கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தால் மக்கள் பாதிப்பு

0
200

02எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள பிரதேச சபைகளின் நடவடிக்கைள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் சொல்பவர்களாகவே பிரதேச சபைகளின் அதிகாரிகள் உள்ளார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில்லாது காணப்படுகிறது. பிரதேச மக்களின் சுகாதார நிலையைக்கருத்திற் கொண்டு சுகாதாரத்துறையினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து, ஆலோசனை வழங்க அனுமதி வழங்க பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு பிரதேச அபிவிருத்திக்குழுவினால் கடிதம் அனுப்புமாறு தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளினால் அருகிலுள்ள மக்கள் சுகாதரா ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக புளியவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் இராமப்பிள்ளை ஜெயானந்தம் தெரிவித்தார்.

கொடுவாமடு பகுதியில் அமைக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, சரியான முறையில் பராமரிக்கப்படாததனால் அங்கு உற்பத்தியாகும் இலையான்கள் அருகிலுள்ள குடியிருப்புக்களுக்குச் செல்வதனால் சுமார் 30 பேர் வயிற்றோட்டம் மற்றும் வயிற்று வலி போன்ற நோய்களுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எமது கிராமத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்க வேண்டாமென ஆரம்பம் முதலே எமது எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தோம். ஆனால், அவர்கள் எங்களது கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் குடியிருப்புப்பகுதியை அண்மித்த பகுதியில் அமைத்தார்கள். ஆரம்பத்தில் பசளை தயாரிக்கும் தொழிற்சாலையெனக் கூறினார்கள். தற்போது குப்பைகளைக் கொட்டுகிறார்கள்.

அங்கு சேகரிக்கப்படும் குப்பகைள் சரியான முறையில் பராமரிக்கப்படாதால், அருகிலுள்ள பகுதிகளில் இலையான்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென புளியவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் இராமப்பிள்ளை ஜெயானந்தம் தெரிவித்த கருத்திற்குப் பதிலளிக்கையிலயே பிரதியமைச்சர் பிரதேச சபைகளின் செயற்பாடுகள் மந்தகதியில் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித்தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், திணைக்களத்தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.01 02 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here