சூடுபிடித்திருக்கும் கட்டார், சவுதி அரேபியா விவகாரம்: எமது கடமை என்ன?

Spread the love

dvdvddvddeசனூஸ் சிஹாப்தீன் நளீமி

கட்டார், சவுதி அரேபியா விவகாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று பலரும் பலவிதமாகப்பேசும் இச்சூழலில் ஒரு உண்மையை நாம் நிதர்சனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். யார் தோற்பது? யார் ஜெயிப்பது? என்பது இங்கு முக்கியமல்ல. யார் தோற்றாலும் நன்மையடைவது அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, எமது பிரார்த்தனைகள் உம்மத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டுமேயன்றி, ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருங்கி விடக்கூடாது.
الدعاء صلاح المؤمن  (துஆ என்பது ஒரு முஃமினின் ஆயுதம்)

எமது முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு பிரச்சினை ஆய்வுப்பொறிமுறையின்றி கருத்துகளை முன்வைப்பதாகும்.

1.குறித்த கட்டாருக்கான தடையில் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகை எந்தளவு தாக்கஞ்செலுத்தியதென்பதை அவனே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதனை எமது சமூகம் பார்க்கத் தவறி விட்டது.

2. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா? என்ற தேடலை எமது சமூகம் மேற்கொண்டிருக்கவில்லை.

3. இரண்டு சர்வதேச நாடுகள் ஒன்றுடனொன்று தொடர்புகளை மேற்கொள்கையில், அதை சர்வதேச சட்டத்துடன் எப்படி உரசிப்பார்ப்பது என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

State immunity (அரச விடுபாட்டுரிமை), Diplomatic immunity (இராஜதந்திர விடுபாட்டுரிமை), Treaties and conventions (பொருத்தனைகளும் சமவாயங்களும்) போன்ற சர்வதேசச் சட்டத்தின் அத்தனை கூறுகளோடும் உரசிப்பார்க்க வேண்டுமேயன்றி, கட்டார் ஈரானுடன் மேற்கொள்ளும் இராஜதந்திர உறவுகளையெல்லாம் எடுத்த எடுப்பில் ஷீஆச்சாயம் பூசி விடக்கூடாது.

அது போல, சவுதி அரேபியா அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் இராஜதந்திர உறவுகளை யூதச்சாயம் கொண்டு நோக்கவும் கூடாது. உலகில் இன்னொரு நாட்டுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்திருக்காத நாடொன்று உலக வரை படத்தில் உண்டா? என்ற கேள்விக்கு விடையை அறிந்தோர், எடுத்த எடுப்பில் நாடுகளுக்கு பத்வா வழங்கமாட்டார்கள்.

4. வலைகுடா நாடுகளைப் பிரித்தாள்வதில் அமெரிக்க, இஸ்ரேலின் பங்கு என்னவென்பதை நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

Divide and Rule பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு அமெரிக்கா தனது நாட்டை எப்படி இஸ்தீரமாகப் பேணி வருகிறதென்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் காணப்படுகின்ற ஒரு சட்டம் Anti Trust Law ஆகும். உலகில் எந்த நாடுகள் தமக்கிடையில் வியாபர ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும், அதனால் அமெரிக்கா பாதிப்புறும் எனக்கருதினால் உடனடியாக அமெரிக்கா விரைந்து செயற்பட்டு, அந்நாடுகளை பலவீனப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது வழமை. இச்சட்டம் குறித்த கட்டார் விவகாரத்தில் செலுத்தியுள்ள தாக்கம் யாதென்பதையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

இப்படி எண்ணற்ற விவகாரங்கள் குறித்த விடயத்தோடு தொடர்புபட்டிருக்கின்ற நிலையில், நாம் வெறுமனே கட்டார் விவகாரத்தை ஷீஆக்களுக்கெதிரான அகீதா சார் போராட்டமாக மாற்றுவது எமது இயலாமையை மட்டுமே காட்டுமேயன்றி, ஒரு அறிவுபூர்வமான கணிப்பாக இராது.

நாம் உண்மையைத் தேடிப்பயணிப்போம். சர்வதேசச் சட்டங்களின் பின்னணியில் எமது ஆய்வை முடுக்கி விடுவோம். ஆய்வின் பின் யார் அமெரிக்க, இஸ்ரேலால் பகடைக்காயாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*