வழி தவறும் மாணவ சமூகம் வழி காட்டப்படுமா?-எம்.எம்.ஏ.ஸமட்

Untitled-1நாளைய தலைவர்களாக, துறைசார் வல்லுனர்களாக, நிபுணர்களாக, சமூகத்தையும், பிரதேசத்தையும், நாட்டையும் நல்வழிப்படுத்துபவர்களாக எதிர்காலத்தில் மிளிரவுள்ள தற்கால மாணவர்கள் நற்பண்புகளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிகாட்டப்படுவது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஒட்டுமொத்த சமூக உறுப்பினர்களிதும் பொறுப்பாகும்.

இப்பொறுப்பு தவறும்பட்சத்தில், ஆரோக்கியமற்ற, சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய சமூகமொன்றையே நாம் எதிர்காலத்தில் காண முடியும். அவ்வாறான ஆபத்தான நிலை உருவாக்கப்படாமலிருக்க வேண்டுமாயின், இன்றைய மாணவர்கள் ஒழுக்க விழுமியத்துடனும், பண்பாட்டுக்கலாசாரங்களுடனும், ஆன்மீக ஈடுபாட்டுடனும் வாழக்கூடியவர்களாக வீட்டுச்சூழலிலும், பாடசாலைகளிலும், வழிபாட்டுத்தளங்களிலும் வழிகாட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

அறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணங்களினால் எவையெல்லாம் நவீன கலாசாரமென்று அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாம்  அநாகரியமாக மாறி, நாளைய தலைமுறையினரை வழி தவறச்செய்து கொண்டிருக்கிறது. நவீன கலாசார மோகத்திற்குள் தள்ளப்பட்டுள்ள மாணவ சமுதாயத்தின் இளைஞர், யுவதிகள் தங்களைத் தாங்களாகவே அழித்துக்கொள்வதையறியாது அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

முறை தவறிய அதிகளவிளான ‘பேஸ்புக்’, ‘வட்சப்’ என்ற சமூக வலையத்தளங்கள் மற்றும் தொலைபேசிப் பாவனை, போதைவஸ்துப் பயன்பாடு என அவைகளுக்குள் மூழ்கி கால நேரங்களையும், பணத்தையும் வீண் விரையம்  செய்து., அழிவினதும், ஆபத்தினதும் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் அவற்றிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியாமல் அடிமைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக மயமாக்கலில் ஏற்படும் தவறுகள் இளைய தலைமுறையினரை இவ்வாறான படுபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இதற்கான முழுப்பொறுப்பையும் பிள்ளைகளின் சமூகமயமாக்களின் முகவர்களே சுமக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் வினைத்திறனற்ற வழிகாட்டல்கள் அல்லது வழிகாட்டல்களில் விடும்  தவறுகள் அல்லது விட்ட தவறுகள் எதிர்கால வளமான சமூகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

சமூக மயமாக்கல் முகவர்களும் மாணவர்களும்.
வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கேற்ற வகையில் வாழப்பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையை சமூக மயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஒரு மாணவனின் சமூக மயமாக்கலில் குடும்பம், சம வயதுக்குழுக்கள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் என்பவற்றிற்கு மேலாக ஊடகமும் தாக்கஞ்செலுத்துக்கிறது.

ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டுக் கலாசாரத்துடன் வீட்டுச்சூழலில் வளர்க்கப்படுமாயின், அப்பிள்ளை பாடசாலைச் சூழலில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும், சம வயதுக்குழுக்களின் அழுத்தங்களினாலும் வழி தவறிச்செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படும்.

பிள்ளையின் நடத்தை, மனவெழுச்சிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்களும், குடும்பத்தினரும், பாடசாலைச் சமூகமும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்ற போது, அப்பிள்ளை சம வயதுக்குழுக்களினால் திசை மாற்றப்படுவதைத் தடுக்க முடியாது.

அந்த வகையில், தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக அநாகரிகமாகச் செயற்படும் சம்பங்கள் அதிகரித்து விட்டதை அவதானிக்க முடிகிறது. மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் சம்பவங்கள் நகரப்புறங்களில் மாத்திமின்றி, கிராமப்புறங்களிலும் விரைவாகப் பரவி வருகிறது. நாகரியம் என்ற பெயரில் கட்டடிளமைப்பருவத்தினர் இப்போதைவஸ்துப் பாவனைக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை போதைப்பொருட்களை இலகுவாகக் கொள்வனவு செய்வதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்குமான நுட்பங்களை கட்சிதமாக போதைப்பொருள் வர்த்தக மாபியாக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வர்த்தக மாபியாக்களின் மாய வலைக்குள் சிக்குண்டு தவிக்கும் மாணவர்களை இப்போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவது காலத்தின் காட்டாயமாகும். அவர்களுக்கான சீரிய வழிகாட்டல்களை வழங்குவது சமூக மயமாக்கல் முகவர்களின் தார்மீகப் பொறுப்புமாகும்.

சமூக மயமாகல் முகவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகள் தொடர்பில் தங்களது பொறுப்பை அலட்சியப்படுத்துகின்ற போது, அல்லது அவற்றில் அக்கறைகொள்ளாத போது, இத்தகைய மாபியாக்களினாலும், மாபியாக்களின் முகவர்களாகச் செயற்படுகின்ற சில சம வயதினர்களினாலும் பல மாணவர்கள் தவறான வழிகளின்பால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களும் போதைப்பொருள் பாவனையும்
நாடளாவிய ரீதியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 13 வீதத்தினார் ஏதாவதொரு வகைப் போதைக்கு அடிமைப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது. அடிமைப்பட்டுள்ளவர்களில் ஆண் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இவ்வாறு அடிமைப்பட்டவர்களில் பலர் பல்வேறு உடல், உளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கை அடங்கலாக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றமையை அங்காங்கே இடம்பெறுகின்ற சம்பங்கள் நன்கு புடப்போடுகின்றன.

கடந்த மாதம் பதுளையிலுள்ள ஹோட்டலொன்றில் பேஸ்புக்கினூடாக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்வின் போது, அதில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளார்கள் எனக்கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் பொலிஸார் அங்கு விரைந்து சோதனை செய்ய போது, அந்நிகழ்வில் கலந்து கொண்ட 200 மாணவர்களில்  20க்கு  மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருளை கையில் வைத்திருந்த நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் செய்தி இணைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.

அவ்வாறு கடந்த விழயாக்கிழமை பொலனறுவை-மெதிரிகிரிய பிரதேசப்  பாடசாலையொன்றைச் சேர்ந்த தரம் 10 மற்றும் 11ல் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் 41 பேர் போதைப்பொருள் பாவனைக்குள்ளாகியிருந்த நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கவ்விப்புலத்தில் ஏற்டுத்தியிருக்கிறது.

மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிப்பட்டு இடம்பெறுகின்ற சம்பவங்கள் தென்னிலங்கையில் மாத்திரிமின்றி, வடக்கு கிழக்கிலும் அதிகரித்திருப்பது சமூக பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தற்போதில்லை என்ற போதிலும், போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்களினால் புரிப்படுகின்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதை அரசியல்வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குறிப்பிட்டுக்காட்டுவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

“வடக்கு கிழக்கு இளைஞர்களை இலக்கு வைத்து தீயசக்திகள் இயங்குகின்றன. அவை போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரேராத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன” என அண்மையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

போதை தலைக்கேறி மாணவர்கள் புரியும் அட்டகாசங்களினால் அவர்களைக் கைது செய்ய சட்ட நடவடிக்கையெடுக்க பாடசாலை அதிபர்களாலேயே பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நிலை உருவாகியிருப்பது, எதிர்கால சமூகம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டுமென்ற செய்தியைச் கூறி நிற்கிறது.

2020 ஆண்டில் போதைப்பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார  அமைச்சராக இருந்த காலந்தொட்டு இந்நாட்டிலிருந்து போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும் இன்னும் தடுக்க முடியாமலே உள்ளமை துரதிஷ்டவசமாகும். சட்டம் முறையாகச் செயற்படுத்தப்படாமையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் பணியில் காணப்படும் வழுக்கலுமே போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க முடியாமலுள்ளதாக சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாபியாக்களும் போதைப்பொருள் விற்பனையும்
தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாபுல், பீடா, பன்பராக், மாவா போன்றவற்றின் பாவனைகள் அதிகரித்து விட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களும் கேரளக் கஞ்சாப் பாவனையில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. யார் எவ்வாறு அழிந்தாலும், தங்களது வர்த்தகமும் அதனால் கிடைக்கின்ற வருமானமும் எந்தவிதத்திலும் குறைந்துவிடக் கூடாதென்ற பணத்தின் மீது பற்று வைத்த மாபியாக்களினால் எதிர்காலச் சந்ததியினர் அழிந்து போதை எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?

மிகவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வீதியோரக்கடைகளிலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகச்சூழலில் விற்கப்படும் இத்தகைய பொருட்கள் சில மாணவர்களினால் வகுப்பறைகளுக்குள்ளேயே பயன்படுத்தப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.

சமகால மாணவ சமூத்தினரினால் பயன்படுத்தப்படுகின்ற இத்தகைய பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட  மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச்சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாமலிருப்பது இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கலாம்.

எதிர்கால சந்தியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதை அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் புடம்போடுகின்றன. கடந்த வருடங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களில் கணிமான எண்ணிக்கை கொண்டவர்கள். 15க்கும் 20 வயதுக்குமிடைப்பட்டவர்களும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இக்குற்றச்செயல்கள் சிலவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாகரிக கலாசாரத்திற்குள் மூழ்கித் தத்தளிக்கும் மாணவர்கள் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்ற  போதை தரக்கூடிய பாவனைப் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஆளாகி, தங்களைத் தாங்களாவே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணத்தை மாத்திரம் மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர். வளரும் இளந்சந்ததியினரை ஆண்மையற்றவர்களாக பிள்ளைப்பேற்றில் பலவீனமானவர்களாக இன்னும் பல்வேறு உடல் உபாதைக்குத் தள்ளப்படக் கூடியவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை மறந்து இவர்கள் பணத்தில் கொண்ட பேராசையினால் இத்தகைய போதைப்பொருட்களின் விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகையவர்களின் பண ஆசைக்கு பலியாகும் அப்பாவி மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது பெற்றோர்களினதும். ஆசிரியர்களினதும் மற்றும் சமூகத்திலுள்ள ஒவ்வொரு நல்லுள்ளம் படைத்தவர்களின் கட்டாயப் பொறுப்பாகவுள்ளது.

பொறுப்பும் பாதுகாப்பும்
தங்களது பிள்ளைகளின் செயற்பாடுகளில் பெற்றோர்கள் அதிக கவனஞ்செலுத்துவதோடு, பிள்ளையின் சம வயதுக்குழுக்கள் மற்றும் நண்பர்கள் குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டும். அத்தோடு, பாடசாலைகளில் மாணவர்களின் இத்தகைய பொருட்களின் பயன்பாடு குறித்து பாடசாலைச்சமூகம் அசமந்த போக்கில் செயற்பாடாமல் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பிள்ளை போன்று ஏனைய பாடசாலை மாணவர்களையும் கவனத்திற்கொண்டு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

பாடசாலைகளிலுள்ள வழிகாட்டல் ஆலோசனைச் செயற்பாடானது, வினைத்திறன்மிக்கதாக காணப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

இதைத்தவிர்த்து, தொழில்வான்மை உளவளத் துணையாளர்களின் உதவி கொண்டு இந்த வழிகாட்டல் ஆலோசானைச் செற்பாடுகள் தொடர்ச்சியாக வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை தவிர, வழிபாட்டுத்தளங்களிலும் போதைவஸ்துப்பாவனை மற்றும் விற்பனை தொடர்வில் பெற்றோர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்தும் வகையில் ஆன்மீக ரீதியாக விழிப்புணர்வூட்டப்படுவதும் அவசியமாகும்.

அத்துடன், சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிசாரும் அதிகாரிகளும் தயவு தாட்சணையின்றி, சட்டத்தை மீறி இத்தகைய போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கெதிராக சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவற்றோடு ஒரு மாணவனின் சமூக மயமாக்கலில் தாக்கஞ்செலுத்துகின்ற ஊடகம் உட்பட சமூகமாயமாக்கல் முகவர்கள் தமது பொறுப்பை முறையாகச் செயற்படுத்தி வழி தவறிச்செல்லும் மாணவ சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் மாணவ சமூகத்தின் உடல், உள ஆரோக்கியததைக் கெடுத்து சமூகத்தின் மத்தியில் இழி பெயர்களை ஏற்படும், சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும்; போதைப்பொருட்களின் பாவனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடிவதோடு, நாளைய சமூகத்தின் நற்பிரஜைகளாகவும் மாற்ற முடியும்.
வீரகேசரி – 2017.07.15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>