கல்குடாத்தொகுதியில் தொடரும் முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி!

Spread the love

WhatsApp Image 2017-05-04 at 7.17.13 AMஓட்டமாவடி எம்.என்.எம்.யாஸீர் அறபாத்

கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து வரும் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த கல்குடா அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியவசியமான ஒன்று தான் சுத்தமான குடிநீர் என்பதை நாமறிவோம். அந்நீரானது, சுத்தமாக கிடைக்கும் போது தான் மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். கல்குடாத்தொகுதியில் குடி நீர் மாசடைந்துள்ள நிலையில், பல காலமாக அதனை மக்கள் பருகி வந்தததன் காரணமாக பாரிய சிறுநீரக நோய்களின் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதையும், வைத்திய சிகிச்சைகளுக்கான பொருளாதார வசதியின்மை காரணமாக மரணங்களை எதிர்நோக்குவதையும் கண்ணூடே கண்டு வருகின்றோம்.

இப்பாரிய நோயின் விளைவுகளால் கணவனை இழந்த விதவைகள், அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள் என தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டும். சகல பிரதேசங்களுக்கும் தூய குடிநீர் கிடைத்து வருவது போல் எமது பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமென பலரும் முயற்சி செய்தனர். அவைகள் சிலரின் சுயநலங்களால் தடைப்பட்டுப்போன சம்பவங்களும் உண்டு. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இச்செய்தி கல்குடா மக்களின் நீண்ட காலத்தேவையாகவும், தூய குடிநீருக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்த்தது. கல்குடா மஜ்லிஸ் ஸூரா கல்குடாவிற்கான தூய குடிநீரின் அவசியம் தொடர்பாக அமைச்சரைச் சந்தித்து விளக்கமளித்தார்கள். அமைச்சர் இந்த அமைச்சைப் பொறுப்பேடற்ற போது, அவரின் அமைச்சுக்கு பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்கள் சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாலும், ஜனாதிபதியின் மாவட்டமாக இருந்ததாலும், குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமைப் படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், நீர் வழங்கல் அமைச்சிற்கு அன்று போதியளவு நிதியில்லாத பட்சத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கல்குடா மக்களின் வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்து, தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்து நூறூ நாள் திட்டத்திற்குள் முதற்கட்டமாக கல்குடாவிற்கு தூய குடிநீரை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ததுடன், அதனை ஆரம்பித்தும் வைத்தார்.

இவ்வாறான பல இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில், தலைவர் அவர்கள் முன்னெடுத்த திட்டத்தை அன்று கல்குடாவிலுள்ள மாற்று அரசியல்வாதிகளின் அடிவருடிகள் கடுமையாக விமர்சித்தமையும், இதற்காக முன்னின்று உழைத்தவர்களை கேவலமாக கார்டூன் வரைந்து ஏசியதையும், கல்குடா சமூகம் மறக்கவில்லை.

போத்தலில் தான் தண்ணீர் வருமா? தண்ணீர் கண்ணீராக தான் வரும் என்றல்லாம் பேசியவர்கள் இன்று குழாய்களில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். இவ்வளவு காலம் இந்தக் கட்சியை நம்பி வாக்களித்த போராளிகளின் நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த தூய நீர்த்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆரம்பப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தை கட்டங்கட்டமாக கல்குடாவிற்கு கொண்டு வந்து சேர்கும் பணியில் கல்குடாவின் மகன் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினர் றியாழ் அவர்கள் பல சவால்களுக்கு மத்தியிலும் அயராதுழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை கல்குடா சமூகம் மறப்பதற்கில்லை.

கல்குடா அபிவிருத்தியிலும் தலைவரின் நிதியைப் பெற்று அபிவிருத்திகளைச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வெற்றியும் கண்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா அரசியல் வரலாற்றில் றியாழ் அவர்கள் திருப்புமுனையாக சமூகம் பார்க்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பயணிக்க கல்குடா சமூகம் தயாராகி வருகிறது என்பதை சில நிகழ்வுகள் படம்பிடித்து காட்டுகிறது.

எனவே, கல்குடாவின் தேவை அறிந்து செயற்பட்ட தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அவரோடு இணைந்து கல்குடா அபிவிருத்தி, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு உழைக்கும் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் றியாழ் அவர்களுக்கும் தூய நீர்த்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்த மஜ்லிஸ் ஷூரா சபைக்கும் மனமார்ந்த நன்றிகளை கல்குடா சமூகம் சார்ந்து தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*