இலங்கை முஸ்லிம்களையும் குறி வைக்கும் மேற்கத்தேயம்

15826040_1866246846922259_8671281376237444531_n-எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர்

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் மேற்கத்தேயம் எப்போதும் மூன்று விதமான போராட்டங்களைத் தொடுத்துக் கொண்டே இருக்கும். ஒன்று ஆயுத ரீதியான போராட்டம். மற்றையது சிந்தனா ரீதியானதும், கலாசார ரீதியானதுமான போராட்டங்களுமாகும். ஆயுத ரீதியான போராட்டங்களை ஒரு சில நாடுகள் எதிர்கொண்டாலும் சிந்தனா, கலாசார ரீதியான போராட்டங்களால் இன்று முழு முஸ்லிம் உலகமும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

மேற்கத்தேயம் எப்போதும் அதன் பொது எதிரியாக இஸ்லாத்தையே கருதி வருகிறது. அவர்களது சடவாத சிந்தனைக்கு இஸ்லாம் என்ற ஒன்றே சவால் விடுக்கக்கூடிய சக்தியாக திகழ்ந்து வருவதனால், இஸ்லாத்தின் எழுச்சியை மழுங்கடிக்க பல்வேறுபட்ட உபாயங்களைக் கையாண்டு எப்படியும் தடுத்து நிறுத்தி விட மும்முனைப் போராட்டங்களை நடாத்தி வருகிறது.

வெளிப்படையான போராட்டமான ஆயுதப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்த நமக்கு மறைமுகமான போராட்டங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரிய வருவதில்லை. ஒரு முஸ்லிமின் சிந்தனையிலும், கலாசாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதையே இது குறித்து நிற்கின்றது.

இன்று மேற்கத்தேயம் முஸ்லிம் உலகை வெற்றி கொள்ள இவ்வகையான போராட்டங்களையே தேர்ந்தெடுத்து வழி நடாத்தி வருகின்றது. அதாவது இப்போராட்டம் என்பது முஸ்லிம்களை இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களிலிருந்து துாரப்படுத்தி நாகரிகம் என்ற பெயரால் கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்தி, இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை துாரப்படுத்துவதாகும்.

அப்படியே இஸ்லாமிய வாழ்க்கை நெறியை தவறாகச் சித்தரித்துக்காட்டி இந்த உலகிற்கு இஸ்லாம் பொருத்தமற்றதென்று பிரகடனப்படுத்துவதுமாகும். இதற்காக தனது பொருளாதாரம், ஊடக சக்தி, மனித அறிவு ஆகியவற்றை மேற்கத்தேயம் மூலதனமாகப் பயன்படுத்தி வருகிறது.

இதன் தொடரிலேயே அண்மையில் எமது நாட்டிலும்GSP+ வரிச்சலுகை என்ற பெயரினுாடாகக் காற்பதித்திருப்பதைக் காணலாம். இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் அரச சட்டத்திற்குப் புறம்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தினூடாக தங்களை ஏனைய இன, மதக்குழுக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற தனியான சமுகமாக வாழ்ந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாத இஸ்லாத்தின் எதிரிகள் அந்த சட்டத்தை இல்லாமல் செய்து, ஒரு பொது சட்டத்தினூடாக இலங்கை முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து துாரப்படுத்த தங்களது வரிச்சலுகையைத் துாக்கிப் பிடித்திருக்கின்றனர்.

குறிப்பாக, இஸ்லாமிய திருமணச்சட்டதில் கை வைத்தால், ஏனைய எல்லாச் சட்டங்களையும் இலகுவாகக் கையாளக் கூடியதொரு நிலையினை ஏற்படுத்தி விடலாம் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

தனி மனித உரிமை என்ற பெயரில் தான் விரும்பியதைச் செய்வதற்கு இளைஞர், யுவதிகளின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்திட்டால் ஏனையவை இலகுவாக அமைந்து விடும். அதனால் தான் இளவயதுத் திருமணத்தை எதிர்த்து, அதன் அடுத்த கட்டமாக இஸ்லாமியத் திருமணத்தில் பெண்ணின் பொறுப்புதாரரான “வலீ” இல்லாமலே ஒரு பெண் திருமணத்தை நிறைவேற்ற சட்டத்தைக் கொண்டு வருவது தான் இவர்களின் சூழ்ச்சி.

இதனால் ஒரு இஸ்லாமியப் பெண் தனது விருப்பத்தின் பெயரில் யாருடனும் வாழலாம். வாழ்ந்து விட்டு தேவையில்லையென்றால் விட்டு விடலாம். இவற்றுக் கெதிராகக் குரல் கொடுப்வர்களை சட்டம் தண்டிக்கும். இந்த சட்டத்தை இலங்கையில் ஏற்படுத்தவே GSP+ வரிச்சலுகையை ஆயுதமாக மேற்கத்தேயம் இப்போது துாக்கிப்பிடிக்கிறது.

இப்பிரச்சினை இன்னும் விஸ்பரூபம் எடுக்கவில்லலை என்றாலும், எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினையாக மாறலாம். அப்போது இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நாம் சக்தியுள்ளவர்களாக மாறியிருக்க வேண்டும். அரசியல், இயக்க, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் நின்று, இதை எதிர்கொள்ள எந்நேரமும் சித்தமாயிருக்க வேண்டும்.

இல்லையேல், இதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இனவாதிகளும், சடவாதிகளும் எம் சமுகம் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட வாய்ப்பு அதிகமாயிருக்கின்றது. என்றாவது ஒரு நாள் எமது நாட்டு பாராளுமன்றில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீதான வாதப்பிரதிவாதங்கள் எழும்.

அந்த நிலையினை எவ்வாறு எதிர்நோக்கலாம் என்று இப்போதிருந்தே நாம் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். இதற்காக எமது புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் கலந்தாலோசித்து வெள்ளம் வரும் முன் அணை கட்டத்தயார் நிலையிலிருந்து கொள்ள வேண்டும். இல்லையேல், பாரிய விளைவுகளை எம் சமுகம் சந்திப்பதைத் தவிர்க்க முடியாது போகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*