வில்பத்து பிரச்சினையும், போலி வேசமற்ற நிரந்தரத்தீர்வும்

Spread the love

_93279243_0091முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது
யானை வரும் பின்னே மணயோசை வரும் முன்னே என்பது போல, தேர்தலொன்றுக்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற போதெல்லாம் வில்பத்து பிரச்சினை மேலெழுகின்றது என்ற கருத்து பலரிடம் காணப்படுகின்றது.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பும் இந்த பிரச்சினை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகக் காணப்பட்டதும், தேர்தலுக்குப் பின்பு இது கிடப்பில் போடப்பட்டதும், இரகசியமான விடயமல்ல. அதே போல், மீண்டும் இந்த பிரச்சினை சூடுபிடித்துள்ளதனால், விரைவில் தேர்தலொன்று வருவதற்கான சாத்தியம் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.

அதிகமான மிருகங்கள் வாழுகின்ற ஒரு தேசிய சரணாலயமாகக் காணப்படுவதுடன், இது புத்தளம், அனுராதபுரம் ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அனுராதபுரம் நகரிலிருந்து மேற்குப் பக்கமாக 30 KM தூரத்திலும், புத்தளம் நகரிலிருந்து வடக்கு நோக்கி  26KM தூரத்திலும் ஒரு தேசிய சரணாலயமாக இந்த வில்பத்து காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தினதும் புத்தளம் மாவட்டத்தினது எல்லையாக ”உப்பாறு” காணப்படுவதுடன், வில்பத்து தேசிய சரணாலயத்தின் ஒரு இஞ்சி நிலமேனும் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தினுள் உள்ளடங்கப்படவில்லை. அதாவது, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்குள் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.

விடுதலைப் புலிகளினால் வெளியேற்றபடுவதற்கு முன்பு வில்பத்துவை அண்மித்த மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபை எல்லைக்குள் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஓலைக்குடிசைகளிலும், களி மண் வீடுகளிலும் வாழ்ந்து வந்ததனால் காலப்போக்கில் அவைகள் அழிந்து வில்பத்துவுடன் சேர்ந்த தொடர் காடுகளாக அப்பிரதேசம் காணப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அப்பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகக் காணப்பட்டதனால், இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு முசலி பிரதேச சபைக்குட்பட்டதும், வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மரிச்சிக்கட்டி, பாலைக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்கள் வில்பத்து தேசிய சரணாலயங்களுக்குச் சொந்தமானதென்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் குறித்த இரண்டு முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்களை வில்பத்து தேசிய சரணாலயத்துடன் 2012 இல் இணைக்கப்பட்டதாலேயே அது வில்பத்து பிரதேசம் என்று இன்று உரிமை கொண்டாடப்படுகின்றது.

மகிந்தவிடமிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி 2012இல் இந்த வர்த்தமானி அறிவிப்பைத் தடுத்திருந்தால், அல்லது இரத்துச் செய்ய வைத்திருந்தால், இன்று இந்த பிரச்சினை இருந்திருக்காது. அதாவது, முஸ்லிம் பிரதேசங்களை வில்பத்துக்குரிய பிரதேசமாகவோ அல்லது அங்கு காடுகள் அழிக்கப்படுவதாகவோ யாராலும் பேச முடியாதிருந்திருக்கும்.

மகிந்த ராஜபக்ஸ மூலமாத்தான் அதனைச் செய்ய முடியாமல் போனாலும், இன்றைய ஜனாதிபதியுடன் செய்து கொண்ட தேர்தல் ஒப்பந்தத்திலாவது, வில்பத்து பிரச்சினையை ஒரு நிபந்தனையாகக்கோரி இருக்கலாம். அதாவது தனக்கு அமைச்சர் பதவியும் இதர சலுகைகளும் வேண்டுமென்று கோரிக்கை வைக்கும் போது, 2012 இன் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு நிபந்தனை வைத்திருந்தால், இந்த பிரச்சினை என்றோ தீர்க்கப்பட்டிருக்கும்.

அத்துடன், அண்மையில் சில முஸ்லிம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வில்பத்து பிரச்சினைகள் பற்றி பத்திரிகையாளர்கள் மாநாடு நடாத்தினார்கள். அதாவது, மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே முறையிட்டார்கள். இதனால், மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கபோவதில்லை.

மாறாக, அமைதியாக இருக்கின்ற ஒட்டு மொத்த சிங்கள இனவாதிகளையும் தட்டி எழுப்புகின்ற தந்திரோபாயமாகவே அந்த பத்திரிகையாளர் மாநாடு கருதப்படுகின்றது.

இந்த பத்திரிகையாளர் மாநாடானது, பிரச்சனைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியல்ல. மாறாக, மீண்டு இந்த பிரச்சினையை பற்ற வைத்து, அதில் அரசியல் ஆதாயமடைவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

இதய சுத்தியுடன் வில்பத்து பிரச்சினையைத் தீர்க்க நினைத்தால், அதனை என்றோ தீர்த்திருக்க முடியும். அதாவது, இங்கே பத்திரிகையாளர்கள் மாநாட்டுக்காக ஒன்று கூடிய எமது முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியையும், பிரதமரையும் மூடிய அறைக்குள் சந்தித்து 2012 ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய அழுத்தம் வழங்கியிருந்தால், இந்த பிரச்சினை எப்போவோ நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டிருக்கும்.

எனவே, சிங்கள இனவாதிகள் மலிந்து கிடக்கின்ற இந்த நாட்டில் சிறுபான்மையினர்களான நாங்கள் சில பிரச்சனைகளை ஆர்ப்பாட்டமின்றி மூடிய அறைக்குள் அரசியல் அதிகாரமுள்ளவர்களைக்கொண்டு மிகவும் சாணக்கியமாக அணுகுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லாது போனால், இறுதி வரைக்கும் அது தீர்க்க முடியாத பிரச்சினையாக விஸ்வரூபமெடுக்குமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனால் பாதிக்கப்படுவது அரசியல்வாதிகளல்ல. அப்பாவி மக்களேயாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*