தேர்தலில் போட்டியிட பணம் தேவையா?

Spread the love

17692754_1310085549076733_375353418_oபாறுக் றியாஸ்-செம்மண்ணோடை

எப்போது தேர்தல் நடைபெறுமென்ற ஆர்வத்தோடு அனைவரும் அந்த தினத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் வேட்பாளர்கள் கட்சிகளால் அடையாளப் படுத்தப்படாத நிலையில், தேர்தலில் போட்டியிட ஆசை கொண்டவர்கள் புதிய அமைப்புக்களோடும்  பண மூட்டைகளோடும் அரசியல் சேவை செய்வதற்காக களமிறங்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளையும், பிரச்சனைகளையும், உரிமைகளையும் அரசாங்கத்திடம் கொண்டு சேர்த்து அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர் தான் மக்கள் பிரதிநிதியாகும். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் அல்லது மாகாண சபை உறுப்பினராக இருக்கலாம் அல்லது பிரதேச சபை உறுப்பினராகக்கூட இருக்கலாம்.

ஆனால், அந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்ற பொறுப்பு யாருக்குள்ளது? என்று பார்த்தால் ஒன்று அந்த பிரதேச மக்களின் செல்வாக்கினைப் பெற்ற கட்சிகளுக்கு இருக்கலாம் அல்லது பொது மக்கள் தெரிவு செய்யக்கூடிய ஒருவராக இருக்கலாம்.

எமது உரிமைக்காகப் போராடவுள்ள எமது வேட்பாளரிடம் நாம் எதற்காக பணம் வாங்க வேண்டும் அல்லது அவர் எதற்காக பணத்தினைச் செலவு செய்ய வேண்டும்.

அவர் சேவை செய்ய வேண்டுமென்றால் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அரசாங்க நிதியிலிருந்து சேவை செய்ய வேண்டும். அல்லது தனது ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் இறைவனின் திருப்தியினை மட்டும் நாடி தர்மம் செய்ய வேண்டும்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையானது அரசியல் காலத்தில் மட்டும் இளைஞர்களுக்கு பணம் கொடுப்பது, கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, சிவில் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்குவது என்று தமது அரசியல் அடைவுகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு சொந்தப்பணத்திலிருந்த செலவு செய்கின்றனர்.

மக்கள் பிரதிநிதியாகச்சென்று எமது உரிமைக்காகப் போராடவிருப்பவர், அந்த அமானிதப் பொறுப்பைச்சுமக்க இருப்பவர். எதற்காக இவ்வாறு பணங்களைச் செலவு செய்ய வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற்ற பின்  தான் செலவு செய்த பணத்தை அரசியல் சந்தையில் சம்பாதித்துக் கொள்ள முடியுமென்பதால் தானே தவிர வேறில்லை.

எனவே, எனதருமைச் சமூகமே அரசியல் காலத்தில் நமது பெறுமதிமிக்க வாக்குகளை பேரம் பேசுபவர்களுக்கு நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

மதிப்புமிக்க எனது இளைஞர் சமூகமே வேலைவாய்ப்பிற்காகவோ அல்லது அன்பளிப்பிற்காகவோ சோரம் போகாமல், உரிமை அரசியல் பேசுபவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

“நக்குண்டோர் நாவிழந்தார் ” என்று சொல்வார்கள்.

எனவே, எந்த எதிர்பார்ப்புமின்றி எமது உரிமைக்காகப் போராடும் ஒருவரைத் தெரிவு செய்து நம் உரிமை மீட்கப்போராடும் சமூகமாக நாம் மாற வேண்டும்.

ஊரான் வீட்டு கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதும் ஆலிமா கண்டுகளுக்கு அழிவுகள் ஆரம்பம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*