தீர்வுகள் திணிக்கப்படும் முன் விழித்துக்கொள்வோம்!-சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

0
428

fbvf“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாகத் தெரியவில்லை. இந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? என்பதில் சந்தேகமுள்ளது” என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா அபிப்பிராயப்படுகின்றார். அதற்கு அவர் பின்வரும் காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

“நல்லிணக்கத்தை உருவாக்கும் பயணத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. மீண்டும் நாட்டில் இனவாதச் செயற்பாடுகளை பரப்பும் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் உடன் வராது என்ற கருத்தைக் கூறுவோர் ஒரு பக்கம் இருந்தாலும், இதற்கெதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருவதையும் நாம் காணலாம். இதற்குச் சான்றுகளாகப் பின்வரும் கூற்றுக்களை நாம் அவதானிக்க முடியும்.

“அதிகாரப்பகிர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளன. எதிர்வரும் ஆகஸ்டில் பகிர்வு வரைவு வெளிவரும்” என்ற கருத்தை அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கும் அதே நேரம், “புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன” என்று முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கப்பால் “ஆகஸ்ட் மாத்த்தில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க எடுத்துரைத்ததாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றது. ஆதலால், இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டிய கடப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏனெனில் தீர்வுகள் இப்போது எட்டப்படாது என்று செயலற்றிருப்பதோ நமக்கான தீர்வையும் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் தந்து விடும் என்று வெறுமனே நம்பிக்கொண்டு தீர்வுகள் விடயத்தில் நாம் மௌனம் கொள்வதென்பதோ விவேகமானதல்ல.

இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வாகவே அதிகாரப்பகிர்வு தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் கருத்துக்களை வெளியிடுகின்ற பொறுப்புடைய சிங்கள, தமிழ் தரப்பினர்கள் முஸ்லிம்களை ஒரு பொருட்டாக உள்வாங்காது தமது சமூகம் சார்ந்த கருத்துக்களை மாத்திரம் முன்வைப்பதை அவதானிக்கின்றோம்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பகிர்வு உள்ளடங்கிய அரசியலமைப்பாக்கத்தில் முதற்கட்ட முன்வைப்பு வெளிவரவுள்ளது. இத்தகைய சூழலில் முஸ்லிம் சமூகத்தைக் கருத்திற்கொள்ளாது அபிப்பிராயங்களை முன்வைப்பதானது, அச்சமூகத்தை அதிகாரப்பகிர்விலோ, இனப்பிரச்சினைகளில் தொடர்புடையவர்களாகவோ சிங்கள, தமிழ் தரப்பினர்கள் கருதவில்லையென்பதையே காண்பிக்கின்றது.

அண்மையில் நல்லிணக்க செயலணியின் பொதுச்செயலாளரும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து “தமிழர் – சிங்களவர்கள் ஏற்கும் அதிகாரப்பகிர்வே அவசியம்” எனத்தெரிவித்துள்ளார். இதனையொட்டிய கருத்தாகவே அமைச்சர் ராஜித சேனாரத்னவும் “சிங்களவர்களும் தமிழர்களும் திருப்திப்படும் விதத்திலேயே அதிகாரப்பகிர்வு, தீர்வு முன்வைக்கப்படும்” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்களினூடாக முஸ்லிம் சமூகத்தை இனப்பிரச்சனையின் ஒரு பகுதியினராக நல்லாட்சி அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாத ஒரு பாங்கை உறுதி செய்வதாகப் பார்க்க முடியும். இந்நிலையிலும் கூட முஸ்லிம் தனி அரசியல் கட்சிகள் சாட்டை செய்து கொள்ளாது, நீண்ட மௌனத்திலிருப்பதையே அவதானிக்கின்றோம். அவ்வாறெனில், இக்கட்சிகளின் தேவைப்பாடு எதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது? யாருக்கு சேவகம் செய்ய இவர்கள் இருக்கின்றனர் என்கின்ற முக்கிய வினாவை முஸ்லிம் சமூகம் எழுப்ப வேண்டிய நிலையிலிருக்கின்றது.

கருத்துக்களை வெளியிட வேண்டிய சந்தர்ப்பங்களைச் சரியாக நாம் உபயோகித்துக் கொள்ளாது தீர்வென அவர்கள் கோடிட்டுக்காட்டிய பின்னர், இது முஸ்லிம் சமூகத்துக்கு பாதகத்தைத் தருகின்றது என்று வீராப்பு வசனங்களையும் எதிர்க்கோஷங்களையும் முன்வைப்பதன் மூலம் எந்தப் பயனையும் நாம் அடைந்து கொள்ள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்படுவோம்.

இவ்வாறான கோணத்தை நாம் பல தருணங்களிலும் சந்தித்திருக்கின்றோம். அப்படியிருந்தும், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாது தொடர்ந்தும் ”பழைய குருடி கதவைத்திறடி” என்பதற்கொப்ப நாம் அசமந்தப் போக்கிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றோம். இது அறிவுபூர்வமான தேடலின் நிகழ்ச்சி நிரல் அல்லவென்பதையும் நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

“அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” என்ற மூதுரைக்கேற்ப நமது தேவைகள் புறக்கணிக்கப்படுகின்ற போது, அதனைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எம்மால் இயன்றவரை முன்னெடுக்க வேண்டும். இந்நிலையை நமது தனி முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதில் காட்ட வேண்டிய வேக, விவேகத்தில் அக்கறையின்றியும் காணப்படுகின்றனர்.

தனி முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மக்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் தான் இந்தக் கடப்பாடுள்ளது போன்று பெருந்தேசியக் கட்சிகளின் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை வகிப்பவர்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். உண்மையில் இவர்களை விட முஸ்லிம் அரசியல் கட்சி சார்ந்த மக்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு அதிக பொறுப்பிருந்தாலும், அதற்காக வேண்டி பெருந்தேசியக்கட்சியில் மக்கள் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தங்கள் மீது இது பொறுப்பில்லாத விடயம் போல் நடந்து கொள்வது ஆரோக்கியமான நடவடிக்கையல்ல.

ஒரு சாரார் மீது மறு தரப்பினர் சரியாகச் செயற்படவில்லையென்று குற்றஞ்சுமத்துவதனூடாக தாம் உரிமையோடும் சரியாகவும் செயற்பட்டதாக அர்த்தமாகாது. மாறாக, ஒரு தரப்பினர் செய்யவில்லையென்றாலும் கூட, மறு தரப்பினராவது அவற்றில் சரியான அணுகுமுறையை மேற்கொள்பவர்களாக இருப்பதன் மூலம் தான் சமூகம் அதனூடாக தமது உரிமைகளை தாம் பெற்றோம் என்ற நிறைவையும் அடைந்து கொள்ள முடியுமென்ற யதார்த்தத்தையும் புறக்கணிக்கலாகாது.

இவ்வாறான ஒழுங்கமைப்பில் நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் தங்களை வழிநடத்திச் செல்வதற்கு என்றும் பின் நிற்காத உறுதித்தன்மையொன்று மிக அவசியப்படுகின்றது. அந்த வகையில், முதலில் முஸ்லிம் சமூகமும் இலங்கையின் இனப்பிரச்சனையில் பாதிக்கப்பட்டவொரு சமூகம் தான் என்பதை உரிய இடத்தில் அடையாளப்படுத்தி, பதிவாக்குவதில் அதிக சிரத்தையை மேற்கொள்ள வேண்டிய தேவை இடைவெளி இருப்பதை அவதானிக்கின்றோம். அதனை உரிய முறைப்படி உரிய இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதில் முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் கவனஞ்செலுத்துதல் வேண்டும்.

அதன் பிற்பாடு, இனப்பிரச்சனைக்காக கொண்டு வரப்பட வேண்டிய தீர்வுப்பொதியில் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வாறான தீர்வு வேண்டுமென்பதை வரையறுத்து, அதனை தீர்வுகள் முடிவாக்கப்படும் அதிகார மையத்துக்கு எடுத்துச் செல்லல் வேண்டும். இந்த இரு விடயங்களிலும் நாம் அதிக கவனத்தைக் குவிக்க வேண்டும்.

அதற்கு நமது சமூகம் இலங்கையின் இனப்பிரச்சனையில் எவ்வாறான பாதிப்புக்களை சம்பாதித்ததென்பதையும், அதற்காக நாம் இழந்த உயிர், உடமை விபரங்களையும் ஒன்று திரட்ட வேண்டும்.

இந்த முயற்சியில் இறங்குவதென்பது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியவொன்றல்ல. இது பரந்துபட்ட அளவில் பன்முக ஆளுமையுடையவர்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். இதற்கான களச்செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் நம் மத்தியில் இருந்தாலும், அதற்காகத் தேவைப்படும் பொருளாதாரத்தை வாரி வழங்கும் தயாள குணமுடையோர் அரிதாகவேயுள்ளனர்.

பொருளாதாரப் பங்களிப்புக்களை தாமாகவே முன்வந்து வழங்கும் நிலையில் முஸ்லிம் சமூக தனவந்தர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்களை இவ்வாறான விடயத்துக்கு உதவுபவர்களாக ஊக்குவிக்க வேண்டும். மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பள்ளிவாசல் நிர்மாணம், பொதுக்கிணறுகளைக் கட்டுதல், நீர்க்குழாய் இணைப்புக்களை அமைத்துக் கொடுத்தல், வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்தல் மற்றும் மதரசாக்களை நிர்மாணித்தல் போன்றவற்றுக்குச் செலவிடுதல் மாத்திரமே இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் என்ற குறுகிய மன நிலையில் செயற்படுகின்றனர். இவர்களிடமும் மனமாற்றம் தேவைப்படுகின்றது.

அதே நேரம், முஸ்லிம் தனிக்கட்சி அரசியல் நடாத்துகின்ற குழுமத்தினர்களும் தங்களது கட்சி அரசியலை மேற்கொள்ள அதிலும் குறிப்பாக, ஒரு தேர்தல் வெற்றிக்காக எங்கிருந்தெல்லாமோ கொண்டு வரும் பணத்தை மக்கள் கேள்விக்குட்படுத்தக் கூடாதென்று கட்டளை விதித்து தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனாலும், அவர்களும் கூட இவ்வாறான விடயங்களுக்காகச் செலவிடுவதில் பின்னிற்பவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களிடமும் மாற்றம் துளிர்விட வேண்டும்.

தேவையாகின்ற அனைத்து தரவுகளையும் ஆதாரங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு, தீர்வை வழங்குவதில் அதிகாரத்துவமுடைய இன்றைய தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்களார்களான ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோர்களிடம் இனப்பிரச்சனையில் முஸ்லிம்களும் சம்பந்தப்படுகின்றனர்.

அவர்களுக்கான தீர்வும் தீர்வுப்பொதியில் உள்ளடக்கப்படுவது அவசியமென்பதை ஏற்கச் செய்வதில் இன்றைய நாடாளுமன்றிலிருக்கின்ற இருபத்தியொரு முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் எல்லோரும் கட்சி பேதங்களுக்கப்பால் வலியுறுத்தி, அங்கீகரிக்கச் செய்வதில் முனைப்புடன் கூடிய கரிசனையைக் காட்ட வேண்டும்.

இதன் பிற்பாடு, முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வாறான தீர்வுகள் வர வேண்டுமென்பதை வரையறுத்து அதனைத் திட்டமிட்டுக் கட்டமைத்து இது தான் நாங்கள் கோரும் தீர்வென்று இறுதிப்படுத்தி முன்வைக்க வேண்டும். அதனையே நமது முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் எங்கும் எப்போதும் உரத்துப் பேசுபவர்களாகவும் வலியுறுத்துபவர்களாகவும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் எடுத்துக்கொள்கின்ற முடிவில் சில வேளைகளில் நெகிழ்வுக்கு வர வேண்டிய கட்டாயத்தேவை வருகையில், எவ்வாறான விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியுமென்பது பற்றியும் முன்கூட்டியே அனுமானித்து, வைத்துக் கொள்வதும் இதில் முக்கியமானவொரு பக்கமாகும்.

இவ்வாறான முயற்சிகளில் நாம் இறங்காது வெறுமனே காலம் கடத்தி விட்டு, அரச தரப்பிலிருப்பதனால் நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிட்டி விடும் அல்லது முஸ்லிம் சமூகத்தைப் பகைத்துக் கொண்டு பெருந்தேசியக் கட்சிகள் நடந்து கொள்ளாது என்கின்ற ஒரு அதீத நம்பிக்கையில் செயற்பாடற்றிருப்பதென்பது புத்தி சாதுரியமான நிலைப்பாடல்ல. மாறாக, அது நமது கையறு நிலையை உயர்த்திக் காட்டும் தோற்றத்தையே வெளிப்படுத்துமென்பதை நாம் மறக்கலாகாது.

நமது இன்றைய பிரச்சனை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படலாகாது. மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற இரண்டும் தான் நாம் என்பது போன்று நாம் இருந்து வருகின்றோம். இவற்றினை ஒரு போதும் சிங்கள மக்களின் பெரும் பகுதியினர்கள் அனுமதிக்கப் போவதில்லை. அம்மக்களை மிஞ்சி சிங்கள அரசாங்கம் நடந்து கொள்ளாது என்கின்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் நமது சமூகத்தை வழி நடாத்துகின்ற முஸ்லிம் தனி அரசியல் கட்சிகள் பாராமுகமாக இருந்து வருகின்றனர். இதுவொரு போதும் நமது சமூகத்தைப் பாதுகாக்கப்போவதில்லை.

கடந்த எழுபத்து ஏழுகளில் பெருந் தேசியக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியில் தமது மக்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களை வைத்துக் கொண்டிருந்த நமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் சிங்கள மக்களாலோ, அம்மக்களின் அரசாங்கத்தினாலோ ஏற்படுத்தப்படமாட்டாது. அவ்வாறு ஏற்படுத்தப்படுமானால், அதனைத் தட்டிக் கேட்பதற்கு முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன என்று பெருமிதமாகக் கூறியதை இன்று நாம் நிறுத்துப்பார்க்க வேண்டியுள்ளது.

எவ்வாறு அவர்களின் அரசியல் நலன்களுக்காக விளைவுகளைக் கருத்திற்கொள்ளாது தங்களை உயர்த்திக் காட்டினார்களோ அல்லது நம்பிக்கையுடன் கூடிய தொணியில் கருத்துக்களை முன்வைத்தார்களோ அவற்றை அர்த்தமற்றதாக்கிய நிகழ்வுகள் அதன் பின்னர் நடந்தேறியிருக்கின்றது.

உதாரணமாக, இஸ்ரேல் தூதரகத்தை இலங்கையில் அனுமதிக்க அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன விரும்பிய போது, அதனை எமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் தட்டிக்கேட்க முனைந்த அந்தத்தருணத்தில் விரும்புபவர்கள் எம்மோடு இருங்கள். விரும்பாதவர்கள் வெளியேறுங்கள் என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறினார்.

இப்படி பல்வேறு முஸ்லிம் விரோதப் போக்குகளை சிங்கள அரசாங்கங்கள் சுதந்திர இலங்கையிலும் பல்வேறு கால கட்டங்களில் அரங்கேற்றியிருக்கின்றனர். அரங்கேற்றியும் வருகின்றனர்.

அப்படியிருந்தும், காப்பரணாக நம்பிக்கூறப்பட்ட எந்த முஸ்லிம் நாடுகளும் இதுவரை இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புக்கள் குறித்து பெரிதாக அக்கறை செலுத்தியதாகவோ, பேசியதாகவோ எந்தப்பதிவையும் காண முடியவில்லை. ஆயின் இதுவொரு வரட்டுத்தனமான நம்பிக்கையின் பிரதிபலிப்பே என்பதை நிரூபிக்கப் போதுமானது. இதனை ஒத்ததாகவே சிங்கள மக்களும் அவர்களின் அரசாங்கமும் நமக்கு பாதகங்கள் வர வழி விடாதென்று நாம் இன்று நம்புவதும் அமைய முடியும்.

இவற்றுக்கப்பால், இலங்கையின் இனப்பிரச்சனையில் முஸ்லிம்களும் நசுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால், அது தமிழ் தரப்பினாரால் மாத்திரமல்ல. மாறாக, சிங்கள–தமிழ் ஆகிய இரு தரப்புக்களாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்குவாரங்கள் மிக இறுக்கமாகப் பிரயோகிக்கப்பட்டிருப்பது தான் வரலாறு. அவ்வாறெனில், முஸ்லிம்களின் இனப்பிரச்சனை என்பதே சிங்கள, தமிழ் தரப்பினால் உருவாக்கப்பட்டவைகள் என்பதாகும்.

அப்படியாயின், நம்மைப் பிரச்சனைகளுக்கு உட்படுத்தியவர்களே நம்மைப் பாதுகாப்பார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டு எந்த முயற்சிகளிலும் இறங்காது மாற்றுத் தீர்வுகளைப் பற்றிச் சிந்தியாது மௌனம் சாதிக்கின்ற முஸ்லிம் தனிக்கட்சி அரசியல் குழுமம் அவர்களையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றுவது என்ற பெறுபேறுகளைத் தவிர வேறென்ன தான் நாம் எதிர்பார்க்க முடியும்?

இனப்பிரச்சனைத் தீர்வில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் பொதுவாக முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகளிடம் காணப்படுகின்ற அசமந்தப் போக்குகளை நிவர்த்திக்கும் வகையில் நமது குடிமைச் சமூகத்தில் காணப்படுகின்ற வலுவான அமைப்புக்கள் அதிக அக்கறையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்கள் மீது இன்றைய அரசியல் களம் சுமத்துகின்றது.

இதற்கு முக்கிய காரணம் நமது அரசியல் செயற்பாட்டாளர்களின் இயங்கியலில் காணப்படுகின்ற இயலாமையேயாகும். இங்கு நமது குடிமைச்சமூக அமைப்புக்கள் என்று எடுத்துக் கொண்டாலும், அவற்றுள் நமது மார்க்கம் சார்ந்த அமைப்புக்கள் இந்த விடயத்தில்  முன்னுக்கு வருவதில் நமது சமூகம்  மிகுந்த கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் இக்கட்டையும் கொண்டிருக்கின்றது.

இன்று பௌத்த மத உயர் பீடங்கள் அரசியலில் மும்முரமாகவும் அதே நேரம், முஸ்லிம்கள் மீது விரோதமாகவும் செயற்படுகின்ற நிலை காணப்படுவதனால், முஸ்லிம்கள் தரப்பிலிருந்து மத ரீதியான அமைப்புக்கள் அரசியல் செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டு தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதனூடாக இரண்டு மதங்களுக்கான பிரச்சனையாக மாற்றம் பெறும் சூழல் உருவாகலாம். இது பேராபத்தான நிலையும் கூட.

இத்தகைய நிலை வருகையில், நமது நாட்டின் அரசாங்கம் பௌத்த பீடங்களையும், தேரர்களையும் சார்ந்து நின்று பௌத்தத்துக்கெதிரான முஸ்லிம்களின் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்ற கூற்றோடு இணங்கிப்போய் முஸ்லிம்  மக்களின் பிரச்சனை மதப்பிரச்சனையை மட்டும் மையப்படுத்தியதைப் போன்ற பிரசாரத்துக்கு வசதியை நாமே ஏற்படுத்திக்கொடுத்த்தாக அமைந்து விட முடியும்.

ஆதலால், நமது சமூகத் தளத்திலுள்ள மதம் சார்ந்த நிறுவனங்கள் அல்லாமல் நமது பொதுவான சிவில் சமூக அமைப்புக்கள் இது விடயத்தில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்தி, அதனூடாகப் பெறப்படுகின்ற முடிவுகளை நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உரிய அரசியல் மயப்படுத்தலுக்கும் செயலாக்கத்துக்கும் கொண்டு செல்கின்ற பொறுப்பை ஏற்பவர்களாக மாற்றப்படல் வேண்டும். இவ்விரு வகுப்பினரும் இப்பண்புக்கு மாறுவது தான் இன்றைய நமது விடிவுக்குத் தேவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here