உயர்பீட உறுப்பினர் றியாழ் அவர்களுக்கு MHM. நெளபலிடமிருந்து பகிரங்க மடல்

14369895_1229300210437016_9145193502835425883_nசகோதரர் ரியாழ் அவர்களுக்கு……அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னும் நான் உங்களை நேரடியாகக் காணவுமில்லை. உங்களுக்கு இப்படியொரு கடிதம் எழுத வேண்டுமென்று நான் நினைத்திருக்கவுமில்லை. கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு துரதிர்ஷ்டவசமாக நீங்கள் தோல்வியினைச் சந்தித்த போதும், உங்களுக்கு தேசியப்பட்டியல் தருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வாக்குறுதியளித்த போது, நான் அதனை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யுவதிகளுக்கு சுவிங்கம் கொடுத்த கதை போலாகுமென்று அப்போதே சொல்லியிருந்தேன். இருந்தும் உங்களைப்போன்ற ஒழுக்கமும், கற்றறிந்த இளைஞர் ஒருவர் இதுவரையிலும் கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக இருந்திருக்கவில்லை என்றொரு சந்தோசமும் என் மனதில் இல்லாமலில்லை.

இவ்வளவு காலமாக தேசியப்பட்டியல் உங்களுக்கு தருவதாக சொல்லப்பட்ட கதை பொய்யாகிப்போன ஒரு சந்தர்ப்பத்திலும், கல்குடாத்தொகுதிக்கான குடிநீர்த்திட்டத்தில் நீங்கள் முழு மனதுடன் முயற்சி செய்து, அதனை ஆரம்பித்து வைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு முதலமைச்சர் அதனைத்தடுத்து நிறுத்தி அவருடைய அபிவிருத்தித்திட்டம் போன்று அடிக்கல் நாட்ட வருவதும் தென்னிந்திய சினிமாப்படங்களில் வடிவேலின் நகைச்சுவைக் காட்சிகளுக்கே சவாலாகிப்போய் விடுமோ என்ற அச்சமும் என்னிடமிருந்து வருகின்றது.

றியாழ், நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீட உறுப்பினராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதே கட்சியின் உபதலைவர் அல்லது மாகாண முதலமைச்சர் எட்டி உதைக்கின்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் பகிரங்கமாக முறையிட்டும் அந்த தலைமையினால் அதனைக்கட்டுப்படுத்த முடியாமல் மூச்சுத்திணறினால் நீங்கள் ஏன் தொடர்ந்தும் அரசியல் அதியுயர்பீடத்தில் இருக்க வேண்டும்? தன்னுடைய திறமையினால் நல்லதோர் தொழிலில் கொழுத்த சம்பளத்துடன் இருக்கும் நீங்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கோ அல்லது உங்களுக்கோ எவ்வித பிரயோசனமற்ற அதியுயர்பீடத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

றியாழ், பொதுத்தேர்தல் முடிந்து இவ்வளவு காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்காக தங்களை அர்ப்பணித்த ஒரு இளைஞனுக்காவது ஒரு அரசாங்க நிறுவனத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் பியோன் தொழில்கூட வழங்கப்பட்டுள்ளதா? இப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கப்பட்ட 9500 வாக்குகளுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஒரு ஆசிரியரும், அதிபருமான சகோதரர் சமீம் அவர்களை தாருஸ்ஸலாத்தில் ஒரு காரியாலய உதவியாளராக நியமித்தது தான் எமக்கு கிடைத்த சர்வதேசப்பட்டியலாகும். அதனை நாங்களும் சகோதரர் சமீம் அவர்களும் ஆசைக்காக ஆங்கிலத்தில் Coordinator என்று சொல்லி வருகின்றோம்.

றியாழ், ஏறாவூர் பிரதேச அரசியல்வாதிகளின் காலணித்து ஆட்சியின் கீழ் கல்குடாப்பிரதேசம் இருக்கின்றது என்றொரு வளிசல்தனமான கோட்பாட்டிற்கும் சிந்தனைக்கும் முடிவு கட்ட வேண்டும். அல்லாஹ்வுக்காக நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடத்திலிருந்து விலகி ஒரு சாதாரண அங்கத்தவராக இருந்து விடுங்கள். தாருஷ்ஷலாத்தில் உங்களை ஏமாற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள அறையிலிருந்து வெளியேறிவிடுங்கள். தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இந்த கல்குடாத்தொகுதியின் வாக்குகளை சூரையாடி இம்மக்களுக்கே வேட்டு வைக்கும் அசிங்கத்திற்கு இறுதி வேட்டு வைக்கும் ஒரு போராளியாக நீங்கள் மாற்றம் பெறுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*