கல்குடா நேசனின் 51வது இலக்கிய நேர்காணலில் இணைகிறார் மத்துகமை செல்வகுமார்-நேர்காணல் உள்ளே…

fb_img_1442250129910-copyநேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம். அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா நேசனின் 51வது படைப்பாளியாக இணைகிறார் மத்துகமை செல்வகுமார்  அவர்கள். “திறமைகளைத் தக்க வைத்துக் கொள்வது என்பது வாசகன் எதை விரும்புகின்றானோ அதை அவனுக்கு கொடுத்தாலே போதும்” என கூறுமிவர், பல இந்திய கவிஞர்களிடம் வாழ்த்துக்களைப்பெற்ற இளைய கவிஞர்.

தனது  திறமைகள் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ள இவர், பத்து வருடங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் இயங்கிக்கொண்டே இருக்கின்றார். தனக்கான‌ ஓரிடத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கும் இவர், இளையவர்களுக்கெல்லாம் உதாரணமான நல்ல முயற்சியாளன்.

இந்த இளைய கவியை கல்குடா நேசனூடாக அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.  பல நல்ல விடயங்களோடு, தன் இலக்கிய ஆர்வத்தினையும் எம்மோடு பகிர்ந்து கொண்ட அவரின் முழுமையான விபரங்களோடு நேர்காணலில் இணையுங்கள்.

கவிதாயினி ராஜ்சுகா: தங்களைப்பற்றிய அறிமுகம்?

மத்துகமை செல்வகுமார்: களுத்துறை மாவட்டம் மத்துகமை என்ற இதம் தரும் மலைப்பிரதேசத்திற்கும். கடலோரக்காற்று கவி பாடும் தர்கா நகரத்திற்கும் மத்தியில் அழகாய் அமர்ந்துள்ள பள்ளேகொடை எனும் கிராமத்தவன் நான்.

கற்றது ஐந்து வரை பள்ளேகொடை தழிழ் வித்தியாலயமும், சாதாரண தரம் வரை தர்கா நகர் ஸாஹிறாக்கல்லூரியும், உயர் தரம் மத்துகமை சாந்தமரியால் கல்லூரியும் என்னை வளர்த்தெடுத்த பெறாத் தாய்மாராவார்கள்.

அத்தோடு, ஷகிவ் மிதேஷ் நாமம் கொண்ட இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தை என்ற பெருமையோடும், கந்தசாமி ஷாமலா என்ற என் மனைவிக்கு அன்பான கணவராகவும் இனிமையாய் சந்தோசமாய் கவிதையோடு நாட்களை நகர்த்துகின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: கவிதை எழுத உங்களை ஊக்கப்படுத்திய விடயங்கள்?

மத்துகமை செல்வகுமார்: எல்லாக்கவிஞர்களும் சொல்வதைப்போல் என்னைச் சூழவிருந்த மந்தி தாவும் மாமரங்களும், சந்தி சந்தியாய் பூத்துக்குலுங்கும் பூமரங்களும், அந்தி சாயப்பறந்து திரியும் கிளிகளும் என்று எனைச்சுற்றி இருந்த சூழலே எனைப்பற்றி இருக்கும் கவிதைக்கு உரம் தந்து ஊக்கப்படுத்தியவர்கள் என்பேன். அது தவிர, சிறுவயதிலேயே பாடல்களை ரசிக்கும் பைத்தியமானேன். அந்த ரசனைகளே இன்று கவிதைகளாக.

கவிதாயினி ராஜ்சுகா: எழுதிய  கவிதைகளை யாரிடமாவது  காட்டி ஆலோசனை பெறுகின்றீர்களா? அல்லது எவ்வாறு  தரப்படுத்திக்கொள்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: நல்லதொரு கேள்வி கேட்டீர்கள். உண்மையில் எனக்கு ஒரு பயமுண்டு. நாம் எழுதும் எழுத்து யார் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று. ஆகவே, ஆலோசனை பெறுமளவிற்கு பாரதூரமாக எழுதுவது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆக நானாகவே என் கவிதைகளைத் தரப்படுத்தி தீர்மானித்து கொள்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: எழுத்தார்வத்துக்கு உங்கள் குடும்பத்தாரிடம் கிடைக்கும் ஆதரவு பற்றி?

மத்துகமை செல்வகுமார்: என் எழுத்துக்களை வாசகருக்கு கொண்டு சேர்க்கும் உன்னத பணியை இந்த முகநூல் நாளுக்கு நாள் வெற்றிகரமாய் செய்து வருகின்றது. நேரம் கிடைக்கும் போது அந்த முகநூலில் நான் தேடல் கொள்வது கண்டு “பேஸ்புக் சோறு போடாது” என்ற கோட்பாட்டை உடைக்காதவர்கள் என் குடும்பத்தினர்.

அதிலிருந்து அறிந்து கொள்வீர்கள் என் எழுத்தார்வத்துக்கு குடும்பத்தாரின் ஆதரவை. தயவு கூர்ந்து இது எங்கள் வறுமைத்தனத்தின் வெளிப்பாடு என்று மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். ஆனாலும், எனக்கு வெற்றி என்று வரும் போது அவர்கள் கொள்ளும் ஆனந்தத்திற்கு அளவு சொல்லத் தெரியாது. என் அன்பு மனைவியை இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பழங்காலந்தொட்டு சொல்லப்படும் ஓர் உண்மை. அது நூறு சதவீதம் நிரூபிக்கப்படுகிறது என் வாழ்விலும். என் எழுத்தார்வத்துக்கு என் மனைவி ஷாமலா தரும் ஆதரவு ஈடற்றது.

கவிதாயினி ராஜ்சுகா: உங்களது  எழுத்தாற்றலை அதிகரிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: தற்போது நான் இருக்கும் சூழ்நிலையைப் பொருத்த வரை எழுத்தாற்றலை மேம்படுத்த இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. தாய்த்தமிழ் மொழி கொண்டு இணையத்தில் தேடி எடுக்கும் அனைத்து தேடல்களிலும் என் எழுத்தாற்றலை செம்மை செய்து கொண்டே வருகின்றேன். முகநூல் என் முழு நேர வாசிகசாலை என்றே கூற வேண்டும்.

கவிதாயினி ராஜ்சுகா: கவிதை தவிர வேறு ஆர்வங்கள்? திறமைகள்?

மத்துகமை செல்வகுமார்: கவிதை மட்டுமே எனக்கான அடையாளமாகவும் ஆர்வமாகவும். அது தவிர, புகைப்பட வடிவமைப்புச் செய்வதில் மிக ஈடுபாடு எடுத்துக்கொள்வேன். சில மேடைகளில் பாடல் பாடி பாராட்டையும் பெற்ற வண்ணம் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: போட்டி நிறைந்த  உலகில் உங்கள் திறமைகளை தக்கவைத்துக்கொள்ள எப்படியான வழிகளைக் கையாள்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: திறமைகளை தக்க வைத்துக் கொள்வது என்பது வாசகன் எதை விரும்புகின்றானோ அதை அவனுக்கு கொடுத்தாலே போதும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். அதை கொஞ்சம் இனம் கண்டறிந்துள்ளேன் என்பது கூட ஒரு கையாள்கையே.

கவிதாயினி ராஜ்சுகா: நீங்கள் மனம் நெகிழ்ந்த  பாராட்டுக்கள், மனச்சோர்வுக்குள்ளான விமர்சனங்கள் பற்றி எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

மத்துகமை செல்வகுமார்: நான் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு கவிதைகளுக்கும் கிடைக்கும் வாழ்த்துக்களூடாக தினம் மனம் நெகிழ்ந்து போகின்றேன். மறக்க முடியாத பாராட்டு எனும் போது பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள் முன் கவிதை பாடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. நான் வாசித்த கவிதையை அவர்கள் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் என்று மறுபடியும் கேட்டு எனைப்பாராட்டியது மறக்க முடியாத மனம் நெகிழ்ந்த பாராட்டில் ஒன்றாகும்.

மனச்சோர்வுக்குள்ளான விமர்சனங்கள் பற்றி கூறுவதாயின், அதற்கான வாய்ப்பை நான் யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கமாட்டேன் என்றே கூற வேண்டும். விமர்சனங்கள் செய்யக்கூடியளவு தாறுமாறாக எதையும் சிந்தியாது ஏனோ தானோவென்று எதையும் எழுதி விடுவதில்லை. நிதானமாக நியாயப்படுத்தக்கூடிய விதமான எழுத்துக்களையே என் பேனை சிந்துவதோடு, இதுவரை அப்படியொரு கசப்பான சம்பவம் நிகழ்ந்ததில்லை.

கவிதாயினி ராஜ்சுகா: உங்கள் படைப்புக்களில் எவ்வெவ் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கு அல்லது நேரத்திற்கு என்ன தேவையென்பதைத் தெரிந்து, அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் சிந்தனைகளே எனக்குள் முளைவிடுகின்றது எனலாம். எல்லாக் கவிஞர்களையும் போல் காதலை மட்டும் கொஞ்சம் அதிகமாக உளறியிருப்பதும் உண்மை.

கவிதாயினி ராஜ்சுகா: அவற்றை  எவ்வெவ்  வழிகளினூடக சமூகத்திடம் கொண்டு சேர்ப்பிக்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள் என்று தகவலறியும் சாதனங்கள் இருந்த போதும், முகநூல் என்ற சமூக வலைத்தளம் நம் படைப்புக்களை உலகளவில் எல்லா நாட்டு வாசகர்களுக்கும் ஒரு நொடியில் கொண்டு சேர்த்து விடுகிறது.

ஆக முகநூலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். இருந்தும் தெரிவு செய்யப்பட்டு பத்திரிகையில் அச்சு பதிந்து வரும் ஆக்கங்களுக்கு தனி ஒரு மதிப்புண்டு.

கவிதாயினி ராஜ்சுகா: படைப்பு ரீதியாக முகநூல் இணைய வழிகள் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட  நன்மைகள்.

மத்துகமை செல்வகுமார்: ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு முகநூல் என்ற இணைய சம்பந்தம் அவ்வளவு பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. அந்தக்கால கட்டங்களில் என் ஆக்கங்களை பத்திரிகைகளுக்கே அனுப்பி வைப்பேன். அன்று நான் பத்திரிகைகளில் வியந்து பார்த்த த.எலிசபெத், லுணுகலை ஸ்ரீ, கொக்காகலையூர் கிருஷ்ணசாமி அருள் என்று இன்னும் பல படைப்பாளிகளையும் பெரும் கவிஞர்களையும் முகம் பார்த்து பழகும் வாய்ப்பை இந்த முகநூல் தான் ஏற்படுத்தித்தந்தது. அத்தோடு, முகநூல் குழுமங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கவிதை எழுதி வெற்றிகளையும் பாராட்டுகளையும்  பெறுவதோடு இன்னும் பல நன்மைகளையும் நாளுக்கு நாள் பெற்ற வண்ணம் உள்ளேன்.

கவிதாயினி ராஜ்சுகா: நீங்கள் பொறாமைப்படும் ஒரு படைப்பாளர் எவரேனும்? ஏனென்று கூற முடியுமா?

மத்துகமை செல்வகுமார்: இருக்கின்றார். அன்று அவர் ஒரு கல்லெறிந்த மரம். அவரது கிளைகளில் இலைகளில் மற்றும் பூக்களில், கனிகளில் முன்னேற்றம் முறிக்கும் முட்களின் கூர்மைகளை சிலர் வீசிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அந்த கற்களையும் முட்களையும் கால் தூசுக்கும் கணக்கிலெடுக்காது சிரிப்பார்கள். சிலர் அந்த முளைக்கும் மரத்தின் வேர்களை அடியோடு கலற்றியெடுக்க சதி செய்தார்கள்.

ஆனாலும், அவர்களுக்கு எதிராய் இவர் ஒரு நாளும் கெட்டெண்ண மதி செய்யவில்லை. அந்த மரம் தனக்கு கிடைத்த இடைவெளிகளுக்குள் தன் ஆணி வேரை தடைகளைத் தாண்டி இன்று ஒரு நிலையால் இந்த பூமியில் ஊன்றிக்கொண்டது. இன்று அது ஒரு விருட்சமாக உருவாகி, அதன் கிளைகளில் கவிதைகளையும் அதன் இலைகளில் பாடல்களையும் மலர்களில் நல்ல மனிதர்களையும் கனிகளில் வாழ்த்து மழைகளையும் வாங்கிய வண்ணம் அந்த விருட்சம் வானை நோக்கி உயர்ந்து விரிந்து செவ்வனே தன் பயணத்தை நகர்த்தி இன்னும் இன்னும் வளர்கின்றது.

யார் அந்த விருட்சம் என்ற அவா உங்களில் இருக்கும் அது வேறு யாருமில்லை இன்று உலகமே போற்றும் முக்கியமாய் கல்லெறிந்தவர்கள் வியந்து பார்க்கும் கவிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தென்னிந்திய தமிழ் சினிமாவின் தனக்கென தனியிடம் பிடித்த திரைப்பட பாடலாசிரியர், பல விருதுகளின் சொந்தக்காரர் பொத்துவில் அஸ்மின் அவர்களே. நான் இன்று வியந்து பார்த்து அழகாய் செல்லமாய் பொறாமை கொள்ளும் நல்ல மனிதர் படைப்பாளர்.

கவிதாயினி ராஜ்சுகா: இதுவரை நீங்கள் பங்குபற்றிய போட்டிகள் பரிசுகள், பாராட்டுக்கள் பற்றி?

மத்துகமை செல்வகுமார்: இலங்கையின் பிரபல தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு மிகப் பெரியளவில் பிரமாண்டமாக நடத்திய இசை இளவரசர்கள் போட்டியில் பதினாறு பாடலாசிரியர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு, தென்னிந்திய தமிழ் சினிமா பிரபல பாடலாசிரியர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை பெற்றுக்கொண்டேன்.

அந்த அற்புத பயணத்தின் போது, வித்தக கவிஞர் பா.விஜய், அமரர் நா.முத்துகுமார், விவேகா, சினேகன், கவிஞர் கிருதயா, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் போன்றவர்களிடம் கலந்துரையாடி கவிதை பாடி, பாராட்டையும் பெற்றுக்கொண்டேன். இந்த பெரும் வெற்றி எனக்கு பல பேரிடமிருந்து பாராட்டையும் பரிசில்களையும் பெற்றுத்தந்தது.

அத்தோடு, கல்வி பயின்ற காலத்தில் நடைபெற்ற கவிதை, சிறுகதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
அண்மையில், பிரபல இணையத்தளம் ஒன்று உலகலாவிய ரீதியில் நடத்திய கவிதைப்போட்டியொன்றில் “தமிழாய் வாழ்வோம்” என்ற தலைப்பில் தமிழ் வாழ்த்துப்பா பாடி முதல் பத்து சிறந்த கவிதைக்குள் தெரிவு செய்து, சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். உங்கள் பார்வைக்கு அந்த கவிதை.

தமிழாய் வாழ்வோம்.
திருக்குறள் ஞாலம் தந்த வள்ளுவத்தமிழே…
இராமாயணம் ஞானம் தந்த கம்பத்தமிழே…

திருக்குறளில் தித்திப்பதும்
இராமாயணத்தில் கர்ஜிப்பதும்
தங்கத்தின் தங்கம் தாய் நீயல்லவா..!
தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியத்தமிழே…

அகத்தியம் படித்த அகத்தியத்தமிழே…
தொல்காப்பியத்தில் தொன்மையாய்
அகத்தியத்தில் வன்மையாய்
அகத்தினில் மின்னும் தாய் நீயல்லவா..!

பத்துப்புலவர் பத்திரப்படுத்திய பதிற்றுப்பத்துத்தமிழே…
ஐவர் அருளிய அழகு கலித்தொகைத்தமிழே…
பதிற்றுப்பத்தில் பக்குவமாய்
கலித்தொகையில் கச்சிதமாய்
காலம் வென்ற தாய் நீயல்லவா..!

பலப்புலவர் பாடிச்செய்த
அகநானூற்றுத்தமிழே…
பரிசாய் எமக்களித்த
புறநானூற்றுத்தமிழே…
அகநானூற்றில் அறத்தினையும்
புறநாநூற்றில் நற்றிணையும்
நன்னெறி நவிலும் தாய் நீயல்லவா..!

முல்லைப்பாட்டிசைத்த நப்பூதனார்த்தமிழே…
குறிஞ்சிப்பாட்டிசைத்த கபிலத்தமிழே…
முல்லைப்பாட்டில் முத்தமிழாய்
குறிஞ்சிப்பாட்டில் கொஞ்சித்தமிழாய்
நெஞ்சத்தில் நீங்கா தாய் நீயல்லவா..!

ஆத்திச்சூடி நீதிச்சொல்ல
கொன்றைவேந்தன் முருகேசன் பாட
மூதுரை அறத்தை உரைக்க
நல்வழி “சங்கத்தமிழ் மூன்றும் தா”
என்றழைத்த ஒளவைத்தமிழே…
நீயல்லவா எங்கள் தாய்..!
திருவாசகத்திலே சுவாசந்தந்த
மாணிக்கவாசகத்தமிழே…
பெரியபுராணத்திலே சைவமயமான
சேக்கிழார்த்தமிழே…
திருவாசகம் சிவவாசத்தையும்
பெரியபுராணம் சிவனடியார்களையும்
உலகெலாம் உணர்ந்தென அடியெடுத்த
உன்னத தாய் நீயல்லவா..!

தாயுமானவரின் தாய்த்தமிழாய் வாழ்வோம்
மகாகவியின் மகத்தவத்தமிழாய் வாழ்வோம்
சேக்கிழாரின் செந்தமிழாய் வாழ்வோம்
புகழேந்திப் புலவரின் பூந்தமிழாய்
புகழேந்தி வாழ்வோம்.
ஒட்டக்கூத்தரின் ஒப்பற்ற தமிழாய் அனைத்து மொழியிலும்
ஒப்பற்று ஒட்பில்லாது
உயிரேத் தமிழாய் வாழ்வோம்.

கவிதாயினி ராஜ்சுகா: எதிர்கால இலட்சியம்?

மத்துகமை செல்வகுமார்: என் இரத்தத்தின் சிவப்பணுக்களில் சத்தமின்றி ஓர் இலட்சியம் வருடங்கள் கடந்து காலத்தின் கைப்பிடிக்குள் சிக்கிக்கிடக்கின்றது. அது என்று பிரவாகமெடுக்கும் என்பதில் தங்கியுள்ளது என் இலட்சியம். ஒரு கவிதைப்புத்தகம் வெளியிடுவதே அது. நல்ல குணம் மட்டும் இருக்கும் என்னிடம் பணமில்லாத குறைதான் இலட்சியத்தின் பாதைக்கு வேலி போடுகிறது.

கவிதாயினி ராஜ்சுகா: ஏனைய  படைப்பாளிகள், படைப்புக்கள், நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றில் உங்களது ஆர்வம், பங்கேற்பு உறவுகள் பற்றி?

மத்துகமை செல்வகுமார்: என் முகநூல் பக்கம் பார்த்தால் அறியக்கூடியதாக இருக்கும். ஏனைய படைப்பாளிகள் மற்றும் அவர்களின் படைப்புக்கள் சம்பந்தமாக நான் எடுத்துக்கொள்ளும் விருப்பத்தன்மையும் நேர ஒதுக்கீடும்.

இதுவரை குறிப்பிட்ட சில கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழா, இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் இசை தொடக்க விழா மற்றும் பாடல் வெளியீடு, கவிஞர்களின் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற நல்லெண்ணச் செயல்களில் நான் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வேன். ஆனால், அழைப்புகள் கிடைத்தும் அந்த கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத தொலை தூரதேசத்திலிருந்து வருந்துகிறேன்.

கவிதாயினி ராஜ்சுகா: நீங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்யும் கவிதைகளை எவ்விதம் பாதுகாத்து வைக்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: முகநூலில் தன் ஆக்கங்களை பதிவு செய்யும் படைப்பாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அற்புதமான ஒரு கேள்வி கேட்டீர்கள். இந்த விடயத்தில் கவனயீனமற்று பெரும் தவறு செய்து கொண்டிருப்பதில் நானும் ஒருவன். இலகுவாக இருக்கும் என்பதற்காக கைப்பேசியில் அல்லது கணினியில் தட்டச்சு செய்து முகநூலில் பதிகின்றேன்.

சுமார் ஒரு எட்டு வருடங்களாக முகநூலில் என் ஆக்கங்களை கவிதைகளை பதிவு செய்து வருகின்றேன். ஆனால், இதுவரை பதிவேற்றிய அனேக ஆக்கங்களுக்குமான எந்த ஒரு ஆவணமும் என்னிடமில்லை சிலதுகளைத் தவிர. அது நான் செய்த பெரும் தவறு என்பதோடு இன்னும் பல கவிஞர்களும் இதே தவறை இன்றும் அன்றாடம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பின்பு முகநூலிலிருந்து கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்து எழுதுவது என்பது லேசான காரியமும் இல்லை. ஆக, அன்றாடம் எழுதும் கவிதைகளை ஆக்கங்களை கைப்பேசியில் தட்டச்சு செய்து பதிவிடாமல் தனக்கென ஒரு பெரிய அப்பியாசப் புத்தகமொன்றை வாங்கி வைத்து அதில் எழுதிய பின் முகநூலில் அல்லது இணையத்தில் பதிவிடுங்கள். இதை இப்போது தான் நானும் கடைப்பிடிக்கின்றேன். ஆண்டுகள் பல கடந்த பின்னும் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கு உங்கள் எழுத்துக்களும் சிந்தனைகள் பெரும் வலமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

கவிதாயினி ராஜ்சுகா: இசை மீதான ஆர்வம் பற்றி கூறினீர்கள். அத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணமில்லையா? அப்படியானால், எந்த விதத்தில் முயற்சிக்கின்றீர்கள்?

மத்துகமை செல்வகுமார்: இசையை ஒழுங்கு முறையாகப் படித்து, அதன் நெறியில் இசை அறிந்த அனுபவம் கிடையாது. எனக்கிருக்கும் இசை ரசிப்பையும் ஞானத்தையும் வைத்து பாடுகிறேன். எனது ஊரில் விசேட தினங்களில் திரு. மதன் மற்றும் செல்வன் பிரசன்ன அவர்களின் தலைமையில் கரோக்கி இசை நிகழ்ச்சிகள் நடத்துவோம். தற்போது அதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த குழுவை செம்மைப்படுத்தி வெளி மாவட்டங்களிலும் பிரமாண்டமாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு ஆசை இலட்சியமுண்டு.

கவிதாயினி ராஜ்சுகா: உங்கள் வளர்ச்சியில் நன்றிக்குரியவர்களாய்  நீங்கள் காண்பவர்கள்?

மத்துகமை செல்வகுமார்: முதலில் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர், பாடகர், ஓவியர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்ட பெரும் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களைச் சொல்லலாம். அந்த பெரும் வள்ளல் தான் எனக்கு தத்தகாரத்திற்கு பாடல் எழுதும் முறையைக் கற்பித்து தந்தார். அவரது வழிகாட்டலில் தான் மெட்டுக்கு பாடல் எழுதக் கற்றுக்கொண்டேன். அவர் என் பாட்டுத்தந்தை. இன்று அவர்கள் நம் மத்தியில் இல்லை.

அத்தோடு சக்தி தொலைக்காட்சி இசை இளவரசர்கள் நிகழ்வில் நான் பாடலாசியராகத் தேர்வு செய்யப்பட்ட போது, நான் கொண்ட ஆதங்கத்தை விட என்னைச் சூழ‌விருந்த எனது ஊரைச்சேர்ந்த சொந்தங்கள் முக்கியமாக ஆனந்த விளையாட்டுக்கழக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் என அனைத்து நல்லுங்களாலும் நான் ஆசிர்வதித்து, ஆசுவாசப்படுத்தி வரவேற்கப்பட்டேன். பலர் எனக்கு பணம் கொடுத்து உதவியதை என்னால் ஒரு நாளும் மறந்து விட முடியாது.

ஆனந்த விளையாட்டுக்கழக நண்பர்கள் என் பதாதைகளை தொங்க விடுவதற்கு ஒருவர் தோள் மீது மூவர் ஏறி நின்று மின்சார கம்பிகளுக்கு சவால் விட்ட நினைவுகளை என் இதயத்துடிப்பின் ரத்த ஓட்டங்களுக்குள் சத்தமில்லாது இன்னும் சுத்தமாக வைத்துள்ளேன்.

ஊர் ஊராகச் சென்று சாப்பாடு, தண்ணீரில்லாது என் சுவரொட்டிகளை மதில்களில் ஒட்டியது இன்னும் என் மனதில் ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றது. அத்தோடு, நில்லாது ஊர்த்திருவிழா அன்று திரு. ஹரிகிருஷ்ணன் ஆசியர் மற்றும் திருமதி ஹரிகிருஷ்ணன் ஆசிரியை தலைமையில் இன்னும் பல ஆசிரியர்களும் நல்நெஞ்சம் கொண்டவர்களும் இணைந்து எனக்கு பரிசு தந்து, கெளரவித்த அந்த நிகழ்வை ஓர் நாளும் மறந்து விட முடியாது.

பள்ளேகொடை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.நவீந்திரன் மற்றும் திருமதி.நவீந்திரன் அத்தோடு திரு. சர்வானந்தன் ஆசியர் அவர்களதும் ஊக்குவிப்பும் எனக்கு உரம் தந்து வரம் தந்தது.

அவர்களோடு வளர்ந்து வரும் என் மரத்திற்கு நல்ல நிழலும் இதமான வெயிலும் நீரும் ஊற்றி எனை காய் கனி தரும் விருட்சமாக உருவாக்கும் பெரும் பங்கினைச் செய்யும் என் முகநூல் சொந்தங்களையுமே நான் நன்றிக்குரியவர்களாய் காண்கின்றேன். அவர்களுக்கு கோடி நன்றிகளோடு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: இன்றைய நவீன உலகில் தொலைபேசியும் முகநூலும் இணை பிரியாதனவான போதும், நீங்கள் கூறியது போல அதில் பதிவேற்றம் செய்ய அதிக வசதி வாய்ப்புகள் இருந்த போதும், சமூகம் சார்ந்த படைப்புக்கள் சமூகத்தின் அடித்தள மக்களையும் சென்று சந்திப்பது ஊடகங்களினூடாகவே”  இது பற்றி?

மத்துகமை செல்வகுமார்: நிறைய எழுத வேண்டிய ஓர் வினாத் தொடுத்தீர்கள். இருந்தும் சுருக்குவோம். இன்றைய சமூகத்தை எடுத்து நோக்கினால், அடித்தள மக்களிடமும் கூட அலைபேசி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இனி வரும் சந்ததியினரை கடந்த பிறகு அடித்தள மக்கள் என்ற பேச்சுக்கே அடித்தளமே இல்லாது போய் விடும்.

ஆக, முகநூலில் முடிந்தளவு போராடி போட்டி போட்டு ஒரு நிலைக்கு வந்த பிறகே ஊடகங்களை நாட வேண்டியுள்ளது. எல்லா கலைஞர்களுக்கும் ஆசையுள்ளது தன் படைப்பு சகலரையும் சென்றடைய வேண்டுமென்று. அதற்கு இலகுவான ஓர் ஊடகம் தான் தொலைக்காட்சி மற்றும் வானொலி.

அதை ஒருபாேதும் யாராலும் மறுக்க முடியாது. தொலைக்காட்சியில் கவிதை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை எண்ணிவிடுவதற்கு ஒரு கை விரல்கள் கூட அதிகம் எனலாம். அத்தோடு, வானொலிகள் கவிதைகளுக்கு களம் தந்தாலும், அடித்தள மக்கள் தூங்கிய பின்பே அதுவும் ஒலிபரப்புச் செய்யப்படுகிறது என்பது கூட வேதனை.

கவிதாயினி ராஜ்சுகா: இன்றைய பெண் படைப்பாளர்கள்  பற்றி உங்களது பார்வை?

மத்துகமை செல்வகுமார்: நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. அதுவும் முகங்காட்டாமல் முகநூலில் மட்டும் என்பது தான் யதார்த்தம். முகங்காட்டாமல் என்று சொன்னதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் பெண்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தையும், சுதந்திரத்தையும். ஏராளமான பெண் படைப்பாளிகளை இன்று காணக்கூடியதாகவுள்ள போதும், ஆண் என்ற ஓர் வர்க்கத்தினரோடு பழகுவதிலும், நடத்தைகள் வேறுபட்ட வெளிச்சூழலில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதிலும், அவர்களுக்கான கள‌த்தை உருவாக்கிக் கொள்வதிலும், முக்கியமாக தன் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தும் அவர்கள் சமூகத்தில் பெரும்பாடு பட வேண்டியுள்ளதனால், பெண் படைப்பாளர்களின் பிரகாசம் குறிப்பிட்ட சில காலத்தோடு மங்கிப்போய் விடுகிறது.

அதிலும் சில பெண்கள் தீயில் விழுந்த பறவையாய் தன் சிறகுகளைக் காப்பாற்றி வானில் உயரப்பறக்கின்றார்கள். உதாரணம் என்னை நேர்காணல் செய்யும் சகோதரி ராஜ் சுகா உங்களைப்போல்.

கவிதாயினி ராஜ்சுகா: தங்களது வெளிநாட்டு வாழ்க்கைப் பற்றி?

மத்துகமை செல்வகுமார்: வெளிநாடு சென்று சொல்வதை விட வெயில் நாடு என்று சொல்வதே சாலச்சிறந்தது. அந்தளவு எங்களை ஒரு ஆறு மாதம் பளீரென்று சுடும் பின்பு இன்னும் ஒரு ஆறு மாதம் குளிர் வந்து நடுக்கம் தரும்.

இலட்சியங்களை வெல்ல வேண்டுமாயின், இலட்சங்களை அள்ள வேண்டுமென்பதை உணர்ந்த படியால் பல படிகளை ஏறி வெளிநாடு வந்தேன். இந்த வெளிநாட்டு வாழ்க்கை கூட என் கலைப்பயணத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியாய் அமைந்துள்ளது.

கவிதாயினி ராஜ்சுகா: இசை இளவரசர்கள் போட்டி, இந்தியபபயண அநுபவம் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

மத்துகமை செல்வகுமார்: அது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம். தமிழ் நாட்டிற்கு பணமிருந்தால் சுலபமாக போய் வரலாம். ஆனால், அங்குள்ள தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களைச் சந்திப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அந்த அரும்பெரும் பாக்கியத்தை, சந்தர்ப்பத்தை சக்தி தொலைக்காட்சி இசை இளவரசர்கள் நிகழ்ச்சியின் மூலம் எமக்கு வழங்கியிருந்தது.

சென்னை வடபழனியில் பத்து நாட்கள் தங்கி இருந்தோம். புதுப்புது மெட்டு போடுவதும் அதற்கு வரிகள் எழுதி, தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் முன் பாடிக்காட்டுவதும் என அந்த பத்து நாட்கள் பேரானந்தத்தோடு கழிந்தது.

அநேகமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வரும் சாலிகிராமம் எனும் இடத்திற்கு நானும் அன்பின் நண்பர்களான இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த நம் நாட்டு கவிஞர் பாடலாசிரியர் அஸ்மின் மற்றும் புசல்லாவை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கவிஞர் புசல்லாவை கணபதி அவர்களோடு, மூவருமாக இளைய தளபதி விஜய், விஜயகாந்த், வடிவேலு, செந்தில், வினுச்சக்கரவர்த்தி எனப்பல நட்சத்திரங்களைச் சந்திக்க அவர்கள் வீடு தேடிச்சென்ற போது, ஏற்பட்ட இனிப்பான மற்றும் கசப்பான அனுபவங்களை எப்படி விவரிப்பது.

இந்தப்பயணம் இயக்குநருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போய் வந்தோமென்பதே வேடிக்கை. எங்களை வழிநடத்தி நிகழ்ச்சி இயக்குநராகப் பணி செய்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ஷியா உல் ஹசன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கவிதாயினி ராஜ்சுகா: கல்குடா  நேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

மத்துகமை செல்வகுமார்: சமூக அக்கறை கொண்ட மிகப்பெரிய ஒருவரினால் எதிர்ப்பார்க்காத விதத்தில் கிடைத்த மிகப்பெரிய ஓர் விருது வழங்கிய நிகழ்வாகவே இதை நான் பார்க்கின்றேன்.

நமது எண்ணங்கள் என்னென்ன நல்லதாய் எண்ணுகின்றன எனப்பார்த்தால் எள்ளளவும் எதுவுமேயில்லை என்றே தோன்றும். அப்படி பட்ட இந்த சமுதாயத்தில் இப்படிப்பட்ட சிந்தனை கொண்ட கல்குடா நேசன் போன்ற இணையத்தளம் வளர்ந்து வரும் திறமைகளுக்கு அதை தளர்ந்து வளர்த்து விட நம்பிக்கையை ஊட்டி, பாதை காட்டுகின்றது.

எனவே, திறமைகளை செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள் உங்களை உலகறியச்செய்ய கல்குடா நேசன் இணையதளத்தில் அடுத்த கள‌ம் கிடைக்கும்.

கல்குடா நேசன் இணைய தளத்திற்கும் அதன் நல்லெண்ணம் கொண்ட அன்பு நிர்வாகிகளுக்கும் மற்றும் மிக அற்புதமான கேள்விகளைத் தந்து என் சுருங்கிய வானத்தின் எல்லைகளை கடக்கச் செய்து, என் அறிவுக்கு விருந்து தந்த அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியை கவிதாயினி ராஜ்சுகா அவர்களுக்கும் என் இதயபூர்வமான நெஞ்சார்ந்த நன்றிகள். வணக்கம்.

fb_img_1442250129910 fb_img_1464683928138 fb_img_1476377656876 fb_img_1476672186387 fb_img_1477561784546 picsart_11-17-05-26-38 picsart_11-17-05-30-02 received_611431569048780

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*