மட்டு.மஞ்சந்தொடுவாயில் மீன்பிடிப்படகு திருத்தும் நிலையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
233

07656068-1d0c-44b1-98ed-87daa04c0096 (1)(ஆர். ஹஸன்)
மட்டக்களப்பு-மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைத் திருத்துவதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கு கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பான மதிப்பீட்டறிக்கையைத் தயாரித்து தனக்கு அவசரமாக அனுப்பி வைக்கமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வளத்திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளருக்கு மீன்பிடி மற்றும் நன்னீர் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு பகுதியிலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகளைத் திருத்துவதற்கான நிலையமொன்று இல்லாமையினால், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களது படகுகள் திருத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைகள் ஏற்படும் பட்சத்திலோ வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் அல்லது ஒலுவில் துறைமுகத்துக்குச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் விரயம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு-பூநொச்சிமுனை மீன்பிடிச்சங்கம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, அவர் இது குறித்து கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் அமரவீர உள்ளிட்ட அவரது அமைச்சின் உயரதிகாரிகளை மஞ்சத்தொடுவாய் பகுதிக்கு அழைத்துச்சென்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

பின்னர், மஞ்சத்தொடுவாய் பகுதியில் மீன்பிடிப் படகுகளைத் திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கிய அமைச்சர் அமரவீர, அதனை நிர்மாணிப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார்.

இவ்வாறான நிலையில், மீன்பிடிப்படகுகளைத் திருத்துவதற்கான நிலையமொன்றினை அமைப்பதற்குத் தேவையான மதிப்பீட்டறிக்கையைத் தயாரித்து தனக்கு அவசரமான அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு மீன்பிடி மற்றும் நன்னீர் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளார்.

எனவே, நிர்மாணப்பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 3b9468a2-cc95-4d8a-8dbf-2298a638c007 (2) 49ccb66b-8f64-4c42-9325-169ec8156234 07094331-c802-4bd2-924c-dd5d7b1fce69 07656068-1d0c-44b1-98ed-87daa04c0096 (1) d04d2188-3525-4e1c-bcc8-9d00f4d0b6a1 fb42729a-1577-4611-bda1-c4a887c53042

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here