பசியுடன் பக்குவப்படுத்தும் றமழான்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

Spread the love

Untitled-1றமழான் மாதம் ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் அடுத்த மரணத்திற்கு முன் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பமாகும். ஆகவே, இந்த மாதத்தைச் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவனும் அதிஷ்டசாலிகளே.

தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப்பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக்கூட ஒதுக்கி வைத்து விட்டு, பட்டினிக்கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும்.

பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமலிருக்க இறை நம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழி வகுக்கிறது.

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ, அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி)

ரமழானின் கண்ணியம் மகத்துவம் அதன் சிறப்புக்களை பற்றி அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக விபரிக்கிறார்கள்.

عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُعَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ‘ إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُالرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ، لاَيَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُواأُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ

சுவர்க்கத்தில் ரய்யான் என அழைக்கப்படும் ஒரு வாயில் உண்டு. மறுமையில் நோன்பாளிகளைத்தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என அழைக்கப்படும். நோன்பாளிகள் எழுந்து செல்வார் கள். அவர்களைத்தவிர எவரும் நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் (அவ்வாயல்) மூடப்படும். எவரும் அதனுள் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) (நூல்-புகாரி)

விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாகத் திகழ்வதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)

நோன்பினுடைய மிகப்பெரும் இலட்சியத்தை அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். சமூக மாற்றத்தில் நோன்பு பாரிய பங்கை வகிக்கின்றது என்பதை இந்த வசனம் அறிவிக்கின்றது.

முஸ்லிம் மக்களைப் பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ்வைப் பயந்து நடக்கக்கூடியவர்களாக மாற்றுவதே இந்நோன்பின் பிரதான இலக்காகும்.

ரமழான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழி காட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இவ்வேதம்) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்கவும் (அல்குர்ஆன் 2 :185)

ஆனால், இவ்வளவு மகிமையயும் கண்ணியமும் நிறைந்த மாதத்தை நாம் உயர்ந்த படசம் அடைய வேண்டும். அதன் மூலம் வருடத்தின் ஏனைய காலங்களுக்குமான பக்குவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால்??

1) நோன்பு காலத்தில் மட்டுமே இறையச்சமுடையவனாக வாழ்கிறோம். பெருநாள் முடிந்ததும் வேஷம் கலைத்து உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகிறோம். இப்படியான நிலையில், இந்த மாதத்தை தற்கலிகமாகவும், மற்றவர்களுக்காகவும் மட்டுமே கடமைக்காக ஆதரிக்கிறோம்.

2) இந்த மாதத்தில் நாம் பசியுடன் இருப்பதன் மூலம் மற்றவர்களின் பசியை உணர வேண்டுமென்பதே நியதி. இதன் மூலம் மனிதனின் பல்வேறு நோய்களுக்கான நிவாரணம் உண்டென விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. ஆனால், நாம் நோன்பு நோற்கும் போது வயிற்றை கட்டாயப்படுத்தி நிரப்புகிறோம். இதனால் பகலில் அமல்கள் செய்யாமல் அதிக நேரம் தூங்குகிறோம்.

மேலும், நோன்பு திறக்கும் போது அளவுக்குமீறிய உணவுகளை உண்டு உடலுக்கு நோயையும், மார்க்கத்திற்கு முரணாக வீண்விரயமும் செய்கிறோம்.

3) நோன்பின் மூலம் உடலுறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு ஆரோக்கிய நிலையை அடைவதை மார்க்கம் மட்டுமல்ல விஞ்ஞானமும் தெளிவாக்கியுள்ளது. ஆனால், அளவுக்கு மீறிய உணவுகள், தூக்கம் என்பவற்றால் நாம் 10வது நோன்பிலே நோய்க்காரனாக மாறுகிறோம்.

4) நோன்பு மாதம் ஸகாத் மற்றும் ஸதக்கா என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்குகிறது. வருடம் முழுவதும் ஓயாது உழைக்கும் மனிதனுக்கு இறைவனுக்குச் செலத்த வேண்டிய பங்கினை ஏழைக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் நமது வருமானமும் பொருளாதாரமும் தூய்மையும் வளர்ச்சியும் அடையும்.

ஆனால் அதிகமானவர்கள் தங்களது சொத்து வருமானங்களை உரிய முறையில் கணிப்பிடுவதில்லை. மாறாக, ஓரிரு நபர்களுக்கு அரிசி, உடுப்பு, பணத்தைக் கொடுத்து திருப்தியடைகின்றனர். நாம் ஸக்காத் கடமையை தவறான முறையில் பயன்படுத்தி ஸதக்காவின் பயனை மட்டும் அடைகிறோம்.

ஆகவே, இந்த மாதத்தின் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியும் பயனும் உடையது. நம்மை பக்குவப்படுத்திக் கொள்வோம். மனிதன் தவறு செய்யக்கூடியவன். ஆனால், தவறுகளைத் திருத்திக் கொள்ள இறைவன் வழங்கும் சந்தர்ப்பத்தை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிடின் நம்மை விட பாவிகள் எவருமில்லை. அத்துடன், வாழ்க்கையில் இனி வருங்காலங்களில் இந்த மாதத்தில் கற்றுக் கொண்டவைகளைக் கடைப்பிடித்து முஸ்லீமாக பிறந்த நாம், முஸ்லிமாகவே மரணிப்போம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*