பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்

0
931

picsart_07-16-09-00-16M.I. Muhammadh​ Safshath, University of Moratuwa
சடத்துவ வாதத்தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம் கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் இத்தத்துவம் உறுதிப்படுத்தப்படா நிலையில் சடத்துவ வாததத்துவத்தின் பெயரில் கண்மூடித்தனமாக ஆதரிக்கப்பட்டது.

அளவு கடந்த இவ்வார்வக்கோளாறு பலவிதமான பேரழிவுகளுக்கு காரணமானது. ‘மனிதன் எதேச்சையாக தோன்றியவன் உயிர் வாழ மேற்கொண்ட உழைப்பின் போராட்டத்தில் உருவெடுத்த ஒரு பிராணி’ எனும் எண்ணப்பாட்டை திணித்த இத்தத்துவம் உலக வரலாற்றில் பேரிழப்புகளை கருவாக்கிய பயங்கரவாத தத்துவங்களான இனவெறி (Racism), வல்லாண்மைத்தத்துவம் (Facism), பொதுவுடைமைவாதம் (Communism) போன்ற பல கருத்துருக்களை வலுப்படுத்தியது. பேரழிவை விளைவாக்கியது.

மோதுவதற்கே வாழ்க்கை எனும் அடிப்படையில் எழுந்த இத்தத்துவத்தை டார்வின் ஒரு அடிப்படைவாத மூலக்கூற்றோடு தொடங்கினார். ‘உயிரினங்களின் பரிமாண வளர்ச்சி உயிர் வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் உழைப்பைப்பொருத்தது. இந்த உழைப்பில் வலுவுள்ளவன் வெற்றியடைவான்.

வலுவற்றவன் தோல்வியைத்தழுவி புறக்கணிப்புக்கு ஆளாவான்.’ உயிர் வாழ்வதற்காக ஈவு இரக்கமற்ற கொடூர மோதலும் போராட்டமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் எனும் டார்வினின் வாதம் பலம் மிகுந்தவன் பலம் குறைந்தவனை எப்போதுமே வெற்றி கொள்வான் என்றும், இதன் மூலமே பரிணாம வளர்ச்சி சாத்தியமாகுமென்றும் மோதலைத்தூண்டும் கருத்தை முன்வைத்தது. அதை நியாயப்படுத்தவும் செய்தது. இக்கருத்து டார்வினின் எழுதிய நூலில், “The Origin of Species by Means of Natural Selection or Preservation of Favored Races in the Struggle for Life” என்னும் துணைத்தலைப்பின் கீழ் புகுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர் வாழ்வதற்கான போராட்டம் எனும் இக்கருத்துருவை உயிரினங்கள் தாண்டி மனித இனக்குழுக்களுக்கிடையிலும் நிகழ்வதாக இவரது வாதம் அமைந்தது. தெரிவு செய்யப்பட்ட இனங்களே பாதுகாக்கப்படுமென்றும் அந்த இனம் வெள்ளை ஐரோப்பியர்களே என்றும் இவரது வாதம் அமைந்தது.

ஆபிரிக்க மற்றும் ஆசியர்கள் போராட்டத்தில் பின்தங்கியவர்களாகவும் போராட்டத்தில் தோற்று அழிந்து விடப்போகிறவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். இது குறித்து இந்திய மனித இனயியல் வல்லுனர் லலிதா வித்யார்த்தி குறிப்பிடுகையில், டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் சமூக அறிவியலில் எவ்வாறு இனவெறியை ஊட்டியது என்பது பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.

“ஆற்றல் அல்லது வலிமையுள்ளவனே உயிர் வாழ்வான் எனும் அவருடைய (டார்வினுடைய) தத்துவம் இன்றைய சமூக அறிவியலாளர்களால் வரவேற்கப்பட்டது. மனித இனம் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைக்கடந்து வெள்ளை நிற மனிதனின் நாகரிகத்தில் முடிவடைந்துள்ளதென இவர்கள் நம்பினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேற்கத்திய அறிவியல் வல்லுனர்களில் பெரும்பாலானோர் இனவேறுபாட்டுணர்ச்சியை ஒரு யதார்த்தமாகவே ஏற்றுக்கொண்டனர்” (Lalitha P.V.1983).

An Essay on the Principle of Population (மக்கள் தொகை கொள்கை பற்றிய ஒரு கட்டுரை) எனும் ஆங்கில பொருளியல் வல்லுனர் தோமஸ் மல்த்துஸ் என்பவரால் எழுதப்பட்ட நூலும் அது சுமந்த கொள்கையுமே டார்வினின் தத்துவம் எழ அகத்தூண்டுதலாக அமைந்திருந்தது.

குறித்த கொள்கை மக்கள் தொகை வேகமாக அதிகரிப்பதாகவும் அதைத்தடுக்க போர்கள், பேரழிவுகள், பஞ்சம் மற்றும் நோய் போன்றன ஏற்படுத்தப்பட வேண்டுமென்பது போன்றான மிருகத்தனமான வாதமாய் அமைந்திருந்தது. மல்த்துஸின் கோட்பாடானது, 19 ஆம் நூற்றாண்டில் பரவலாய் அங்கீகாரம் கண்டது. ‘இனத்தூய்மைப்படுத்தல் திட்டத்தின் அறிவியல் ரீதியான பின்னணி’ எனும் ஆய்வுக் கட்டுரையில் ஜெர்ரி பேர்க் மென் இக்கோட்பாடு பெற்ற முக்கியத்துவத்தால் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட கொடுமையை இவ்வாறு விவரிக்கிறார்:

“ஏழை எளியவர்களிடம் சுத்தம் பற்றி பரிந்துரை செய்வதற்குப் பதிலாக அதற்கு நேர்மாறாக பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். நம்முடைய நகரங்களின் வீதிகளை குறுகலாக்கி, வீடுகளில் அதிகமான மக்கள் குடியேறச்செய்து, பிளேக் நோய் திரும்பவும் பீடிக்க தூண்ட வேண்டும். நாட்டில் கிராமங்களை, தேங்கி நிற்கும் நீர்க்குட்டைகளுக்கு அருகில் தோற்றுவிக்க வேண்டும்.

குறிப்பாக, சக்தி நிறைந்த, உடல் நலத்துக்கு பாதகமான சுற்றுப்புறங்களில் கிராமங்களை அமைக்க வேண்டும்.” (Hall T.D.), இதுவே அவர்களது திட்டமாக இருந்தது.

“ஏழைகளை ஒடுக்குதல்” என அறியப்பட்ட இத்திட்டம் வலுவற்றவர்கள் நீக்கப்பட்டு மக்கள் தொகை மட்டுப்படுத்தப்படுமென முன்மொழிந்தது பிரிட்டனில் நடைமுறையும் கண்டது. இதன் அங்கமாக சுரங்கங்களில் எட்டு ஒன்பது வயது சிறார்களும் பதினாறு மணி நேரங்கள் வேலை செய்யப்பணிக்கப்பட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான சிறார்கள் உயிர் துறந்தனர். மல்த்துஸ் தத்துவம் முன்வைத்த உயிர் வாழ்வதற்கான போராட்டம் பிரிட்டனை மரண மண்ணாக்கியது. இத்தகைய இரக்கமற்ற வலுக்குறைந்தவனை அழித்து வலுவுள்ளவன் வாழ ஆசை கொள்ளும் தத்துவங்களால் கவரப்பட்ட டார்வின் இயற்கையானவை யாவற்றுக்கும் மோதல் கோட்பாடு பொருந்தும் எனும் வாதத்தை முன்வைத்து அதை நியாயயப்படுத்தவும் செய்தார். இறை மறுப்பையும் இரக்கமற்ற மோதலையும் முன்வைத்த இது போன்ற அறிவியல் அடிப்படையற்ற கொள்கைகள் பரப்பப்பட்டதாலும் போதிக்கப்பட்டதாலும் இருபதாம் நூற்றாண்டு பேரழிவை எதிர்நோக்கியிருந்தது.

ஆதிக்கத்தின் கீழிருந்த குடியேற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டி நலனைடந்த பிரித்தானியா தன் குடியேற்ற நாடுகளை ‘பரிணாமம் சார் பின்னடைந்த நாடுகள்’ எனக்காட்டிக்கொண்டது. அதை நியாயப்படுத்த டார்வினின் தத்துவம் துணை நின்றது. ஐரோப்பாவின் கலாசாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

இதன் பெருவிளைவு 1914 இல் மூண்ட உலகப்போர். இக்கருத்தை புகழ்பெற்ற ஆங்கில வரலாற்றுப்பேராசிரியர் ஜேம்ஸ் ஜோல் தனது Europe Since 1870 (1870 இலிருந்து ஐரோப்பா) எனும் நூலில் முதல் உலகப்போரின் அடித்தளம் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் டார்வினின் தத்துவம் மீதான நம்பிக்கையென முன்மொழிகிறார் (Joll J.,1990).

19 ஆம் நூற்றாண்டில் இன வேறுபாட்டுணர்வை விதைத்த டார்வினின் தத்துவம் 20 ஆம் நூற்றாண்டில் கொலை வெறிக்கொள்கைக்கு அடித்தளமானது. எடோல்ஃப் ஹிட்லர் மற்றும் எல்ஃப்ரட் ரோஸன்பேர்க் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட நாஸிஸம் முழுவதும் டார்வினின் தத்துவத்தின் ஆழ்ந்த ஆதிக்கத்தை உணர முடியும்.

The Rise of Fascism (வல்லாண்மை ஆட்சியின் எழுச்சி) எனும் நூலில் பீட்டர் கிறிஸ்ப் இந்த உண்மையை இவ்வாறு தெளிவுபடுத்துகிறார். “மனிதர்கள் குரங்கிலிருந்து பரிணமித்தார்கள் எனும் டார்வின் தத்துவம், முதலில் வெளியிடப்பட்ட போது, ஏளனத்துக்குள்ளாகியது.

ஆனாலும், பின்னர் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாஸிகள் டார்வின் கோட்பாடுகளைத் திரித்து போர்களையும் இன வேறுபாட்டுணர்வையும் நியாயப்படுத்த பிரயோகித்துக் கொண்டனர்” (Peter Chrisp, p.6). வரலாற்றாசிரியர் ஹிக்மேன் அவர்களும் இதை உறுதிப்படுத்துகிறார்.

ஹிட்லர் எழுதிய Mein Kampf (எனது போராட்டம்) எனும் நூலில் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் மீதான அவரது உறுதி நம்பிக்கையும் அதை அடிப்படையாகக் கொண்டு அதன் கோட்பாடுகளையும் விளக்கி வலுவற்றவர்களை அழிப்பதன் மூலமே சிறந்த சமூகம் தோன்றுமெனும் வாதத்தை முன்வைத்தார். டார்வினின் தத்துவத்தின் சமூகவியல் வடிவங்களில் ஒன்றாக நாஸிஸம் பரிணமித்தது. (Hickman R., 1999) அது காவு கொண்ட உயிர்ப்படுகொலைகள் இதுவரை​ உலக வரலாறு எதிர்பாராதவை.

டார்வினின் தத்துவத்தின் சமூகவியல் வடிவங்களில் மற்றொன்று பொதுவுடைமை வாதம். இவ்விரு தத்துவங்களுக்குமிடையான உறவு அவற்றின் ஆரம்பம் முதலானது. பொதுவுடைமை வாதத்தின் மூலகர்த்தாக்கள் மார்க்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஆகியோர் மேற்கொண்ட கடிதத்தொடர்பு டார்வினின் தத்துவத்தில் இயற்கை வரலாற்றில் பொதுவுடைமை வாதத்திற்கு ஒரு அடிப்படை இருந்ததைக் கண்டதாகத் தெரிவிக்கிறது.

ஏஞ்சல்ஸ் எழுதிய The Dielectrics of Nature (இயற்கையின் வாதக்கலை) எனும் நூலில் அதன் தாக்கத்தைக் காணலாம். தனது நூலில் ஒரு அத்தியாயமாக The Part Played by Labour in Transmission from Ape to Man (குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததில் உடல் உழைப்பின் பங்கு) எனும் பகுதியை ஏற்படுத்தி, இதை உறுதி செய்கிறார்.

இவர்களை அடியொற்றிய பொதுவுடைமைவாதிகள் ப்ளேக்நோவ், லெனின், ஸ்டாலின் யாவரும் டார்வினின் தத்துவத்தை வழியாய்க் கொண்டவர்களே. ரஷ்யா பொதுவுடைமைவாத மூலகர்த்தாவான ப்ளேக்நோவ், “சமூகவியலில் டார்வினின் தத்துவத்தின் செயல்முறைகளே மார்க்ஸியம்” (Robert M Young, 1980) எனக்குறிப்பிட்டுள்ளமை நினைவுகூறத்தக்கது.

டார்வினின் தத்துவத்தின் சமூகவியல் செயல்முறைகளான இத்தத்துவம் காவு கொண்ட அப்பாவி மக்கள் உயிர்த்தொகை மில்லியன்களுக்கும் அதிகம். சீனாவில் இதை நிறுவிய மா ஓ சேதுங் கொன்று குவித்த மக்கள் தொகை ஏராளம் ஏராளம். இவரது கொடூர சிந்தனை டார்வினின் தத்துவத்தின் அடிப்படையிலேயே நிறுவப்பட்டமை ஹாவாட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் ரீவி பூஸி எழுதிய China and Charles Darwin (சீனாவும் சார்ள்ஸ் டார்வினும்) எனும் ஆய்வு நூல் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது (Mehnert K., 1977). 120 மில்லியன் மக்கள் கொல்லப்பட ஏதுவான பொதுவுடைமைவாதத்தின் அடிப்படை டார்வினின் தத்துவமென்பதில் அதன் பரிணாமத்தை உணர முடிகிறது.

இன்னும் ஏராளமான பல அடிப்படைகளிலிருந்தும் இந்த உண்மையை உணர முடியும், அது தான் இருபதாம் நூற்றாண்டின் மொத்த மனித வர்க்கத்திற்கும் இன்னல் தந்த வன்முறைக்கோட்பாடுகள் யாவற்றிற்கும் மூல காரணம் டார்வினின் தத்துவமே. இதன் தொடர் புதிய உலக ஒழுங்காகவும் கலாசாரங்களுக்கிடையிலான கலந்துரையாடலாகவும் இன்றளவும் தொடர்கிறது.

உலகம் பல (மத) நம்பிக்கைகளையும் உலக கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் கொண்டதாகவுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரண்படும் தனித்தன்மைகளைக் கொண்டிருப்பது இயல்பே. ஆன போதும், அவற்றிற்கிடையில் ஆரோக்கியமானவொரு சகவாழ்வு ஏற்படுத்ததப்படுவதே மனித நேயமாகவுள்ளது.

தங்களோடு ஒத்து வராதவர்களைத்தக்க மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆரோக்கியமான கலந்துரையாடல்களால் கருத்து வேறுபாடுகளை அணுக வேண்டும். இதுவே இஸ்லாம் முன்வைக்கும் போதனையாகவுமுள்ளது. இதற்கு மாற்றமாக, பிற கொள்கை கொண்டோரைப் போராடி அழித்து அதில் அனுகூலம் காண்பதை ஆதரிப்போமானால், அது அழிவையன்றி எதுவொன்றையும் விளைவாக்கப்போவதுமில்லை. அதுவே பயங்கரவாதம் அல்லது தீவிரவாதமாகும். இதை ஊக்குவிக்கும் அறிவியல் அடிப்படை எதுவுமற்ற ஒரு சடத்துவ வாதத்தத்துவமாகவே, துடைத்தெறியப்படவேண்டிய அறிவியல் அழுக்காகவே டார்வினின் தத்துவம் வரலாற்றில் படிப்பினை தருகிறது.

டார்வினின் தத்துவம் போன்ற பயங்கரவாதத்திற்கு வித்திடும் தத்துவங்களாலோ அதை அடியொட்டி எழுந்த சடத்துவவாதத் தத்துவங்களாலோ தர முடியாத பயங்கரவாதமற்ற சகவாழ்வை தரவல்ல அதியுன்னத வழியாக இஸ்லாம் திகழ்கிறது என்பதைக்காட்ட அதன் ஒளியில் அமைந்தவொரு ஆட்சியின் ஒரு சம்பவத்துடன் இத்தொகுப்பு சுருங்க முடிவு காண்கிறது.

“அல்லாஹ்வின் அடியாரும், இறை நம்பிக்கையாளர்களின் அதிபரும் ஆகிய உமர், இயோலியா நகர் வாசிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு இது தான். அவர் எல்லா மக்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், நலமுடன் இருப்பவர்களுக்கும் அவர்களின் உயிர், உடைமை, தேவாலயங்கள், சிலுவைகள் மற்றும் அவர்களுடைய மத சம்பந்தப்பட்ட யாவற்றிற்கும் பாதுகாப்பளிக்கின்றார்.

அவர்களுடைய தேவாலயங்கள் குடியிருக்கும் இல்லங்களாக மாற்றப்படமாட்டா, அல்லது அழிக்கப்படா. அவையோ அவற்றிலுள்ள உடைமைகளோ எவ்வகையிலும் குறைக்கப்படமாட்டா, அவர்களுடைய மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எவ்வித நிர்ப்பந்தமும் செய்யப்படமாட்டார்கள். அவர்களில் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்”, கலீபா உமர் (ரழி) ஜெரூசலம் வந்ததும் ஜெரூசலம் தலைமைக்குருவோடு மேற்கொண்ட ஒப்பந்தம் இது.

(ஹாருன் யஹ்யா எனும் புனைப்பெயரில் அறியப்படும் அத்னான் ஒக்தார் அவர்களது ஆங்கில மூல நூல்களைத்தழுவி இத்தொகுப்பு எழுதப்பட்டுள்ளது.)

உசாத்துணைகள்

Lalita Prasad Vidyarthi, Racism, Science and Pseudo-Science, Unesco, France, Vendôme, 1983. p. 54

Theodore D. Hall, “The Scientific Background of the Nazi “Race Purification” Program”, http://www.trufax.org/avoid/nazi. html

James Joll, Europe Since 1870: An International History, Penguin Books, Middlesex, 1990, p. 164

Peter Chrisp, The Rise of Fascism, Witness History Series, p. 6

Hickman, R., Biocreation, Science Press, Worthington, OH, pp. 51–52, 1983; Jerry Bergman, “Darwinism and the Nazi Race Holocaust”, Creation Ex Nihilo Technical Journal 13 (2): 101–111, 1999

Robert M. Young, Darwinian Evolution and Human History, Historical Studies on Science and Belief, 1980

K. Mehnert, Kampf um Mao’s Erbe, Deutsche Verlags-Anstalt, 1977

Adnan Oktar(Harun Yahya), “Islam Denounces Terrorism”, 7th Ed., 2017.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here