நாம் தூரமாகிவிட்டோம்?-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
168
vநாம் இன்று சமூகமயமாக்களில் தனிமைப்பட்டவர்களானோம். நாம் வாழ்கின்ற தேசத்தில் அடிமைகளாகி, நமது சமூக வலைத்தளத்திலிருந்து தூரமாகி வருகிறோம். நாம் பௌதீக, குடும்ப மற்றும் மதம் சார்ந்த கட்டமைப்பில் மிகவும் இறுக்கமான வரலாற்றப் பின்னணிக்குச் சொந்தக்காரர்கள்.

சமூகம் சார்ந்த நடமுறை விடயங்களில் நாம் பங்காளிகளாக இல்லாமல், பார்வையாளராக மாறியுள்ளோம். சமூகத்தின் மத்தியஸ்தமாக விளங்கிய பள்ளிவாசல் பரிபாலன சபை முதல் பல இஸ்லாமிய அமைப்புக்கள் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. இவர்களால் மக்கள் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை.

அரசியல் ரீதியாக பிளவுபட்டு, தூரமாகி இருந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் தனி மனிதச் செயற்பாடுகள் ஓரளவு மக்கள் மயமானது. இருந்தும், நவீன காலத்து மார்க்கத்தில் உண்டாகிய பிரிவினை மற்றும் கொள்கை வேறுபாடுகள் மீண்டும் சமூகக்கட்டமைப்பை பலவீனமாக்கியது. இதன் காரணமாக, சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்விற்காகச் செயற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மார்க்க அமைப்புகள் அதே சமூகத்தின் தோல்விகளில் பங்காளியாகுவது கவலைக்குரியதாகும்.

உண்மையில் இஸ்லாம் தனி மனிதனுக்குள் காணப்படும் உணர்வுகள் (சந்ததியைப் பெருக்கும் உணர்வு (Procreational Instinct), சொத்துச் சேர்க்கும் உணர்வு (Accumulating wealth), ஆத்மீக உள்ளுணர்வு (religious instinct) மற்றும் பாதுகாப்பு உணர்வு (Protection) ) போன்ற உணர்வுகளையும் அதனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனி மனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதனூடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச்சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணர வேண்டும்.

“சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்களூடாகவும் வரலாறு முன்னேறுகிறது,-மாக்ஸிஸம் கூறுகிறது.

குடும்ப அரசியலை விமர்சிப்பதால் பலன் ஏதுமில்லை என்றாகி விட்டது. ஏனெனில், குடும்பப்பின்னணியின்றி அரசியலில் அறிமுகமானவர்களால் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இறுதியில், மக்கள் மீண்டும் குடும்ப வாரிசுத்தலைகளோடு சங்கமாக வேண்டியதாகி விட்டது. ஆகவே, புதிய மாற்றமென்பது மக்களை விட அதனை முன்னெடுப்பவர்களது போராட்டத்திலே தங்கியுள்ளது.

இன்று ஊரின் சகல அரசியல்வாதிகளின் அடிவருடிகளும், அனுபவிப்பவர்களும் யார்? சில குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே வாரிசு அரசியலை தமக்கு மட்டும் சாதகமான குடும்ப அரசியலாக்கி, சகல அரசியல்வாதிகளையும் கைபொம்மையாக்கி, சுழற்சி முறையில் சூரையாடுவது மிகவும் கொடுமையானதாகும்.

இன்று அரசியல்வாதிகளை குருட்டுத்தனமாக ஆதரிக்கும் ஒருசிலரைத் தவிர, மற்றவர்கள் தங்களது சுய இலாபம், மற்றைய தலைவர்களிடம் அதிகம் அனுபவித்தவர்கள், அனுபவிக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், அனுபவிக்க சந்தர்ப்பம் காத்திருப்பவர்கள் மற்றும் சொந்தக்காலில் நிற்க முடியாதர்கள்.

ஆதலால் வாரிசு அரசியல் என்பதை விட, சில குடும்பங்கள் மட்டும் சகல அரசியல்வாதிகளிடமும் சுழற்சி முறையில் அனுபவிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

சின்ன மீனைப் பெரிய மீனும், அதைப் பென்னாம் பெரிய மீனும் விழுங்கும் விலங்கின விதி இன்னும் செயற்படும் வகையில் சுரண்டல் அமைப்பு நீடிக்கிறது.

ஆகவே, முற்போக்கு சிந்தனைகளை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சமூகத்தில் அதன் பிரதிபலிப்பை, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்த வேண்டும்.

தன்னைத்தானே உணர சுயவிளக்தை ஏற்படுத்தல்
யாதாத்த சூழலுக்கேற்ப இயைபாக்கம் காணல். நிகழ்கால, எதிர்கால நிலைமைகளுக்கேற்ப தன்னை இசைவுபடுத்திக் கொள்ளல். சுயதிறன்களை வெளிக்கொணர்ந்து, அவற்றை முழுமையாக விருத்தி செய்தல் என்பன அவசியமாகும்.

தனக்கான தேவைகளை இயலுமானவரை சமூகத்தின் பெயரால் அடைந்து கொள்கின்றோம். அதே விடயத்தை அடைந்து கொள்ள முடியாத போது, சமூகத்தின் மீது பழி சுமத்துகிறோம். ஆதலால், நமது சமூக உணர்வு நம்மை திருப்திப்படுத்தலுக்கு மட்டுமே மட்டுப்படுத்தும் சுயநலமாக மாற்றியுள்ளோம்.

ஆகவே, மாற்றங்களோ, மாற்றுச்சிந்தனைகளோ இறுக்கமான முரண்பாடு கொண்ட சமூகத்தில் நீண்ட போராட்டமே. அதற்காக நம்மீது சுமத்தப்பட்டுள்ள சமூகம் சார்ந்த கடமைகளில் செயற்பாட்டாளர்களாக இல்லாத போதும், பங்களிப்பாளர்களாக இருப்பது அவசியமாகும்.

அரசியல் புற்றுநோய் சமூகத்தின் சகல மட்டங்களிலும் தாக்கத்தையும் பலவீனத்தையும் தோற்றுவித்துள்ளது. நமக்கான உரிமைகளையும் தேவைகளையும் அடைந்து கொள்வதற்கான மார்க்கமே அரசியல். மாறாக, நமக்கான சமூகக்கட்டமைப்பை சுயநலமிக்கதாகவும் அடிமைத்தனமாகவும் மாற்றிக் கொள்வதற்கல்ல.

முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள், எழுதுபவர்கள் விமர்சனங்களால் சேர்வடையக்கூடாது. ஏனெனில், நாமும் சாக்கடைக்குள் இறங்கியே துப்பரவு செய்ய வேண்டியுள்ளது. அழுக்குகளும், அழுத்தங்களும் எங்களுக்கு பழக்கப்பட வேண்டியதே.

ஆழ்வதும் அனுபவிப்பதும் ஒரு கூட்டம். ஏங்குவதும் ஏமாற்றப்படுவதும் முழுச்சமூகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here