இஸ்லாமியப்பெண்களின் ஆடை பழமைத்துவமானதா?

0
399

Untitled-1எங்கள் தாயையும் தாரத்தையும் பேறையும் கண்ணியப்படுத்தும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இஸ்லாத்தின் ஆடைக்கலாசாரம் தான் பழமைவாதம் எனில், அந்த பழமைவாதமே எங்கள் திருப்தியின் மனவிருப்பு. ஒரு விடயம் பழமைவாதம் என அடையாளப்படுத்தப்பட அஃதல்லாத நவீனத்துவமாகக் கருதப்படும் விடயம் இதிலிருந்தும் முன்னேறியிருத்தல் வேண்டும். பாதுகாப்பை மேலும், உறுதிப்படுத்த வேண்டும். பெண்களை மேலும், கண்ணியப்படுத்த வேண்டும்.

ஆனால், அது எதையும் நவீன உலகு கருதும் நவீன ஆடைக்கலாசாரம் விளைவாக்கவில்லை. மாறாக, பெண் சமூகத்தின் தற்காப்பைப் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியதும், கவர்ச்சிக்கான காசுப்பாவைகளாக பெண்ணினம் கருதப்படும் இழி நிலையும் தான் நவீனத்துவம் எனக்கருதிக்கொள்ளும் ஆடைக்கலாசாரம் விளைவாக்கியுள்ளமையே ஆவணப்படுத்தப்பட்ட உண்மையென்பது தெளிவு.

இக்கருத்தை எதுவித அடிப்படைகளுமற்ற நிலையில் முன்மொழிவது இக்கருத்தைப் பலவீனப்படுத்த முடியுமென்பதால் இதற்கு இயைவான சில புள்ளி விபரங்கள் கொண்டு இக்கருத்தை முன்மொழிவது சிறந்ததாகத் தென்படுகிறது. நவீனத்துவம் எனக்கருதப்படும் ஆடைக்(குறைப்புக்) கலாசாரம் மிகச்சர்வ சாதாரணமாக ஏற்கப்பட்டு வரும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் பாலியல் வல்லுறவுக்கணிப்பீடு தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளி விபரவியல்கள் இதை தெளிவுற தோலுரித்துக்காட்டுகின்றன. அத்தகைய சில புள்ளிவிபரங்கள் இங்கே காட்டப்படுகின்றன.

1) அமெரிக்காவைப் பொருத்தவரை ஒவ்வொரு 98 செக்கன்களுக்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். ஆண்டொன்றிற்கு 12 வயதிற்கும் மேற்பட்ட பெண்களில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கள் சராசரியாக 321,500 பதியப்படுகின்றன.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, National Crime Victimization Survey, 2010-2014 (2015).

2) அமெரிக்காவில் 12-17 வயதுக்குடபட்ட பெண்களில் 15% ஆனோரும் 18-34 வயதுக்குட்பட்ட பெண்களில்  54% ஆனோரும் 35-64 வயதுக்குட்பட்ட பெண்களில் 25% ஆனோரும் 65 வயதிலும் மேற்பட்டோரில் 3% ஆனோரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர். இதில் 12-34 வயதுக்குட்பட்ட பெண்கள் உயர் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தலுக்குள்ளான நிலையிலுள்ளனர்.

உசாத்துணை:
i. Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Sex Offenses and Offenders (1997); ii. Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Crimes Against the Elderly, 2003-2013 (2014).
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Sex Offenses and Offenders (1997).

3) அமெரிக்காவின் ஆறில் ஒரு பெண் (1/6) பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள் அல்லது முழுமையாக உட்படுத்தப்படுகிறாள். 14.8% ஆனோர் முழுமையாக உட்படுத்தப்படுவதோடு, 2.8% ஆனோரில் எத்தனிக்கப்படுகிறது. 1998 அறிக்கைபடி அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குள்ளான முழுமையாக உட்படுத்தப்பட்ட பெண்கள் தொகை 17.7 மில்லியன்.

உசாத்துணை:
National Institute of Justice & Centers for Disease Control & Prevention, Prevalence, Incidence and Consequences of Violence Against Women Survey (1998).

4) அமெரிக்காவின் மொத்த பாலியல் வல்லுறவு குற்றங்களில் 16-19 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் பிற வயதெல்லைகளை விடவும் எண்ணிக்கையில் நான்கு மடங்கானது.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Sex Offenses and Offenders (1997).

5) அமெரிக்காவின் மொத்த பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் 18-24 வயதுக்குட்பட்ட கல்லூரிகளிலும் பயிலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்குற்றங்கள் பிற வயதெல்லைகளை விடவும் எண்ணிக்கையில் மூன்று மடங்கானது, அதே வயதெல்லையில் கல்லூரிகளில் அல்லாத பெண்கள் மீதான குற்றங்கள் நான்கு மடங்கானது.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Rape and Sexual Victimization Among College-Aged Females, 1995-2013 (2014). 

6) இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பெண்களில் 12 அல்லது அதிலும் மேற்பட்ட  வயதுடையவர்கள் ஆண்டொன்றுக்கு 5900 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Socio-emotional Impact of Violent Crime (2014).

7) அமெரிக்கா சிறைச்சாலைகளில் ஆண்டொன்றுக்கு 80600 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர். இதில் 60% ஆனோர் சிறைச்சாலை அதிகாரிகளால் வல்லுறவுக்குள்ளாகின்றனர்.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Sexual Victimization in Prisons and Jails Reported by Inmates, 2011-2012 (2013).

8) அமெரிக்கா இராவணுத்தினரில் 2014 இல் மாத்திரம் 18900 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, American Indians and Crime, 1992-2002 (2004).

இத்தகைய அச்சுறுத்தல் நிலையையே நவீனத்துவம் எனக்கருதும் ஆடைக்கலாசாரங்களில் திளைக்கும் நாடுகளால் பெண் சமூகத்திற்கு அளிக்க முடிந்துள்ளது. இதனால் பெண்கள் சமூகம் அங்கு அடைந்த நாசங்கள் ஏராளம். ஆடைக்குறைப்புக் கலாசாரத்தை நவீனத்துவமாகவும் கண்ணியமாகவும் காட்ட விளையும் இந்நாடுகளில் பெண்கள் அடைந்துள்ள நிலையை பின்வரும் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டகின்றன.

 1) அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்களில் 94% ஆனோர் வல்லுறவுக்குள்ளாகி இரு வார காலப்பகுதியினுள் Post-Traumatic Stress Disorder (PTSD) எனும் நோய் நிலைமைக்குள்ளாகின்றனர்.

உசாத்துணை:
D.S. Riggs, T. Murdock, W. Walsh, A prospective examination of post-traumatic stress disorder in rape victims. Journal of Traumatic Stress 455-475 (1992).

2)  அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்களில் 30% ஆனோர் வல்லுறவுக்குள்ளாகி ஒன்பது மாதங்களில் Post-Traumatic Stress Disorder (PTSD) எனும் நோய் நிலைமைக்குள்ளாகின்றனர்.

உசாத்துணை:
J. R. T. Davidson & E. B. Foa (Eds.) Posttraumatic Stress Disorder: DSM-IV and Beyond. American Psychiatric Press: Washington, DC. (pp. 23-36).

3) அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்களில் 33% ஆனோர் தற்கொலை எண்ணம் கொள்கின்றனர்.

உசாத்துணை:
DG Kilpatrick, CN Edumuds, AK Seymour. Rape in America: A Report to the Nation. Arlington, VA: National Victim Center and Medical University of South Carolina (1992).

4) அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்களில் 13% ஆனோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

உசாத்துணை:
DG Kilpatrick, CN Edumuds, AK Seymour. Rape in America: A Report to the Nation. Arlington, VA: National Victim Center and Medical University of South Carolina (1992).

5) அமெரிக்காவின் ஏறத்தாழ 70% ஆன வல்லுறவுக்குற்றங்கள் வேறு பல குற்றங்களாக மற்றம் காண்கின்றன.

உசாத்துணை:
Department of Justice, Office of Justice Programs, Bureau of Justice Statistics, Socio-emotional Impact of Violent Crime (2014).

6) அமெரிக்காவில்​ பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குபவர்கள் பிற மக்களை விடவும் கொடிய போதைப்பழக்கத்திற்குள்ளாகின்றனர். கஞ்சா பாவனை இவர்களால் சாதாரண மாணவர்களிலும் 3.4 மடங்கும் கொக்கைன் பாவனை 6 மடங்கும் பிற முக்கிய போதைப்பொருட்களின் பாவனை 10 மடங்கும் அதிகமாகும்.

உசாத்துணை:
DG Kilpatrick, CN Edumuds, AK Seymour. Rape in America: A Report to the Nation. Arlington, VA: National Victim Center and Medical University of South Carolina (1992).

மேற்படி புள்ளி விபரங்கள் அங்குள்ள பெண் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல்களைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய பாலியல் சீர்கேடுகளுக்கும், வல்லுறவு பலாத்காரங்களுக்கும் காரணமாவதில் பெண்களின் ஆடைக்கலாசாரத்தின் பங்கு மிகக்கணிசமானது.

இது மட்டுமே காரணமாகாது என்கின்ற போதும், இது பெரும் பங்கு வகித்தலை நாம் ஏற்றே ஆதல் வேண்டும். ஆடை என்பது அணிபவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பேணுவதாக அமைதல் வேண்டும். அவர்களது மானத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வேண்டும்.

அதனாலேயே இஸ்லாம் முக்காலத்தும் சிறப்பான ஆடைக்கலாசாரத்தை கற்றுத்தந்துள்ளது. ஆடை அணிதலின் நோக்கத்தை மிகச்சரிவரவே அது நிவர்த்திக்கின்றது. அது பழமைவாதம் என சாடப்படுமானால் அதிலும் கண்ணியமான முன்னேற்றமானவொரு கலாசாரத்தை காட்டல் வேண்டும். அத்தகைய கலாசாரத்தை இஸ்லாத்தின் வரைமுறைகள் தாண்டி அடைந்திட முடியாதென்பதே உண்மை.

பெண்ணுரிமை எனும் பெயரில் ஆடைக்குறைப்பபை நவீனத்துவமாக பெண்கள் மேல் திணித்து அதை ஒரு கூட்டம் வியாபாரம் ஆக்கிக்கொண்டது. அழகு ராணி போட்டிகள் எனும் பெயரில் ஆடைக்குறைப்பை அழகாய் காட்டி அதில் பணம் தேடும் கூட்டத்தை உணர முடியாமல் பெண்களும் அதை கண்ணியம் போல் கருத எண்ணுவது தான் மிகவும் ஆபத்தானது.

விளம்பரங்களுக்காக பெண்களை பயன்படுத்தலும் பெண்களின் மீதான ஆண்மையின் ஈர்ப்பை பணமாக்குதலும் ஆடைக்குறைப்பு நாகரீகம் போல் காட்டப்படுவதன் மற்றுமொரு காரணம். ஆண்களின் பிரத்தியேக உபயோகப்பொருட்கள் கூட கவர்ச்சி உடையில் பெண்களைக்காட்டி விளம்பரமாக்கப்படுவதும் அங்கு அவர்கள் மீதான கவர்ச்சி விளம்பரப்பொருள் ஆவதும் விளங்க முடியாது பெண்ணியமாய் கருதி தன்மானத்தை பணமாக்க முன்வரும் பெண்களின் அறியாமையை விளக்க வார்த்தைகள் இல்லை.

எந்தவொரு ஆண் மகனும் தன் தாயை தன் தாரத்தை தன் மகளை பொதுவில் கவர்ச்சிக்காய் நிறுத்தப்படும் கட்டையாக்குதலை விரும்பமாட்டான் பிறர் முன் அவள் மானம் கவர்ச்சிப்பொருளாவதை விரும்பமாட்டான். தெருவில் செல்லும் அந்நியப் பெண்ணை கவர்ச்சிக் கண் கொண்டு காணும் பலரும் கூட தன் தாயோ தாரமோ உடன் பிறப்போ அவ்வாறு பார்க்கப்படுதலை விரும்பமாட்டார்கள்.

இத்தகைய ஆண்கள் தவறானவர்களே என்பதில் மறுகருத்தில்லை என்கிற போதும், அவர்களின் கவர்ச்சிப்பார்வைக்கு பெண்களின் ஆடைக்கலாசாரமும் காரணமாகி விடுகிறது. வருமுன் காப்பை நாம் சிந்திக்க வேண்டிய தேவையிலுள்ளோம்.  எந்தவொரு வெட்கமுள்ள பெண்ணும் தன்மானத்தை அந்நியனிடம் தாரை வார்க்க விரும்பமாட்டாள்.

அதன் காரணமாகவே இஸ்லாம் இத்தகைய சிறந்த எக்காலத்திலும் நவீனத்துவமாக திகழவல்ல ஒரு கண்ணிய ஆடைக்கலாசாரத்தை போதித்துள்ளது. வெறுமனே பெண்களின் ஆடை கண்ணியமாவதால் மட்டுமே விபசாரத்தை ஒழிக்கவும் முடியாது. அதனாலேயே இஸ்லாம் ஆண்களுக்கும் பார்வைகளை தாழ்த்தவும் மனதைக்கட்டுப்படுத்தவும் போதிக்கிறது.

அதையும் தாண்டி விபசாரம் அரங்கேறின் பெரும்பாலான நாடுகள் போல் அரச ஆதரவு நல்காது அல்லது சலுகைகளுடனான பலவீனத் தண்டணைகளை வழங்கி சமூகத்தை மேலும் இழிவில் ஊக்குவிக்காது அதற்கு முற்றுப்புள்ளி இடும் தகுந்த தண்டனையால் அதைத் துடைத்தெறிய வழிகாட்டுகிறது.

டெல்லியில் ஒரு பெண் பேரூந்தில் காமுக வேட்டைக்குள்ளாகி உயிர் துறந்த பின், அவள் விடயத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவதையும் அது போன்ற எந்தவொரு நிகழ்வும் நடக்காதிருப்பதற்கான  வருமுன் காப்பு முன்னெடுப்புக்களை முன்மொழியும் இஸ்லாத்தின் ஆடைக்கலாசாரத்தையும் தண்டனை முறையையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

ஒரு பெண் விடயத்தில் நீதிக்காகப் போராடும் நாம் முழுப்பெண் சமூகத்தினதும் கண்ணியத்தை, பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன ஆக்கபூர்வமான திட்டத்தைக் கண்டுள்ளோம்? அதை தான் இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.

தவறுகளிற்கு வேலியிட்டு கண்ணியத்தாலும் மரியாதையாலும் பெண்மையை மேன்மைப்படுத்தும் இஸ்லாமிய ஆடைக்கலாசாரமே உண்மையில் முக்காலத்திற்கும் நவீனத்துவமானதாகும். நவீனத்துவம் எனும் பெயரில் அரங்கேறும் ஆடைக்குறைப்புக் கலாசாரமே அதன் விளைவுகள் அடிப்படையில் பழமைத்துவமானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here