற்கரைக்கு அருகே பெருந்தோட்டம் வைத்திருந்தார். அங்கு ஒரு கடையும் வைத்திருந்தார். அங்கு வந்த வெள்ளைக்காரர்கள் அந்த இடத்தைத் தங்களுக்கு தருமாறு கேட்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் குறிப்பிட்டார்கள். பாட்டனார் தர மறுத்த போது, பல தொல்லைகளை இழைத்தனர். பெண் பிள்ளைகளோடு அங்கிருப்பது உசிதமல்ல எனக்கருதிய அவர், அத்தோட்டத்தை அவர்களுக்கே கொடுத்து விட்டு, அவர்கள் கொடுத்த பணப்பெட்டியுடன் இங்கு (மீராவோடை) வந்து குடியேறினார். அவர் இக்கதையை எனது பத்து வயதில் குறிப்பிட்டார்.

அவரது ஞாபகமாகவே இப்பெட்டியை வைத்திருக்கின்றேன்.” என ஒரு பெட்டியைக் காட்டினார். இதிலிருந்து முஸ்லிம்களது இருப்பு தொடர்பாக வலிமையான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

கல்குடாப்பிரதேசத்தில் ஆரம்ப வாழைச்சேனைப் பரம்பரையின் இருப்புக்கள் சில

1). உ.ப. ஹாஜியார் – உ.ப. ஹாஜியார் தோட்டம் – தற்போதைய இலங்கை வங்கி இருக்கும் இடம்.

2). பாக்கீர் சாஹிப்  – பாக்கீர் சாஹிப் தோட்டம் – பாசிக்குடா.

3). உமர் கையூபா – வாழைச்சேனை  பிரதேச சபை வளவு, வாழைச்சேனை வேதக்கோயில் வளவு.

4). பாத்தும்மா – வாழைச்சேனை MPCS 10 ஏக்கர் வளவு.

5). அகமது லெவ்வை (அம்முப் போடி) மருங்கையடிப்பூவல் – வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அடங்கலான கரையோரம்.

6). அலியார் போடி – மருங்கையடிச் சோலை – பாசிக்குடா.

இவ்வாறு பல பிரதேசங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியாகவே இருந்துள்ளன. இதே போன்று, வாழைச்சேனை வரலாற்றில் அறபி முத்து மரைக்காரும் தனியிடம் வகிப்பதைக் காணமுடிகிறது. இவர் நன்கு எழுத வாசிக்கத் தெரிந்தவராக இருந்ததோடு, சுமார் 12இற்கும் மேற்பட்ட பதவி நிலைகளை இக்காலத்தில் வகித்து வந்துள்ளார். வாழைச்சேனையின் அபிவிருத்திப்பாதையில் இவருக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இதே போன்று உன்னிச்சை உதுமார் குடும்பமும் வாழைச்சேனையில் குடியிருப்புக்களை அமைத்திருந்தனர். உதுமார் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். இவர் உன்னிச்சைக் குளத்தில் தானே ஒரு அணையைக் கட்டு வித்தார். இன்று வரை அது உதுமார் கட்டு என அழைக்கப்படுகின்றது. இவர்களது குடும்பத்தினரும் வாழைச்சேனையில் பிரதான குடிகளாயினர்.

வாழைச்சேனை என பெயர் வரக்காரணங்களில் ஒன்றாக, இங்கு குடியேறிய முஸ்லிம்கள் காடழித்து சேனைப்பயிர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வாழையே பிரதான உற்பத்தியாகையால், இப்பெயர் கொண்டே வாழைச்சேனை என்ற பெயர் கொள்ளலாயிற்று.

அத்தோடு, வாழைச்சேனை துறை மூலம் வைக்கோல், தேங்காய் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது போல் ஹஜ் பயணங்களும் இவ்வழியால் மேற்கொள்ளப்பட்டதற்கான தரவுகளும் உமர் லெவ்வைப் பரிகாரி (உமர் கத்தாப்), மஹ்மூத் இப்றாஹீம் ஹாஜி (அடிமட்டை ஹாஜி) போன்றோரின் வரலாற்றுக் குறிப்புகளினூடாகக் கிடைக்கின்றது.

எனவே தான் இப்பிரதேசத்தில் கொட்டியாரக் குடும்பத்தொடர்பும், வன்னியனார் குடும்பத்தொடர்பும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஓட்டமாவடி
ஓட்டமாவடி என்பது ஓட்டைமாவடியின் மருவலாகவே குறிக்கப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் அக்குறாணையில் குடியேறியவர்கள் மீண்டும் ஊர்முனைத்திடலை நோக்கி நகரலாயினர். இவர்களுடன் கொட்டியாரக் குடும்பங்களும் இணைந்து கொண்டனர். வனவிலங்குகளின் தொல்லை, போக்குவரத்து வசதி, வர்த்தகத்தொடர்பு போன்ற காரணங்களை இட்டு மெது மெதுவாக முஸ்லிம்கள் மக்குழடி, கும்பிளாந்தவணை, சாராவெளி, சூடுபத்தினசேனை வாயிலாக ஓட்டமாவடித் துறையை அண்மித்து வாழ்ந்தனர்.

இக்காலப்பகுதியில் வாழைச்சேனைத் துறையூடாக மாதுறு ஓயா கிளையாற்றின் ஊடே ஓட்டமாவடித் துறைக்கு வர்த்தகர்கள் தெப்பம் மூலம் வந்து பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பல்வேறு பௌதீகக் காரணிகளின் காரணமாக ஆற்றைக்கடந்து வெள்ளை மாவடித் துறையை (தற்போதைய ஓட்டமாவடி புளியடித்துறை) அடைந்து ஓட்டமாவடிப் பிரதேசத்தில் பரவி வாழ்ந்தனர்.

இதன் பின்னர் இத்துறை பிரபல்யமும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்தது. எனவே தான் வெள்ளை மாவடித்துறையில் பொருட்கள் கொண்டு வரல், கொண்டு செல்லலை கண்காணிக்க ஒரு சோதனைச் சாவடியும் நிறுவப்பட்டிருந்தது. அ.தம்பி சாய்வு என்பவர் பொறுப்பதிகாரிளில் ஒருவராகக் கடமை புரிந்துள்ளமையை அதற்கான ஆவணம் உறுதிப்படுத்துகின்றது. இவர் குப்புலாவாடி (குப்புளாக் கொடி) கற்பட்டி ( வாகனேரி) கல்மடு (வாகனேரி) பனையடி முறிவு போன்ற பிரதேசங்களில் பரம்பரை ரீதியிலான நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்ததனாலும் எழுத வாசிக்கத்தெரிந்தவர் என்பதனாலும் இப்பதவி வழங்கப்பட்டிருந்தது.

வெள்ளை மாவடித்துறையையும் அதனை அண்டிய பகுதியையும் பிற்காலத்தில், ஓட்டமாவடி என மருவி அழைக்கலாயினர். வெள்ளைமாவடித் துறையூடாகவே மலை நாட்டுக்கான போக்குவரத்து அமைந்திருந்ததனால், பொருட்கள் தரப்படுத்தும் இளைப்பாறு தளமாகவும் இப்பிரதேசம் அமைந்திருந்தது. இத்தொடர்பின் காரணமாக அக்குறாணையார் பரம்பரை, சீக்கிரிய நோச்சல் போடி பரம்பரை, கொட்டியாரப் பரம்பரை முதலியவற்றின் தொடர்பு இங்கு காணப்படுகின்றது.

அத்தோடு, காத்தான்குடி வர்த்தக சமூகம் இப்பகுதியில் குடியமரலாயினர். இதே போன்று விதானைக் கண்டுப் போடியின் குடும்பங்களும் இங்கு தொன்மையான குடிகளில் ஒன்றாக திகழ்கின்றது. காத்தான்குடியைச் சேர்ந்த ”லங்கட” போடியார் குடும்பம், ஒகுது லெவ்வைப் பரம்பரை ஓட்டமாவடிப் பிரதேசத்தை சிந்தனைக் கலப்பற்ற தனியான பிரதேசமாகத் திகழ வழி அமைத்தது என்பது மறுப்பதற்கில்லை.

இப்பிரதேசத்தில் இஸ்மாயில் போடியாரின் தந்தைக்கு ”பூமி புத்ர” என்ற பட்டம் கண்டிய மன்னனால் வழங்கப்பட்டது. இது சிறப்பாக நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கே வழங்கப்பட்ட பட்டமாகும். இதிலிருந்து பன்னெடுங்காலமாகவே முஸ்லிம்கள் ஓட்டமாவடிப் பிரதேசத்துக்கு வெளியே வசித்து வந்துள்ளனர் என்பதை நிரூபிப்பதாகவுள்ளது. இதே போன்று அ. தம்பி சாய்வு என்பவர் விட்டுச்சென்ற கிரேக்க நாணயமும் இப்பிரதேச மக்களின் தொன்மையையும், வர்த்தகத்தொடர்பையும் கோடிட்டுச் செல்கின்றன.

மீராவோடை
மீராவோடைப் பிரதேசம் உருவாக முன்னரே பிரபல்யமிக்க தொன்மை நகரமாக பள்ளத்திட்டி – ஹிஜ்ரா நகர் (தற்போதைய பதுறியா நகர்) திகழ்ந்தது. இப்பிரதேசத்தின் ஆரம்பக்குடிகளில் முக்கியமானவர்களாக குளத்துப்போடியார் குடும்பம், அக்குறாணையார் குடும்பம், முதலிப்பிள்ளையார் குடும்பம் போன்றன காணப்படுகின்றன.

பின்னர் ஓடையைக் கடந்து தற்போதைய மீராவோடை  எனும் பகுதியில் குடியேறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ஹிஜ்ரா நகரின் ஜூம்ஆப் பள்ளிவாயல் இடிபாடுகளும் கபுறடி வளவும் அண்மைக்காலம் வரை குடியிருப்பாரற்ற பிரதேசமாகவே இருந்துள்ளன.

அத்தோடு, நூறு வருடங்களுக்கு முற்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட கல் வீடுகளும் இந்நகரின் புராதனத்தை விளக்கி நிற்கின்றன. மாதுரு ஓயா ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும் போது, ”முறாக்கு மீன்கள்” ஓடையை நோக்கி வந்ததால், அவை ”முறாக்கு ஓடை” எனக் கூறப்பட்டு மீராவோடையாக மருவியதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இவ்வோடை பாரிய ஆழம் கொண்டதாகக் காணப்பட்டது. ஓடையைக் கடப்பதற்கு பெரிய மரங்களை வெட்டி ஓடைக்கு குறுக்கேயிட்டு கடந்து சென்றுள்ளனர்.

தற்போதைய மீராவோடைப் பகுதியில் மேலும் பல குடிகள் இடப்பெயர்வை மேற்கொண்டு வந்தமர்ந்துள்ளனர். மீராலெவ்வை ஹாஜியார் குடும்பம் “பொண்டுவல்” சேனையிலிருந்து (இப்போது இந்த இடத்தில் கிறிஸ்துவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது) இங்கு வந்து குடியேறி வாழ்ந்துள்ளனர். அவரக் காடு மரைக்கார் குடும்பமும் பதுறியாவிலிருந்து இப்பகுதியில் இடம் பெயர்ந்து வாழ்ந்துள்ளனர். சின்னத்தம்பி போடியார் பரம்பரையும் செல்வாக்குமிக்க குடும்பமாக திகழ்ந்ததோடு, பரம்பரையாக அரச பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இவரது மகன் அலியார் போடியார் பொ.த (பொலிஸ் தலைவர் தற்போதைய விதானைப்பதவி) பதவி வகித்தார். இவரே முதலாவது மீராவோடைப் பகுதியின் விதானையாவார்.

இவர்களோடு இணைந்ததாக பரம்பரையாக தாமே பாடல்களை இயற்றிப் பாடுவதும் கோலாட்டம் முதலான பாரம்பரிய கலை அம்சங்களை பயிற்றுவித்தும் அண்ணாவியார் பரம்பரை காணப்பட்டது.

கொட்டியாரத்தோடு இப்பிரதேச மக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை காணக்கிடைக்கின்றது. கொட்டியாரத்து ஆலிமு என்பவர் இப்பிரதேச மக்களின் மார்க்க விடயங்களில் கூடியளவு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளமையிலிருந்து இது தெளிவாகின்றது. இவற்றோடு, பிறைந்துறைச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற குடியிருப்புக்கள் பாரம்பரிய முஸ்லிம் காணிகளாகவிருந்த சேனை, தோட்டப் பகுதிகளில் 1900களுக்கு பின்னரே குடியமர்த்தப்பட்டனர்.

ஓட்டமாவடி-வாழைச்சேனை எல்லையிலான தமிழ் குடியேற்றங்கள்
ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேச எல்லையில் பிற்காலத்தில் சலவைத் தொழிலாளர்கள் – வண்ணார்கள் குறிப்பிடப்பட்ட சில காரணங்களுக்காக முஸ்லிம்களால் குடியமர்த்தப்பட்டனர்.

ஒரு பிரதேசத்தில் இரண்டு ஜூம்ஆப் பிரசங்கம் நிகழ வேண்டுமாயின், இடைப்பட்ட பகுதியில் காபிர்கள் (அந்நிய மதத்தவர்) குடியிருக்க வேண்டுமென்ற பழைய மார்க்க அறிஞர்களின் சட்டத்தீர்ப்புக்கு அமையவும், ஓட்டமாவடி-மீராவோடைப் பிரதேசம் காதிரிய்யா தரீக்காவின் செல்வாக்குக்குட்பட்டிருந்த அதே வேளை, வாழைச்சேனை சாதுலிய்யா தரீக்காவின் செல்வாக்குக்குட்பட்டிருந்தது. இவ்விரு தரீக்காக்களுக்குமான நடவடிக்கை போட்டி மனப்பாங்கை ஏற்படுத்தியதனால், இரு வேறு ஜூம்ஆப் பிரசங்கம் நிகழ்த்த முடிவு செய்தனர். இதற்கமைவாக தூரப்பகுதியில் (கல்குடா) இருந்த சலவைத்தொழிலாளரை இவ்விடைப்பட்ட பகுதியில் குடியமர்த்தினர். இதுவே ”சாண்டார வெட்டை” என அழைக்கப்படலாயிற்று.

தூர இடத்திலிருந்து வந்து முஸ்லிம்களுக்கு சேவகம் செய்வதில் காணப்பட்ட சிரமத்தை நீக்கிக் கொள்ளவும், தாம் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் முஸ்லிம்களிடத்தில் புறக்கணிப்பு மனப்பான்மை மதரீதியில் காணப்படாததால் தாம் சுதந்திரமாக இப்பிரதேசங்களில் வாழ முடியுமெனக் கண்ட போது, இவர்கள் ஆற்றை அண்டிய பகுதியில் குடியமர்ந்து தமக்குத் தேவையான வணக்கஸ்தல மயான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டனர். தொழில் விடயமாகவும், பிற்பட்ட காலங்களில் இப்பகுதிகளை அண்டி குடியமரலாயினர்.

1985களின் பின்னர் ஏற்பட்ட இன முரண்பாடுகளினால் இவர்கள் இப்பிரதேசத்தை விட்டும் இடம் பெயர்ந்தனர். பின்னர் இந்நிலங்கள் மீண்டும் முஸ்லிம்களால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதுடன், பொது நிலங்களுக்கு (கோயில் வளவு, சவக்காலை வளவு) பதிலாக தமிழ் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நிலங்கள் (வாழைச்சேனை தேசிய இயந்திர நிலைய வளவு, வாழைச்சேனை தமிழ் பிரதேச புதிய செயலக கட்டட வளவு என்பன) கைமாற்றப்பட்டதுடன், சில நிலங்கள் காசு கொடுத்து வாங்கப்பட்டன.

பிறைந்துறைச்சேனை சிங்களவர் குடியேற்றம்
1965ம் ஆண்டு டீ.ஆர்.ஓ வாக இருந்த  திரு. சண்முகலிங்கம் காலப்பகுதியிலேயே இக்குடியமர்த்தல் இடம்பெற்றது. பின்னர் இவர்கள் தமக்குத் தேவையான ”பன்சலை” யைக் கட்டிக் கொண்டதுடன் குடியிருப்பையும் ஏற்படுத்தினர்.

இவ்வாறு ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது கல்குடாப் பிரதேச முஸ்லிம்கள் கிரான் தொடக்கம், கல்குடா, பாசிக்குடா, சல்லித்தீவு, வாகரை, வெருகல், ஆலங்குளம், அக்குறாணை, புணாணை, உன்னிச்சை வரையான பரந்த பிரதேசத்தில் பல நூற்றாண்டுகள் பூர்வீகக் குடிகளாகவும், வந்தேறு குடிகளாகவும் வாழ்ந்துள்ளனர் என்பதை ஆவணங்களும், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் பதவிப் பெயர்களும் மற்றும் இன்னோரன்ன அம்சங்களும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

மேலும், இப்பிரதேச வரலாற்றுத் தொண்மையை வலுப்படுத்த பல ஆய்வு முயற்சிகள் தேவைப்பாடாகவேயுள்ளன. பல தரவுகள் திட்டமிடப்பட்ட முறையில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால், அவையும் வெளிக்கொணரப்படும் போது எமது பூர்வீக பூமியின் சரித்திர வேர் தாழ வேண்டுமென்பதில் ஐயமில்லை.

இவ்வாய்வு ஒரு வரலாற்று நிகழ்வின் ஒரு வெள்ளோட்டமும், முற்கோடுமேயாகும் இதன் மீது தளமமைத்து மெருகுபடுத்துவது பிந்திய சமூக ஆய்வாளர்களது காலத்தேவையாகும்.

மீள் வாசிப்புக்காக வை.எல்.மன்சூர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*