முதலமைச்சரின் வருகையின் பின் கல்குடாவும் கட்சியும் வளர்ச்சிப்பாதையில்-இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன்

Spread the love

unnamedமுதலமைச்சரின் வருகைக்கு முன் கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை வழி நடாத்திய முன்னாள் தவிசாளர் கட்சி சார்பான அபிவிருத்தியையோ கட்சி வளர்ச்சியையோ மேற்கொள்ளாது செயற்பட்டமையால் கட்சிப்போராளிகள் வெறுப்புற்றுக் காணப்பட்டனர்.

முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் வருகையின் பிற்பாடு அதாவது 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் போராளிகளின் மனப்போக்கிலும் கல்குடாத்தொகுதியும் பாரிய மாற்றங்களைக் கண்டு வருவதுடன், கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்டு வருகின்றது என கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.எம் லியாப்தீன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அந்த வகையில் முதலமைச்சரின் செயற்பாட்டின் கீழ் பின்வரும் அபிவிருத்திப் பணிகளைக் குறிப்பிட முடியும்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையின் கீழ் கல்குடாத்தொகுதி பாரிய அபிவிருத்தியை கண்டு வருகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, பாடசாலைகளுக்கான கட்டடம், வீதிப்புனரமைப்பு, சுகாதார அத்தியட்சகர் காரியாலயக்கட்டடங்கள், பள்ளிவாயல்களின் பௌதீக வளங்களை விஸ்தரித்தல், விளையாட்டுக் கழகங்களுக்கான நிதியுதவி, சமூக மட்ட அமைப்புக்களுக்கான உதவி, பிரதேச சபைகளுக்கான வேலைத்திட்டங்கள், கிராம மட்ட அபிவிருத்திச்சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்கம் போன்ற அமைப்புக்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புத்திட்டம் போன்ற அநேக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இப்பிரதேசத்தில் பாரிய தொழில்பேட்டை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றார்.

அதே போன்று எமது கட்சியை இஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலின் போது கல்குடாத்தொகுதியில் கட்சிக்கெதிராக இருந்து செயற்பட்ட சகோதர்கள் பலர் முதலமைச்சரின் முயற்சியினால் கட்சியுடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கட்சித்தலைவர் கல்குடாவுக்கு வரவில்லையென்ற எதிர்த்தரப்பினரின் விமர்சனத்தைப் போக்குமுகமாக பிரதித்தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் சேவையாற்றி வருகின்றார். ஒரு மாதத்தில் குறைந்தது 2 தடவையாவது கல்குடாவுக்கு விஜயம் செய்து, இங்குள்ள மக்களின் தேவைகளையும், குறைகளையும் போக்கி வருகின்றார் என்றால், அது மிகையில்லை.

அத்தோடு, கல்குடாப் பிரதேசத்துக்கான அபிவிருத்திக்குழுவை நியமித்து அந்த குழுவினூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்களை வகுத்துச்செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்காலத்தில் பிரத்தியோகமாக தேசிய தலைவரின் அபிவிருத்தித் திட்டங்களை கல்குடாத்தொகுதியில் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை கட்சிப்போராளிகள் மட்டத்தில் கலந்துரையாடி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அத்தடன், நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் பிரதேச சபைத்தேர்தல்களின் போது கல்குடாத்தொகுதிக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதுடன், அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கான அதிகாரத்துடன் முதலமைச்சர் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, கடந்த காலங்களைப் போலல்லாது, முதலமைச்சரின் அரசியல் பிரவேசத்துடன் கல்குடாத்தொகுதி அபிவிருத்தி கண்டு வருவதுடன், கட்சியும் பாரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்கும் போது, இதன் பிரதிபலன்களை கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கண்டு கொள்ள முடியும் என கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.எம் லியாப்தீன் மேலும் தெரிவித்துள்ளார். (F)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*