‘'அரசியல்வாதிகளுக்கு பேரினவாத மோதல்கள் அவசியமாகின்றன”– எம்.ரிஷான் ஷெரீப்

2
582

Untitled-1குறிப்பு – கடந்த 02.07.2017ம் திகதியன்று ராவய சிங்கள வார இதழில் வெளிவந்த நேர்காணலின் தமிழ் வடிவம்.
நேர்காணல்– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்திலிருந்து கொண்டு, சர்வதேச ரீதியில் பரந்திருக்கும் தமிழ் வாசகர்களையும் கருத்திற்கொண்டு படைப்புக்களை எழுதி வரும் எம்.ரிஷான் ஷெரீப் ஒரு இலக்கியப்படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் என தேசத்தின் எல்லை தாண்டிச்சென்ற, இலங்கையின் மாவனல்லைப் பிரதேசத்தில் பிறந்த இளைஞர் ஒருவராவார்.

இது அவருடனான ஒரு கலந்துரையாடல்.

இந்தியாவில் 2010 ஆண்டு வெளிவந்த ரிஷானின் முதலாவது தொகுப்பைக்குறித்தும், அதற்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும்…
அது ஒரு கவிதைத்தொகுப்பு. தொகுப்பின் தலைப்பு ‘வீழ்தலின் நிழல்’. ‘விழும் பொருளொன்றின் நிழல்’ என அதனை அர்த்தப்படுத்தலாம்.Veeldhalin Nilal மேலிருந்து கீழ் நோக்கி ஏதாவது விழும் போது, சில கணத்துக்கு தரையில் ஒரு நிழல் தோன்றும் இல்லையா? விழுந்தவுடனேயே அந்த நிழல் காணாமல் போய் விடும். ஈழ யுத்தமும் அவ்வாறு தான். மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தது. அதை அந்தளவு உயரமான இடத்துக்குக் கொண்டு செல்ல நிறையப்பேர் பாடுபட்டார்கள். கீழே விழுந்தவுடன் அவர்கள் நிழலைப் போலவே காணாமல் போய் விட்டார்கள் அல்லது காணாமல் போகச்செய்யப்பட்டார்கள். கீழே விழுந்ததற்கு எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது. குருதியினூடு கீழடங்கிப் போனது. இரத்தக்கறைகள் மாத்திரம் மீதமாகி எஞ்சின.

இந்தத் தொகுப்பில் எனது கவிதைகள் மாத்திரமே அடங்கியிருந்தன. தொகுப்புக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறதென நினைக்கிறேன். காரணம், சாதாரணமாக இலங்கையில் தமிழ்க் கவிதைத்தொகுப்புக்கள் முதலாம் பதிப்பைத் தாண்டிச் செல்வதில்லை. இக்கவிதைத் தொகுப்பு மூன்றாம் பதிப்பை எட்டிக் கொண்டிருக்கிறது.

ரிஷானின் அடுத்த தொகுப்புக்கு இலங்கை அரச சாகித்திய விருது கிடைத்தது. அந்த இரண்டாம் தொகுப்பை ரிஷான் எப்படி உணர்கிறீர்கள்?
எனது இரண்டாவது தொகுப்பு, எழுத்தாளர் சுநேத்ரா ராஜ கருணாநாயக எழுதிய கதையின் தமிழ் மொழிபெயர்ப்புத்தொகுப்பு. தலைப்பு ‘அம்மாவின் ரகசியம்’. அது ஜேவிபி கலவர காலத்தில் துயரங்களை அனுபவித்த தாயொருத்தின் நினைவுக்குறிப்புக்கள் அடங்கிய தொகுப்பு. அக்கலவர காலத்திலும், போர்க்காலத்திலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களினதும் அனுபவங்கள் மிகவும் துயரம் வாய்ந்தவை. Ammavin Rahasiyam Book

அவை எதிர்காலச்சந்ததியினர் வாசிக்க வேண்டி, பதிந்து வைக்கப்பட வேண்டியவை. அதன் மூலமாக ஒரு யுகத்தில் வாழ்ந்த மக்களின் துன்ப வாழ்வியலைக் குறித்து அறிந்து கொள்ள முடியும். மீண்டும் அவ்வாறான வாழ்க்கைக்குள் தள்ளப்படாத வண்ணம், அவை போன்ற அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள முடியும். நேரான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அத்தொகுப்புக்கு 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாகித்திய விருது 2012 ஆம் ஆண்டு கிடைத்தது. அக்காலத்தில் தமிழ் மொழிப் படைப்பாளிக்கு இந்த விருது வழங்கப்பட்டதை சிங்களப்பெண் கவிஞரொருவர் பலமாக எதிர்த்தார். யுத்தத்தின் காரணமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக ஏன் அந்த விருதை நிராகரிக்கவில்லையென வாதிட்டார்.

அந்த விருதினை நான் ஏன் நிராகரிக்க வேண்டும்? நானும் இந்த நாட்டைச் சேர்ந்தவன் தான். நான் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவனல்ல. தமிழ் மொழி மூலமே பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தேன். இந்நிலையில், இந்த விருது எனது மொழிபெயர்ப்புத்திறமைக்குக் கிடைத்த விருது. இந்த விருது, எனது தாய் நாடும் இந்த அழகிய இலங்கையே என்பதையே எடுத்துரைக்கிறது. அது எனக்கு மிகவும் பெறுமதியானது.

இலங்கை அரசாங்கம் கொடுக்கும் பட்டங்கள் அவர்களுக்குப் பெறுமதியானவை. அரசாங்கம் வழங்கும் தொழில்கள் அவர்களுக்கு பெறுமதியானவை. அரசாங்கம் வழங்கும் அனைத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அவற்றை நிராகரிப்பதில்லை.

ஆனால், தமிழில் எழுதுபவர்களுக்கு அரசாங்கமானது ஏதேனும் விருதுகள் கொடுத்தால், அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஏன் இந்தளவு வன்மம்? தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என சமூகத்துக்குக் காட்ட தலைமுடியை விதவிதமாகக் கத்தரித்துக் கொண்டு, பல வர்ணங்களில் சாயமிட்டு, உடம்பில் பச்சை குத்திக்கொண்டு பலவித நடவடிக்கைகளில் ஈடுபடும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், இல்லையா? இவர்களும் அவ்வாறானவர்கள் தான் என எனக்குத்தோன்றுகிறது.

யாருக்காவது எதையாவது சொல்லி அல்லது செய்து தம்மைப் பிரபலப்படுத்திக் காட்டிக்கொள்ள முற்படுபவர்கள் இவர்கள். சவ வீட்டில் கூட தான் மட்டும் தனியாக விளங்க, பிணமாகக்கிடக்க முயற்சிப்பவர்கள் இவர்கள். இவ்வாறானவர்களைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. எமது திறமையின் மூலமாக எம்மால் இயன்றளவுக்கு இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதுதான் பயனுள்ளதாக அமையும்.

எழுத்தாளர் சுநேத்ராவின் அந்தக்கதையானது, தமிழ் வாசகர்களுக்கு புதியதாக இருந்தது. ஏனெனில், அநேகமான தமிழ் வாசகர்கள் ஜேவிபி கலவர காலத்தில் அரச படைகளால் துயரங்களுக்கு ஆளான சிங்களவர்களைக் குறித்து அறிந்திருக்கவில்லை. அவ்வாறான விடயங்கள் தமிழில் மிகக்குறைவாகவே எழுதப்பட்டிருந்தன.

‘அனைத்து சிங்களவர்களுக்கும் இலங்கை என்பது சொர்க்காபுரி’ என்றே நிறையத் தமிழர்கள் எண்ணியிருந்தனர். இலங்கையில் ஏழை மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்தும், அந்தக்கஷ்டங்களுக்கு இன, மத பேதங்கள் இல்லையென்பது குறித்தும், அவ்வாசகர்கள் அறிந்து கொண்டது மொழிபெயர்ப்பு மூலமாகத்தான். எந்த நாட்டைச்சேர்ந்த தமிழ் வாசகரும் அதனை அறிந்து கொண்டது மொழிபெயர்ப்பு மூலமாகத்தான். அதற்கு அந்தத்தொகுப்பு மிகவும் உதவியது.

நீங்கள் கவிஞர் ஃபஹீமா ஜஹானுடன் இணைந்து சிங்கள எழுத்தாளர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத்தொகுப்பை தமிழுக்கு மொழி பெயர்த்தீர்கள். மொழி பெயர்க்க வேண்டுமெனத்தோன்ற அத்தொகுப்பில் சிறப்பாகக்கண்டது என்ன?
நான் முதன்முறையாக மொழிபெயர்த்தது மஞ்சுள வெடிவர்தனவின் ஒரு கவிதையைத்தான். அக்கவிதை எனது உள்ளத்தைத் தொட்ட கவிதையாக இருந்தது. அதனை மொழி பெயர்த்து சகோதரி ஃபஹீமா ஜஹானுக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூன்று கவிதைத் தொகுப்புக்களை எழுதி வெளியிட்ட கவிதாயினி. நிறைய வாசிப்பு அனுபவமும் கொண்டவர்.

ஏற்கனவே மஞ்சுளவின் பல கவிதைகளை வாசித்திருப்பவர். அவர் மஞ்சுளவின் கவிதைகளைக் குறைத்து நிறைய விடயங்களைக் கூறினார்.Thalaippatra Thaynilam அடக்குமுறைக்கு ஆட்பட்ட தமிழ் பேசும் மக்களுக்காக மஞ்சுள எழுதும் கவிதைகள் பல விடயங்களை எமக்கு எடுத்துரைத்தன. நாங்கள் மஞ்சுளவின் கவிதைகளை மொழிபெயர்த்து ஆளுக்காள் பகிர்ந்து கொண்டு அவை குறித்து உரையாடினோம்.

எமக்குத் திருப்தியாக மொழிபெயர்ப்பு அமைந்ததன் பிறகு, அக்கவிதைகளை எமது வலைத்தளத்தில் பதிவேற்றினோம். அக்கவிதைகளுக்கு வாசகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அக்கவிதைகளைப் பார்த்து விட்டு லண்டன், எழுநா பதிப்பகத்திலிருந்து எம்மைத்தொடர்பு கொண்டார்கள்.

மஞ்சுளவின் ஒரு முழுக்கவிதைத்தொகுப்பையும் தமிழில் மொழிபெயர்த்துத் தரச்சொன்னார்கள். அதை நானும், சகோதரி ஃபஹீமா ஜஹானும் இணைந்து மொழிபெயர்த்துக் கொடுத்தோம். ‘தலைப்பற்ற தாய் நிலம்’ எனும் அத்தொகுப்பு 2013 ஆம் ஆண்டு லண்டன், கனடா, சுவிட்ஸர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், இலங்கையில் அந்தத்தொகுப்பு வெளியிடப்படவில்லை. ஏனெனில், அத்தொகுப்பின் அட்டையில் மஞ்சுளவினதும், இராணுவத்தினரதும் ஓவியங்கள் இருந்தன. வெளியிடப்பட்ட அத்தொகுப்பின் பிரதிகளை எமக்கு பதிப்பகம் அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அவையும் கிடைக்கவில்லை. தபாலகம் அதை ஒப்படைக்கவில்லை. இது எமக்கு மாத்திரம் நடந்தவொன்றல்ல. அநேகமான தமிழ் வாசகர்களுக்குத் தேவையான புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து தபால் மூலமாக எடுப்பித்துக் கொள்ள முடியாது.

தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன?, எதற்காக வாங்கினீர்கள்?’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை முழுவதுமாக வாசித்துப் பார்க்காமல் எவ்வாறு அதில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என விபரமாகச் சொல்ல முடியும்?

புத்தகத்தில் பிரபாகரனின் புகைப்படமோ, யுத்தம் சம்பந்தமான விடயங்கள் ஏதேனுமோ பிரசுரிக்கப்பட்டிருந்தால், தபாலகத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள வந்தவரின் பாடு முடிந்தது. யாரும் எந்தத்தவறும் செய்யாமல் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை அல்லவா?

ஆகவே, இலங்கையில் தமிழ் புத்தக வாசகர்களுக்கு தமக்குத் தேவையான புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து எடுப்பித்து தாம் விரும்பியவாறு வாசிக்க சுதந்திரமில்லை. அரசாங்கம் எவற்றை வாசிக்க அனுமதிக்கிறதோ அத்தொகுப்புக்களை மாத்திரமே வாசிக்க வேண்டியிருக்கிறது.

கடந்த வருடம் நீங்கள் பிரசுரித்த சிறுகதைத்தொகுப்பைக் குறித்து…
அது ‘அடைக்கலப்பாம்புகள்’ எனும் எனது சிறுகதைத்தொகுப்பு. நான் எழுதிய இருபத்தைந்து சிறுகதைகள் உள்ளடக்கிய சற்றே பெரிய Adaikala pambukalதொகுப்பு அது. அக்கதைகள் நான் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களைக் குறித்து எழுதியவை. எமது ஜீவிதத்தோடு இணைந்திருக்கும் மனிதர்கள் மற்றும் இருந்து மரித்தவர்களைக் குறித்து எழுதியவை அவை.

சந்தோஷம், துக்கம், கிடைப்பவை, இழப்பவை போன்ற அனைத்தோடும் போராடும் மனிதர்களை தினந்தோறும் நாம் காண்கிறோம். முட்டி மோதியோ, இணங்கிப் போயோ நாமனைவரோடும் எவ்வாறேனும் வாழ்ந்து விடுகிறோம் இல்லையா? அவ்வாறிருக்கும் ஜீவிதத்தைத் தவிர்த்துச்செல்ல எவராலும் முடியாது, மரித்துப்போகாமல்… இல்லையா? இவை அவ்வாறானவர்களைக் குறித்த கதைகள்.

அத்தொகுப்போடு, நீங்கள் சென்னையில் வெளியிட்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் குறித்தும் நினைவுபடுத்துவோம்…
அத்தொகுப்பின் தலைப்பு ‘இறுதி மணித்தியாலம்’. அத்தலைப்பு உள்ளே அடங்கியிருக்கும் கவிதையொன்றின் தலைப்பு. சிங்கள மொழியில் கவிதைகளை எழுதும் சிறந்த பத்து கவிஞர்களின் சமகாலத்தைக்குறித்தும், யுத்தத்தைக்குறித்தும், இன்னல்களுக்குள்ளாகும் மக்களைக் குறித்தும் எழுதப்பட்ட பல கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ஒரு முழுத்தொகுப்பாக வெளியிட்டேன். இதுவும் சற்று பெரிய தொகுப்பு.

சிங்கள மொழிக்கவிதைகளைச் சேகரித்து, வாசித்து, சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து என நான்கு வருடங்களுக்கும்Irudhi manithiyalam மேலாகப் பாடுபட்டு வெளியிட்ட இத்தொகுப்புக்கு தமிழ் வாசகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அநேகமான தமிழ் வாசகர்கள் சமகாலத்தில் சிங்களத்தில் கவிதைகளை எழுதும் நல்ல கவிஞர்களை அறிந்திருக்கவில்லை.

இத்தொகுப்பின் மூலமாக அக்கவிஞர்களை தமிழ் வாசகர்கள் மத்தியில் என்னால் கூட்டிக்கொண்டு செல்ல முடிந்தது. கடந்த மாதம் இத்தொகுப்புக்கு கனடாவில், கடந்த வருடத்தின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான தமிழியல் விருது கிடைத்ததுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் மக்களை வெறுக்காத சிங்களவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதை இக்கவிதைகள் மூலமாக உணர்ந்தவர்கள், இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை தமிழ் வாசகர்கள் இருக்கும் அனைத்து நாடுகளினதும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிக்கடி பிரசுரிக்கிறார்கள்.

இதன் மூலமாக, இரு தரப்பினரதும் கைகளைப்பிடித்து கவிதைகள் மூலமாக நீண்ட பயணமொன்று செல்லத்தேவையான பாதையை உருவாக்கிக் கொடுக்க என்னால் முடிந்திருக்கிறது. அதற்கு என்னுடன் கரம் கோர்த்த இக்கவிஞர்களுக்கு எனது நன்றிகள் எப்போதும் இருக்கும்.

இஸ்லாமிய மக்களுக்குரிய சிக்கல்கள் குறித்து நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இலங்கை அளுத்கம, பேருவளைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாத அடக்குமுறைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை ஒரு முழுத்தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன். அதன் தலைப்பு ‘கறுப்பு ஜூன் 2014’. இஸ்லாமிய மக்களுக்குரிய சிக்கல்கள் எனும் போது, இஸ்லாமியர்களாலேயே இஸ்லாமியர்களுக்கு நிகழ்த்தப்படும் சிக்கல்களும் உள்ளடங்குகின்றன இல்லையா? எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மூலமாக அவை குறித்தும் நிறைய எழுதியிருக்கிறேன்.

இலங்கையில் இனவாத மோதல்கள் குறித்த படைப்புக்கள் மீது நீங்கள் அதிகமாக அவதானத்தைச் செலுத்துவது ஏன்? இலங்கையில் இனவாத மோதல்கள் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?
உண்மையில் இனவாத மோதல்கள் நிகழ்த்தப்படும் போது, அவற்றைக் குறித்து வைப்பது அவசியமாகிறது. அவை வரலாறாகின்றன.Karuppu June 2 அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு, முன்பு  நிகழ்ந்தவை போன்றவை நிகழாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அந்த வரலாற்றுக்கு இருக்கிறது.

தவறு யார் மீது இருக்கிறதென உணர வைப்பதையும், அந்தத்தவறு மீண்டும் நிகழாதிருக்கப் பார்த்துக் கொள்வதையும், எழுதி வைக்கும் அக்குறிப்புகள் செய்கின்றன. சாதாரண பொது மக்கள் இனவாத மோதல்களை உண்டாக்குவதில்லை. அரசியல்வாதிகளே பொது மக்களுக்குப் பின்னாலிருந்து இனவாத மோதல்களை உருவாக்கி விடுகிறார்கள்.

காரணம், அவர்களுக்கு தமது அரசியலை நீண்ட காலத்துக்கு நடத்திச்செல்லவும், பரம்பரை பரம்பரையாக ஆட்சியைக் கொண்டு செல்லவும், நாட்டில் இனவாத மோதல்கள் அவசியமாகின்றன. அவர்கள் தான் அனைத்தையும் செய்கிறார்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதையும் கூட.

இவ்வாறான அரசியல்வாதிகள் இனவாத மோதல்களை மாத்திரம் தோற்றுவிப்பதில்லை. இவர்கள் உசுப்பேற்றி விடும் நபர்கள் போதிப்பவை மூலம் இலங்கையிலுள்ள அனைத்து சாதாரண பொது மக்களினதும் அன்றாட வாழ்க்கையுமே குழம்பி விடுகிறது. எண்ணங்கள் விகாரமடைகின்றன. இளந்தலைமுறையினருக்கு எது சரியானதென சிந்தித்துப்பார்க்கவோ, சரியானதைத் தேர்ந்தெடுக்கவோ முடியாமல் போவதோடு, அது சிரமமானதாகவும் ஆகி விடுகிறது. அமைதியாகவும், சாதாரணமாகவும், எளிமையாகவும் அனைவருடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ விரும்பும் அனைத்து மக்களின் மீதும் அது இன்றும் நாளையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிங்கள, முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளில் அநேகமானவர்கள் சாதாரண பொது மக்களை தமது தூண்டில் இரையாகப் பயன்படுத்துவது குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். அநேகமான அரசியல்வாதிகள் இத்தேசத்துக்கோ, இத்தேச மக்களுக்கோ ஏதேனும் நல்லதைச் செய்வது, அதன் மூலமாக தமக்கு இலாபமோ, கமிஷன் பணமோ கிடைப்பதாக இருந்தால் மாத்திரமே.

நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் உண்மையான ஆதரவோடு இருக்கும் அரசியல்வாதிகள் இலங்கையில் மிகவும் குறைந்தளவிலேயே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வந்த வெள்ளப்பெருக்கு கூட நமக்கு எடுத்துக்காட்டியது. ‘இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகள் சரியில்லை, மருத்துவம் சரியில்லை, வைத்தியர்கள் சரியில்லை’ என்றா தமக்கு ஏதேனும் வியாதிகள் தொற்றும் போது, அரசியல்வாதிகள் மக்கள் பணத்தில் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார்கள்? ஆட்சியாளர்கள் முதலில் நாட்டின் வளங்களைப் பாவித்து எவ்வாறு எளிமையாகவும், சரளமாகவும் வாழ்வது என்பது குறித்து மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். எமது பால்ய வயதுகளில், ஊரில் ஒரு மரண வீடிருந்தால் அனைவருமே கவலையோடு இருப்போம். அன்று வானொலிப்பெட்டியைக்கூட யாரும் ஒலிக்க விடுவதில்லை. இன்று இயற்கை அனர்த்தங்களால் நூற்றுக்கணக்கானோர் மரித்து, பல்லாயிரக்கணக்கானோர் துன்புற்றுக் கொண்டிருக்கும் போதும், நாட்டின் தொலைக்காட்சி ஊடகங்கள் ரியாலிடி இசை நிகழ்ச்சிகளையும், மெகா நாடகங்களையும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

பக்கத்து வீட்டில் எத்தனை பேர் செத்துப்போயிருந்தாலும், இந்த வீட்டிலிருப்பவர்கள் தொலைக்காட்சி பார்த்து மகிழும் நிலைமைக்கு மக்கள் மாறியிருக்கிறார்கள். மக்கள், சக மனிதனின் துயரத்தை உணராத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு விபத்து நிகழ்ந்தால் பாதிக்கப்பட்ட நபரின் ஆரோக்கியத்தைக் குறித்துப் பரிசோதித்துப் பார்க்காமல், அருகிலிருந்து செல்ஃபி புகைப்படமெடுத்துக் கொள்ளும் நபர்கள் இன்று நிறைந்திருக்கிறார்கள்.

இவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. காரணம் நாங்கள் அரசியல்வாதிகளின் படகுகளிலேறி முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்கி மிதந்து சென்று கொண்டிருக்கிறோம். அங்கு பணத்தைத்தவிர்த்து எவ்வித மனிதாபிமானத்துக்கும் இடமில்லை.

அண்மையில் வெள்ளப்பெருக்கு வந்த போது, ‘மக்கள், தொலைக்காட்சியில் காலநிலை அறிக்கையைப் பார்க்காததாலேயே அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது’ என அரசியல்வாதியொருவர் மக்களைக்குறை கூறியிருந்ததைக் கண்டேன். மக்களுக்கு காலநிலை அறிக்கையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் விதமாகவா தொலைக்காட்சி அலைவரிசைகள் காலநிலை அறிக்கைகளைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன?

செய்தியறிக்கைகளில் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் மக்களுக்குப் பயனற்ற விதமான, அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டு, இறுதியில் ஏனோதானோவென்று சில கணங்கள் காலநிலை அறிக்கை காண்பிக்கப்படுகிறது. எனவே, குறை கூற வேண்டியது மக்களையா, தொலைக்காட்சி அலைவரிசைகளையா?

அவ்வாறே அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு ஏதேனும் பங்கிட்டுக் கொடுப்பதானால், அவற்றை அனைவருக்கும், சமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, நகர பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கப்படுகின்றன. உயர் தர மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் (Tab) வழங்கப்படுகின்றன.

அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவை அத்தியாவசியமானவையா? எனப்பார்ப்பதில்லை. வெளிநாடுகளிலிருந்து அவற்றைக் கொள்வனவு செய்வதன் மூலம் கிடைக்கும் கமிஷன் பணம் மாத்திரமே அந்த அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவையாகத் தெரிகிறது.

எமது நாட்டின் அநேகமான பாடசாலைகளுக்கு கையடக்கக்கணினிகள் தேவையில்லை. சற்று வந்து பாருங்கள். வடக்கில் அநேகமான பாடசாலைகளில் கட்டடங்களே இல்லை. மேசை, கதிரைகள் இல்லை. மாணவர்கள் மரங்களின் கீழே அமர்ந்து கல்வி கற்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் மலையகப் பிரதேசங்களிலிருக்கும் பாடசாலைகளில் சுவர்கள் இடிந்து விழும் நிலையிலிருக்கின்றன.

மழைக்காலங்களில் கூரைகளின் ஓட்டைகளிலிருந்து தண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. வெயில் காலங்களில் கூரையை இடிந்து விழுகிறது. இந்த மாணவர்களுக்கு எவ்வித உதவியும் இதுவரையும் கிட்டவில்லை. ஆனால், ‘இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம்’ என அரசியல்வாதிகள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஊடகவியலாளனாக இனவாத மோதல்கள் குறித்து மாத்திரமல்ல, நாட்டிலிருக்கும் இவ்வாறான அனைத்து சிக்கல்கள் குறித்தும் நான் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். அது ஒரு ஊடகவியலாளனின் கடமை. அதைத்தான் நான் நிறைவேற்றுகிறேன். நாட்டு மக்களை ஏமாற்றும், அப்பாவி ஜனங்களை பொம்மைகளாக்கும் அரசியல்வாதிகளை நான் பகிரங்கமாகவே எதிர்க்கிறேன். இவ்வாறான அரசியல்வாதிகள் இந்நாட்டில் இருக்கும் வரைக்கும், இவர்கள் நடத்திக்கொண்டு செல்லும் இனவாத மோதல்கள் மாத்திரமல்ல. தீர்வுகளேயற்ற பிரச்சினைகளும் தினந்தோறும் நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.

ரிஷான் இந்தியாவில் புத்தகங்களைப் பிரசுரித்து வெளியிடுவதற்கு ஏதேனும் விஷேட காரணமிருக்கிறதா? இலங்கையில் தமிழில் புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதால் வியாபாரப்பின்னடைவும் இதில் தாக்கம் செலுத்துகிறதா? அல்லது வேறேதும் காரணமா?
சற்று சிந்தித்துப் பாருங்கள். எமக்கு வாசிக்கவென வெளிநாடுகளில் கொள்வனவு செய்யும் புத்தகங்களே எமக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில், நாம் யுத்தத்தைக் குறித்தும், யுத்தத்தினால் இடம்பெயர நேர்ந்த மக்களின் அல்லல்களைக் குறித்தும், இனவாத மோதல்களில் சிக்கிக் கொள்ளும் மக்களின் கண்ணீரைக் குறித்தும் எழுதி, இலங்கையில் அவற்றைப் பிரசுரிக்க இயலுமா? அவ்வாறான புத்தகங்களைப் பிரசுரிக்க இலங்கையிலுள்ள தமிழ் பதிப்பகங்கள் பலவும் தயங்குகின்றன.

அவர்களைக்குறை கூற முடியாது. அந்தத்தயக்கமும், பயமும் நியாயமானது. இலங்கையில் இன்னும் கூட இந்த நிலைப்பாடு தான்M.Rishan Shareef2 இருக்கிறது. சிங்கள வாசகர்கள் மிகவும் விரும்பிய தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தகத்தின் மூலத்தமிழ்ப் பிரதியானது இந்தியாவில் தான் பிரசுரமானது. அவ்வாறான ஒரு நிலைமை தான் இன்னும் இங்கிருக்கிறது.

இன்னுமொன்று, தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களிலிருக்கும் புத்தக நிலையங்களில், வாசிகசாலைகளில், வாசகர்களுக்கு தாம் வாசிக்க விரும்பும் புத்தகங்களை மிகக்குறைந்த அளவே பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கின்றன. தமிழ் மொழி மூல பாடசாலைகளிலிருக்கும் வாசிகசாலைகளில் புதிது புதிதாக வரும் புத்தகங்கள் இருப்பதில்லை. பல வருடக்கணக்காகப் பழமை வாய்ந்த புத்தகங்களே அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான ஒரு நிலைமையில் நவீன தலைமுறையில் புதிய தமிழ் வாசகர்களை எதிர்பார்க்க இயலுமா என்ன?

இலங்கையிலுள்ள தமிழ் வாசகர்களுக்கு சகல விதமான புத்தகங்களுமே பரந்தளவில் கிடைப்பதில்லையென்பது இதன் மூலம் தெளிவாகிறது இல்லையா? இயலுமானவர்கள் இணையத்தொடர்பாடலின் மூலம் தமிழ் மின் புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்கள்.

அதுவும் இயலுமானவர்கள் மாத்திரம் தான். இலங்கையிலுள்ள தமிழ் வாசகர்களில் கிட்டத்தட்ட 10% அளவானவர்களே அவ்வாறும் செய்கிறார்கள். எனில், ஏனையவர்கள்? அதனால் தான் இலங்கையிலுள்ள தமிழ் வாசகர்களின் வாசிப்புப்பழக்கம் ஒரு எல்லைக்குட்பட்டது என்கிறேன்.

புதிது புதிதாக புத்தகங்கள் கிடைக்காத நிலையில், அநேகமானவர்களுக்கு வாசிப்பே வேண்டாமென்றாகி இப்பொழுது வாசிப்புப்பழக்கமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சர்வதேச புத்தகக்கண்காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அக்கண்காட்சியில் இலங்கையின் தமிழ் புத்தக நிலையங்கள் மிகவும் குறைவாகவே கலந்து கொள்கின்றன. அவற்றிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட இந்தியப்புத்தகங்களே விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

அதனால் தான் இலங்கையிலுள்ள அநேகமான எழுத்தாளர்கள் இந்தியாவில் தமது புத்தகங்களைப் பிரசுரிக்கிறார்கள். இந்தியாவில் புத்தகங்களைப் பிரசுரிக்கும் போது, அவை எவ்விதத்தடங்கலுமின்றி பல நாடுகளுக்கும் செல்கின்றன. தமிழ் வாசகர்கள் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அந்த வாசகர்கள் அப்புத்தகங்களை வாசிக்கிறார்கள். இலங்கையில் புத்தகங்களைப் பிரசுரித்து சிரமத்தில் தள்ளப்படுவதைக் காட்டிலும் அவ்வாறு செய்வது இலகுவானது, இல்லையா?

இலங்கையில் தமிழ் புத்தகங்களைப் பிரசுரித்து, அவற்றை விற்க முடியாமல் நான்கு புறத்திலும் கடனாளியாகி, எழுதுவதைக்கூட கைவிட்ட பலரை நானறிவேன். தமது திறமையை மாத்திரம் கொண்டு, யாருடைய உதவியுமில்லாது புத்தகங்களைப் பிரசுரித்து, அவற்றை விற்க முடியாமல் நஷ்டப்பட்டு எழுதுவதையே கைவிட்ட நிலையில் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்களை அவ்வாறான விடயங்கள் பலமாகத் தாக்குகின்றன, கஷ்டப்படுத்துகின்றன.

எனது ஐந்து புத்தகங்களும், சகோதரி ஃபஹீமா ஜஹானின் மூன்று புத்தகங்களும் இந்தியாவிலேயே பிரசுரிக்கப்பட்டன. காரணம் நாங்கள் அவற்றை புத்தகங்களாகப் பிரசுரிக்கும் முன்பே புத்தகத்தின் உள்ளடக்கங்களை எமது வலைத்தளங்களில் பிரசுரித்திருந்தோம். அவற்றுக்கு பல நாடுகளிலிருந்தும் பல வாசகர்கள் கிடைத்தார்கள்.

அவர்களுக்கு அச்சுப்பிரதிகளாகக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே இந்திய பதிப்பகங்களின் மூலமாக தொகுப்புக்களாகப் பிரசுரித்தோம். அதன் காரணமாக, எமது புத்தகங்களின் விற்பனை சம்பந்தமாக சிரமப்பட வேண்டிய நிலைமை எமக்கு ஏற்படவில்லை. எமது அனைத்து வாசகர்களுக்குமே அத்தொகுப்புக்களும் போய்ச்சேர்ந்தன. புத்தக விற்பனை குறித்த கவலையில்லாமல் எம்மால், எமது பாட்டில் தொடர்ந்தும் எழுத்துத்துறையில் இயங்க முடியுமாகவும் இருக்கிறது.

இலங்கையில் தமிழ் இலக்கியத் துறை குறித்து ரிஷானின் கருத்து என்ன?
இலங்கையில் தமிழ் இலக்கியம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டதல்ல. இலங்கையில் இடத்துக்கிடம் அது வேறுபடுகிறது. நீண்ட கால யுத்தத்தின் காரணமாக, போர்ப்பிரதேசங்களிலிருந்து எழுதுபவர்கள் யுத்தத்தைக்குறித்து அதிகமாக தமிழில் எழுதுகின்றனர். அவற்றை யுத்த இலக்கியம் எனலாம்.

தற்காலத்தில், முன்னாள் போராளிகள் பலரும் தமிழில் நிறையப்புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிM.Rishan Shareef உறுப்பினர்கள் ‘அம்மா’, ‘அத்தை’ என்றழைக்கும் எழுத்தாளர் தமயந்தி சிவசுந்தரலிங்கத்துக்கு தற்போது அறுபத்தெட்டு வயதாகிறது. இவரது இரண்டு மகன்களுமே விடுதலைப்புலி உறுப்பினர்களாக இருந்து போரில் மரணித்தவர்கள். பிறகு இவரும் விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து கொண்டவர்.

இவர் அண்மையில் ‘தமிழ்க்கவி’ எனும் புனைப்பெயரில் எழுதிய ‘ஊழிக்காலம்’ நாவலானது, யுத்த காலத்தில் அநாதரவாகிப்போன மக்களின் பயங்கரமான அனுபவங்களையும், யுத்தமானது சாதாரண பொது மக்களை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதையும் விளக்குகிறது.

அவ்வாறே, எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தொகுப்புக்களையும் குறிப்பிடலாம். அவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர். யுத்தத்தின் காரணமாக அவர் அவரது வலது கையையும், வலது கண்ணையும், செவிப்பறையையும் இழக்கிறார். பிறகு இடது கையால் எழுதப்பழகி இப்பொழுது யுத்தத்தைக் குறித்து நிறைய புத்தகங்களை எழுதி வருகிறார்.

இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம். காரணம், உண்மையில் யுத்தம் எவ்வளவு குரூரமானது என்பதை அவர்களால் தான் விபரமாகவும், தெளிவாகவும் கூற முடியும். அவர்களது நிஜ வாழ்வின் அனுபவங்களை அவர்களே எழுதுவது தான் பெறுமதியானது. தாம் எவ்வாறு யுத்தத்துக்கு இரையானோம், யுத்தம் எந்தளவு பயங்கரமானது என்பதை அவர்களாலேயே தெளிவாக விவரிக்க முடியும்.

இது இவ்வாறிருக்கையில், மலையகத்திலிருந்து தமிழில் எழுதுபவர்கள், அங்கு வாழும் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமையைக் குறித்தும், சாராயம் அவர்களது வாழ்வை எவ்வாறு நாசமாக்குகிறது என்பது குறித்தும், கடன், வட்டி, குறைந்த ஊதியம், வேலை நெருக்கடி போன்ற அவர்கள் சார்ந்த துயர வாழ்வியலைக் குறித்தும், இயற்கை அழகுகளைக் குறித்தும் எழுதுகிறார்கள். அது இலங்கையில் வேறு விதமான தமிழ் இலக்கிய வடிவம்.

அவ்வாறே இலங்கையிலிருந்து தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள், அவர்களது சமூகத்தைக்குறித்தும், அவர்களது சமூகத்தில் தாக்கஞ்செலுத்தும் பலவற்றைக்குறித்தும் எழுதுகிறார்கள். பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடும் இந்த இலக்கியம், தமிழ் இலக்கியத்தில் இன்னுமொரு வகை.

இன்னுமொரு பிரிவினர் இருக்கிறார்கள். யுத்தத்தின் காரணமாக தாய் நாட்டை இழந்து பணக்கார நாடுகளுக்குக் குடிபெயர்ந்து அங்கிருந்து கொண்டு இலங்கை குறித்தும், புதிய நாடுகளில் மொழியறியாது, தொழிலறியாது, அநாதரவாகி துயரம் சூழ்ந்த வாழ்வைக் கழிக்க நேர்வதைக் குறித்து எழுதுபவர்கள்.

அவ்வாறே, அதே பணக்கார நாடுகளில் வாழ்வின் உயர்ந்த ஸ்தானங்களுக்குச் செல்ல முடிந்தவர்கள் அந்த வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குறித்து எழுதுகிறார்கள். இவர்கள் இரு சாராருமே தமிழில் எழுதுபவர்கள். இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்குள் அடங்குபவர்கள்.

இன்னுமொரு பிரிவினர் யுத்தத்தின் காரணமாக உயிர் பிழைக்க வேண்டி இந்தியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச்சென்று கடவுச்சீட்டுM.Rishan Shareef1 எதுவுமில்லாததன் காரணத்தால், அங்கு அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அங்கு நல்ல தொழில் வாய்ப்பில்லை. அங்கு கல்வி நடவடிக்கைகளிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவ்வாறு இடம்பெயர்ந்து, இன்றும் துயருற்றுக் கொண்டு அந்தத்துயர வாழ்க்கை குறித்து தமிழில் எழுதுபவர்களும் இலங்கை தமிழ் இலக்கியத்துக்குள்ளேயே அடங்குகின்றனர். காரணம் அவர்களதும் தாய்நாடு இலங்கை.

இவ்வாறு இலங்கையில் தமிழ் இலக்கியமானது பலவிதமானவர்களையும் உள்ளடக்கியது. ஒன்றுக்கொன்று மாறுபட்டது. எனினும், இவை அனைத்துமே இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கே உரித்தானவை.

எனவே, இலங்கை அரச சாகித்திய விருதொன்று தமிழ்த் தொகுப்பொன்றுக்கு கொடுக்கப்படுகிறது எனும் போது, மேற்கூறிய அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப்பெற்று, தமிழின் சிறந்த இலக்கியவாதிகளும், சிறந்த தமிழ்ப்பேராசிரியர்களும் வாசித்துத் தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த தொகுப்புக்கே அந்த விருது  வழங்கப்படுகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுத்து மொத்த தமிழ் இலக்கியத்துக்காகவும் வழங்கப்படும் விருதை, ஒரு பிரிவினருக்காக மட்டும் மறுப்பதென்பது, ஏனைய அனைத்துப் பிரிவினருக்கும், அந்நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியவர்களுக்கும், தேர்ந்தெடுத்தவர்களுக்கும் செய்யும் அவமதிப்பு மற்றும் அவமரியாதையல்லவா? அவ்வாறான அவமதிப்பான செயலை, அவமரியாதையான நடவடிக்கையை நான் செய்ய விரும்பவில்லை. அவ்வாறு செய்வதால் யாருக்கும் எந்த நன்மையுமில்லை.

ரிஷான் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் இலக்கியச் செயற்பாடுகள் எவை?
சிங்கள மொழியைப்போலவே, சிங்கள இலக்கியமும் கூட மிகவும் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. அண்மையில் நான் நிறைய சிங்கள மொழிச்சிறுகதைகளை வாசித்தேன். பலதும் எனக்கு மிகவும் வியப்பளித்தவை. மிகப்புதுமையான விதத்தில் எழுதப்பட்ட புதிய தலைமுறையினரின் சிறுகதைகள் அவை.

அவற்றுள் நானே தேர்ந்தெடுத்த சிறந்த சிங்கள மொழிச்சிறுகதைகளை தற்போது தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதை இவ்வருட இறுதியில் ஒரு முழுத்தொகுப்பாகக் கொண்டு வரும் எண்ணமிருக்கிறது. எனது சிறுகதைப்பிரதியின் ஆங்கிலப்புத்தகமும் இவ்வருடம் வெளியாகவிருக்கிறது.

அத்தோடு, எனது கவிதைகள் அடங்கிய எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பையும் இவ்வருடம் வெளியிடும் எண்ணமிருக்கிறது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here