இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்க இம்சை

0
227

ப்ட்ப்ப்சம்மாந்துறை-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சர்வதேசம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தி அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற ஒரு மார்க்கமாகும். அப்படியானவொரு மார்க்கத்துக்கு மக்கள் மத்தியில் இவ்வாறு முற்று முழுதாக எதிரான முத்திரை குத்தப்பட்டிருப்பதானது, இஸ்லாம் தலை கீழாய் உலக மக்கள் மத்தியில் சென்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு  விடயம் நேராகச்சென்றாலும், மறையாகச் சென்றாலும் ஆய்வு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விடயங்களை நோக்குபவர்களுக்கு இந்த முத்திரையானது, இஸ்லாத்தின் பக்கம் வழி காட்டக்கூடியதாக இருக்கும். இவ்வாறான சிந்தனைமிக்க ஒருவர் பலருக்கு ஈடாகும்.

இருந்தாலும், இவ்விடயமானது அங்குமிங்கும் பேசப்படுபவைகளை வைத்து முடிவெடுக்கும் சாதாரண மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமாக துணையாக இருக்குமென்பதும், இவர்களே அதிக எண்ணிக்கையுடையவர்கள் என்பதும்  கவலைக்குரிய விடயமாகும்.

ஒரு பொய்யைப் பலர் கூறும் போது, அது உண்மையாகி விடும். அது போன்று தான், ஊடகங்கள் முஸ்லிம்களை சதா தீவிரவாதிகளாகச் சித்தரித்து சித்தரித்து, தீவிரவாதிகளாக்கி விட்டனர். தற்போது இதற்கெதிராக எது செய்தாலும், அதனை மக்கள் ஏற்கும் மனோ நிலையில் இல்லை.

திரைப்படங்களில் கூட தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் பெயருடனும் தாடி தொப்பியுடனும் தான் வருவார்கள். அந்தளவு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து மக்களைச் சென்றடைந்து விட்டது. எது எவ்வாறிருப்பினும், ஒரு போதும் சூரியனின் ஒளியை உள்ளங்கையால் மறைத்துவிட முடியாது.

அந்த தீவிரவாத முத்திரையை இலங்கை நாட்டினர் இலங்கை முஸ்லிம்கள் மீதும் குத்தத்தவறவில்லை. அண்மையில் பிரபல சிங்கள நாளிதழான லங்காதீப வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானமொன்றைக் கடத்தி இலங்கை அமெரிக்கத்தூதரகத்தைத் தாக்கப்போவதாகச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஒருவர் ஒரு குற்றத்தைச்செய்கின்ற போது, அது குற்றமென பகிரங்கமாகக்கூறுவது, ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களை விட, முஸ்லிம்களுக்குள்ள விசேட பண்பாகும். அதனை ஒரு மத போதகர் ( மௌலவி ) செய்வதாலோ அல்லது வேறு யாராவது ஒருவர் செய்வதாலோ யாரும் சரி காணப்போவதில்லை.

இன்று சமூக வலைத்தளங்களை அவதானிக்கும் போது, அதனை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம். அந்த வகையில், இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டை முஸ்லிம்களின் செயற்பாட்டாகக்கூட அங்கீகரிக்கவில்லையென்பது வெளிப்படையான விடயமாகும்.

முஸ்லிம்கள், தாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கவில்லை என்றாலும், இல்லை. இல்லை. நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கின்றீர்கள் எனக்கூறும் ஆச்சரியம் தான் இலங்கையிலும் உலகிலும்  அரங்கேறி வருகிறது. இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானமொன்றைக் கடத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

அது மாத்திரமன்றி, அதனைக்கொண்டு அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதும் அவ்வளவு இலகுவானதல்ல. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் மற்றும் பெண்டகன் ஆகியன விமானத்தைக் கடத்தி தாக்கப்பட்டன. இதற்கு அல்குவைதா அமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனை அவர்கள் செய்தார்களா? என்பது இன்றும் சந்தேகமாகவேயுள்ளது. அதன் பிறகு உலகில் எங்கும் தீவிரவாதிகளாலோ அல்லது தீவிரவாதிகளாகக் கூறப்படுபவர்களாலோ விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, எங்குமே விமானத்தாக்குதல் நடத்தியாக இல்லை.

அவ்வமைப்பானது எங்குமே செய்யாத ஒரு காரியத்தை இலங்கையில் செய்யப்போவதாக அறிவித்துள்ளமையானது, இந்தக்கட்டுக்கதையிலுள்ள பெரும் நகைச்சுவையாகவும் இதனைச்சாத்தியமற்றதென நிறுவுவதற்கான போதுமான சான்றாகவும் குறிப்பிடலாம்.

தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, தங்களது பிரதான தளமான ஈராக் நாட்டில் மிகப்பெரும் அழிவைச்சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் இவ்வாறானதொரு தாக்குதலை நடாத்தும் சிந்தனை ஒரு போதும் வராது. இதன் மூலம் அவர்கள் எதனையும் சாதிக்கப் போவதுமில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, தாங்கள் கைப்பற்றி இஸ்லாமிய கிலாபத்தை அமைக்கப்போவதாக வெளியிட்ட  வரைபடத்தில் இலங்கை நாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன் வைப்பவர்களுக்கு இச்செய்தியே களமமைத்துக் கொடுத்திருந்தது.

இச்செய்தி எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது வேறு விடயமாகும். குறித்த அமைப்பானது, ஈராக் நாட்டை அமெரிக்க உட்பட சில கூட்டு நாடுகளை வென்றே கைப்பற்ற முடியும். அதன் பிறகே தங்களது செயற்பாடுகளை வேறு நாடுகளை நோக்கி வியாபிக்கச் முடியும். அதுவரை அதன் செயற்பாடுகளை வேறு நாடுகளை நோக்கி வியாபிக்கச் செய்தல் சாத்தியமல்ல. அமெரிக்கா உட்பட சில கூட்டு நாடுகளை வெல்வது சாத்தியமற்ற விடயமாகும். எனவே, தற்போதைக்கு இது பற்றிச்சிந்திப்பது அவசியமற்ற விடமும் கூட.

இவர்கள் கூறுவது போன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, விமானமொன்றைக் கடத்தி தாக்குதல் நடத்துவதானால், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு பலமான கட்டமைப்பிருக்க வேண்டும். உலகிலுள்ள பலமான புலனாய்வுப்பிரிவுகளில் இலங்கை புலனாய்வு பிரிவும் ஒன்றாகும்.

அவர்கள் தாக்கச்சிந்திப்பது அமெரிக்கத் தூதரகத்தை. அமெரிக்காவின் புலனாய்வு பலத்தைச் சொல்லி விளக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியான நிலையில், இச்செய்தி உண்மையாக இருக்குமென்றால் இந்நேரம் இலங்கையை அமெரிக்க புலனாய்வு துறையினர் புரட்டி எடுத்திருப்பார்கள்.

இன்றுவரை அப்படியொன்றும் எங்கும் நிகழ்ந்ததாக இல்லையென்பதே இச்செய்தியிலுள்ள பொய்யை அறிந்து கொள்ளச் செய்கிறது. இலங்கை அமெரிக்கத்தூதரகம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லையென  அமெரிக்கத்தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.

அது போன்று, இது பற்றி தங்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவர் குணவர்த்தன கூறியுள்ளார். மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சியும் அண்மையில் பதவியேற்ற  இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவும் கூறியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புத்துறையின் மிக முக்கியமான பதவிகளிலுள்ள  இவர்கள் அனைவரும் மற்றும் சம்பந்தப்பட்ட அமெரிக்கத்தூதரகம் ஆகிய இது பற்றி தாங்கள் அறியவில்லையென மறுப்பதே இச்செய்தியின் போலித்தன்மையை உறுதி செய்கிறது.

அமெரிக்கத்தூதரகம் தாக்கப்படப் போவதான செய்தி தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்துக்கே தெரியாதென்றால், யாருக்கு தெரியப் போகின்றது. ஒரு நாடு இன்னுமொரு நாடு தொடர்பில் முன்னெடுக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் அந்நாட்டின் தூதரகத்துக்கு அறிவிக்கும்.

அத்தூதரகத்தினூடாகவே அனைத்தையும் மிகக்கவமனமாக கையாளும். அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கும் செய்தி உண்மையாக இருந்திருந்தால், தூதரகம் என்ற வகையிலல்லாது தாக்கப்படும் இடம் என்ற வகையிலாவது அமெரிக்கப் புலனாய்வுப்பிரிவினர் அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவித்திருப்பர்.

இன்று இலங்கை அமெரிக்காவின் செல்லப்பிள்ளை போன்றே செயற்பட்டு வருகிறது. இலங்கை நாடு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு முற்று முழுதாக எதிரான போக்கைக் கொண்டதுமாகும். இலங்கை அமெரிக்கத் தூதரகத்தை  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையிருந்தால், அமெரிக்க புலனாய்வு இலங்கையின் பூரண  அனுமதியுடன் நுழைந்திருப்பர்.

அப்படி நுழைந்திருந்தால் அதனை இலங்கையின் பாதுகாப்பு உயரதிகாரிகள் உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். இது தொடர்பில் இவர்கள் யாருமே அறியாமலிருப்பதானது, இச்செய்தியின் போலித்தன்மையை மேலும் உறுதி செய்கிறது. இத்தகவல் போலியாக இருப்பின், அதனை  சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் போலியானதென மறுத்து மக்கள் மத்தியில் தெளிவை ஊட்டி அதற்கெதிராக சட்டநடவடிக்கையெடுக்கப்படுவதன் மூலம் இதனை வைத்து இனவாத காய்களை நகர்த்திக் கொண்டிருப்போரின் மூக்கை உடைக்க வேண்டியது காலத்தின் தேவையெனலாம்.

முஜீபுர் ரஹ்மானின் வினாவுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இச்செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாரைப் பணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் இந்த உத்தரவானது வாயளவிலிருக்காது உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு குறித்த விசாரணை அறிக்கைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அளுத்கமை சம்பவம் தொடர்பில் உரையாற்றிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்பிக்குமாறு உத்தரவிட்ட சில நாட்களிலேயே அதற்கு எந்தவிதமான தீர்வுகளையும் வழங்காது, தீர்வு வழங்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.

அவ்வாறானதொரு தீர்வு இவ்விடயத்திலும் நடந்தேறி விடக்கூடாது. இச் செய்தி உண்மையாக இருக்குமாக இருந்தால், இது தொடர்பில் போதியளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறித்த அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள்  அனைவரும் கைது செய்யப்பட்டு, மிகக்கடுமையான  தண்டனைகளுக்குட்படுத்தப்படல் வேண்டும். இந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தயார் எனக்கூறியுள்ளமையும் இவ்விடத்தில் நினைவூட்டத்தக்கது.

அவ்வாறல்லாது, இச்செய்தி போலியாக சோடனை செய்யப்பட்டதாக இருக்குமாக இருந்தால், இச்செய்தியின் பின்னால் என்ன சதியுள்ளதென்பது தொடர்பில் ஆராய வேண்டும். போலியான செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்கள் மீதான சதிகளுக்கு காரணமாக அமைந்த குறித்த பத்திரிகையின் மீதும் நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் மிக நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து வைத்து விட்டார்கள். 17-11-2016ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் போதான விவாதத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஆற்றிய உரையின் மூலம் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளதான செய்திகள் மீண்டும் மக்களிடையே சென்றிருந்தது.

இதனை அந்நேரத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்தன  மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் இருக்கின்றதென்ற வகையில் பேச்சை அமைத்திருந்தார். அண்மையில் கோட்டை மஹா சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கையிலுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இவை அனைத்துக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்களை கருவருக்கவென்றே சதா சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பானது, அடிக்கடி இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தலுள்ளதெனக் கூறி வருகிறது. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் எந்தவிதமான செயற்பாடுகளும் இல்லையென பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தமானவர்கள் கூறினாலும், நடுவில் இருப்பவர்களே அதனை இருப்பதாகக்கூறி வருகின்றனர்.

கோட்டை மஹா சங்கத்தினரின் அறிக்கையை வைத்து நோக்குகின்ற போது, இலங்கை பேரின மக்களிடையே படிப்படியாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்கமுள்ளதான செய்தி சேர்க்கப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இதுவெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த சமிஞ்சைகளல்ல.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றவாறு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கையிலுள்ளது எனும் தோற்றத்தோடு பார்க்கின்ற போது, முஸ்லிம்களால் ஏற்படுத்தப்படும் சிறு சம்பவங்களும் எதிர்காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்டவையாக நோக்கப்படலாம். இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும்.

இன்று ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் பகுதிகளிடையே துப்பாக்கி பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இருந்த போதிலும், முஸ்லிம் மதக்குழுக்களுக்கிடையில் ஓரிரு முரண்பாடுகள் காணப்படுவது மறுக்க முடியாத உண்மையாகும்.

அந்த முரண்பாடுகள் இஸ்லாமிய கொள்கை வேறுபாடுகளால் தோன்றியவைகளே தவிர, இலங்கை நாட்டை முஸ்லிம்கள் ஆக்கிரமித்தல் போன்ற தீவிரவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. இருந்த போதிலும், முஸ்லிம் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது அதனை இலகுவாக எதிர்கொள்ள, எம்மவர்கள் சிலர் எதிரிக்குழுக்களை தீவிரவாதக் குழுக்களாக சித்தரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு கூறியவர்களையும் இவ்விடயம் எதிர்காலத்தில் பாதிக்குமென்பதை குறித்த நபர்கள் நன்குணர்ந்து செயற்பட வேண்டும். இலங்கையில் இதுவரையும் தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவிதமான ஆயுத கலாசாரம் தொடர்பான குற்றச் சாட்டுகளுமில்லை.

அன்றும் இன்றும் இலங்கை மக்கள் இனவாதச்செயல்களின் விளைவுகளால் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு இவ்வாறான அமைப்புக்களின் தாக்கம் இலங்கையில் இருந்திருந்தால், எப்போதே ஆயுதமேந்தி இருப்பார்கள். அன்று விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை நசுக்கினார்கள்.

இன்று பேரினவாதிகள் முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றனர். இலங்கை முஸ்லிம் சமூகம் உச்ச பொறுமையைக் கையாண்டு கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பொறுமைகளுக்கான சான்றிதழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல முக்கிய அரசியல்வாதிகளால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் இல்லையென்பதற்கான மிகப்பெரும் சான்றுகளாக குறிப்பிடலாம்.

பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இல்லையென  மறுக்கும் நிலையில் ஒரு பத்திரிகையும் பொதுபல சேனா அமைப்பும் இருப்பதாக கூறுவதானது, இலங்கையின் புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்துகிறது.

ஒரு சாதாரண அமைப்பான பொது பல சேனாவுக்கு தெரிந்த விடயம் இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தெரியவில்லையென்றால், அப்படியொரு புலனாய்வுப்பிரிவு இலங்கையிலிருப்பது தேவையற்றதும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமுமாகும். இதன் மூலம் இலங்கையின் புலனாய்வுப்பிரிவு மறைமுகமாக பொதுபல சேனா அமைப்பினால் நையாண்டிக்குட்படுத்தப்படுகிறது.

இந்நையாண்டியானது பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை இலங்கை புலனாய்வுபப் பிரிவினால் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனமையின் காரணமாக விளைந்ததாக இருக்கலாம். இதன் போதும், இலங்கை புலனாய்வுப்பிரிவின் செயற்பாடுகள் மிகவும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுபல சேனாவின் செயற்பாடுகளால் இலங்கை நாடு சந்திக்கும் பல அவமானங்களில் இதனையும் ஒன்றாகக் குறிப்படலாம். பொதுபல சேனா கூறும் இச்செய்தி உண்மையாக இருக்குமாக இருந்தால், பொதுபல சேனாவானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட காட்டும் அக்கறையை விட, இலங்கையின் புலனாய்வுத் துறையை மீளக்கட்டியெழுப்ப முயற்சிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

இன்று அவர்கள் கூறுவது போன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்று நாளை இன்னுமொரு அமைப்பினால் ஏற்படலாம். அவற்றையெல்லாம் தவிர்க்க இலங்கையின் புலனாய்வுப்பிரிவு பலமாக இருப்பதே அதற்குள்ள ஒரு தீர்வாகும்.

இது உறுதி செய்யப்பட்ட செய்தியாக இருந்தால், பொதுபல சேனா அமைப்பை இலங்கையின் உத்தியோகபூர்வ புலனாய்வுப்பிரிவாக மாற்றினாலும் தவறில்லையெனலாம். அப்படி அவர்கள் செய்யாமால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மாத்திரம் குறி வைத்திருப்பதானது, அவர்கள் குறுகிய சிந்தனையையும் வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கமைவான செயற்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

பொதுபல சேனா அமைப்பானது, பல காலமாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி வருகிறது. ஒருவர் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் போது, அது தொடர்பில் முதலில் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், அது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை பொதுபல சேனா அமைப்பானது, இது தொடர்பில் இலங்கை பாதுகாப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை. இவ்வாறான தகவல்களை சாதாரண மக்கள் யாராவது வெளியிட்டிருப்பின், அவர்கள் உடனடியாக கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பார்கள். பொதுபல சேனா அமைப்பு இது தொடர்பில் விசாரிக்கப்படாமையானது, அவர்கள் கூறும் தகவல்களை இலங்கை பாதுகாப்புப்பிரிவினர் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்ற செய்தியையும் கூறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, அது போலிச்செய்தியாக இருப்பின், அவர்கள் அதனூடாக சட்ட நடவடிக்கைகளை எதிர்க்கொள்ள ஏதுவாகும் அமையும். பொதுபல செனாவிடம் இது தொடர்பான உரிய ஆதாரங்கள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பித்து உரிய நபர்களைக்கைது செய்யலாம்.

அவ்வாறு செய்யாமல், அவர்கள் பொது மக்களிடம் இவ்வாறான பிரசாரங்களை கட்டவிழ்த்து விடுவதன் நோக்கம் என்ன? அது தவறான செயலுமாகும். பொதுபல சேனா அமைப்பானது, இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

இருந்தும், அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அப்படியானால், ஒன்று இச்செய்தி போலியானதாக இருக்க வேண்டும் அல்லது முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எனவே, தனது குறித்த செய்தி உண்மையாக இருக்குமாக இருந்தால், பொதுபல சேனா அமைப்பானது, அதனைக் கவனத்திற்கொள்ளாது செயற்படும் இவ்வரசுக்கெதிரான போராட்டத்தையே முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இச்செய்தி மூலம் ஏதோ ஒரு பாரிய சதி திட்டமிடப்படுகிறது. இச்செய்தியை உண்மையென மக்கள் நம்பும் போது, பொதுபல சேனா அமைப்பானது, உண்மையான ஒரு விடயத்தில் இலங்கை நாடே பொடுபோக்காகச் செயற்பட்ட போது, பல துன்பங்களையும் தாண்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெயர் பெறும்.

இதனூடாக பொதுபல சேனாவினால் மீண்டும் இலங்கை பேரின மக்களிடையே தனது செல்வாக்கை நிலை நாட்டிக்கொள்வதோடு, அவர்களுக்குள்ள சிறு தடைகளை உடைத்துக்கொள்ள முடியும். தற்போது பொதுபல சேனா அமைப்பானது, இலங்கை முஸ்லிம்கள் மீது கடைப்பிடிக்கும் முறைமை பலரது கண்டனத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை மக்கள் ஒரு யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட  வடுக்கள் ஆறாத நிலையிலுள்ளனர். இந்தச்செய்தி உண்மை பெறும் போது, பொதுபல சேனா அமைப்பு தனது கடும் போக்கை மிக இலகுவாக நியாயப்படுத்திக் கொள்ளும். இவற்றின் காரணமாக இச்செய்தி பொதுபல சேனா அமைப்புக்கு மிகவும் இனிப்பான செய்தி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

முஸ்லிம்கள் இலங்கை நாட்டுக்கு ஆபத்தானதனவர்கள் என்ற செய்தியை பேரின மக்களிடம் கொண்டு சேர்த்து, தற்போது முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் செயற்பாடுகளை அதிகரித்தல், பொதுபல சேனாவுக்கு பலம் சேர்த்தல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள், இஸ்லாமிய  பிரசாரகர்கள், முஸ்லிம்கள் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு உதவுபவர்களாகக் காட்டி முடக்குதல் போன்றவைகளும் குறித்த செய்தியின் பின்னால் ஒழிந்துள்ள சதிகளாக இருக்கலாம்.

இன்று வெளிநாடுகளிலிருந்து ஜமாத் எனும் பெயரில் மதத்தைப்பரப்பும் நோக்கில் வருபவர்களுக்கு விசா வழங்குவதில் மிகக்கடுமையாக விதிகள் கடைப்பிடிக்கப்படுவதாக அறிய முடிகிறது. அதுமாத்திரமன்றி, தப்லீக் ஜமாஅத்தினரின் கொழும்பு மார்கஸில் புலனாய்வுப் பிரிவினரின் கெடுபிடிகளும் அதிகமாகவுள்ளதாக அறியப்படுகிறது.

இச்செய்தியினூடாக அக்கெடுபிடிகளை இன்னும் அதிகரிப்பதனூடாக அவர்களின் செயற்பாடுகளை மிக இலகுவாக முடக்க முடியும். இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் வெளிநாடு சென்று உழைத்தல் அதிகம் தாக்கம் செலுத்தி வருகிறது. பொதுபல சேனாவின் ஊடக மாநாட்டில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மூலமாகவே இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதாகக் கூறியுள்ளனர். இவற்றைத் தடுத்தலும் இச்செய்தியின்  நோக்கங்களில் ஒன்றாக  இருக்கலாம். இப்படி பெரும் சதியோன்றை அடிப்படையாகக் கொண்டதே இச்செய்தியின் பின்புலமாகும்.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களுக்கெதிரான பாரிய சதி அரங்கேறத் திட்டமிடப்படுவது புலனாகின்றது. அதற்கு பிரபல சிங்கள மொழி ஊடகமொன்று துணையாகவுள்ளதென்பது கவலைக்குரிய விடயமாகும். ஒரு நோக்கத்தைச் செயல்படுத்த ஊடகங்களே பிரதான பங்கு வகிக்கும்.

அந்த வகையில், பேரின சதிகளுக்கு ஊடக அங்கீகாரமும் கிடைத்தால், அவர்களின் சதிகளை மிக இலகுவாகச் செயற்படுத்திக் கொள்வார்கள். இது தொடர்பில் தற்போதைய அரசானது மிகத்தீவிரமாக செயற்பட்டு இவ்வாறான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் தேவை எனலாம்.

குறிப்பு: இக்கட்டுரை நேற்று 12-07-2017ம் திகதி புதன்கிழமை நவமணிப்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 83வது கட்டுரையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here