சமூக அரசியல் அறுவடைக்காலம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
251

972271_10151528844433401_738963329_nஇன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம், ஊழல், சுயவிளம்பரம், பிரதேசவாதம் மற்றும் சாகாவரம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில், சமூகத்தில் ஆரோக்கியமான எழுத்துக்களாலும், புரிதல்களாலும் பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட “மாற்றம்” அறுவடைக்காலம் தொடங்கும் நிலையிலுள்ளது.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது உறவுகளை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாகவும் சுயசிந்தனையும் முற்போக்குமுடைய சக்தியாகவும் எழுத்துக்கள் வார்த்தெடுக்கிறது.

“மக்களைத்திரட்டு -அரசியல் கலாசாரத்தை மாற்று’’ என முழங்குகிறோம்.

அதே நேரத்தில், எழுத்தாளர்கள் சமூக அக்கறை கொண்டோராக இருக்க வேண்டும். அவர்களின் படைப்புகள் பரபரப்பை ஏற்படுத்துபவையாக இல்லாமல், சமூகத்துக்கு பாடம் சொல்பவையாக இருக்க வேண்டுமென்பது தான் எனது நிலைப்பாடு. ஒவ்வொரு இளைஞனின் 24 மணித்தியால வாழ்க்கையோட்டத்தில் 1 நிமிடமாவது தன்னையும் சமூகத்தில் அவனது இருப்பையும் உணர்வதற்கு எழுத்துக்கள் அர்த்தமுள்ளதாக வேண்டும்.

பரம்பரை அரசியலைப் பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளைப் பலி கொடுக்கலாமென்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களைப் பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும். யதார்த்தத்திற்கும், பெரும்பான்மை உணர்வுகளுக்கும் எதிரான விஷயத்தைப் பேசுவதும், போலி முகநூல்களால் விமர்சிப்பதும் முற்போக்கு, திறமை மற்றும் கடமை என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் பரவி வருகிறது.

எனது எழுத்துக்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களையும் யதார்த்ததையும் முன்னிலைப் படுத்துகின்றது. தனி நபர் துதி பாடலையும், எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டுவதையும் தவிர்த்து, ஊரின் சகலதுறை சாரந்தவர்களை உள்ளடக்கிய பலமான தலைமையைத் தேடுகிறோன். நமது ஒற்றுமையும், கட்டுப்பாடும் 5 நிமிடம் தொழுகையிலும், இறைச்சிக்கடையில் காத்திருப்பதில் மட்டுமேயுள்ளது. இந்நிலை மாற்றம் காண எங்களை நாங்கள் தயார்படுத்த வேண்டும்.

எமது மனித நேய அரசியல் என்பது, குரலற்ற மக்களின் குரலாகவும், தலைமைத்துவமில்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்களை நாமே ஆள்வோம். எங்கள் பலமும் பலவீனமும் எங்களது உடமை. எங்களை அடிமையாக்கி, எங்கள் உணர்வுகளை ஊமைகளாக்கி, எங்களுடன் இருப்பவர்கள் எங்களை ஏப்பமிடுவதை இனி மேலும் சகித்துக் கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் ஜடமல்ல.

எனது எழுத்துக்கள் ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட சமூகத்தைத் தலைமை தாங்கும் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு அல்லது நபருக்கு மட்டும் சாகும் வரை சொந்தமானதல்ல. எனது ஒவ்வொரு பதிவுகளும் ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை நமது ஊரில் புதியவர்களுக்கு விரிவுபடுத்தவும் தோள் கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறது.

ஆகவே, எனது எழுத்துக்கள், விமர்சனங்களை எப்போதும் காத்து நிற்கிறது. மாறாக, சில அரசியல்வாதிகளின் அல்லக்கைகளுக்கு உரிய பதிலை சூடாக மட்டுமல்ல, சுதந்திரமாகவும் வழங்குவதற்கும் பின் நிற்பதில்லை.

எனது படங்களை முகநூலில் அதிகமானவர்கள் பதிவிட்டு, மோசமாக விமர்சிக்கின்றனர். இதன் மூலம் இறைவனைத்தவிர உங்களால் எனது பயணத்தை நிறுத்தவோ, எனது குரல் வலையை நசுக்கவோ முடியாது.

இந்த சமூகத்தில் விடைகளற்றுக் கிடக்கும் பல வினாக்களுக்கு விடைகளுடனும், மூக்கு வரை விரல் நீட்டுவனைக்கூட மூச்சுத்திணர வைக்கும் வித்தையும் கற்றவனாகவே பயணிக்கின்றேன். எப்போதும் சுண்டெலியை விட திமிங்கிலம் பிடிக்கும் போராட்டம் என்பதை உணர்வேன்.

ஆகவே, முதுகிற்குப்பின்னால் முகமூடி போட்டு குத்துவதை விட, எதிரே நின்று முகங்காட்டி சண்டையிடும் தப்பான வழியில் பிறக்காத நம்ம ஊரானாக இருப்பது பெருமை. சமூகத்தில் முற்போக்குள்ளவர்களை ஆதரிக்கவும், ஆர்வப்படுத்தவும் படித்தவர்களே பாமர மக்களை விட தடையாகவுள்ளனர். நமது ஊரில் கிராமப்புறங்களில் ஒரு வேளை உணவுக்குக்கூட கஷ்டப்படும் மக்களிடம் இருக்கின்ற உணர்வு, நகரப்புற மக்களிடம் குறைவாகவேயுள்ளது.

பயணங்கள் முடிவதில்லை. என்றாலும் சில பாதைகளை மாற்றுவதற்கு புதிதாக சில பயணங்களை முடித்தே ஆக வேண்டும். ஆகவே, நம்மை நாமே ஆள்வோம். நமது மண்ணினதும் நமது எதிர்கால சந்ததியினதும் சரித்திரத்திற்காக நாமே பங்காளர்களாவோம். எமது அறுவடை நோக்கிய பயணத்தில், இறைவன் நாட்டமும், தீர்ப்புமே இறுதியானதும் நிலையானதும். நாம் அறுவடை செய்யாத போதும், நமது அடுத்த தலைமுறையின் அறுவடைக்காவது காவலர்களாக இருப்போம்.

ஆகவே, எனது எழுத்துக்களும் தேடல்களும் உங்களுக்காக உங்களுடன் எப்போதும் இருக்கும். வெறுமனே எழுதிக்கொள்வதால் சமூகத்தில் மாற்றத்தைக் காண முடியாதென்ற பலரது உண்மையான விமர்சனத்துக்கு அர்த்தமுள்ள பதிலுக்காக??

உங்களுடன்
சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here