முஸ்லிம் தனியார் சட்டச்சீர்திருத்தம் ஒரு சமூகவியல் பார்வை-அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது காஸிமி MA (கலாசார உத்தியோகத்தர்)

Spread the love

147956914612740எழுத்துருவாக்கம் எச்.எம்.எம்.பர்ஷான்

இன்றைய சமகால இலங்கை முஸ்லீம்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்களைக் கவனத்திற்குத் தருகின்றேன். இன்று இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியிலே பிரதானமான பேசு பொருளான இலங்கை முஸ்லீம் தனியார் சீர்திருத்த விவகாரம் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

இந்த முஸ்லீம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பத்திரிகை, வானொலி, இணையத்தளம், சமூக வலைத்தளங்களிலெல்லாம் கடந்த இரண்டு வாரங்களாக இந்த விடயம் பிரதான இடத்தைப் பிடித்திருப்பதைப் பார்க்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள், முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள் மத்தியிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதும் பழி சுமத்துவது தொடர்பான செயற்பாடுகளும் நடந்தேறிக் கொண்டிருப்பதை நாம் மறுத்து விட முடியாது.

எனவே, இவ்விடயம் தொடர்பான சில உண்மைகளையும் அவற்றின் எதார்த்தமான தன்மைகளையும், இந்த விடயங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைமை குறித்தும் நினைவூட்டுதல் பொதுவான இலங்கை முஸ்லீம் சமூகத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

எனவே, இந்த விடயத்தை ஒரு தெளிவு படுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவது சாலப்பொருந்துமென நினைக்கின்றேன். இக்கட்டுரையில் இது குறித்து விலாவாரியாகச் சொல்ல முடியா விட்டாலூம், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தரவுகளை உங்களுடைய கவனத்திற்குத் தருவது பயனுள்ளதாக இருக்கும்.

முஸ்லீம் தனியார் சட்டம் குறித்து அடிக்கடி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனூடாக என்ன விடயம் கவனத்திற் கொள்ளப்படுகிறதென்பதை நாங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை திருநாட்டைப் பொறுத்த வரைக்கும் இந்த நாட்டிலே வாழுகின்ற மக்களுக்கென்று பொதுவான சிவில் சட்டமொன்று இருக்கிறது.

அந்த சிவில் சட்டத்திற்கு இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். இருந்த போதும், இந்நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு அவர்களுடைய சமய, கலாசார விழுமியங்களைப் பேணிக் கொள்கின்ற அடிப்படையில் அல்லது அவர்களுடைய பிரதேச வழக்கங்களையும், பண்பாடுகளையும் பேணிக்கொள்கின்ற அடிப்படையில் சில விஷேட சட்டங்கள் இருக்கின்றன.

அந்த வகையிலே உள்ள ஓர் விஷேட சட்டம் தான் இலங்கை முஸ்லீம் தனியார் சட்டம் என்பது. இலங்கையில் பொதுவான சிவில் சட்டம் ஒரு பக்கமிருக்க, இலங்கை முஸ்லீம் சமுதாயத்திற்கென்று தனித்துவமான சில விடயங்களை அவர்களுடைய சமய, கலாசார ரீதியான விடயங்களை கவனத்திற்கொண்டு செயற்படுவதற்கு இலங்கையின் யாப்பு, சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விடயம் தான் இந்த முஸ்லீம் தனியார் சட்டமாகும்.

முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. இந்நாட்டிலே வாழுகின்ற பல்வேறு இனக்குழுக்களுக்கும் இந்த விஷேட சட்டச்சலுகைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நாட்டிலே இன்னுமோர் தனியார் சட்டமிருக்கிறது தேச வழமைச்சட்டமென்று. அது யாழ்ப்பாணத்திலே வாழுகின்ற தமிழர்களுக்கு மட்டும் உரித்தான சட்டமாகும்.

இலங்கையில் பொது சிவில் சட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழர்கள் உட்படமாட்டார்கள் அவர்களுக்கென்று நீதி மன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு தனியான சட்ட திட்டங்கள் இந்த நாட்டிலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த தேச வழமைச்சட்டம் இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழர்களுக்கும் அது பொருந்தமாட்டாது. யாழ்ப்பாண தமிழர்களுக்கு மாத்திரமே அது பொருத்தமானதாகும்.

இது போலவே இலங்கையில் இன்னுமோர் தனியார் சட்டம் அல்லது விஷேட சட்டமிருக்கிறது அது கண்டியச்சட்டம். கண்டியில் வாழுகின்ற சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தான சில சட்டங்கள். இலங்கையில் வாழுகின்ற எல்லா சிங்களவர்களுக்கும் பொது சிவில் சட்டம் பொருத்தமானதாக இருந்தாலும், கண்டியில் வாழுகின்ற சிங்களவர்கள் அந்த பொது சிவில் சட்டத்திற்குட்படமாட்டார்கள். அவர்கள் நீண்ட கால மன்னர் ஆட்சிப் பாரம்பரியத்துற்குரியவர்கள் என்ற வகையில், அவர்களிடத்தில் சில பழக்க, வழக்கங்களும் கலாசாரங்களும் இருக்கின்றது என்ற வகையில் அவர்களுடைய அந்த உரிமைகளை மதித்து, இலங்கையில் கண்டியச்சட்டம் என்று ஒரு தனியார் விஷேட சட்டமுள்ளது.

இவ்வாறான பல்வேறு வகையான விஷேட சட்டங்களில் ஒன்றாகத்தான் இலங்கை முஸ்லீம்களுக்கான தனியார் சட்டம் என்ற விவகாரத்தை நாம் பார்க்கின்றோம். இந்த தனியார் சட்டம் இலங்கை முஸ்லீம்கள் அவர்களுடைய முழுமையான இஸ்லாமிய வாழ்வையும் இஸ்லாத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கான சட்ட திட்டம் கிடையாது.

சில பரிந்துரை செய்யப்பட்ட குறிப்பிடப்பட்ட சில சட்டங்களை சில விடயங்களில் இஸ்லாமியர்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சட்டத்தின் பிரகாரம் நடந்து கொள்ள முடியும் என்பது தான் அதனுடைய விளக்கமாகும்.

அந்த வகையில், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற முஸ்லீம் தனியார் சட்டமென்பது பிரதானமாக முஸ்லீம்களுடைய விவாக, விவாகரத்து, சொத்துரிமை, முஸ்லீம்களுடைய பள்ளிவாயல்கள், நம்பிக்கை நிதியப்பொறுப்பு நிறுவனங்களைப் பராமரிப்பதற்கான வக்பு தொடர்பான சட்டங்கள் இவைகள் அனைத்தையும் கொண்டதாகவே இந்த இலங்கை முஸ்லீம் தனியார் சட்டமிருக்கிறது.

எனவே, இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம் ஒருவர் இலங்கை முஸ்லீம் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற விவாகச் சட்டங்களின் அடிப்படையில் அவர் தன்னுடைய விவாக நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள முடியும். அவருடைய விவாகரத்து நடவடிக்கைகளில் அச்சட்டத்தில் சொல்லப்பட்ட பிரகாரம், அதனை அவர் வைத்துக்கொள்ள முடியும்.

இலங்கையிலுள்ள முஸ்லீம் ஒருவர் அந்த தனியார் சட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தன்னுடைய சொத்துரிமையை அவர் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள முஸ்லீம் ஒருவர் தமது பள்ளிவாயல்கள், பொது நம்பிக்கை நிறுவனச்சொத்துக்கள், வக்பு சொத்துக்கள் என்பவற்றை பராமரிப்பதற்கான சட்ட திட்டங்களை அதிலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இவைகள் எவற்றிற்கும் இலங்கையிலிருக்கின்ற பொதுவான சிவில் சட்டம் அவர்களுக்குத் தடையாக இருக்கமாட்டாதென்பது தான் இலங்கை முஸ்லீம் தனியார் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற சுருக்கமான விவகாரமாகும்.

இலங்கை முஸ்லீம்களைப் பொறுத்த வரைக்கும் இஸ்லாம் இந்த நாட்டில் அறிமுமான காலம் முதல் அவர்கள் இந்த நாட்டின் பொது சமூகத்தோடு பெரும்பான்மைச் சமூகத்தோடு சில விடயங்களில் இணங்கிக் கொள்ளாமல், அவர்கள் தனித்துவமான சில சட்ட திட்டங்களை தங்களுடைய வாழ்க்கையில் பேணி வந்திருக்கிறார்கள்.

அது சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்தாலும் சரி, அதனையடுத்து இலங்கையை ஆண்ட அந்நிய ஆட்சிக்காலங்களிலும் சரி, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் சரி அவர்கள் இந்த தனித்துவமான சட்டங்களை அரசுகளின் அல்லது மன்னர்களின் அங்கீகாரங்களோடு இந்நாட்டிலேயே நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.

குறிப்பாக, ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் இலங்கை முஸ்லீம்கள் தங்களுடைய சமய, கலாசார தனித்துவங்களைப் பேணிக் கொள்வதற்கான சட்ட விடயங்களைப் பின்பற்றுவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போது, கி.பி 1806 ம் ஆண்டு இலங்கையில் பிரதம நீதியரசராக இருந்த அலக்ஸ்ஸான்டர் ஜோன்ஸன் என்பவருடைய தலைமையில் இந்த முஸ்லீம்களுடைய சட்ட விடயங்கள் தொடர்பான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கொழும்பிலும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லீம்களுடைய பழக்க, வழக்கங்கள், நடைமுறைகள் ஆய்வுகள் செய்யப்பட்டு ஒரு சட்டத்தொகுப்பாக இலங்கையில் அங்கீகரிக்கப்படுகிறது.

1852 ம் ஆண்டு இலங்கை முஸ்லீம் சமுதாயம் முழுவதுற்குமான சட்டமாக இச்சட்டம் அமுலுக்கு வந்தது. இதற்குப்பிறகு, 1886, 1888, 1910, 1918, 1922 ம் ஆண்டுகளில் பல்வேறு கால கட்டங்களில் அந்த சட்டங்கள் சீர்திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்பட்டு காலத்தின் தேவைகளுக்கேற்ப அவைகள் திருத்தியமைக்கப்பட்டன.

இந்த வகையில், 1929 ம் ஆண்டு இலங்கை அரசின் சட்டவாக்க சபையின் அங்கத்தவராக இருந்த என்.எச்.எம். அப்துல் காதர் நடைமுறையிலிருக்கின்ற முஸ்லீம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தங்கள், மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று ஒரு மசோதாவை சட்டவாக்க சபையிலேயே அவர் முன்மொழிகின்றார்.

இந்த முன்மொழிவின் அடிப்படையில் மீண்டும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, 1934 ம் ஆண்டு திருத்தங்களுடன் கூடிய முஸ்லீம் தனியார் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. இலங்கை சுதந்திரமடைந்ததற்குப்பிரகு மேலும் நடைமுறையிலிருக்கின்ற அந்தச்சட்டங்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக, அவற்றைச்சீர்திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டு, 1951 ம் ஆண்டு இலங்கையில் நடைமுறையிலிருந்த முஸ்லீம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேணுமென்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழு நியமிக்கப்பட்டது.

அக்குழுவின் சிபாரிசு 1954 ம் ஆண்டு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. 1954 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த முஸ்லீம் தனியார் சட்டம் தான் இன்று வரைக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியிலேயே நடைமுறையிலிருந்து வருகின்றது. அவ்வப்போது சிறிய சிறிய திருத்தங்கள் நடைபெற்றிருக்கிறது.

1955, 1965, 1969, 1975 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறிய சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டு, அத்திருத்தங்களுடன் கூடிய சட்ட திட்டங்கள் தான் இன்று வரைக்கும் இலங்கை முஸ்லீம் தனியார் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கை முஸ்லீம்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற விவாக, விவாகரத்து, சொத்துரிமை, வக்பு சொத்துக்கள் தொடர்பான சட்டதிட்டங்களில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக, அவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்ற முயற்சிகள் முஸ்லீம் சமுதாயத்திற்குள்ளிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அதற்கான முனைப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

1990ம் ஆண்டு முஸ்லீம் கலாசார அமைச்சராக இருந்த அல் ஹாஜ் அஸ்வர் அவர்கள் இந்தத்திருத்தத்தை மேற்கொள்வற்கான ஒரு குழுவை நியமித்து, அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், 2009 ம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட மீண்டும் இந்த சட்டங்களைத் திருத்துவதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் இருபது பேரைக்கொண்ட குழு அப்போது நியமிக்கப்பட்டது.

அந்தக்குழு இந்த முஸ்லீம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், விதந்துரைகள், சிபாரிசுகள் என்ற விடயங்களை கடந்த ஏழாண்டுகளாக ஆய்வு செய்து, இதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றோம். இதற்கு முன்னர் நீதியமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்யின் தலைவர் அமைச்சர் அல் ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்களும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சலீம் மர்சூப் என்பவருடைய தலைமையில் நியமிக்கப்பட்ட மீள்பரிசீலனைக்குழு இருபது பேருடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் என்பவர் தலைமை வகிக்க, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஓய்வு பெற்ற சட்ட மாஅதிபர் சிப்லி அஸீஸ், அகில இலங்கை ஜம்இய்யது உலமா சபையின் தலைவர், செயலாளர், முஸ்லீம் சமுதாயத்துடைய சிவில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகள், முஸ்லீம் பெண்கள் தரப்புப்பிரதிநிதிகள் என்றும் பல்வேறு தரப்பினர்களை உள்ளடக்கப்பட்ட ஒரு குழுவாக இக்குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இக்குழு கடந்த ஏழாண்டுகளில் இருபது அமர்வுகளை மேற்கொண்டு, பதினேழு திருத்தங்களுடன் இம்மாத இறுதிக்குள் தனது திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளது என்கின்ற விடயத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது.

முஸ்லீம் தனியார் சட்டம் என்பது அது முழுமையாக இஸ்லாத்தின் சட்டங்களா? இல்லை. அதில் பல்வேறு குழறுபடிகள், கோளாறுகள், குறைபாடுகள் இருக்கின்றன என்று நாங்கள் ஆய்வு செய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகின்றது.

இலங்கையில் நடைமுறையிலிருக்கின்ற அந்த முஸ்லீம் தனியார் சட்டமென்பது முழுமையாக இஸ்லாமிய சட்டங்கள் கிடையாது. அல்குர்ஆன் ஹதீஸிலிருந்து பெறப்பட்ட முழுமையான இஸ்லாமிய சட்டங்கள் கிடையாது. இலங்கை ஷாபி மத்ஹப்பைப் பின்பற்றுகின்ற முஸ்லீம்களைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், ஷாபி மத்ஹபைத் தழுவிய சில சட்ட திட்டங்களும் முஸ்லீம்களிடத்தில் காணப்பட்ட சில பழக்க, வழக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு சட்டத்தொகுப்பாகவே இந்த முஸ்லீம் தனியார் சட்டம் காணப்படுகிறது.

இதன் காரணமாக இதில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள், பலவீனங்கள் காரணமாக இந்தச்சட்டத்தை மாற்ற வேண்டுமென்ற தேவைப்பாடு உணரப்பட்டு, கடந்த முப்பதாண்டுகளாக முஸ்லீம் சமுதாயத்திலிருந்து பல்வேறு தரப்பினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாகச் சொல்வதாக இருந்தால், விவாகம் தொடர்பாக இன்று நடைமுறையிலிருக்கும் சட்டம் பெண்ணுக்கு அதில் எந்தவொரு பாத்திரமும் அளிக்கப்படவில்லை. ஒரு வலி திருமணத்தை முடித்து வைப்பார். மணமகன் கையொப்பம் வைப்பார். அந்தப் பெண்ணின் விருப்பம் பெறப்பட்டதா? என்றெல்லாம் தெரியாது.

ஆனால், கட்டாயம் ஒரு இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணுடைய விருப்பம் பெறப்பட வேண்டும். பெண்ணுடைய விருப்பம் பெறப்படாமல் செய்யப்படும் திருமணம் செல்லுபடியாக மாட்டாது. ஆனால், இன்று இலங்கையிலிருக்கின்ற திருமணச்சட்டத்தில் பெண்ணுடைய விருப்பத்தை வலி பெற வேண்டிய அவசியமில்லை. அவர் கையொப்பம் வைத்தால் சரி. இது மிகப்பெரியதொரு குறைபாடாகும்.

எனவே, இதனால் பெண்களுடைய உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது. என்ற வாதங்கள் முஸ்லீம் சமூகத்திற்குள்ளிருந்தும் முஸ்லீம் சமுதாயத்திற்கு வெளியிலிருந்தும் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உண்மையில், அது நியாயமானது. இது போலவே இன்றைய திருமணத்தில் திருமணப்பத்திரத்திலேயே கைக்கூலி சம்பந்தமாகப் பேசப்பட்டிருக்கிறது. இந்த கைக்கூலி என்பது அன்றைய முஸ்லீம்களுடைய பழக்க, வழக்கத்திலிருந்த ஒரு விடயத்தை முஸ்லீம் தனியார் சட்டமாகவே சேர்த்து வைத்துள்ளார்கள்.

எனவே, அந்தப்பத்திரமே சொல்கிறது கைக்கூலி வாங்கலாம் என்று. எனவே, இதில் சீர்திருத்தம் வேண்டுமென்று சொல்கிறார்கள். எனவே, இந்த பாவமான செயற்பாடு இந்த முஸ்லீம்களின் தனியார் சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்ற ஒரு செய்தியை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல, விவாகரத்து முறை தொடர்பான நடைமுறையிலிருக்கின்ற சட்டம். இஸ்லாமிய விவாகரத்து முறையில் தலாக், பஸஹ், குளூஉ போன்ற காரணங்கள் உள்ளன.

இதில் தலாக், பஸ்ஹ் என்ற இரு விடயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கும் நிலையில், குளூஉ பற்றி பேசப்படாத நிலை முஸ்லீம் தனியார் சட்டத்தில் இருக்கிறது.

எனவே, இதிலுள்ள குறைபாடுகள் சீர்திருத்தப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லீம்களுடைய விவாகரத்து நடைமுறையை திருமணம் விவாகரத்தோடு சம்பந்தப்பட்டு வருகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முஸ்லீம் தனியார் சட்டத்திலேயே தனியான நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அவை காதி நீதிமன்றங்கள் என்று சொல்லுகின்ற நீதி மன்றங்கள். இந்த நீதிமன்றங்களைப் பொறுத்த வரைக்கும் இலங்கையுடைய அரசியல் யாப்பில் சட்ட ரீதியான நீதி மன்றங்கள். ஆனால், சட்ட ரீதியான முஸ்லீம் சமுதாயத்தின் நீதித்தீர்ப்பை வழங்குகின்ற நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டுமென்கின்ற தகமைகள் எதுவும் இந்த காதி நீதி மன்றங்கள் தொடர்பான விடயங்களில் இல்லை.

யார் வேண்டுமானாலும், நீதிபதியாக வரலாம் என்றவொரு நிலை தான் உள்ளது. ஒருவர் விண்ணப்பித்தால் போட்டியாக எவரும் வரவில்லையென்றால், காதி தொடர்பான அறிவில்லாவிட்டாலும் ஒருவர் நீதிபதியாக வரலாம்.

அதனால் பல்வேறு வகையான குறைபாடுகள், பலவீனங்கள், முறைகேடுகள், துஷ்பிரயோங்கள் முஸ்லீம்களின் காதி நீதிமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதாரணமாக நம் சமூகம் வைத்துள்ள விசயம் பணத்தை இலஞ்மாகக்கொடுத்தால், எல்லா வேலையினையும் முடிக்கலாம் என்று.

அவர் படித்தவரா? பண்புள்ளவரா? மார்க்க அறிவு, சட்டம் பற்றிய தெளிவுள்ளவரா? என்பதெல்லாம் அங்கு கிடையாது. அரசியல்வாதிகளின் சிபாரிசூடாகவும் ஒருவர் காதி நீதிபதியாக வரலாம். இது இலங்கையில் ஏனைய நீதி முறைகளுக்கு ஒப்பிட்டுப்பார்க்கின்ற பொழுது, மிகவும் பலவீனமான ஒரு நிலை.

எனவே இந்த காதி நீதி மன்றங்களுடைய கட்டமைப்புக்கள் மாற்றப்பட வேண்டும். காதி நீதிபதிகளின் தகைமைகள் வரையறுக்கப்பட வேண்டும். காதி நீதிபதியாக இருக்கின்ற ஒருவர் கட்டாயம் மார்க்க அறிஞராக, இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்த சட்ட மேதையாக இருக்க வேண்டுமென்ற விடயமெல்லாம் இப்போது பேசப்படுகிறது.

நம் சமூகத்திலிருக்கும் தற்போதைய பல காதி நீதிபதிகள் மேற்சொன்ன தகைமைக்கு தகுதியற்றவர்கள். எனவே, இப்படியான பலவீனங்கள் காணப்படுவதன் காரணமாக இவை திருத்தப்பட வேண்டுமென்று மிக நீண்ட காலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னனிலேயே தான் இப்போது முஸ்லீம் தனியார் சட்டச்சீர்திருத்தம் தொடர்பான சர்ச்சை கிளம்பியுள்ளது. தற்போது அனைவரும் முஸ்லீம் தனியார் சட்டச்சீர்திருத்தம் பற்றிப் பேசுவதற்கான ஒரு நிலைமை வந்திருக்கிறது.

இது எந்தப்பின்புலத்தில் வந்தது? இது எப்படியான ஒரு விடயத்தை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறது? இந்த சீர்திருத்தக்கோரிக்கைகள் எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? என்ற விடயத்தைக் கட்டாயமாக நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் இது தொடர்பான விளக்கங்களைப் புரிந்து கொண்டு, எதிர்காலத்தில் சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது எழுந்திருக்கின்ற முஸ்லீம் தனியார் சட்டச்சீர்திருத்தம் பற்றிய கோரிக்கைகள், அதற்கு பின்னாலுள்ள அரசியல் பின்னணிகள், அதனால் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக சில விடயங்களைக் காலத்தின் தேவை கருதி இங்கு குறிப்பிடலாம்.

இப்போது முஸ்லீம் தனியார் சட்டத்திருத்தம் பற்றிப்பேசப்படுகின்ற ஒரு விடயம் ஜி.எஸ்.பி. பிளஸ் என்று சொல்கின்ற ஒரு விவகாரமாகும். இது பலருக்குத் தெரியாத ஒரு விடயமாகவும் இருக்கலாம். ஜி.எஸ்.பி. பிளஸ் என்பது ஐரோப்பிய நாடுகள் வெளிநாடுகளிலிருந்து அந்த நாடுகளுடைய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குகின்ற ஒரு வரிச்சலுகையாகும்.

சில நேரம் குறைந்த வரிச்சலுகைகளாக இருக்கலாம். இல்லாவிட்டால் எந்த வரியும் இல்லாமலும் விடலாம். அந்த அடிப்படையில் பதினேழு நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வரிச்சலுகையை வழங்கியிருக்கிறது. அதில் இலங்கையும் ஒரு நாடு. இலங்கை தன்னுடைய நாட்டு உற்பத்திகளைக் குறைந்த வரிச்சலுகையில் அல்லது வரிச்சலுகை இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னுடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியும்.

இதனால் இலங்கைக்கு கூடுதலான பொருளாதாரத்தை தேடிக்கொள்ள முடியும் என்ற ஒரு நிலையிருந்தது. ஆயினும், கடந்த கால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்தக்கெடுபிடிகள், அதற்குப் பின்னரான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் சுமத்தப்பட்ட யுத்தக்குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியமான ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய அந்த வரிச்சலுகையை இரத்துச்செய்து விட்டது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு, யுத்தக்குற்றம் நடந்தததுடன், தனி மனித சுதந்திரம் மீறப்பட்டதன் காரணமாக இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மையினருக்கெதிராக பல்வேறு வகையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இந்த நாட்டில் நடைபெற்றது என்பதற்காக இலங்கைக்கு அந்த வரிச்சலுகையை நாம் வழங்கமாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் தீர்மானித்து, வரிச்சலுகையை இரத்துச்செய்து விட்டது.

கடந்த அரசாங்கம் மேற்குலக நாடுகளுடன் ஒத்துழைக்காததன் காரணமாகவும், இந்த வரிச்சலுகை இரத்துச் செய்யப்பட்டது, இதன் காரணமாக இலங்கையுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது. இலங்கை கடந்த காலங்களில் இந்த வரிச்சலுகையூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட ஏற்றுமதிகள் தடை பெற்றன.

குறிப்பாக இலங்கையுடைய ஆடை உற்பத்திகள், மரக்கறி, பழ வகைகள் இந்த நாடுகளுக்கு தங்குதடையின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு கூடுதல் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.

குறிப்பாக, இலங்கையின் ஆடை உற்பத்திகள் மூலமாக மிகப்பாரிய வருமானம் இலங்கைக்கு கிடைத்தது. இது தடை செய்யப்பட்டவுடன், இவ்வாறான பொருட்கள் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஒரு நிலை இலங்கைக்கு ஏற்பட்டு, பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது.

இந்நிலையில், இலங்கையில் நல்லாட்சியைக் கொண்டு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் அந்த வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அது கிடைக்குமாக இருந்தால், நாட்டுடைய பொருளாதாரத்திற்கு பெரியதோர் வசதியாக இருக்கும்.

எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டமைச்சர் போன்ற முக்கிய பிரதிநிதிகளெல்லாம் தற்போது தொடர்பிலுள்ளனர். இந்த வரிச்சலுகையினைப் பெறுவதற்காக இப்போது ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் காணப்படுகின்ற நல்லாட்சியை மையமாக வைத்து, அந்தச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கு உடன்பட்டிருக்கிறது.

அவ்வாறு இந்த சலுகை இலங்கைக்கு வழங்கப்பட வேண்டுமாக இருந்தால், இலங்கை ஐரோப்பிய நாடுகளுடைய சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அதில் ஐம்பத்தியெட்டு நிபந்தனைகள் உள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தான் இலங்கைக்கு ஜி,எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும். இந்த நிபந்தனைகள் சகல நாடுகளுக்கும் பொதுவானவையாகக் காணப்படுகிறது.

அதிலொரு முக்கியமான விடயம், இலங்கையில் சர்வதேசத் தரத்திலான பயங்கரவாதத்தடைச்சட்டம் வர வேண்டும். இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சரியாக நடைபெற வேண்டும். பெண்களின் திருமண வயது பதினாறாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வயதிற்கு இலங்கை ஒத்து வர வேண்டும் என்பவை ஐம்பத்தியெட்டு நிபந்தனைகளில் மேற்சொன்ன பிரதானமான விடயங்களாகும்.

இலங்கை அரசு தற்போது அந்த சழுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிபந்தனைகளை ஒத்துக்கொள்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு முக்கியமாகக் கருதப்படும் விடயம் என்னவென்றால், இலங்கை முஸ்லீம் தனியார் சட்டத்தில் பெண்களுடைய திருமண வயதெல்லை பன்னிரெண்டாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, பன்னிரண்டு என்ற அந்த வயதெல்லை அவர்களுடைய சர்வதேச நியமங்களுக்கு ஒத்து வராது. எனவே, ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் தனியார் சட்டங்களை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. இலங்கை மக்களுடைய பெண்களின் திருமண வயதை குறைந்தது பதினாறாக மாற்ற வேண்டும்.

ஏனென்றால், இள வயதுத்திருமணங்களால் அதிகளவான பிரச்சினைகள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவாகரத்துக்கள், பிள்ளைகளுடைய, குடும்பங்களுடைய பிரிவுகள். அதனால் ஏற்படும் துஷ்பிரயோகங்கள் போன்றவைகள் நடைபெறும் ஒரு நாடாக இலங்கை அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே, பதினாறு வயதாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கைக்கு திருமண வயதை பதினாறாக மாற்ற வேண்டிய ஒரு நிர்ப்பந்தமிருக்கிறது. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், முஸ்லீம் தனியார் சட்டத்தில் ஓர் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

கடந்த இருபத்தி ஐந்தாம் திகதி நீதியமைச்சர் விஜயதாச இது தொடர்பான திருத்தத்திற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு தன்னுடைய பிரேரணையைக் கொண்டு வந்து, திருத்தத்திற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

எனவே இந்த முஸ்லீம்களுடைய திருமணம் தொடர்பான இந்த வயதெல்லைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ஒரு உப குழுவும் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த உப குழு மிக அவசரமாக இந்தத் திருத்தத்தைச் செய்து தர வேண்டும். அதில் முஸ்லீம் அமைச்சர்களெலாம் உள்ளடங்குகிறார்கள்.

இதைப் பொதுவாக நம் சகோதரர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்றால், இலங்கை முஸ்லீம் தனியார் சட்டத்தை மாற்றம் செய்யப் போகிறார்கள். முஸ்லீம் தனியார் சட்டம் ஒழிக்கப்படப்போகிறது என்றவொரு பாணியில் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதை இன்று பெரியதொரு பூதாகரமாக்கி, முஸ்லீம் தனியார் சட்டத்தை மாற்றம் செய்யப்போகிறார்கள் என்று கூறுகின்றனர்.

முஸ்லீம் தனியார் சட்டத்தை மாற்றத்தான் வேண்டுமென்று முப்பது ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மாற்றங்கள் நடைபெறத்தான் வேண்டும். அதில் நிறைய குழறுபடிகள் உள்ளன.

விவாக, விவாகரத்து, காதி நீதிமன்ற முறைகளில் என்று நிறைய கூறிக்கொண்டே செல்லலாம். நாம் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக செயற்பட வேண்டும். எங்களுடைய ஆக்ரோசத்திற்கும், ஆவேசத்திற்கும் அடிமைப்பட்டு, அரசுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி, இருக்கின்ற சமூகங்களையும் நாம் இழந்து விடக்கூடாது.

இன்று ஏற்பட்டிருக்கும் சர்ச்சை பன்னிரண்டு வயதா? பதினாறு வயதா? என்பது தான். இஸ்லாமிய நாடுகளில் பல நாடுகள் பதினாறு வயது என்று தீர்மானித்துள்ளார்கள். இஸ்லாத்தில் ஒரு பெண்மணி பருவ வயதை அடைந்தால், அவர் திருமணம் செய்யலாம். இருந்தாலும், பல நாடுகள் சில தேவைகளுக்காக வேண்டி பதினாறு வயதென்று தீர்மானித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, கட்டார், டுபாய் போன்ற நாடுகளிலெல்லாம் பதினாறு வயது தான். அதற்காக வேண்டி இஸ்லாத்தின் சட்டத்திற்கெதிராகப் பேசுகிறார்கள் என்றல்ல. பன்னிரண்டு வயதில் ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்பது அது ஒரு சலுகை தானே தவிர, பன்னிரண்டு வயதில் கட்டாயம் திருமணம் முடிக்கத்தான் வேணுமென்ற இஸ்லாமிய சட்டம் கிடையாது.

நம் சமூகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பன்னிரண்டு வயது பெண் பிள்ளையைத் திருமணம் முடித்துக் கொடுக்க யாரும் தயாரில்லாத நிலை தான் காணப்படுகிறது. எனவே, இதனை பெரியதொரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த பன்னிரண்டு வயது கூட மாற்றப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இலங்கையில் பேசப்பட்டிற்கொண்டிருக்கிறது. நீதியரசர் சலீம் மர்சூப் என்பவருடைய தலைமையிலான பரிந்துரைக்குழு பதினேழு திருத்தங்களைச் செய்திருக்கிறது.அதிலும் திருமண வயது திருத்தம் செய்யப்பட்டுத்தான் இருக்கிறது.

எனவே, இந்த விடயத்தை உண்மையாகவே நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முஸ்லீம்களுடைய சட்டத்தில் குறைபாடுகள், குழறுபடிகள், பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இச்சூழ்நிலையில் நாங்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு தேவைப்பாடு நம் எல்லோருக்கும் இருக்கிறது. சர்வதேசத்தின் அழுத்தங்களுக்காகவோ அல்லது நாட்டுடைய கோரிக்கைகளுக்காகவோ அது இஸ்லாமிய சட்டம் என்று சொன்னால், அதை மாற்ற முடியாது.

ஆனால், அதை மாற்றக்கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதற்காக நாம் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் இந்த நாட்டின் அரசாங்கத்தை இந்த நாட்டில் வாழுகின்ற பெறும்பான்மைச் சமூகத்தை நமக்கெதிராகத் திரட்டி விடுகின்ற, திருப்பி விடுகின்ற நடவடிக்கையாக அமைந்து விடுமாக இருந்தால், நிச்சயமாக அது பாரதூரமான விளைவுகளை இந்த சமூதாயத்தில் ஏற்படுத்தும் என்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இதை கட்டாயம் முஸ்லீம் சமுதாயத்திலிருக்கின்ற கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகப்பிரஜைகள் சகல தரப்பினரும் சேர்ந்து கலந்துரையாடி, ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகளே தவிர, குறிப்பிட்ட ஒரு சிலர் இதற்குத்தீர்மானமெடுக்க முடியாது.

இது முஸ்லீம் சமுதாயத்துடைய தேசியப்பிரச்சனை. இந்த தேசியப் பிரச்சனையை முஸ்லீம் சமுதாயத்திலிருக்கின்ற எல்லோரும் கலந்து பேச வேண்டும். அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு சிலர் மட்டும் அல்லது ஒரு குழுவினர் மட்டும் இவற்றுக்கு தீர்வுகளைக்காண தங்களுடைய தீவிரவாதச் சிந்தனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதென்பது, அது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்திற்கு பிரச்சனைகளைத் தோற்றுவித்து விடலாம் என்றதோர் பயம் இப்போது இலங்கையிலிருக்கின்ற அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகளுக்கு மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த சர்ச்சைக்குப்பிறகு இலங்கையில் காணப்படுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தைச்சேர்ந்த சில இனத்துவேசிகள் மிக மோசமாக முஸ்லீம் சமூகத்திற்கெதிராக கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சிங்கள மக்களுக்கு மத்தியில் முஸ்லீம்கள் கலந்து சிறு சிறு பகுதியினராக, குடும்பங்களாக வாழுகின்றார்கள். இதனுடைய வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயத்தில் நாம் மிகத்தெளிவாக நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆக்ரோசம், சண்டித்தனம், ஆரவாரம் இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். நாம் இந்நாட்டின் சிறுபான்மைச்சமூகம். இந்நாட்டின் ஆட்சியாளர்களோ, பெரும்பான்மைச் சமூகமுமல்ல.

அவர்கள் தருகின்ற பிச்சையை வாங்கிக் கொள்கின்ற நிலையிலலிருக்கின்ற சமூகம். நாம் அதனை மிகவும் இராஜ தந்திரத்தோடு, தூரநோக்கோடு, பணிவான தன்மைகளோடு அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியெடுக்க வேண்டும்.

அப்படியான நடவடிக்கையூடாகத்தான் கடந்த கால அரசியல் தலைவர்கள் இந்த உரிமைகளை நமக்கு பெற்றுத் தந்திருக்கிறார்கள். டி.பீ. ஜாயா, சேர் ராசீக் பரீட், அப்துல் காதர் போன்ற அரசியல் தலைமைகலெல்லாம் செய்த சாத்வீக ரீதியான முயற்சிகள் யாரோடு பேசி இந்த விடயத்தைச் சாதிக்க முடியுமோ சத்தமில்லாமல் சாதித்து, இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு தந்து விட்டுப்போனார்கள்.

இதை நாம் விட்டு விட்டு, சப்தம் போட்டு ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரம் செய்து வித்தியாசமான பிரச்சினைகளை உண்டு பண்ணிவிட்டோம் எனின், இருப்பதும் இல்லாமல் போகும் நிலை தான். இந்த ஆபத்தை முஸ்லீம் சமுதாயம் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதே போன்று, எங்களின் உரிமைகளைப் பெற வேண்டுமென்பதற்காக, இஸ்லாத்தின் வழிமுறைகளை விட்டு விட்டு நாம் போக முடியாது.

உதாரணமாக, நாய் கடிக்கும் என்பதற்காக அதை மாறி நாம் கடிக்க முடியாது. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் . அல்லாஹ்வை விட்டு விட்டு வேறு கடவுள்களை வணங்குகின்ற கடவுள்களை நீங்கள் ஏசாதீர்கள். நீங்கள் ஏசுவீர்களானால், அறிவில்லாமல் மடமைத்தனத்தில் அல்லாஹ்வை அவர்கள் ஏசுவார்கள் என்று.

கட்டாயம் இந்தப்பிரச்சினையில் முஸ்லீம் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, புத்திஜீவீகளின் பங்களிப்புக்களுடன் இந்த விடயம் கையாளப்பட வேண்டும்.

எனவே, இந்த முஸ்லீம் தனியார் சட்டச்சீர்திருத்தம் தொடர்பாக எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புக்கள் காத்திரமானதாகவும், இஸ்லாமிய நெறிமுறைக்குட்பட்டதாகவும் இருக்க வேண்டுமென்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். இதில் கட்டாயம் ஜம்இய்யதுல் உலமா, அரசியல் தலைவர்கள் தாமதிக்காமல் செயற்பட வேண்டுமென்ற ஒரு பாரிய பொறுப்பிருக்கிறது.

கட்டாயம் இந்த விடயங்கள் துரிதப்படுத்தப்பட்டு, நல்லதோர் முடிவுக்கு வர வேண்டிய தேவைப்பாடிருக்கிறது. எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் யை வழங்கும். வழங்குவதற்கான ஏற்பாட்டை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்நிலையில், நாம் நடந்து கொள்கின்ற முறைகள் காத்திரமானதாக, எதிர்கால நமது இருப்புக்கு ஆரோக்கியமானதாக அமைய வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நாட்டு முஸ்லீம்ளை நிம்மதியாக வாழ வைப்பானாக.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*