முசலி, மரிச்சுக்கட்டி மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது போன்று அனைவரும் அமைதியாக இருக்கின்றனர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

0
211

(எம்.ரீ. ஹைதர் அலி)

unnamedஅரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் ஒருசில நாட்கள் கடந்ததன் பிற்பாடு அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்பதனை மறந்து அதனை கை விட்டு விடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

2017.07.05ஆந்திகதி புதன்கிழமை இரவு காத்தான்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இதற்கு நல்லதொரு உதாரணமாக நாம் மன்னார் மாவட்டத்தின் மறிச்சுக்கட்டி மக்களின் காணிப்பிரச்சினையை எடுத்துக் கொள்ள முடியும். மன்னார் மாவட்டத்தின் முசலி, மரிச்சுக்கட்டி, முள்ளிக்குழம், கறடிக்குழி ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் வர்த்தமானி அறிவித்தலினூடாக வனவிலங்கு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அனைவராலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் இவ்விடயம் தொடர்பாக தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாண்டு ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தபோது அவசர அவசரமாக கையொப்பமிட்டு வெளியிட்டிருந்த குறித்த வர்த்தமானி அறிவித்தலினை முற்றுமுழுதாக இரத்துச் செய்ய வேண்டும் என்பதே முசலி, மரிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை தொடர்பாக குரலெழுப்பிய அனைவரினதும் வேண்டுகோளாக இருந்தது.
ஆனால் அந்தக் கோரிக்கைகள் எதுவும் அரசினால் எவ்விதத்திலும் கணக்கில் கொள்ளப்படாமல் புறந்தள்ளப்பட்டு தற்போது பல மாதங்கள் கடந்த நிலையில் அப்பாவி மக்கள் அவர்களின் பூர்வீக நிலங்களில் மீள் குடியேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
முசலி, மரிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினைகளுக்கான எதுவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்த அனைவரும் இப்பிரச்சினைக்குரிய முழுமையான தீர்வுகள் கிடைக்கப்பெற்றுவிட்டதனைப் போன்று மௌனமாக ஒதுங்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது என அவர் தெரிவித்தார்.
மேலும், பிரச்சினை ஒன்று பூதாகரமாக தோற்றம் பெறுகின்றபோது அப்பிரச்சினை தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதும், ஊடகங்களில் அறிக்கையிடுவதும், முகநூல் பக்கங்களில் பதிவிடுவதும் போன்ற நடவடிக்கைகளினூடாக தாங்களும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்புகின்றோம் என்ற தோற்றப்பாட்டினை வெளிப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் ஒருசில நாட்கள் கடந்ததன் பிற்பாடு அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதனை மறந்து சகஜ நிலைக்குத் திரும்பி விடுகின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் இத்தகைய நிலையினை அரசாங்கம் நன்றாக புரிந்து கொண்டதனால்த்தான் என்னவோ அரசியல்வாதிகளின் கோசங்களை கண்டுகொள்ளாமல் மக்களின் பிரச்சினைகளை அவ்வாறே விட்டுவிடுகின்றது. இத்தகைய ஒரு துர்பாக்கிய நிலைதான் இன்று முசலி, மரிச்சுக்கட்டி பிரதேச மக்களுக்கும் நேர்ந்துள்ளது.

இந்தியப் பிரதமமந்திரி நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது உலங்கு வானூர்தி மூலம் அவசர அவசரமாக முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி மன்னார் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பிவைத்த இந்த அரசாங்கம் தற்போது அத்தகைய எந்தவொரு விடயங்களும் நடைபெறாததனைப் போன்று மக்களின் பிரச்சினைகளை மறந்து செயற்படுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஆகவே முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புவாய்ந்த தரப்பினர்களும் இது விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதனூடாக மக்களின் காணிகளை உள்ளடக்கியதாக அறிக்கையிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலினை இரத்துச் செய்வதன் மூலம் முசலி, மரிச்சுக்கட்டி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இதன்போது கேட்டுக்கொண்டார்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here