“ஸகாத்துல் பித்ர்” கூட்டாகவா? தனியாகவா? பணமாகவா? பொருளாகவா? எவ்வாறு நிறைவேற்றுவது ? -எம்.எல்.பைசால் காஷிபி

Spread the love

ww“ஸகாத்துல் பித்ர்” என்ற  பெயரும், அதன் சட்டதிட்டங்களும் ரமழான்  மாத இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டு பெருநாள் தொழுகையுடன்   நிறைவடைவதை நாமறிவோம். தேவையின் போது, நாம் உரிய அறிவினைப்பெற்று, அதன்படி  நடக்க ஆர்வாமாய் இருப்பதே இதற்குக்காரணம்.

இன்று எமது பிரதேசங்களில்  “ஸகாத்துல் பித்ர்” பற்றி  பின்வரும்  கருத்துக்களும், கேள்விகளும் நிலவுகின்றன.

01.அரிசி, தானிய வகையினைத்தவிர வேறேதும் உணவுப்பொருட்களைக் கொடுக்கலாமா?
02.தனியாக  நிறைவேற்றும்  அதே வேளை, கூட்டாக  நிறைவேற்ற நபி வழியில் ஆதாரமுண்டா?
03.தானிய வகையினைத்தவிர்த்து அதன்  அளவுக்கேற்ப பெறுமதியை (பணமாக) கொடுக்கலாமா?

மேற்சொன்ன விடயங்கள்  பற்றி  நீண்ட காலமாக  அறிஞர்களும், இமாம்களும் கருத்துப்பரிமாறி  சில கருத்துக்களையும், தெளிவுகளையும்  வழங்கியுள்ளனர்.

முதலாவாது வகை கருத்தினை நோக்கும் போது, குறிப்பிட்ட  பிரதேசத்தில் அம்மக்கள் பிரதான உணவாக உட்கொள்ளும் உணவுப்பொருட்களைக் கொடுக்க வேண்டும். பெருநாள் தினத்தில் வறிய குடும்பத்தினர் அதனைப் புசித்து சந்தோசத்தினை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்காக குறிப்பிட்ட  பிரதேச மக்கள் தமது உணவாக உட்கொள்ளும் பொருட்களைக் கொடுப்பதே சிறந்ததென்று பெரும்பாலான அறிஞர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். நபியவர்கள் உணவாக  உட்கொண்ட தானிய வகை எம்மிடம் பிரதான உணவாக இல்லாததனால், நாம் அரிசி, பால் வகை, கறி வகை உணவுகள் போன்ற பொருட்களைக் கொடுக்க முடியும்.

இரண்டாவது வகையினை  நோக்கும் போது, தனியாகக் கொடுப்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் அறிஞர்களிடம் காணப்படவில்லை. மாற்றமாக, அதனைச் சிறப்பாகவே  கருதுகின்றனர். கூட்டாக நிறைவேற்றுவதைக்கூட குறை கண்டதாக அறிய முடியவில்லை. மாற்றமாக, அதனை ஊக்குவித்துள்ளதை அறியலாம்.

உதாரணமாக, அண்மைக்காலங்களில் வாழ்ந்து மரணித்த சேஹ் உதைமீன் (றஹ்) போன்ற அறிஞர்கள் குறை காணாது, அதனைச் சரி கண்டதுடன், அவ்வாறு கொடுக்கும் போது உரிய நேரத்திற்கு கொடுக்கப்படுவதையும், உரியவர்களுக்குச் சென்றடைவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்தத்தில் வரும் 2311 இலக்க ஹதீஸினை  ஆதாரமாகக் கொள்வதைக்காணலாம்.

கூட்டாக  நிறைவேற்றுவதென்றால் யாரிடம் பொறுப்புச்சாட்டுதல்?
இஸ்லாமிய நாடுகளில் வாழும் மக்கள் அந்நாட்டின் சமூக நிறுவனங்கள் மற்றும் நலன்புரி அமைப்புகள் மூலம் இதனை  நிறைவேற்றுவதையும், மேலும் சிலர் குடும்பமாகச் சேர்ந்து உலருணவுப்பொதி செய்து, இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதையும் உதாரணமாகக் கொள்ள முடியும்.

எமது நாட்டில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்க பள்ளிவாசல்கள் அல்லது அமைப்புக்கள், குழுக்கள் முன்வரும் போது, அவர்களை வழிப்படுத்தி ஊக்குவிக்க முடியும். அவ்வாறான ஏற்பாடுகள் இல்லையென்றால், தனியாக நிறைவேற்றலாம். அதுவே  உரியவர்களுக்கு  உறுதியாகவும் அமையும்.

உரிய  அளவினை விட  மேலதிகமாகக் கொடுக்கலாமா?
உரிய அளவினைக் கொடுப்பதே நபிவழி.  அதில் குறைத்துக் கொடுத்தால் அது “ஸகாத்துல் பித்ர்” எனக்கணிக்கப்பமாட்டாது. மாறாக, அது  தர்மமாகவே கணிக்கப்படும். மேலும், மேலதிகமாகக் கொடுத்தால் அவர் உரிய நன்மை பெறுவதுடன், ரமளானில் தர்மம் செய்த கூலியினை  அவர் பெற்றுக்கொள்ள  முடியும். (மேலதிகமாகக் கொடுப்பது கொடுப்பவரினைப் பொறுத்தது) அது பற்றி ஹதீஸ்களைக் காண முடியவில்லை.

அதே வேளை, மேலதிகமாகத் தருமாறு யாரும் கேட்டு அதன் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை வளர்ப்பதை விட, அமைதியாக இருப்பதே சிறப்பு.

மூன்றாவது  வகை பணமாக கொடுக்கலாமா? என்ற கருத்தினை நோக்க வேண்டியுள்ளது. பணமாகக் கொடுக்க வேண்டிய தேவை  உணரப்பட்டால், பெறுமதியினைக் கொடுக்கலாமமென இமாம் அஹ்மது (றஹ்) போன்றோர்கள் தெரிவிக்கும் அதே வேளை, இமாம் இப்னு  தைமிய்யா (றஹ்) அவர்களும் அக்கருத்திற்கு  உடன்பட்டுள்ளார்கள்.

இக்கருத்து இவ்வாறிருந்த போதிலும், அதிகமான அறிஞர்கள் இக்கருத்துக்கு உடன்படவில்லை. பொருட்களை வழங்குவதன் மூலம் நபி வழியினைப் பின்பற்றியே நடைமுறைப்படுத்தல் அவசியமென அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதே வேளை, நவீன காலத்தில் முஸ்லிம்கள் அகதிகளாக பல நாடுகளில் வாழ்வதால் அவர்களுக்கு “ஸகாத்துல் பித்ரி”னைப் பொருளாகக் கொடுப்பதை விட “ஸகாத்துல் பித்ரின்” பெறுமதியினைக் கொடுப்பதை சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலை வரும் போது, குறிப்பிட்ட நாட்டின் தேவை உணரப்பட்டு, உத்தியோகபூர்வத் தீர்மானத்தின் பிரகாரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் நிபந்தனையிட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இலண்டன், அல்ஜீரியா போன்ற நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் முடிவெடுத்துள்ளதை எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். (இத்தேவை எமது நாட்டில் உணரப்படவில்லை)

எனவே, ரமலானில் விட்ட தவறுகளுக்கான பரிகாரமாகவும், ஏழைகளின் உணவாகமுள்ள “ஸகாத்துல் பித்ர்” இனைக் கொடுத்து நன்மை  பெறுவோம். நன்மை செய்பவர்களை ஊக்குவிப்போம். அகீதா ரீதியாக இணைந்துள்ள அமைப்புகளின் மற்றும் சகோதரர்களின்  கருத்துக்களையும் உள்வாங்கி பொதுவான செயற்பாடுகளை மேற்கொள்வோம். நன்மை புரிந்தோர் பட்டியலில் அல்லாஹ் எம்மைச் சேர்ப்பானாக.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*