தரமிக்க தனியார் வைத்தியக் கல்லூரிகள் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் -கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு.

0
211

(ஊடகப்பிரிவு)

okkkதரம் மிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளை இந்த நாட்டில் உருவாக்க அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த நாட்டில் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிழக்கு முதலமைச்சரின் முயற்சியினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு இபற் சிகிச்சைப் பிரிவு மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர் விடுதி ஆகியவற்றை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு இணங்க கிழக்கு முதலமைச்சரின் முயற்சியினால் குறித்த திட்டங்களுக்காக 18 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
இன்று நாம் இலவசக் கல்விக்காக குரல் கொடுப்பதைப் போல கல்வி கற்பதற்கான உரிமையைப் பாதுகாக்கவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
இந்த ஜனநாயக நாட்டில் தமக்கான கல்வியை பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது.
இன்று இலங்கையின் வைத்தியத்துறையில் தாம் மாத்திரமே கோலோச்ச வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாபியா ஒன்று செயற்பட்டு வருவதாக ஊடகங்கள் மற்றும் மக்களின் கருத்துக்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
அவ்வாறு ஒரு குழுவினர் மாத்திரம் செயற்படுவாராயின் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இலங்கையின் வைத்தியத்துறைக் கட்டமைப்பை ஒரு சாரார் மாத்திரம் தீர்மானிப்பதாக இருந்தால் அது இந்த நாட்டின் சாபக் கேடாகும்.
இதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்களே என்பதை புரிந்து கொண்டு அரசாங்கம் இலங்கையின் தரம் மிக்க தனியார் வைத்தியத் துறைக் கல்வியை ஊக்குவித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுவான கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்.
இன்று சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பலர் இலங்கையில் தரமான மருத்துவ சேவையொன்று இருக்க வேண்டும் என்பது குறித்து பேசுவதில்லை.
அத்துடன் இன்று தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக பணம் செலவழித்து வைத்தியருக்காக காத்து நின்ற போது அவர்கள் சிகிச்சைப் பெற வருபவரிடம் இரண்டு நிமிடங்கள் கூட கதைப்பதில்லை.
நோயாளிகளுக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்ற நிலைமை இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.அதற்காகத் தான் நாம் இதனைச் சுட்டிக்காட்டுகின்றோம்.
இந்தியாவில் வைத்தியர்கள் நோயாளிகளின் வருகைக்காக காத்திருக்கின்றார்கள், சிகிச்சைப் பெற வருபவர்களிடம் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றார்கள்.
அது மாத்திரமன்றி இலங்கையின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வைத்தியர்கள் இன்றி ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்த ஆளணிப் பற்றாக்குறைக்கு இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே காரணம், ஏனெனில் அவர்களே இலங்கையில் அதிக வைத்தியர்களை உருவாக்குவதற்கு முட்டுக்ட்டை இட்டு வருகின்றனர்.
இலங்கையில் தரம் மிக்க வைத்தியர்களை உருவாக்கும் வைத்தியக் கல்லூரிகள் உருவாக்கப்பட்ட வேண்டும், இதன் மூலம் உருவாகும் வைத்தியர்களை இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உள்ளீர்ப்பதன் ஊடாக ஆளணிப் பற்றாக்குறையை எமக்கு நிவர்த்திக்க முடியும்.
ஒரு வைத்தியர் இல்லையென்றால் அன்று பிரதேச வைத்தியசாலைகளை மூடி வைக்கும் நிலைமையை மாற்றியமைக்க முடியும் என்பதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here