முல்லைத்தீவுப் பேரணியும் முஸ்லிம்களும்- வை.எல்.எஸ்.ஹமீட்

0
214
943948_1535310096768337_2132499436675919373_nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக பேரணி நடாத்தப்பட்டிருக்கின்றது. காடுகளை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்ற முற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மனிதன் வாழ்வதைவிட காடுகள் வாழ வேண்டும் என்ற நியதி இன்று இரு பேரினவாதங்களாலும் முன்வைக்கப்படுகின்றது.
காடுகள் மனித ஆரோக்கிய வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை மறுப்பதற்கில்லை. அது எல்லோருக்கும் பொதுவானவொரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுமானால், ஆனால் அது முஸ்லிம்களுடைய விடயத்தில் மாத்திரமே கடைப்பிடிக்கப்படுகின்றது.
வில்பத்து, யால போன்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் கூட அழிக்கப்பட்டு பெரும்பான்மைச் சமூகத்தவர்களின் புதிய பாரிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. காடுகள் மனிதவாழ்வுக்கு அத்தியாவசியமானது என்ற நியதி அங்கு செல்லுபடியாவதில்லை. வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் பாரிய புதிய சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட சமயத்திலும் அந்த நியதி செல்லுபடியற்றதாகித்தான் போனது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வடபுலத்தில் எந்த புதிய குடியேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள், அவர்களாலேயே துரத்தப்பட்ட மக்கள், 25 வருட அவல வாழ்க்கைக்குப்பின் மீண்டும் புதுவாழ்வை எதிர்பார்த்து கடந்த எட்டு வருடாங்களாகக் காத்திருக்கும் மக்கள். அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடை.
காடுகளைப் பாதுகாக்க விரும்புகின்றவர்கள், வடமாகாண சபை அதிகாரத்தை தன்னகத்தே வைத்திருப்பவர்கள், மாற்றுக்காணியை அடையாளம் காட்டி விட்டு, குறித்த இடத்தில் மீள்குடியேற்றத்தை எதிர்த்தால் அது நியாயமாக இருக்கலாம். அதைவிடுத்து, வெறுமனே எதிர்ப்பதானால், தொன்று தொட்டு அவர்கள் வாழ்ந்த பூமியில் அவர்களுக்கு மீண்டுமொரு முறை வாழும் உரிமை மறுக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
கிழக்கில் கல்முனையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழுகின்ற ஒரு பாதைக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்த்தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். தரவைப்பிள்ளையார் கோவில் பிரதான வீதியில் வயற்பக்கத்தில் இருக்கின்றது. குறித்த பாதைக்கும் கோவிலுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை.
இது தொடர்பாக மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றி மாகாண சபையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு இரண்டு வருடமாக கிடப்பில் கிடக்கின்றது. இது தொடர்பாக முதலமைச்சருடனும் அவரது செயலாளருடனும் பல தடவைகள் பேசியிருக்கின்றேன். முஸ்லிம் முதலமைச்சருக்காகப் போராடினோம். இன்று ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இருந்தும் ஒரு தெருவுக்கு பெயர் மாற்றம் செய்யக்கூட முடியாமல் இருக்கின்றோம்.
மாகாண சபை முறைமை வராமலிருந்திருந்தால் மத்திய அரசின் கீழ் இப்பெயர் மாற்றத்தை எப்போதோ செய்திருக்கலாம். இந்நிலையில், மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரத்தை நல்மவர்களும் கேட்கின்றார்கள். பொலிஸ் அதிகாரம் உட்பட.
அவ்வாறானவொரு நிலை வரும் போது, வடபுல முஸ்லிம்களின் நிலையென்ன? தென், சப்ரகமுவ, ஊவா மாகாண ஏன், கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற மொத்த முஸ்லிம்களின் நிலைமையும் என்ன? கிழக்கின் முஸ்லிம்களின் நிலை மாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டதாக நினைக்க வேண்டாம். அங்கும் பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன.
மத்திய அரசாங்கத்திடம் அதிகாரமிருக்கும் போதே, அழுது கொண்டிருக்கின்றோம். ஒன்பது மாகாண அரசாங்கங்களின் கைகளுக்கு முழு அதிகாரமும் போய் மத்திய அரசாங்கம் வெறும் கோதாக மாறுகின்ற போது, நமது நிலையென்ன? ஏன் இதைப்பற்றி நம் சமூகம் சிந்திக்க மறுக்கின்றது.
சம்பந்தன் ஐயா, சமஷ்டி இல்லாவிட்டாலும், ‘அதிகபட்ச அதிகாரம் மீண்டும் பறிக்கப்பட முடியாத வகையில்’ தரப்பட வேண்டும்; என்கின்றார். ‘ மீண்டும் பறிக்கப்பட முடியாத’ என்பது தான் சமஷ்டியின் அடிப்படைத்தத்துவமே’ என்பதைத்தெரியாமல் பேசுகின்றாரா? அல்லது தெரிந்து கொண்டே பேசுகின்றாரா? என்பது புரியவில்லை.
‘மீண்டும் பறிக்கப்பட முடியாத’ என்ற சொற்களுக்குள் இன்னுமொரு முக்கிய அர்த்தம் பொதிந்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை. அதுதான் ‘ மத்திய அரசு மாகாண விடயங்களில் தலையிட முடியாது’ என்பதாகும். எனவே, ஒவ்வொரு மாகாணத்திலும் வாழுகின்ற முஸ்லிம்கள் அந்தந்த மாகாணங்களில் ‘சட்டிக்குள் போட்ட கறி தான்’
சமஷ்டித்தத்துவத்தின் கீழ் ஒவ்வொரு மாகாணமும் கிட்டத்தட்ட ஒரு தனி நாடாகவே இயங்கப்போகின்றது. சாராக்களின் இனவாதத்திற்கெதிராக மத்திய அரசொன்றும் செய்ய முடியாது. அன்று குஜராத்தில் 2000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மோடியின் ஆட்சியில் கொல்லப்பட்ட போது, மத்திய அரசு எதுவும் செய்ய முடியவில்லை.
உத்தர பிரதேசத்தில் மாயாவதி இருந்த வரை, அகிலேஷ் யாதவ் இருந்தவரை சற்று முஸ்லிம்களுக்கு நிம்மதியிருந்தது. ஆனால், இன்று?
அதே போன்று தான் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி இருக்கும் வரை சற்று நிர்மதி. நாளை அவரது ஆட்சி மாறுமானால், எதிர்காலம் கேள்விக்குறி.
இதே நிலை தான் இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்றது. தமிழ்த்தரப்பினர் ஆழுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள். ஆனால், நம்மவர்கள் ‘ ஆழப்படுவதற்கு’ அதிகாரம் கேட்கின்றார்களே! ஏன்?
ஆகக்குறைந்தது நமது பெருந்தலைவர்களை அழைத்து அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற நன்மை, தீமைகளைத் தெளிவுபடுத்தச் சொல்லுங்கள். அரசில் முஸ்லிம்களுக்காக எதை முன்வைத்திருக்கின்றார்கள்? எதை எதிர்த்திருக்கின்றார்கள் என்றாவது கேளுங்கள்.
கிராமம் கிராமமாக புத்திஜீவிகள் கூடி அதிகாரப்பகிர்வின் நன்மை, தீமை தொடர்பாக ஆராயுங்கள். ஜனாதிபதித்தேர்தலில் சமூகம் ஒரு முடிவை எடுத்தது போன்று அதிகாரப்பகிர்விலும் பொது மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்.
சிந்தியுங்கள்: பஸ் சென்றுவிட முன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here