வாகரைப் பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்துக்கு கிராம மட்ட அமைப்புகள் கண்டனம்

0
291

01.கல்குடா செய்தியாளர்

மட்டக்களப்பு-வாகரைப் பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தைக்கண்டித்து அப்பிரதேச கிராம மட்ட அமைப்புகள் நேற்று 13.07.2017ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச்செய்துள்ளன.

வாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதியமைச்சர் எம்எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாத்திரமே பங்கேற்றனர். கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தை வெளி நடப்புச்செய்தனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி திடீரென இடமாற்றப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்பை வெளியிட்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினையும் நடாத்தினர்.

அவர்களது போராட்டங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளர்.

இங்கு கருத்துத்தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை வழங்கிய பிரதேச செயலாளரை திடீரென கொழும்புக்கு இடமாற்றியுள்ளார்கள். இதற்கான காரணத்தை இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் யுத்த சூழ்நிலையின் போது, மக்களுடன் மக்களாக இருந்து சேவையாற்றி எமது பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடி தீர்வு வழங்கப்படுமென மக்கள் பிரதிநிதிகள் கூறினார்கள். ஆனால், நான்கு தினங்களாகியும் இதுவரை எமக்கு எந்தப்பதிலும் வழங்கப்படாத நிலையில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தை நடாத்துகிறார்கள்.

எமக்குத்தீர்வு வழங்காத பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் தேவையில்லையென கூட்டத்தைப் பகிஷ்கரித்துள்ளோம் என வெளிநடப்புச் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இடம்பெற்றதுடன், பிரதேச குடிநீர்ப்பிரச்சினை, பிரதேச மக்களது வாழ்வாதாரப் பிரச்சினை, பிரதேச வீதி, கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர் இராசையா துரைரட்ணம், வாகரை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி ஏ.அமாலினி ஆகியோரும் கலந்து தொண்டனர்.01. 02 03 04 05 06 07 08 09 10 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here