வாழ்வே போராட்டமானால்…

Spread the love

untitledM.I. Muhammadh Safshath (BSc {Hons} in QS)

வாழ்வே போராட்டமானால் என்ற இழுவிசைக்குள்ளாக்குவது தகர்த்து வாழ்வே போராட்டம் தான் எனும் உதைப்புக்குள்ளாக்குவதே இவ்வாக்கத்தின் நோக்கம். வாழ்வில் போராட்டம் எங்கே தொடங்குகிறது? எதுவரை தொடர்கிறது? பிறப்போடு தொடங்கும் போராட்டம் என்பதை விட, பிறப்பே பல போராட்டங்களின் பின்வரும் ஒரு பெறுபேறு தான் என்பது மிகவும் உண்மையானது.

செலுத்தப்பட்ட விந்துக்கலம் காவிய கோடிக்கணக்கான உயிரணுக்களுள் ஓரணுவின் போராட்ட வெற்றி தான் கருவறைக் குழந்தையின் தோற்றம்.  உயிரோடும், வலியோடும் போராடிய ஒரு தாயின் பிரசவப்போராட்ட வெற்றி தான் அச்சிசுவின் பிறப்பெனும் வாயில் துறந்த காவலன். பல போராட்டங்களின் பின்பே பிறப்பே பரிசாகிறது. பிறப்பிலேயே போராட்டம் எம்மில் பின்னிப்பிணைகிறது. வல்லோன் வகுத்த கணிதம் இதுவாகத்தான் இருக்கிறது.

பிறப்பே போராட்டம் பகிர்ந்ததொரு பரிசென்றாகிற போது, அது இறப்பு வரை தொடர்வதில் அதிசயமேதும் கிடையாது. வாழ்வின் எந்தவொரு அடைவை எதிர்நோக்கியுள்ள போதும், அவ்வடைவின் முன்னால் போராட்டங்கள் பல அரங்கேறுவதை வெளிக்காட்டிக் கொள்ள தயக்கங்கொண்டாலும், தன் மனம் உணராமலிருப்பதில்லை.

அதிகாலைத் தொழுகைக்காக படுக்கையிலே போர்வையுடன் மேற்கொள்ளும் போராட்டம் தொடங்கி, அடுத்தடுத்து போராட்டங்களின் அரங்கேற்றம் வாழ்நாளை அலங்கரித்த வண்ணமேயுள்ளது எனலாம். கூறும் போது அற்பம் போல் தென்பட்டாலும் இது தான் உண்மையாக இருக்கிறது. போர்க்களம் கூட இத்தனை கடினம் தராது என்று உணருமளவு கடினத்தை அதிகாலைத் தொழுகைக்காக போர்வை நீக்கையில் உணர்கிற தருணங்களும் இல்லாமலில்லை.

உயிரின் பிறப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளின் எமது பிறப்பும் போராட்டங்களின் பின்பே பிரசவமாகின்றது என்பதற்கு இதைவிடச் சான்று வேறு தேவையில்லை என்றே மனம் கூற நாடுகிறது. கேடயமேந்தி, ஆயுதந்தாங்கி, கவசங்களோடு எதிர்முனையில் எதிரிகள் சூழ அடித்து வீழ்த்தும் வீரனைக் காட்டிலும், மனதோடு போராடும் மனிதனை வீரனாய்ச் சித்தரிக்கும் நபி மொழி கண்டு வியப்பு வந்தாலும், அதிலுள்ள ஆயிரம் அர்த்தங்களும், கோடி உண்மைகளும் புரியாமலில்லை. “மக்களை தன்னுடைய பலத்தால் அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே.” (புஹாரி 6114) என்பது நபிமொழியாயிற்றே. இரத்தினச் சுருக்கம் மிகையாய்த் ததும்புவதில் வியப்பேதும் வேண்டியதில்லை.

எதிர்பார்ப்புகள் எதிர்ப்பை எதிர்நோக்கும் பொழுதுகளில் ஏனோ எங்கிருந்தோ எல்லையற்ற கோப மேலீட்டலால் எதைச் செய்கிறோம்? எவ்வாறு செய்கிறோம்? என்ற சிறு யோசனை கூட இராது எதையெதையோவெல்லாம் செய்திடும் எமது ஆவேசத் தருணங்களை சற்றே பட்டை தீட்டிட இத்தருணம் தளந்தருகிறது.

எமது வீரத்தின் வெளிப்பாடு மெய்யாய் அங்கே தான் இருக்கிறதென்கிற போது எமது கோழைத்தனங்களை எண்ணி தலை குனிவதைத் தவிர பகரங்கள் கிடையாது. நியாயங்களுக்கான போர்க்களப் போராட்டமென்பது வார்த்தைகளால் பொறிக்கப்பட முடியா பெருந்தியாகம் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. எனினும், அதிலும் சினத்துடனான போராட்டம் பெரிதாய் காட்டப்படுவதன் நியாயம் இங்கே தெளிவாகிறது.

நன்மைகளில் நாட்டத்தையும், தீமைகளில் தூர விலகல்களையும் சற்றே பொறுமையாய் அலசும் போது போராட்டங்களிலெல்லாம் பெரும் போராட்டம் வாழ்வோடு அங்கமாய்த் தொடரும் மனதோடான போராட்டமே என்பது தெளிவாய்ப் புலனாகிறது. வல்லோனின் வார்த்தைகள் இவ்வாறு அமைவதை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானது. “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதை சோதிப்பதற்காகவே அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்” (67:02). போராட வேண்டுமென்றே படைக்கப்பட்டவர்கள் தான் நாம் என்பதை இன்னும் உணராமலிருக்க நியாயமில்லை. உலகுக்கே மறைவரி பறைசாற்றப்பட்டும் ஆகி விட்டது.

செயல்களால் சிறந்தவர்களைச் சோதிப்பதற்காக மனதோடான போராட்டத்தை வாழ்வாய் வகுத்தளித்துள்ளான் வல்லோன் எனும் போது வாழ்வே போராட்டம் தான் என்பதை ஏற்றே ஆதல் வேண்டும். நற்கருமங்கள் மீது நாட்டங்கொள்கிற போதும், தீய கருமங்களிலிருந்து நீங்கிட எண்ணும் போதும் மட்டும் தடைகள் ஏனோ தம் முன் தாறுமாறாய் வந்து கொண்டே இருப்பது போல் தோன்றுவதென்னவோ உண்மை தான்.

போராட்டங்கள் தொடர்கிறது. கவசங்களும் கேடயங்களும் கொண்டு போராட்டத்தைப் பலப்படுத்த தாக்க வருவதொன்றும் ஈட்டிகளோ அம்புகளோ கிடையாது. குண்டு துளையா அறையுள் தங்க எதிரே வருவது குண்டுப் பொதிகைகளும் கிடையாது. உள்ளத்துள் ஊடுறுவும் மனக் குழப்பங்களும், ஷைத்தானின் சதி வலைகளுமே இங்கு எம்மைத்தாக்க வரும் பலமான ஆயுதங்கள்.

வசப்படா உள்ளமும், தகர்க்க முடியா உறுதியும் தான் இப்போர்க்களத்தில் நாம் தரிக்கவுள்ள ஆயுதங்கள். தமது ஒவ்வொரு செயல்களிலும், ஒவ்வொரு நொடிப்பொழுதுகளிலும் இப்போராட்டத்தை சந்திக்காமல் யாருமில்லை என்று கூறுமளவு ஒவ்வொருவர் வாழ்விலும் இப்போராட்டம் மிகத்தாக்கம் செலுத்துகிறது.

மனதோடு போராடும் வலிமை வந்து விட்டால், வலிகளோடும் முன் வரும் தடைகளோடும் போராடும் வலிமை வந்து சேர்வதில் ஐயமேதுமில்லை. அதற்கான சான்றுகளுக்கும் இஸ்லாமிய வரலாற்றில் பஞ்சமே இல்லை. சுடும் பாலை மணலில் வெறுமேனியாய் கிடத்தப்பட்டு வயிற்றிலே பாரமும் ஏற்றப்பட்டு வதைக்குள்ளாக்கப்பட்ட போதும் பிலால் (ரழி) அவர்களின் இறையுறுதி, தனல் பரவி அதன் மேலே படுக்கையாக்கப்பட்டு தோலுருகிக் கொழுப்பொழுகும் வரை புண்வதைக்குள்ளாகியும் ஆட்டங்காணா ஹப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்களின் கொள்கையுறுதி என இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாறு நெடுகிலுமுள்ள ஏராளமான தியாகப்பாடங்கள் இதைத்தான் எடுத்துரைக்கின்றன. மனதோடு போராடத் துணிந்து விட்டால் வலிகளும், வருந்தடைகளும் போராட்டமின்றிக் கூட தகர்த்தெறியப்படும்.

பிறப்பையே தந்து பிறப்போடு தொடர்ந்து இறப்பு வரை எம்மோடே பயணிக்கின்றன எம் வாழ்வின் போராட்டங்கள். அற்பமெனக் கருதும் சிறு நிகழ்வுகள் தொடங்கி, வாழ்வின் அத்தனை அங்கங்களும் போராட்டங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தடைகளும், வலிகளும் போராடும் மனதை சோர்வுறச்செய்கின்றன.

மனதோடு போராடக் கற்றுக்கொண்டவர்கள் எவ்வித போராட்டங்களையும் எளிதாய்த் தாண்டி விடலாம். போராடுங்கள். ஆயுதமேந்தி களத்திலல்ல. உறுதி பூண்டு மனத்தில். உள்ளத்தோடு போராடுங்கள். உணர்வுகளோடு போராடுங்கள். நிலையற்ற வாழ்வைத் தொடரவுள்ள நிலையான வாழ்வுக்காய் இப்பொழுதே போராடுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*