நாம் பாரிய சூழ்ச்சியில் சிக்கி விட்டோம் : நாமல் ராஜபக்‌ஷவிடம் முஸ்லிம் வாலிபர்கள் தெரிவிப்பு

0
215

cநாங்கள் முஸ்லிம்களைத் தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப்பெரும் தவறு. தற்போது அத்தவறை சரி செய்து, முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல்வாதிகளை விடுத்து, நேரடியான பொறிமுறைகளைக் கையாண்டு கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற இளைஞர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று 11-07-2017ம் திகதி செவ்வாய்க்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞர் மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைக் கவிழ்க்க இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழ்ச்சியை அறியாது அதில் அகப்பட்டுக் கொண்டதாக மன வேதனையோடு கருத்துக்களைப் பரிமாறினார்கள்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ,

அன்றைய எமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் நகமும் சதையும் போல எம்மோடு ஒட்டிக்கொண்டிருந்தன. முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இலங்கை முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வந்து கேட்பார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்தவித சிறு தயக்கமுமின்றி அவற்றைச் செய்து கொடுத்தார்.

இன்று முஸ்லிம் பகுதிகளை நன்கு அவதானித்துப்பாருங்கள். எந்த ஜனாதியின் ஆட்சிக்காலத்திலும் இடம்பெறாத அபிவிருத்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாக, முஸ்லிம் மக்கள் எங்களோடு எப்போதும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டு எமது செயற்பாடுகளை அமைத்து கொண்டிருந்தோம்.

முஸ்லிம் தலைமைகள் கடந்த ஜனாதிபதித்தேர்தல் வந்ததும் தேர்தலின் இறுதிக் காலப்பகுதியில் திடீரென ஓட்டம் பிடித்தார்கள். மிகக்குறுகிய காலத்தினுள் எங்களால் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளச் செய்திருந்தார்கள். முஸ்லிம் கட்சித்தலைமைகள் சில தற்போது எம்மை விமர்சித்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

இன்று விமர்சித்துக் கொண்டிருப்பது அவர்களது அமைச்சுப்பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்காகும். அவர்கள் வெளியில் எங்களை விமர்சித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு எமது ஆட்சி பற்றி நன்றாகவே தெரியும். அவர்கள் தங்களுக்கு பலரிடம் நெருக்கமானவர்களிடம் வேறு வழியின்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறியதாக பலர் எம்மிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நாங்கள் முஸ்லிம்களை முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்டு நெருங்காது, எம்மை நேரடியாகச் சந்திக்கும் பொறி முறைகளை அமைத்துச் செயற்படுகின்றோம். பல முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை வந்து சந்தித்துள்ளன. எந்தவித சிறு எதிர்பார்ப்புமின்றி பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் எம்மோடு இணைந்துள்ளதைப் பார்க்கும் போது, அன்று முஸ்லிம் கட்சித்தலைமைகளை முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க நம்பியமை எவ்வளவு தவறென்பதை உணர்த்துகின்றது.

அரசியலமைப்பு மாற்றம் உட்பட பல விடயங்களில் முஸ்லிம்கள் சிறிதும் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்பதில் மிகக்கவனமாக முஸ்லிம் மக்களோடும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களோடும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் போன்று மீண்டும் எந்தவித சிறு தவறுகளும் இடம்பெற்று விடாது எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here