கிண்ணியாவுக்கு தனியான நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபைக் காரியாலயம்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைப்பு

0
258

IMG_3814அட்டாளைச்சேனை முஹம்மது பர்ஷான்

கிண்ணியா பிரதேச சபைக்கென தனியான நிரந்தரமாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் நிலையப்பொறுப்பதிகாரி காரியாலயத்தை ஏற்படுத்தித் தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா சூறா சபை ஆகியோர் என்னிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இக்காரியாலயம் திறந்து வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச சபைக்கென தனியான தற்காலிக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிலையப்பொறுப்பதிகாரி காரியாலயத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை (15) திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்துக்கு விரைவில் நிரந்தரக் கட்டடமொன்றை அமைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச்சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ. அன்சாருக்கு உத்தரவிட்டதுடன், இக்காரியாலயம் போதிய இடவசதியில்லாமலிருப்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பிறிதொரு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரண்டும் ஒரே காரியாலயத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதில் கிண்ணியா பிரதேச சபைக்குள் மாத்திரம் 4000 இணைப்புகள் காணப்படுகின்றன. இதனை நிர்வகிப்பதற்கு தனியொரு உப அலுவலகம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட வெல்லை மணல், நாச்சிக்குடா பிரதேசங்களும் கிண்ணியா நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் கிண்ணியா அலுவலகத்தின் கீழ் தற்போது 11000 இணைப்புகள் காணப்பகின்றன.

23000 குடும்பங்கள் காணப்படும் பிரதேசத்தில் தற்போது 11000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளை நிர்வகிப்பதே சிரமமாக இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் 12000 இணைப்புகள் வழங்க வேண்டிய தேவையிருக்கின்றது. இதற்கான மாற்றுத்தீர்வைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா சூறா சபையினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், ஆர்.எம்.அன்வர் மத்திய சுகாதாரப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் எச்.எம்.எம்.பாயிஸ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார் மற்றும் கிழக்கு பிராந்திய பிரதிப்பொது முகாமையாளர் பொறியிலாளர் றசீட் உட்பட உயரதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள் எனப்பலர் இதில் பங்குபற்றினர்.IMG_3800 IMG_3814 IMG_3822

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here