முதலமைச்சரின் நடவடிக்கைகள் அவரது ஆளுமையைக் கேள்விக்குட்படுத்துவதாகவுள்ளது-மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் கடிதம்

0
82

ssssssssபாறுக் ஷிஹான்-
ஊடகவியலாளர் கொலை தொடர்பாக வடக்கு முதலமைச்சர் தனக்குப் பதிலளித்த மின்னஞ்சல் குறித்தும், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றுள்ளது. இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் குறித்தும் மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு பதிலளித்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் பிரதி

நீதியரசர் C.V.விக்னேஸ்வரன்
கௌரவ முதலமைச்சர்
வட மாகாணசபை.

இன்றைய (02 ஜுலை 2017) தனியார்  நாளிதழொன்றின் தலைப்புச்செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் எனதும் எனது கட்சியினதும் மன உளைச்சலைகளையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

தாங்கள் எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் பத்திரிகையொன்றில் தலைப்புச்செய்தியாக வரும் வகையில் வெளியே கிடைக்கச்செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்குமிடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிபரக்கோவைகளும் அதற்கான பதில்களும் பகிரங்கமாக்கப்படுவதில் மாகாண சபை தலைமையின் ஆளுமை விவாதத்திற்குரியதாகிறது.

எனக்கு தாங்கள் தந்த பதில் கடித்தின் பிரகாரம், சிவராம் (தராக்கி) வழக்கு விடயத்தில் முழுமையான விபரங்களை தாங்கள் பெற்றிருக்கவில்லையென்பது புரிந்து கொள்ளப்படுகின்ற அதே வேளை, இது தொடர்பான தங்களின் என் மீதான சந்தேகமான நிலைப்பாடு எனக்கும், எனது குடும்பத்திற்கும் நான் சார்ந்த கட்சிக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதென்பதைத் தெரியப்படுத்துகின்றேன்.

நீங்கள் அறிந்த சிவராம் ஓர் பத்திரிகையாளர். ஆனால், எம்மைப் பொறுத்த வரையிலும் சிவராம் எமது கட்சியின் முன்னாள் செயலாளர் என்பதுடன், இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திற்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தாங்கிய எமது இயக்கப்போராளி. 2005ல் கொல்லப்பட்ட அவரது கொலை வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்தவொரு விடயம்.

சிவராம் வழக்கில் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ என்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் குற்றஞ்சாட்டவோ அல்லது விசாரணக்குட்படுத்தவோதானுமில்லை. மேலும், அரசியல் ரீதியாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ எவருமே என்னை இது தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் குற்றஞ்சாட்டியதோ அல்லது குறிப்பிட்டதோ கிடையாது. இவ்விடயத்தில் நான் எந்தவிதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லையென்பது மிகத்தெளிவாக அனைவருக்குமே தெரிந்த விடயம்.

வடக்கு மாகாண சபையில் நான் உறுப்பினராக வந்த காலந்தொட்டே தங்கள் நோக்கங்களையும், திட்டங்களையும் முன்னிறுத்திச் செயற்படும் ஒருவனாகவே இருந்துள்ளேன். வட மாகாண சபையில் நான் முதலமைச்சர் சார்பான அணிக்குரியவனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

அதே வேளை, முல்லை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாகப் போராடி வரும் நான், மந்திரி சபையில் முல்லை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்று தங்களிடம் பலமுறை கோரிக்கையினை முன்வைத்துள்ளேன். இது எனக்கு அமைச்சுப் பதவியைக் கோரியதாக அர்த்தப்படாது. நானோ எனது கட்சியோ எக்காலத்திலும் அமைச்சுப்பதவிக்காக எவரிடமும் கோரிக்கை வைத்தது கிடையாது.

அதே நேரத்தில், பல இடங்களில் புதிய அமைச்சரவையின் நியமனங்கள் பற்றி மறைமுகமாக தாங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவக்கட்சி மற்றும் முல்லை மாவட்டப்பிரதிநிதித்துவம் எனும் இரண்டு அடிப்படைகளில் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி எமது கட்சிக்கு கிடைக்கலாமென்ற கருத்து பரவலாகக் காணப்பட்டது. அதில் ஒரு நியாயமிருப்பதாகவே நானும் கருதுகிறேன்.

ஆனால், எனது அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்களாகவும் முல்லை மாவட்டத்திற்கு அமைச்சுப்பதவி கிடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ள என் மீதோ அல்லது என் கட்சி மீதோ அரசியல் குரோதம் கொண்ட சிலரால் தாங்கள் தவறாக முடிவுக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளீர்கள் என்பதே எனது புரிதலாகவுள்ளது.

மேலும், இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு எனக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் வழங்காமல், என் கருத்துக்களையோ விளக்கங்களையோ பெறாமல் சந்தேகங்கள் நிறைந்த முடிவுக்கு வந்ததும் அவை பத்திரிகைகளில் வெளிவரும் சூழலை உருவாக்கியதும் மாபெரும் தவறு என்றே நான் கருதுகிறேன்.

முதலமைச்சராகிய உங்களைப் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில், உங்களை விலத்த முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்ளுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்று நீதி மன்றத்தில் நிறைவு பெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து, உங்களையும் என்னையும் எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகிறேன்.

இவ்விடயத்தில் நீங்களும் தமிழ் மக்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்திற்காகவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நன்றி
தங்கள் உண்மையுள்ள
க.சிவநேசன்
மாகாணசபை உறுப்பினர்
வடக்கு மாகாணசபை
02.07.2017.

குறிப்பு: இவ்விடயம் பத்திரிகைகளில் வெளிவந்தபடியால் அதற்குப் பதிலளிக்குமுகமாக பத்திரிகைகளுக்கும் இக்கடிதத்தின் பிரதியை அனுப்பவுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here