மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினால் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை- இரா.சம்பந்தனும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரச பிரதிநிதிகளே-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி குற்றச்சாட்டு (வீடியோ)

Spread the love

unnamedஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லப்படுகின்ற அதன் தலைமையும் இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர் என முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு-கல்குடாத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மீண்டும் அரசியலில் மறு பிரவேசம் எடுத்து தனது அரசியல் நடவடிக்கைககளை தமிழ் சமூகத்தின் மத்தியில் வித்தியாசமான கொள்கையுடன் எடுத்துச்செல்லும் ஜெயானந்தமூர்த்தியுடனான நேர்கணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினைத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்..

வெளிப்படையாகவும் மக்கள் மத்தியிலும் ஊடகங்களூடாக கூறிக்கொள்ள விரும்புவதானது, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை ஆரம்பித்ததில் தனது பங்கு மிக முக்கியமாகக் காணப்பட்டது. நாங்கள் கூட்டமைப்பினை ஆரம்பித்தது மட்டுமல்லாமல், அதில் வெற்றியும் கண்டோம். முன்பொரு காலத்தில் தமிழ் பிரதிநிதித்துவங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆனால், நாங்கள் தமிழ் தேசிய  கூட்டமைப்பினை ஆரம்பித்தற்குப் பிற்பாடு 2004ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழ் மகக்ளினுடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு அன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு பலாமான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தோம். ஆனால், இன்று பார்க்கப்போனால் படிப்படியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் மாறிக்கொண்டு வருகின்றமையினை வெளிப்படையாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சம்பந்தமில்லாதவர்கள் கூட அதாவது சம்பந்தன் உட்பட தங்களை தலைவர்கள் என நினைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள். இன்று பார்க்கப்போனால், தமிழ் தேசியத்திற்கோ, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, மக்களுக்காகவோ எந்தவொரு உதவியோ, பங்களிப்போ செய்யாதவர்கள் தான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னணி நாயகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுகின்றனர். அது சம்பந்தமாக மக்கள் தற்பொழுது தெளிவடைந்து வருகின்றார்கள் என்பதனைப் பார்க்கின்ற பொழுது, ஒரு புறத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமாகவும் இருக்கின்றது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது நான் இலண்டனிலிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதா? அல்லது இல்லையா? எனச்சிந்தித்துப் பார்த்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்கப் போவதில்லை.

அதாவது, இன்று சிறீலங்கா அரசாங்கம் கூட அரசியல் அமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான வேலைத்திடத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நாங்கள் அதனை உற்று நோக்கினோமானால், அந்த மாற்றப்படப் போகின்ற அரசியலமைப்பில் பெரிய இழுபறிகளும் குளறுபடிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, எல்லா மக்களையும் சமாளித்து முக்கியமாக பெரும்பான்மை இனமான சிங்கள பெளத்தர்களைச் சமாளித்து அவர்களுக்கு முக்கியத்தும் கொடுத்து, இந்த அரசியலமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஆனால், நாங்கள் கவனிக்கின்ற பொழுது, இந்த அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெளத்த மதம் முதன்மைபடுத்தப்பட்ட, முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  மதமாக இருக்கின்றது. இவைகள் எல்லாமே முன்பிருந்த அரசியல் யாப்பில் வெளிப்படையாகக் காணப்பட்ட முக்கிய விடயங்களாகும்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த விடயமானது மோதகத்தினை கொளக்கட்டையாக மாற்றுகின்ற செயலாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர, மற்றைய எல்லா உள்ளடக்கமும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

சிறுபான்மை இனத்திற்கென்று ஒரு சில மேலோடமான பூச்சு, மெழுகள்களைத்தான் மேற்கொண்டுள்ளார்கள் எனக்குறிப்பிடலாம். ஆனால், அதனை இன்று ஒரு பெரிய விடயமாக் தூக்கிப்பிடித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தாங்கள் அரசியலில் மாற்றங்களைச் செய்கின்றோம். மாற்றங்களைச் செய்யப்போகின்றோம். இனப்பிரச்சனைக்குத் தீர்வினைப் பெற்று விட்டோம் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதென்பது சிறீலங்கா நட்டிற்குள் தான் இடம்பெறும். அதில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகளோ அல்லது அழுத்தங்களோ இடம்பெற வாய்ப்பில்லை. ஏனென்றால்? நானும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவன் என்ற ரீதியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தலைவர்களைச் சந்தித்திருக்கின்றேன்.

அந்த வகையில், அவர்கள் எல்லாம் இலங்கைக்கு வந்து தலையீடுகளை மேற்கொண்டு மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற அல்லது தமிழர்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கின்ற மன நிலையில் அவர்கள் இல்லையென்பதே உண்மையான விடயமாகும். யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவுற்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் நல்லிணக்க அரசியலிலும் சரி, பெரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் சர்வதேச சமூகத்திடமில்லை. ஆகவே, நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குள்ளே தான் பேச்சுவார்த்தைகளை நடாத்தி முடிவுகளைத் தேட வேண்டியுள்ளது.

ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய நகர்வுகள் மக்களை ஏமாற்றுகின்ற அதே வேளை, மக்களை இன்னுமின்னும் மடையர்களாக்குகின்ற நிலையில் இருப்பதினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வழியில் சென்று அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்தி வடகிழக்கினை இணைத்து, மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினைப் பெற்றுக்கொடுக்கட்டும்.

ஆனால், என்னுடைய எதிர்கால அரசியலில் நான் முன்னோக்கிச் செல்கின்ற பாதையாக மக்களுக்கான அபிவிருத்தியையும், மக்களுக்கான பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அதே நேரத்தில், தமிழ் மக்கள் எவ்வாறு முப்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்தார்களோ அதே நிலையில் தான் இன்றும் கஸ்டத்திலும், குடிசைகளிலும் பல முக்கிய அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு பெரியளவில் எந்த அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை.

எனவே, ஒரு சமூகத்திற்கு முதலில் பசிக்குத் தீனியினைக் கொடுக்க வேண்டும். பசிக்குத் தீயினைக் கொடுத்த பின்பு தான் நாங்கள் ஒரு சமூகத்தினைக் கட்டியெழுப்பி அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆகவே, என்னுடைய முக்கிய நிலைப்பாடாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுகின்ற அபிவிருத்திப் பாதையில் என்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றேன். அதற்காக சில மாற்றங்களை எதிர்வருகின்ற காலங்களில் நான் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

மேலும், தற்பொழுது தமிழர்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கின்றோம் என புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியினைப் பாரட்டுவதோடு, அதற்கு என்னுடைய எதிர்ப்புக்களை வெளிக்காட்டும் நிலைமையில் நானில்லை.

அதே நேரத்தில், மறு பக்கத்திலே தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்களை ஒத்ததாகவே இருக்கின்றது. அத்தோடு, இக்கால கட்டத்தினைப் பொறுத்தமட்டில் இவ்வாறான எழுச்சிகளோ, வீரப்போராட்டங்களோ அல்லது வீர வசனங்களோ தமிழ் மக்களுக்கு எந்தவொரு விமோசனத்தினையும் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை.

தமிழர்கள் இலங்கையில் வாழுகின்றார்கள் என்ற ஒரு சத்தத்தினை சர்வதேசத்திற்குக் காட்டலாம். அதே நேரம் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அங்கே சில போராட்டங்களை நடத்துவதன் மூலமாக தமிழர்களினுடைய இருப்பினைக் காட்டுகிறார்கள். அதே போன்று தான் நானும் இந்த தமிழ் மகக்ள் பேரவையினைப் பார்க்கின்றேன்.

அவர்கள் எடுக்கின்ற இந்த முயற்சியும் உருவாக்கமும் பெரியளவில் மக்களுக்கு விமோசனத்தினைப் பெற்றுத்தருமென்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று எழுச்சியோடு ஆரம்பமானாலும் பத்தோடு பதினொன்றாக தமிழ் கட்சியாக மாற்றப்படுகின்ற ஒரு கட்சியாகத்தான் மக்கள் அதனைப்பார்க்கப் போகின்றார்கள்.

ஏனென்றால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கின்ற கட்சி யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. கிழக்கிலும் அதன் கொள்கைகள் விஸ்தரிக்கப்பட்டிருந்தன. ஆனால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன் போன்றவர்களைக்கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு தேர்தல்களிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே போன்று தான் தமிழ் மக்கள் பேரவையினுடைய நிலையும் ஏற்படலாமென நினைக்கின்றேன்.

ஆகவே, நாங்கள் இனி வருகின்ற காலங்களில் அபிவிருத்தி என்கின்ற நிலைக்குச்சென்று அரசாங்கத்தினைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அதே நேரம், அரசாங்கத்திடம் பேரம் பேசல்களை மேற்கொண்டு மக்களுக்கான தீர்வுகளைக் கேட்கக்கூடிய நிலைமையும் நிறையவே இருக்கின்றது. ஆகவே, எதிர்த்துக்கொண்டு முரண்பாட்டு அரசியலினை மேற்கொள்ள முடியாதென்ற மேற்கூறிய விரிவான விளக்கத்தினை நீங்கள் மீண்டும் அரசியலில் மறுபிரவேசம் எடுத்துள்ளீர்கள் எனப்பரவலாகப் பேசப்படுகின்ற கருத்துக்களின் உண்மை நிலை என்ன என்ற கேள்விக்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான

பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் மக்களின் உரிமைகளை சர்வதேசம் பார்க்குமளவிற்கு குரல் கொடுத்த ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இருந்த உங்களின் அரசியல் பின்னணி எவ்வாறு அமைந்திருந்தது?

தற்கால இலத்திரனியல் ஊடகங்களின் தொழிநுட்ப வளர்ச்சியானது, சமூகத்தின் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது?

அரசியலில் மீள்பிரவேசம் எடுத்துள்ள நீங்கள், தமிழரசுக் கட்சியினதும், தமிழ் மக்கள் பேரவையினதும் கொள்கைகளிலிருந்து வேறுபட்டு உங்களால் அரசியலில் வெற்றியடைய முடியுமென்ற நம்பிக்கை இருக்கின்றதா?

கல்குடாத்தொகுதியில் உங்களுடைய எதிர்கால அரசியலினை மேற்கொள்ளவிருக்கும்  நீங்கள், கல்குடாத்தொகுதியில் இரண்டு முறைகள் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றியடைந்து கல்குடாவினை தனது அரசியல் கோட்டையாக மாற்றியமைத்திருக்கும் யோகேஸ்வரனை எதிர்த்து உங்களால் கல்குடா அரசியலில் சாதிக்க முடியுமென நினைக்கின்றீர்களா?

இந்தியாவில் முஸ்லிமகளுக்கெதிராக தீவிரப்போக்கினைக் கடைபிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் உறுப்பினர்களை எமது பிரதேசத்திற்கு அழைத்து வந்து, அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற யோகேஸ்வரன் எம்பியினுடைய நடவடிக்கைகளை நீங்கள் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஊடகவியலாளன் என்ற ரீதியிலும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

வெளிநாடுகளில் நீங்கள் வாழ்ந்தவர் என்ற ரீதியில் புலம்பெயர் தமிழர்களை ஆயுதமேந்தாத விடுதலைப்புலிகள் என்று அழைக்கப்படுவதனையும் பேரினவாதிகள் விமர்சிப்பத்னையும் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்ற ரீதியில் தமிம் மக்களின் உரிமைகள் சம்பந்தாமக அதிகளவில் குரல் கொடுக்கின்ற புலம்பெயர் தமிழர்களினால் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரிழந்த மாவீரகள், அவர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்றுள்ள போராளிகள் பொருளாதார ரீதியாக கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது. அதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பிரிக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக நீங்கள் எந்த நிலைபாட்டில் இருக்கின்றீர்கள்?

வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான விடயத்திலும் சரி, ஏனைய அரசியல் முன்னெடுப்புகளிலும் சரி, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் இழக்கப்படுள்ள காணிகள் சம்பந்தமன விடயத்தில் நீங்கள் எந்த நிலைபாட்டில் இருக்கின்றீர்கள்? முஸ்லிம்களுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கின்ற தீர்வு என்ன?

மட்டக்களப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்ப்பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொண்டு, அரசியல் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளையும் வழங்குகின்றார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் முன்னெடுப்புக்களை தமிழ் பிரதேசத்திற்குள் வேலிகளை அமைத்து மெற்கொள்வதும், முஸ்லிம் பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதற்குமான காரணம் என்ன?

எதிர்காலத்தில் உங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பிரதேசத்தில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் விஸ்தரிக்கப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவையினை விமர்சிக்கின்ற நீங்கள், உங்களினுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியிலா மேற்கொள்ளவுள்ளீர்கள்?

வாழைச்சேனை பிரதேச சபைக்குரியதாகக் கூறப்படும் பழைய பிரதேச சபைக்கட்டடம் அமைந்திருந்த காணி சம்பந்தமான விடயத்தில் இனமுறுகலினை ஏற்படுத்தாத வகையில் நீங்கள் எவ்வாறான முடிவினை எடுத்து, அதனை அமுல்படுத்த தீர்மானித்துள்ளீர்கள்?

சிறுபான்மை மக்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நல்லாட்சியில் தமிழர்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக நீங்கள் திருப்தியுடன் இருக்கின்றீர்களா?

எதிர்காலத்தில் அரசியலினை முன்னெடுக்கவுள்ள உங்களுக்கு மட்டக்களப்பு மற்றும் கல்குடாத்தொகுதி மக்கள் எவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?

கல்குடாத்தொகுதியில் இன முறுகலினைத் தோற்றுவிக்கும் வகையில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நீங்கள் எந்த நிலைபாட்டில் இருக்கின்றீர்கள்? உங்களுடைய கருத்து எதுவாக இருக்கின்றது?

போன்ற முக்கிய கேள்விகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

வீடியோ-தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கெதிரான ஜெயானந்தமூர்த்தியின் கருத்துக்கள்:-
www.youtube.com/watch?v=vfoCVKcp9n8&feature=youtu.be

unnamed fvc

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*