எது மாற்றம்? -சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
271

972271_10151528844433401_738963329_nமாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்! என்ற இந்த உணர்வு இயற்கையுடன் வாழ்கின்ற மனிதனுக்கு தனது வாழ்க்கையுடன் போராடத் தேவையாகவுள்ளது. மாற்றத்தைத்தேடிப் போராடும் மனிதகுலத்திடம் அதிகமான சுயநலங்களும் குடி கொள்கிறது. தற்போதைய மனித குலம் தன்னை, தனக்கு மட்டுமே தேவையானளவு மாற்றத்தைத் தேடுகிறான். அதனுடன் போராடுகிறான்.

இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது. வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது. காய் கனியாகிறது. கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள். பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.

பேச்சளவிலும் எழுத்துருவிலும் மாற்றத்தைத் தேடுகின்ற மனிதனால் நடைமுறை வாழ்க்கையில் தோல்விகளையே சந்திக்க முடிகிறது.

அரசியல் மேடைகளில் அதிகம் பேசும் பதமும் இது தான். ஆனால், அரசியலில் மாற்றம் என்பது ஆள் மாற்றமும் அதிகார மாற்றமுமே. இந்த மாற்றம் மனிதனின் சுயசிந்தனை மற்றும் முற்போக்கான செயற்பாட்டிற்கான மாற்றமா? என்பதிலே அந்த மாற்றம் ஒன்றே மாறாதது என்பதன் அர்த்தம் வடிவம் பெறுகிறது.

தனது சுநலத்துக்காகவும் கொள்கை வெறிக்காகவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் மாற்றம் உண்மையில் மடமையின் மறு வடிவமே. மனித குலம் தனது இயலாமைக்கு அல்லது மடமைப் போக்கிற்கு அரசியலில் மாற்றம் என்ற அர்த்தத்தை தானாக சூட்டிக்கொள்கிறது.

மாற்றம் தேடிஎழுதியதும், மாற்றத்திற்காகப் பேசியதும் போதும். அர்த்தமுள்ள செயற்பாடுகள் தான் நமக்குத் தேவையாகவுள்ளது. இருக்கின்ற அரசியல் தலைமைகளை விமர்சிக்கின்றோம். அடுத்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட தலைமையைத் தெரிவு செய்கிறோம். அதன் பின்னர், மீண்டும் அதே விமர்சனத்துக்குள் வருகிறோம். இது நமது மாற்றமில்லை. நமது இயலாமையின் மாற்றமே.

ஆகவே, நமக்குள் ஏதோவொரு இடத்தில், ஏதோவொரு மாற்றத்திற்கான வழிநடாத்தல் தேவையாகவுள்ளது. நாம் தோற்றுப் போகவில்லை. நமது சுயசிந்தனை மாற்றம் என்ற பெயரில் சூன்யமாக்கப்பட்டுளளது. நாம் ஒவ்வொருவரும் நமக்கான மாற்றத்தை புதிய பயணத்துடன் ஆரம்பிப்போம்.

தாங்கள் மட்டுமே ஆள வேண்டுமென்ற ஆணவக் குடியேற்றவாதக் கொள்கையைத் தோற்கடிக்கும் வரை ஓயாது இந்த மாற்றம். மீன் பிடிக்கும் மீராசாகிப் மகனுக்கும் தச்சுத்தொழில் புரியும் தமீம் மகனுக்கும் சொந்தமானது அரசியல். மூன்று சந்திகளில் மூன்று குடும்பங்கள் நாட்டாமை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை.

அரசியல் ஆசையில்லை என்பவர்கள், அரசியல் தனக்குத்தேவையில்லை என்பவர்கள் தான் சாகும் வரை சரணகதியாகவுள்ளனர். விட்டுக் கொடுக்கலாம். ஊரில் எத்தனையோ இளைஞர்கள் சமூகத்தின் தலைமைத்துவத்தைச் சுமக்கத் தயாராகவுள்ளனர். தோற்றுப் போனலும், அடுத்த முறை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற தலைமைகளின் நம்பிக்கை மாற்றமே, சூதாட்டம் போல உள்ளாடையை ஈடு வைக்கும் வரை அரசியலில் மற்றவர்களுக்கு இடமளிக்காமலுள்ளனர்.

ஆனால், விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பதை விட, இந்தத்தலைமைகள் இருக்கும் நேரத்தில் ஆட்டத்தை ஆரம்பிப்பதே ஆரோக்கியமான மாற்றமாக இருக்கம். ஆனால், மாற்றம் வரும் போது, அதை மனிதன் ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இதைப்புரிந்து கொண்டால், மாற்றத்தைச் சந்திக்கும் போது, ஏமாற்றமடைய வேண்டியிருக்காது.

முடியாதென்பதன் மாற்றமே முடியும் தோழா!
முடிந்த பின் மாற்றமே விடியல் தோழா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here