முஸ்லிம் நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும் கட்டார்- ஏ.எல்.நிப்றாஸ்

Spread the love

sdscvமேற்குலகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியின் கடைசி அங்கம் தான் இப்போது வளைகுடாவில் திரையிடப்பட்டிருக்கின்றது. இதை நவீன பாணியிலான காலனித்துவம் என்றும் சொல்லலாம்.

கட்டார் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற தடை, வரலாற்றைப்புரிந்து கொண்டவர்களுக்கு ஆச்சரிமான விடயமல்ல. ஆனால், அரபுலகின் ராஜாக்களாக இருக்கின்ற நாடுகள் இந்த யூத, அமெரிக்க, இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலுக்கு துணை போயிருக்கின்றமையும் அதற்குள் அகப்பட்டிருக்கின்றமையும் உலக முஸ்லிம்களிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே யதார்த்தம்.

முஸ்லிம்களிடையேயும் முஸ்லிம் நாடுகளுக்கிடையிலும் பிரிவை உண்டு பண்ணுவதும், அந்த மக்களை அழிப்பதும், அடக்கியாளுவதும் மேற்குலகின் நீண்ட காலத்திட்டமாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலந்தொட்டு இந்த பகையுணர்வு சரித்திரத்தினூடு கடத்தப்பட்டு வந்திருக்கின்றது.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளைகுடா யுத்தம், பொஸ்னியா மீதான ஆதிக்கம் தொடக்கம் காசாவில் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுக்குப் பின்னால் மர்மங்கள் நிறைந்த நீளமான ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது. இதில் முதலாவது நிகழ்ச்சி, இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களை அடக்குவதாகும்.

முஸ்லிம் நாடுகளின் நிலை
முஸ்லிம் நாடுகள் எல்லாம் தூய்மையான நாடுகளல்ல. அதன் ஆட்சியாளர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களுமல்லர். இஸ்லாத்தைப் பின்பற்றுதல் என்று சொல்லிக் கொண்டாலும், அங்கு புனித இஸ்லாம் மதத்திற்கெதிரான எத்தனையோ காரியங்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆனால், அரபு நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, நாட்டாமை வேலை பார்க்குமளவுக்கான தார்மீக அருகதையை அமெரிக்காவும் மேற்குலக கூட்டாளிகளும் கொண்டிருக்கின்றார்களா? என்ற கேள்விக்கான பதில் நாம் அறியாததல்ல.

தீவிரவாதத்தை ஒழிப்பதும், ஆயுதக்குழுக்களைக் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் பணி மட்டுமல்ல. அது ஒவ்வொரு முஸ்லிம் பொது மகனினதும் கடமையாகும். எந்தக்காரணத்திற்காகவும் மக்களைக் கொல்கின்ற, அட்டூழியம் புரிகின்ற பயங்கரவாத, தீவிரவாதக் குழுக்களுக்கு உலக முஸ்லிம்கள் ஆதரவு வழங்க முடியாது.

இஸ்லாத்தின் பெயரைச் சொல்கின்றார்கள் என்பதற்காகவோ தாடி வைத்திருக்கின்றார்கள் என்பதற்காகவோ அவர்கள் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்றார்கள் என்ற எடுகோள் ஒன்றின் அடிப்படையில்  ஆயுத இயக்கங்களை முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது. அவ்வாறு ஆதரிக்கவுமில்லை. அது வேறு விடயம்.

ஆனால், பயங்கரவாதத்தை ஒழித்தல் என்றும் அமைதியை நிலை நாட்டுதல் என்ற கோதாவிலும் செயற்படும் நாடுகள் அதற்கான யோக்கியதையைப் பெற்றிருக்கின்றார்களா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், மேற்படி ஆயுதக்குழுக்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் இருக்கின்ற இராணுவத் தேவைகளுக்கு ஆயுதங்களை விற்பதும், பயிற்சிகளை அளிப்பதும் பெரும்பாலும் யாரென்று தெரியும்.

அவ்வாறான ஆயுதக்குழுக்களை முஸ்லிம் நாடுகளுக்குள் தூண்டி விட்டு கலவரங்களை ஏற்படுத்தி விட்டு, நாட்டாமை வேலை பார்ப்பதும் யாரென்பது உலகறிந்த ரகசியம் தான்.

அணுவாயுதத்தைத் தேடுதல் என்ற பெயரில் சதாம் ஹுசைனை பிடித்து தூக்கிலிட்டது. லிபியா மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து கடாபியை பலியெடுத்தது. எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முர்ஸியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தது. சிரியாவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பது என அவர்கள் நினைக்கின்ற ‘அமைதியை’ நிலைநாட்டுவதற்காக எத்தனையோ ஆயிரம் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. அந்தந்த நாடுகளில் வாழும் எத்தனையோ இலட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டது.

திராணியற்ற மன்னர்கள்
முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் பலவீனங்களை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, அங்குள்ள குழுக்களைத் தூண்டி விட்டு கலவரங்களை ஏற்படுத்தி விட்டு, அந்த சமயம் பார்த்து நீதி தீர்த்தல் என்ற ஆடையை அணிந்து கொண்டு உலக வில்லன்கள் களமிறங்குவதும், உள்நாட்டுக் கலவரங்களை ஊதிப் பெருக்க வைத்து உலகப்போர் போல காட்டி, அதில் தமது உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும் முஸ்லிம் விரோதச் சக்திகளுக்கு கைவந்த கலை.

ஆனால், பஸ்தீனத்தில் ஒரு கவச வாகனத்திற்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கின்ற அரைக்கழிசன் போட்ட சிறுவனுக்கு இருக்கின்ற தைரியம், காசாவில் வெளிநாட்டுப் படைச்சிப்பாயின் துப்பாக்கிக்கு பயப்படாமல் கையில் கல்லைப் பொறுக்கி எறிய முற்படுகின்ற ஒரு கிழவனுக்கு இருக்கின்ற மனோதிடம் இன்று சில முஸ்லிம் நாடுகளுக்கில்லாமல் போனதன் விளைவைத்தான் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓரிரு முஸ்லிம் நாட்டு மன்னர்களைத் தவிர, மற்ற யாருக்குமே அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஏனைய மேற்குலக சக்திகளையும் எதிர்த்து நிற்பதற்கோ அவர்களுக்கெதிராக ஒரு கண்டன அறிக்கை விடுவதற்கோ திராணியில்லை. ஏனென்றால், அவர்களை அறியாமலேயே அரபுலக ராஜாக்கள் பலர் அமெரிக்காவின் மாயவலைக்குள் கட்டுண்டு கிடக்கின்றார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு சொகுசு வாழ்க்கையை வெறுத்தார்கள் என்பதை மறந்த அரபுலகின் நவீன ஆட்சியாளர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா அவர்களுக்கு ‘கொடுக்க வேண்டியதை’ கொடுப்பதால் அவர்கள் தங்களது சுயத்தை இழந்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அதாவது, சுருங்கக்கூறின், கட்டார் உட்பட எந்த முஸ்லிம் நாடும் முஸ்லிம் பெயர் தாங்கி நாடுகளாக இருக்கின்றனவே தவிர, உண்மையான இஸ்லாமிய நாடுகளாக இல்லை. தங்களது சுகபோக ஆசைகளை மறைப்பதற்காகவும், அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் பொருளாதார, இராணுவ நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், குறிப்பாக, தாம் பயங்கரவாதத்திற்கெதிரானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவும் மேற்குலகுக்கு ஏற்றாற்போல நடிக்க வேண்டியவொரு நிலையிலேயே முஸ்லிம் நாடுகள் பலவும் இருக்கின்றன. அதுவே, இன்று கட்டார் மீதான தடைக்கும் கட்டாரை தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்கும் வித்திட்டுள்ளது.

மத்திய கிழக்கின் அமெரிக்கா
மத்திய கிழக்கின் மிகச்சிறிய நாடான கட்டாரில் 25 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுள் 88 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களுள் இலங்கையைச் சேர்ந்த 130000 பேரும் உள்ளடங்குகின்றனர். மிகச்சிறிய நாடாக இருந்தாலும், மிகப்பெரிய செல்வந்த நாடாக கட்டார் திகழ்கின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகமான நாடாக கட்டார் உள்ளது.

இராணுவ ரீதியாக நோக்கினால், அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான மிகப்பெரிய விமானப்படைத்தளம் கட்டாரிலேயே அமைந்திருக்கின்றது. இது கட்டாருக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிளஸ் பொயின்டும் பிடிமானமுமாகும். அத்துடன், சிறிய தேசமாக இருந்தாலும் யெமன், பலஸ்தீனம், சோமாலிய உள்ளிட்ட நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

அதுமட்டுமன்றி, லிபியாவிலும் சிரியாவில் இடம்பெற்ற கள நிலை மாற்றங்களுக்கு கட்டாரின் மறைமுகப் பங்களிப்பு முக்கியமானதெனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு அமெரிக்காவையும் அதனது கூட்டாளிகளையும் பொறுத்தமட்டில் கிழக்கையும் மேற்கையும் பிரிக்கின்ற கேந்திர முக்கியத்துவமிக்க ஒரு மையமாகத் திகழும் கட்டாரே இன்று இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றதென்பது கவனிப்பிற்குரியது.

கட்டார், பயங்கரவாதத்திற்கு துணை புரிவதாகவும் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதாகவும் குறிப்பிட்டே அரபு நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ளதுடன், எழுதப்படாத பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே, இது ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விவகாரமாகும். இது விடயத்தில் இராஜதந்திர, மூலோபாய, இராணுவ, பொருளாதார நலன்கள் இருக்கின்றன. பல பின்புலங்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இது நடந்தேறுகின்றது.

அதைவிட, முக்கியமாக உலகில் இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத சிந்தனையும், அரபு நாடுகளின் ஒற்றுமையைச் சிதைக்கும் முதலாளித்துவத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கான பல காரணங்களை நம்மால் கூற முடியுமாயினும், நமது அறிவுக்கு எட்டாத பல சூட்சுமங்களும் இதன் பின்னாலிருக்குமென்பதை மறந்து விடக்கூடாது.

துண்டிக்கப்பட்ட உறவு
கட்டாருடனான தமது இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக ஓரிரு நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, யெமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அறிவித்தன. அதன்படி இந்த நாடுகளுக்கும் கட்டாருக்குமிடையிலான விமான சேவைகள் சில மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டதுடன், இந்நாடுகளிலுள்ள கட்டார் நாட்டவர்களும் கட்டாரிலுள்ள மேற்படி நாடுகளின் பிரஜைகளும் நாடு திரும்பும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பின்னர் மாலைதீவும் ராஜதந்திர உறவுகளை மாத்திரம் துண்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தடையின் காரணாமாக வான், கடல், தரைமார்க்கத் தொடர்புகளும் பெருமளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், கட்டாருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.

நீண்ட காலமாக மேற்படி நாடுகளின் நேச நாடாக இருந்து வந்த கட்டார் திடுதிடுப்பென தனிமைப்படுத்தப்படுவதன் பின்னணியில் மேற்குலகின் அதுவும் குறிப்பாக, அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு ஊகிக்கப்படுவதற்கான அடிப்படைக்காரணம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயஞ்செய்தமையும் அங்கிருந்து இஸ்ரேலுக்கு சென்றமையுமாகும். வொஷிங்கடனுக்கு திரும்பியிருந்த ட்ரம்ப், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இட்டிருந்த டுவிட் பதிவுகள் மேற்படி ஊகத்தை உண்மையென நிரூபிக்கப் போதுமானவையாகவுள்ளன.

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் கட்டார் ஆட்சியாளர் உட்பட அரபுலகத் தலைவர்களைச் சந்தித்து விட்டு, இஸ்ரேல் வழியாக அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்த ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனது விஜயத்தின் போது தீவிரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர்கள் (அரபு அரச தலைவர்கள்) சொன்னார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அதே வேளை, கட்டார் மீதான தடை அறிவிப்பு வெளியாகிய பிறகு இட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘இது பயமூட்டும் தீவிரவாதத்தின் முடிவுக்கான ஆரம்பம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே தான், தமது சகோதர முஸ்லிம் நாடொன்றுடனான உறவைத் துண்டிக்குமளவுக்கு மேற்படி முஸ்லிம் நாடுகளுக்கும் அழுத்தங்களைக் கொடுத்தது அமெரிக்காவே என்பது ஓரளவுக்கு பட்டவர்த்தனமாகியுள்ளது. இவ்விடயத்தில் கட்டார் சிக்கியுள்ளதாகத் தெரிந்தாலும், உண்மையில் சவூதியும் மற்றைய முஸ்லிம் நாடுகளுமே மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்பட்டு தவிக்கின்றன என்பது உன்னிப்பாக நோக்குகின்ற அவதானிகளின் கருத்தாகும்.

இவ்வாறு கட்டாரின் மீது ஒரு புறமொதுக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றுள் அமெரிக்கா மற்றும் அதனது கூட்டாளிகளின் காரணங்களும் கட்டாரைத் தடை செய்துள்ள அரபு நாடுகளின் காரணங்களும் அதே போன்று, பொதுவாக முஸ்லிம்களை அடக்கியாள விரும்புகின்ற யூத, மேற்கத்தேய சக்திகளின் காரணங்களும் எனப்பல்வேறு காரணங்களும் பின்புலங்களும் இருக்கின்றன.

காரண காரியங்கள்
இவற்றுள், அமெரிக்காவின் காரணமும் திட்டமும் முதன்மையானது. பொதுவாக, கட்டார் போன்றதொரு தேசத்திற்கு பாடம் புகட்டுவதன் மூலம் மொத்த அரபு நாடுகளுக்கும் அரபு வசந்தத்தை ஞாபகப்படுத்தல், தீவிரவாதக்குழுக்கள் அல்லது முஸ்லிம் அமைப்புக்கள், முஸ்லிம் நாடுகளில் கூட அடைக்கலம் பெற முடியாத நிலையை உருவாக்குதல், அரபுலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தல், அரபு நாடுகளுக்கிடையிலான உறவையும் கட்டுக்கோப்பையும் சிதைத்தல், குறிப்பாக மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடான கட்டாரை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுதல் போன்ற காரணங்களின் அடிப்படையில் அமெரிக்கா இவ்வாறான ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.

இதே வேளை, சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், யெமன் போன்ற நாடுகள் கட்டாரிலிருந்தும் வேறுபட்ட தன்மையைக் கொண்டவை என்று குறிப்பிட முடியாது. மாறாக, எல்லாமும் ஒரே விதமான குட்டையில் ஊறிய நாடுகளே. ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் என அமெரிக்காவால் அழைக்கப்படுகின்ற சில சிம்மசொர்ப்பன இயக்கங்களுக்கு கட்டார் சாதகமாகச் செயற்படுகின்றது. அவ்வளவு தான் வித்தியாசம்.

தடை விதித்துள்ள மேற்படி 7 நாடுகள் அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கியுள்ள அதே நேரம், மேற்குலகுடனான வர்த்தக நலன்களிலும் தங்கியிருக்கின்றது. எனவே, அந்நாடுகளுக்கு அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் தேவையேற்பட்டிருக்கின்றது. நாம் உங்களது பக்கமே நிற்கின்றோம். தீவிரவாதத்திற்கு நாம் ஆதரவு கிடையாது என்ற செய்தியை மேற்குக்கு சொல்ல அவர்கள் விளைகின்றனர்.

இதன் மூலம் தமது நாடுகளில் இராணுவ ரீதியாக அமெரிக்கா தாக்குதலையோ ஆதிக்கத்தையோ செலுத்துவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சம்பந்தப்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றன எனக்கருத முடிகின்றது. தீவிரவாதத்தை ஒழித்தல் என்பது இரண்டாம் பட்சமான இலக்கேயாகும்.

மறுபுறத்தில் சிரியா, ஈராக், யெமன், ஆப்கான் போன்ற நாடுகளுக்கான அமெரிக்காவின் மிகப்பெரிய வான்படைத் தளத்தை கொண்டிருக்கின்ற கட்டாரை தடை செய்வதற்கு அமெரிக்கா இந்தளவுக்கு ‘ரிஸ்க்’ எடுப்பது ஏன் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

உண்மையில், இவ்வாறான படைத்தளமுள்ள நாட்டில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுமானால், நிதியுதவி அளிக்கப்படுமானால் அது குறித்து அமெரிக்கா கரிசனை கொள்ளும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தனது இராணுவ, பொருளாதார பலத்தின் மூலம் நேரடியாக அதைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் அரபு நாடுகளினூடாக அதை ஏன் செய்திருக்கின்றது என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது.

சிம்ம சொப்பனங்கள்
சில விடயங்களைப் பொறுத்தமட்டில் தற்கால உலகின் பொது ஒழுங்கிற்கு மாறுபட்டதாக கட்டார் செயற்படுகின்றதென்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அது முற்றாக மறுதலிக்க முடியாதது. ஆனால், இஸ்லாத்திற்கெதிரான உலக அடக்குமுறையைப் பொறுத்தமட்டில் சில முற்போக்கு அணுகுமுறைகளை கட்டார் வெளிப்படுத்தியுள்ளது என்ற நிலைப்பாடே முஸ்லிம்களிடையே காணப்படுகின்றது.

அந்த வகையில், கட்டார் நாடானது பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவிக்கு அடைக்கலம் கொடுத்தமை, பலஸ்தீனத்தில் அதிகாரத்திலுள்ள ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கின்றமை, எகிப்து சகோதரத்துவ கட்சியுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளமை, தலிபான்களின் செயற்பாடுகளுக்கு இடமளித்துள்ளமை மற்றும் முஸ்லிம் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கின்றமை போன்ற செயற்பாடுகள் மேற்குலகின் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவையாகக் காணப்படுகின்றன.

எனவே தான், இந்த நடவடிக்கைகளை கட்டார் விலக்கிக் கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் கட்டாரின் உறவு வளர்ச்சியடைந்து வருகின்றமையும் மேற்குலகின் பார்வையில் பட்டுள்ளது.

குறிப்பாக, கட்டார் ஹமாஸ் இயக்கத்தையும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தையும் ஆதரிக்கின்றமை (அவ்வாறு கருதப்படுகின்றமை) அமெரிக்காவினதும் அவர்களது கூட்டாளிகளையும் கதி கலங்க வைத்திருக்கின்றது என்று சொல்லலாம். ஏனெனில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் ஹமாஸும் அரபு நாடுகளுக்கு மாத்திரமன்றி, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூட சிம்மசொப்பனமாக இருந்து வரும் இயக்கங்களாகும்.

எனவே, இவ்வாறான இயக்கங்கள் மத்திய கிழக்கில் மேலும் பலம் பெறுமென்றால் அகன்ற இஸ்ரேல், பிராந்திய இராணுவ ஆதிக்கம், முஸ்லிம் நாடுகளின் மீதான மேலாதிக்கம் போன்ற மேற்குலகக் கனவுகளுக்கு பெரும் சவாலாக அமையுமென்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதுகின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பலவிதமான பின்புலங்களின் அடிப்படையிலேயே கட்டார் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கட்டார் எல்லா விடயத்திலும் சரியெனக்கூறவும் முடியாது.

சமரசம் அவசியம்
எவ்வாறிருப்பினும் நமது கைகளைக் கொண்ட நமது கண்களைக் குத்த வைக்கும் முயற்சியின் மூலம் கட்டாரில் மட்டுமல்ல, அதற்கெதிராக தடை விதித்த நாடுகளிலும் பல்வேறு தளம்பல் நிலைகள் ஏற்பட்டுள்ளன. கட்டாரில் ஏற்பட்ட நீர் உணவுப்பொருள் தட்டுப்பாட்டையும் போக்குவரத்துப் பிரச்சினைகளையும் சீர்செய்வதற்கு துருக்கி, ஓமான், ஈரான் போன்ற ஏனைய நாடுகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.

அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை இலங்கையும் எடுக்குமென்றால் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கைத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.

இந்தத்தடைக்கு அமெரிக்காவே காரணம் என்ற விடயம், ட்ரம்பின் டுவிட்டர் பதிவின் மூலம் அம்பலமாகியது. இது அமெரிக்காவில் கூட ஒரு சிக்கலைத் தோற்றுவித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதனால் தமது இமேஜ் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு பென்டகன் அதிகாரிகள் முயற்சிப்பதாக சர்வதேச செய்தியொன்று கூறுகின்றது. இதனால் தான் அரபுலக ஐக்கியத்திற்கு ட்ரம்பும் அழைப்பு விடுத்திருக்கின்றார் எனலாம்.

இந்நிலையில், மூன்றாம் தரப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட சமரசப்பேச்சுக்களும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை. சவூதியால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பதற்கும் கட்டார் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், தமது வெளிநாட்டுக் கொள்கைகளில் சமரசத்திற்கு இடமில்லை என்று கட்டார் அரசாங்கமும் அறிவித்துள்ளது. இது அபாயகரமான நிலைமை என்று அவதானிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, கட்டார் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் தம் பக்கத்திலிருக்கின்ற தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்பதுடன், யாருடைய தேவைக்காகவும் கட்டாரைத் தனிமைப்படுத்தும் முயற்சியை அரபு நாடுகள் மேற்கொள்ளக்கூடாது.

முஸ்லிம் நாடுகள் தமக்கிடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதன் மூலம், பிரித்தாளும் சூழ்ச்சி, நவீன பாணியிலான காலனித்துவம் ஆகியவற்றுக்கெதிரான ஒன்றுதிரண்ட பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 11.06.2017)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*