பாலகுமாரை மானசீகத்தலைவராக ஏற்றுக்கொண்ட தவிசாளர் பசீர், இன்று வரைக்கும் தவிசாளராக நடித்துக்கொண்டிருந்தார்-எம்.ஜே.எம்.நெளசாட் (வீடியோ)

Spread the love

16650441_1270606689696329_522923675_nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

தமிழ் தேசியத்திற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் போராடிய ஈரோஸ் போராட்ட இயக்கத்தின் தலைவர் பாலகுமார் தான் தன்னுடைய மானசீகத்தலைவன் எனக்கூறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக நடித்துக்கொண்டிருந்தார் என்பது இன்று அவர் எமது கட்சியின் தலைவர் அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் மீது சுமத்தியுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையும் பார்க்கின்ற பொழுது தெட்டத்தெளிவாகின்றது என முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் சமூகத்தின் மத்தியில் ஜனரஞ்சகப் பேச்சாளராக செல்வாக்குப் பெற்று வரும் எம்.ஜே.எம்.நெளசாட் மேற்கண்டவாறு நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

மேலும் தனது விரிவான கருத்தினைத்தெரிவித்த நெளசாட்..

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் தவிசாளர் பசீர் சேகுதாவூதிற்கு இருந்த செல்வாக்கு இழக்கப்பட்டிருந்த வேளையில், பசீருக்கெதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளில் கண்டனப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.

இவ்வாறு தொடர்ந்தேர்ச்சியாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் மனதிலிருந்து தவிசாளர் என்ற பதவி வரிதாக்கப்பட்ட பொழுது, அவருடைய கருத்துக்கள் அங்கே எவரையும் சலனப்படுத்தியதுமில்லை அல்லது அவர்கள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவுமில்லை என்று கூற முடியும்.

ஆகவே, தவிசாளர் பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் எந்த வகையிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமினுடைய எதிர்கால அரசியலினை அழித்து விடவோ அல்லது அவருக்குச் சவாலாக அமையும் விடயமாகவோ இருக்கப்போவதில்லை. இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களினுடைய தனி மாவட்ட அல்லது தனி அலகுக்கோரிக்கையினை ஒட்டு மொத்த அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களும் முன்வைத்த வேளையில், பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரசினுடைய தேசியப்பட்டியலினை அனுபவித்து தவிசாளராக இருந்து கொண்டு அதனைப் பகிரங்கமாக எதிர்த்தமையானது, அவர் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை தனது தலைமையாக ஏற்றுக்கொள்ளவில்லையென்பதற்கு முக்கிய சான்றாகும்.

இருப்பினும், பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உள்ளே இருந்து கொண்டு நாம் அவரை விட அரசியல் அறிவிலோ அல்லது கட்சியினுடைய ஆழத்திலோ இருக்கவில்லை.  ஒரு கட்சியினுடைய தீர்மானமென்பது அல்லது அரசியல் தீர்வுத்திட்டத்தினை நோக்கி நகர்கின்றது என்றால்? அது ஒட்டு மொத்தமாக ஈழத்தினைப் பெற்றுக்கொள்வதினைப் போன்று அல்லது இலங்கையில் பிரிக்கப்பட்ட தனி மாநிலம் போன்ற கொள்கையினை இலங்கையில் வெற்றி கொள்ள முடியாதென நாம் அனுபவ ரீதியாக அறிந்திருந்திருக்கின்றோம்.

அவ்வாறான இலக்கினை நோக்கி அடைவதற்காக தமிழர்களுக்கான தனி மாவட்டம் இருக்கின்ற வேளையில், தமிழர்கள் யாழ்ப்பாணத்தினை தலை நகராகக்கொண்ட வரைபினைச் செய்கின்ற நிலையிலே தான் முஸ்லிம்களுக்கும் ஒரு தலை நகரினை உருவாக்குவதற்காக கோரிக்கையாகத்தான் கரையோர மாவட்டக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், கரையோர மாவட்டக்கோரிக்கையானது முஸ்லிம்களுக்கான வரைபாக அது காணப்பட்டிருக்க முடியாது. முஸ்லிம்களை அடையாளப்படுத்துவதற்கான ஒரு மாவட்டத்தினை உருவாக்குவதன் மூலமாக அதனை மீள்பரப்புச் செய்ய முடியும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பிரதேசத்தினை எங்களுடைய பக்கமாக வசமாக்கிக் கொள்கின்ற பொழுது, அந்தப் பிரதேசத்திலிருக்கின்ற அடுத்த கட்ட கோரிக்கைகளை முன்னோக்கி நகர்த்தலாம்.

அவ்வாறான ஒரு நகர்த்தலினைச் செய்கின்ற வேளையில், இவ்வாறான உள்ளக முரண்பாடுகளைக் கொண்டிருந்த எமது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் இவ்வாறான இடையூறுகளை தலைமைக்கும் ஏனைய முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் பிரதிநிதிகளுக்கு கொடுத்து மக்களையும் சமூகத்தினையும் திசை திருப்ப நினைக்கின்ற விடயமானது, முஸ்லிம் சமூகத்திற்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.

என்னுடைய தலைவராக பாலகுமாரைத்தான் தலைவனாக வரிந்து கொண்டிருக்கின்றேன் என்ற வசனங்களை அடிக்கடி தவிசாளர் பசீர் பாவித்துக் கொண்டிருப்பார். இதில் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் முஸ்லிம் காங்கிரசினுடைய என்னக்கருவினை விதைக்கின்ற பொழுது, பாலகுமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர்கள் உயிரோடு தான் இருந்தார்கள்.

தமிழரசுக்கட்சியும் உயிரோடு தான் இருந்தது. இவ்வாறான கட்சிகளுக்கு மத்தியில் முஸ்லிம்களினுடைய தனித்துவம், தனித்தேசியம், முஸ்லிம் தேசியம் என்கின்ற ஒரு தொனிப்பொருள் உருவாக்கப்பட்ட நிலைமையினை மறந்து, பசீர் சேகுதாவூத் இன்னமும் பாலகுமாரினை தன்னுடைய தலைவராக வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்ற நிலமையானது அல்லது ஈழப்போரட்டத்தினை தன்னுடைய தலைமையாக ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு முஸ்லிம் தேசியம் பற்றிய என்னக்கரு இன்னும் அவருடைய மனதில் பதியவில்லை என்றே நாம் எண்ணுகின்றோம்.

ஆகவே, இவ்வளவு நாட்களும் அவர் தவிசாளரைப் போல் நடித்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையான விடயமாக மேற்கூறிய விடயங்களை வைத்து தீர்க்கமான முடிவிற்கு வர முடியுமெனத் தெரிவித்த எம்.ஜே.எம்.நெளசாட், அவரது கருத்துக்களோடு இன்னும் தவிசாளரின் பக்கமிருக்கின்ற நியாயங்களை கேள்வியாகத் தொகுத்து நெளசாட்டிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமினை நியாயப்படுத்தி, அவர் வழங்கிய விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-பாலகுமாரே தவிசாளர் பசீருடைய தலைவர்:-
www.youtube.com/watch?v=ow1ihvyqmT8
16650441_1270606689696329_522923675_n 16522942_1270607973029534_896338952_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*