மரணப்பிடியில் அலெப்போ

Spread the love

vcfஎம்.ஐ.முபாறக்

சிரியாவில் இடம்பெற்று வரும் 5 வருட யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என்ற போர்வையில்  அங்கு யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதும் உடனே அவற்றை மீறுவதும் தொடர் கதையாகவேயுள்ளது. ஆயுதக்குழுக்களோ சிரியா அரசோ யுத்த நிறுத்தங்களுக்குக் கட்டுப்பட மறுப்பதால், மனிதப்பேரவலம் தொடர்கின்றது. மக்கள் தான் செத்து மடிகின்றனர்.

இந்த வருடம் பெப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் இந்த யுத்தத்துக்கு முடிவைக் கட்டும் என்று மக்கள் நம்பினர். ஆனால், அந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஓரிரு நாட்களிலேயே வீணாகிப் போகின.

இப்போது யுத்தம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் மைய்யப் பகுதியாகத் திகழும் அலெப்போ மாகாணம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. சிரியா அரசு திட்டமிட்ட அடிப்படையில்  அந்த மாகாண மக்களை அழித்தொழிக்கின்றது. மக்கள் எவரும் அறவே இல்லாத நாடாக சிரியா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தியாவது, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் சிரியா ஜனாதிபதி உள்ளதாலும், அவரது இந்தத் திட்டத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் முழு ஆதரவை வழங்கி வருவதாலும் மரண எண்ணிக்கை ஐந்து வருடங்களில் ஐந்து இலட்சத்தைத் தாண்டி விட்டது.

அங்கு சனத்தொகை விகிதம் பூஜ்யத்தை எட்டும் வரை யுத்தம் நிறுத்தப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம். போராட்டக் குழுக்களை இலக்கு வைக்கின்றோம் என்ற போர்வையில், சிரியா அரசு நடத்தும் அப்பாவி மக்கள் மீதான இத்தாக்குதல் இறுதியில் எதுவித நன்மையையும் சிரியா ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக் கொடுக்காது.

போராளிகள் நிலை கொண்டுள்ள அலெப்போ மாகாணம் மீது சிரியா அரசு நடத்தும் தாக்குதலானது, முழு உலகின் கவனத்தையும் சிரியாவின் பக்கம் திருப்பியுள்ளது. ஆனால், அதற்kதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கும் நிலையில் எவரும் இல்லை.அதற்கு அவர்கள் தயாருமில்லை.

சிரிய ஜனாதிபதி பசர் அல் ஆசாத்தை பதவிலிருந்து விரட்டுவதற்காக  2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேகமாக  ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. பல ஆயுதக்குழுக்கள் உருவாகுவதற்கு அது வித்திட்டது.

சிரிய விடுதலை இராணுவம் என்ற பெயரில் உருவான ஆயுதக்குழு முதலில் ஆயுதப் போராட்டத்தைத் துவைக்கி வைத்து. அதன் பின் பல ஆயுதக்குழுக்கள் உருவாகின. அந்த வகையில், சுமார் ஒரு இலட்சம் ஆயுதப்போராளிகள் இன்று சிரியா அரசுக்கெதிராகப் போராடி வருகின்றனர். மறுபுறம், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக்குழுவும் களமிறங்கியுள்ளன.

இவ்வாறு ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் 5 இலட்சம் மக்களின் உயிரைக் குடித்துள்ளது. ஒரு கோடி 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், 50 இலட்சம் சிரியா மக்கள் சிரியாவுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுள் சுமார் 4.5 இலட்சம் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

இப்படியான ஒரு பேரவலத்தை நிறுத்துவதற்காக ஐ.நாவும் சில நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டன. அதன் பலனாக 2012, 2014 மற்றும் 2016 ஆகிய வருடங்களில்  யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கிடையில் ஜெனிவாவில் அமைதிப்பேச்சுக்கள் இடம்பெற்றன. அவை எதுவும் வெற்றி பெறவில்லை.

சமாதனப்பேச்சுக்கள் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டு சென்றதால், யுத்தம் மேலும் தீவிரமடையவே செய்தது. ரஷ்யாவின் ஆதரவு பெற்ற சிரியா அரசும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களும் சம பலத்திலிருந்து வருவதால், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது சிரமமாகவே இருக்கின்றது.

இந்நிலையில், மூன்று வருடங்களாக ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த அலெப்போ மாகாணத்தின் பல பகுதிகள்  பெப்ரவரி மாதம் சிரியா அரசின் கைகளுக்கு வந்தது. இது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க தரப்பைத் தூண்டியது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் இது தொடர்பில்  கூடிப்பேசி பெப்ரவரி மாதம் யுத்தத்தை நிறுத்த ஒப்பந்தமொன்றைச் செய்தன. ஆனால், அது முழுமையான யுத்த நிறுத்தமாக அமையவில்லை.

சிரியா அரசுக்கெதிராகப் போராடும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல்-கைதா சார்பு அல்-நுஸ்ராவுடன் இணைந்ததான ஆயுதக்குழுக்கள் உள்ளிட்ட மேலும் பல ஆயுதக்குழுக்கள் இந்த ஒப்பந்தத்திற்குள் உள்வாங்கப்படவில்லை.

இதனால் அந்த ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதல்கள் என்பதையும் விட மக்கள் மீதான தாக்குதல் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். பயங்கரவாதிகளை அழிக்கின்றோமென்ற பெயரில் தினமும் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் தான் மீண்டுமொரு யுத்த நிறுத்தம் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. பெப்ரவரி ஒப்பந்தம் போல் தான் இதுவும் அமைந்தது. இடையில் கைவிட்டுச் சென்ற அலப்போ மாகாணத்தின் சில இடங்களை அரச எதிர்ப்புப்போராளிகள் மீண்டும் கைப்பற்றினர்.

அலெப்போ போராட்டத்தின் மத்திய நிலையமாகவும் அரசுக்கு மிகவும் சவால்மிக்க இடமாகவும் திகழ்வதால், அந்த மாகாணத்தை முற்றாக மீட்டெடுக்கும் முயற்சியில் சிரியா அரசு இறங்கியுள்ளது. அங்குள்ள மக்களை முற்றாகக் கொன்றொழிப்பதன் மூலமாக அல்லது முற்றாக வெளியேற்றுவதன் மூலமாக அலெப்போவை முற்றாகக் கைப்பற்ற முடியுமென்று சிரியா அரசு நினைக்கின்றது. அதனால் தான் இப்போது கோரத்தாக்குதலை மக்கள் மீது நடத்தி வருகின்றது.

மக்களை வெளியேற்றுவதற்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், ஈரான் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மரணப் பிடியிலிருந்து தப்ப முடியாத நிலைக்கு இப்போது அலெப்போ மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேசம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் இந்நிலைமை மேலும் மோசமடைவது நிச்சயம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*