கல்குடா நேசனின் 50வது இலக்கிய நேர்காணலில் சிறப்பிக்கிறார் நாச்சியாதீவு பர்வீன்-நேர்காணல் உள்ளே….

Spread the love

14642608_1478996555447523_1326359113_nநேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடா நேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம்.

இதுவரையில் வெற்றிகரமாக 49 நேர்காணல்களினூடாக பல்வேறு  துறைசார்ந்த கலைஞர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களோடு  கல்குடா நேசனில் இணைத்துக்கொள்கின்றோம்.  இவ்வாரம் 50வது  நட்சத்திரப் படைப்பாளியைச் சந்திக்கும் வாரம்.

பல தடைகள் சிக்கல்க‌ளைத்தாண்டி தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடும் இந்நேர்காணலில் எம்மோடு இணைந்து கொள்கின்றார் அநுராதபுரம் நாச்சியாதீவைச்சேர்ந்த கவிஞரும் அரசியல் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருமான பிரபல படைப்பாளி நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்.

இவரது  மன உணர்வுகள், கருத்துக்கள் எவ்வாறு எம் கேள்விகளுக்கூடாக வெளிப்படுகின்றது என்பதனை வாசிக்க…

கவிதாயினி ராஜ்சுகா: ஈழத்து இலக்கியவாதிகளின் வரிசையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய கவிஞராக தங்களை அறிவோம். எமது  வாசகர்களுக்காக தங்களது அறிமுகம்?

நாச்சியாதீவு பர்வீன்: சொந்த இடம் அநுராதபுரத்தில் நாச்சியாதீவு. இப்போது வாழ்வது மல்வானையில், மனைவி நஸ்மியா, இரண்டு குழந்தைகள். மூத்தவள் மரியம். இரண்டாமவள் செய்னப்.

கவிதாயினி ராஜ்சுகா: கவிஞராக  பிரகாசித்த முதல் சந்தர்ப்பம்?

நாச்சியாதீவு பர்வீன்: ம்….ஞாபகமிருக்கிறது.  பாடசாலைக் காலங்களில் சின்னச்சின்ன கவிதைகளைப் பாடக்கொப்பிகளின் பின்புறத்தில் எழுதி வைப்பேன். அதனை நண்பர்கள் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். என்னை விடவும் எனது பாடசாலை நண்பன் கல்பிந்துனுவெவ சியாத் அப்போதுகளில் நல்ல கவிதை எழுதுவான். நாங்கள் இருவரும் கவிதை பற்றி பேசுவோம்.

அவ்வப்போது நாங்கள் இருவரும் எழுதும் கவிதைகளை எங்களது விடுதித்தோழன் ஹொரவப்பொத்தானை சிபாவிடம் காட்டுவோம். அவன் இருவருக்கும் புள்ளி போடுவான். அனேகமாக நண்பன் சியாதே அதிக புள்ளிகள் எடுப்பான். ஆனால், பாடசாலையைத் தாண்டி நண்பன் தொடர்ந்து எழுதவில்லை.

மாறாக, நான் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். என்னை இனங்கண்டு பட்டை தீட்டி ஒரு எழுத்தாளனாக அடையாளப்படுத்தியது மறை எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள். என் போன்ற பல எழுத்தாளர்களை உருவாக்கியது அவரது தன்னலமற்ற இலக்கியச்சேவை என்றே கொள்ள முடியும்.

ஒரு மண்ணும் தெரியாமல் தம்மை கலைவாதி என்று அழைத்துக்கொண்டு சலசலத்துத் திறக்கின்ற களை போன்ற சருகுகளுக்கு மத்தியில் எம்.எச்.எம். சம்ஷ் ஒரு ஆலமரம் என்றால் அது மிகையாகாது.

கவிதாயினி ராஜ்சுகா:  நீங்கள் வெளியிட்ட  நூல்கள்?

நாச்சியாதீவு பர்வீன்:
1- சிரட்டையும் மண்ணும் (2005) -கவிதைத்தொகுதி
2- பேனாவால் பேசுகிறேன் (2008)- பத்தி எழுத்து.
3- மனவெளியின் பிரதி.  (2011)-  கவிதைத்தொகுதி
4- மூன்றாவது இதயம். (2014)- கவிதைத்தொகுதி

இது தவிரவும் தொகுப்பாசிரியராக இருந்து மூன்னு நூல்களை வெளியிட்டுள்ளோம்.
1 புதுப்புனல். ( எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவுக்கவிதைகள்) 2002.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், உக்குவளை பஸ்மனா அன்சார்.

2 வேலிகளைத்தாண்டும் வேர்கள் ( அநுராதபுர மாவட்ட கவிதைகள்) 2009.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம்.

3 கவியில் உறவாடி ( அநுராதபுரம், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட கவிஞர்களின் கவிதைகள்) 2012.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், மன்னார் அமுதன், பரணீதரன்.

தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா: தாங்கள் இயங்கும்  இலக்கியச் செயற்பாடுகள்?

நாச்சியாதீவு பர்வீன்: அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகச் செயற்படுகிறேன். இதன் மூலம் கடந்த காலங்களில் அநுராகம் எனும் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தோம். தற்போது நண்பர்கள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக இருக்கிறேன். இதன் முக்கிய பங்காளிகளில் ஒருவரான எல்.வசீம் அக்ரம் படிகள் எனும் காலாண்டு சஞ்சிகையை நடாத்தி வருகிறார்.

இது தவிரவும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளராகச் செயற்படுகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10, 11, 12 ஆம் திகதிகளில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடொன்றை நடாத்துமுகமாக மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

கவிதாயினி ராஜ்சுகா: சமகால புதிய  எழுத்தாளர்களின் வரவு, அதனூடாக இலக்கிய  வளர்ச்சிப்போக்கு பற்றி உங்களது  பார்வை?

நாச்சியாதீவு பர்வீன்: காலத்திற்கு காலம் புதிய எழுத்தாளர்கள் உருவாக்குவதும், அவர்கள் வந்த மாத்திரத்தில் காணமல் போய் விடுவதும் இயல்பான விடயமே. புதியவர்களினால் இலக்கியம் வளர்ச்சியடையாது. இன்றைய இளையவர்கள் தங்களை தாங்களே ரசிக்கின்ற, அல்லது தங்களது படைப்புக்களில் தாங்களாகவே  சுய திருப்தி அடைகின்ற நிலையில் தான் காணப்படுகிறார்கள்.

முகநூலில் நாலு வரியை எழுதி விட்டு, வானுக்கும் பூமிக்குமிடையில் குதிக்க அனேகமானவர்களை இப்போது அவதானிக்க முடிகிறது. இருந்தும், சில நல்ல திறமையுள்ள இளயவர்களின் வரவும் இல்லாமலில்லை. ஆக கால மாற்றத்தையொட்டி இலக்கியமும், அதன் வடிவமும் மாறுகிறது. ஆனால், அது இளையவர்களால் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கவிதாயினி ராஜ்சுகா: ஆக இளையவர்களின் எழுத்துக்களில் காத்திரமில்லை என்கின்றீர்களா?  இன்னும் இவர்கள் வளர்ச்சியடைய வேண்டிய பக்கங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நாச்சியாதீவு பர்வீன்: இல்லை. அப்படியில்லை. இளையவர்களில் பலர் மிகவும் காத்திரமாக எழுதுகிறார்கள். ஆனால், ஒரு தரப்பினர் சுய திருப்தியில் அடுத்தவர்களை வாசிக்காமல் தமது படைப்பை உயர்வாக எண்ணிக் கொண்டு காலங் கடத்துகிறார்கள். இந்தப்போக்கு இலக்கிய வளர்ச்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத போக்காகும் என்பதே எனது கருத்து.

கவிதாயினி ராஜ்சுகா: புதுக்கவிதை எவ்வாறு  இருக்க வேண்டும்? அல்லது எப்படியும் இருக்க முடியுமா?

நாச்சியாதீவு பர்வீன்: புதுக்கவிதை இப்படித்தான் இருக்க வேண்டுமென்கின்ற மரபு நானறிந்த வகையில் கிடையாது. அது மட்டுமின்றி, புதுக்கவிதை இலக்கண மரபை உடைந்தெறிந்து, சகட்டு மேனிக்கு பயணிக்கும் ஒரு ஊடகம். அது ஒரு காட்டாறு போன்றது. அதனை அணை போட்டுத்தடுக்கவோ அல்லது அடைக்கவோ முடியாது.

ஆனால், வாசகனை வளைத்துப் போடும் லாவணயம் அதில் இருக்க வேண்டும். வாசித்த மாத்திரத்தில் மனசு நெக்குறுகி போய் அதன் பின்னால் ஓட வேண்டும். மழைத்துளியின் ஸ்பரிசம், முதல் கதிரின் இளஞ்சூடு, ஆரத்தழுவும் தென்றல் காற்று இவைகள் உண்டு பண்ணும் சுகத்தை புதுக்கவிதை உண்டு பண்ணும். இந்த உணர்வெழுச்சிகள் தெறிக்காத வெற்றுச் சொற்களைக் கட்டி கவிதை என்று கொண்டாட முடியாது.

கவிதாயினி ராஜ்சுகா: அரசியலில் தங்களது  ஈடுபாடு?

நாச்சியாதீவு பர்வீன்: ரெம்பவும் சிக்கலான கேள்வி. ஆனால், அரசியலில் அதீத ஈடுபாடுண்டு. அரசியலும், இலக்கியமும் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டினை நான் நம்புகிறவன். ஆனால், அரசியல்வாதிகளில் முக்கால் வாசிப்பேரும், இலக்கியவாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர்.

கலைவாதிகளாக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்கள் வெற்றுக் களைகளாக இருப்பதும், பம்மாத்து அரசியலுக்குள் நாம் சிக்கித்தவித்து மூச்சித்திணரலுடன் வாழ்வதும் நமக்கான சாபக்கேடாகவே கருதுகிறேன். இதில் எனது அரசியல் ஈடுபாடு புறக்கணிக்கத்தக்கது.

கவிதாயினி ராஜ்சுகா: பல இலக்கியவாதிகள் ஊடகத்துறையை  சார்ந்தவர்கள்  அரசியல்வாதியாகப் பரிணமித்த போது, அவர்களிடம்  ஆரம்பத்திலிருந்த  புரட்சிகரமான சிந்தனை, சமூகப்போக்கு என்பன பின்னர் வலிவிழந்து போகின்றதே  இது பற்றி?

நாச்சியாதீவு பர்வீன்: சிந்தனையை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அலை போல பணம் வந்தால், அனேகமானோர் விலை போய் விடுகிறார்கள். துரத்தியடிக்கும் வாழ்க்கைப்போராட்டத்தில் வளைந்து கொடுக்கா விட்டால், வலுவிழந்து போய் விடும் வாழ்க்கை. இது தான் உண்மை நிலை. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு மட்டுமே. மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், நேர்மையான சிந்தனையுடன், நெறி பிறழாது செயற்படும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

கவிதாயினி ராஜ்சுகா: வளரும் படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளுக்கிடையிலான உறவு முறை பற்றி?

நாச்சியாதீவு பர்வீன்: பல இளம் படைப்பாளிகள் மூத்தவர்களை வாசிப்பதுமில்லை. அணுகுவதுமில்லை. அவ்வாறே இதற்கு சமாந்திரமாக சில மூத்த படைப்பாளிகள் இளையவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இந்த முரண் நகர்வு முடிவின்றித் தொடர்கிறது.

கவிதாயினி ராஜ்சுகா: இலக்கிய வளர்ச்சியில் இளையவர்களுக்கான வழிகாட்டியாக எவ்வெவ்  வழிகளைக் கூறலாம்?

நாச்சியாதீவு பர்வீன்: நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சமாக எழுத வேண்டும். நல்ல நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும். தொடரான வாசிப்பே ஒரு நல்ல இலயக்கியப்படைப்பை உருவாக்க ஆதர்ஷனமாக அமையும்.

கவிதாயினி ராஜ்சுகா: கஸ்டமாக, சவாலாக நீங்கள் நினைக்கும் விடயம்?

நாச்சியாதீவு பர்வீன்: அடுத்தவர்களைத் திருப்திப் படுத்துவது.

கவிதாயினி ராஜ்சுகா: ஒரு படைப்பாளி எவ்வாறு  தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்?

நாச்சியாதீவு பர்வீன்: ஒரு படைப்பாளி தன்னை அடையாளங்காட்ட காத்திரமான ஒரு படைப்பை தந்தாலே போதுமானது. அவன் தக்க வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக எழுத வேண்டும். தான் கண்ட, கேட்ட, அனுபவித்த விடயங்களை எழுத்துருவாக்க வேண்டும். இதன் ஒரு படைப்பாளி பேசப்பட வாய்ப்புண்டு. அத்தோடு, அவன் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்.

கவிதாயினி ராஜ்சுகா: வளரும் படைப்பாளிகள் எவ்வகையான  விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

நாச்சியாதீவு பர்வீன்: எல்லா வகையான விமர்சனங்களுக்கும் முகங்கொடுப்பவனே எழுத்தாளன். விமர்சனங்களுக்குப் பயந்தவன் எழுத்தாளனாக முடியாது. இது எல்லா வகையான எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

கவிதாயினி ராஜ்சுகா:  சுலபமான வலைத்தளங்கள், ஊடகங்களினால் வாய்ப்புக்களுக்கு பஞ்சமில்லை. இதில் தரமான படைப்புக்களெனப்படுவது?

நாச்சியாதீவு பர்வீன்: இலக்கியப்படைப்புக்களின் தரமறிய தராசு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தரமும், தரமின்மையும் வாசகனின் பட்டறிவும், அனுபவத்தை வைத்தே அளவிட முடியும்.

கவிதாயினி ராஜ்சுகா: சமூக வலைத்தளங்களில் நடைபெறும் போட்டி, பரிசு, விருது, பாராட்டுக்கள் பற்றி?

நாச்சியாதீவு பர்வீன்: வரவேற்போம். நல்ல விடயம்

கவிதாயினி ராஜ்சுகா: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறவுள்ளது. இது பற்றியும், இதில் தங்களது பங்களிப்புப் பற்றியும் கூற முடியுமா?

நாச்சியாதீவு பர்வீன்: உலக இஸ்லாமிய இலக்கிய பொன்-2016 டிசம்பர் மாதம் 10, 11, 12 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தீர்மானித்துள்ளது. இதற்கான உதவிகளை கெளரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் கெளரவ பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் செய்து தருவதாகக் கூறியுள்ளார்கள்.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷெரீப்தீன், ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் மற்றும் ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்து நானும் பணியாற்றுகிறேன். அவ்வளவு தான். பொன் விழா பற்றிய எண்ணக்கருவை விதைத்தவர் ஆய்வகத்தின் இணைப்பாளர் டாக்டர் தாசிம் அஹமது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிதாயினி ராஜ்சுகா: அண்மையில் மேற்கொண்ட மலேசிய பயணம் பற்றி?

நாச்சியாதீவு பர்வீன்: இஸ்லாமிய இலக்கிய பொன் விழாவுக்கு அறிஞர்களையும், இலக்கியப்பெருந்தகைகளையும் அழைப்பதற்காக நாங்கள் சென்றோம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எமது இது தொடர்பான கூட்டத்தொடர் இடம்பெற்றது.

கவிதாயினி ராஜ்சுகா: இலக்கிய நட்புறவு பற்றி?

நாச்சியாதீவு பர்வீன்: போலியும் – நிஜமும் கலந்த தவிர்க்க முடியாத உறவு அது. இன்னும் சொல்லப்போனால் கலப்படமற்ற இலக்கிய உறவுகள் காலத்தின் கட்டாயம்.

கவிதாயினி ராஜ்சுகா: கல்குடா நேசன் பற்றிய உங்கள் கருத்தென்ன?

நாச்சியாதீவு பர்வீன்: ஒரு செய்தித்தளமாக அதன் சேவையைப் பாராட்டுகிறேன். உண்மைச்செய்திகளைப் பாரபட்சமில்லாது வெளியிடும் அதன் பணி அளப்பெரியது. அதன் இலக்கியச்செயற்பாடுகள் இன்னும் மாற்றங்கள் தேவை.

ஆனால், எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் மிளிகின்ற ஒரு காத்திரமான தளமாக இது இயங்கும் என்கின்ற அதிக பட்சமான நம்பிக்கை எனக்கிருக்கிறது.14501877_1461567863857059_976260986_n 14509347_1461567960523716_713704458_n 14542831_1461569770523535_19838326_n 14642774_1478996692114176_569534036_n 14642941_1479112018769310_171276834_n 14658440_1478996712114174_1509757159_n 14741231_1479111955435983_1062536156_n 14741822_1478996748780837_542526593_n 14741861_1479111648769347_570427864_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*