“பெருந்தலைவர் அஷ்ஃரபின் ஆணையை அப்பட்டமாக மீறும் செயலே ‘அரசியல் வங்குரோத்துகளின்’ கூட்டமைப்புக்கான கோஷம்“- பழீல் BA

0
257

ddமுஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் ‘மாண்புமிகு றஊப் ஹக்கீம்’ அவர்கள் ‘முஸ்லிம் கூட்டமைப்பு’ பற்றி முதன் முதலாக தனது கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் நல அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து வெளியிட்டிருந்தார்.

“ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பலமான பேரியக்கம். அரசியல் பிழைப்பிற்காக “முஸ்லிம் கூட்டமைப்பு” என்ற பெயரில் முகாம் அமைப்போர் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” என மிகவும் ஆழமான யதார்த்தபூர்வமான விமர்சனக்கருத்தை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு விடையளிக்கும் போது வெளியிட்டார்.

இக்கருத்தை எழுமாந்த அடிப்படையில் அவர் கூறவில்லை. ஆனால், இப்பேரியக்கத்தின் தலைமைப்பதவி எனும் ‘முள் கிரீடத்தினை’ அணிந்து கொண்டதன் மூலம், கடந்த 16 வருடங்களாக அவர் பட்ட சோதனைகள், வேதனைகள், அரசியல் வஞ்சனைகள், கொடூரங்கள், பேரினவாதிகளோடு பிரிந்து சென்ற வங்குரோத்துகளின் அரசியல் வதைகள், மானசீகத்துக்கப்பாலான கொடுமைகள், உள்குத்து வெட்டுகள், கழுத்தறுப்புக்கள், சமுதாய துரோகத்தனங்கள் என்பவற்றினால் அவர் கற்ற பாடங்கள், அவருடைய அநுபவம், பட்டறிவு என்பவற்றின் மொத்த வடிவின் வெளிப்பாடாகவே இக்கருத்தை நாம் பார்க்கின்றோம்.

இத்தனை சோதனைகள் வேதனைகள், துரோகத்தனங்களையும் தாண்டி, தனி மனிதப்பலவீனங்களுக்கப்பால், இச்சமுதாய இயக்கமான இப்பேரியக்கத்தை புடம்போட்டு இன்றுவரையும் பாதுகாத்து, தனது அமானிதப்பொறுப்பை நிறைவேற்றி வரும் தலைவனுடைய உள்ளக்குமுறலாக இக்கருத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது.

அவரது கருத்தின் முதல் பகுதி “முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பலமான பேரியக்கம்” என்ற ஆணித்தரமான கருத்து. இது இலங்கை அரசியல் களத்தில் முஸ்லிம்களுடைய அறுதிப்பெரும்பாண்மையினைக் கொண்ட ஒரேயொரு அரசியல் இயக்கம் முஸ்லிம் காங்கிரஸ் தான்.

உள்ளுராட்சி, மாகாணம், பாராளுமன்றம் என்ற பல மட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைத் தன்னகத்தே கொண்டு, நாடு தழுவிய கட்சியின் அமைப்பாளர், மத்திய குழு வலைப்பின்னல் தளத்தினையும் அது கொண்டிருக்கின்றது.

அதனால் முஸ்லிம் காங்கிரஸ் பலமான அத்திவாரத்தையும், அதனால் முஸ்லிம்களுக்கான பேரம் பேசும் சக்தியாகவும், இலங்கை அரசியலில் ஓர் தீர்மானிக்கும் சக்தியாகவும் அது தொடர்ந்தும் இருந்து வருகின்ற யதார்த்தமான, அசைக்க முடியாத நிலைப்பாட்டினை அவரது கருத்து வெளிக்காட்டி நிற்கின்றது.

இந்நாட்டு முஸ்லிம்களின் பூர்வீகம், அடையாளம், தனித்துவம் என்பன உள்நாட்டிலும் வெளி உலகத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸினால் பறைசாற்றப்பட்டு வருகின்றது. சமுதாய உரிமைகள், சலுகைகளுக்காக பேரினவாத அரசியலின் தயவில் ஒட்டுண்ணிகளாக நின்ற எமது பரிதாப நிலையை அவ்வியக்கம் மாற்றி, பெரும் அரசியல் வெடிப்பு, திருப்பங்களை இந்த முஸ்லிம் காங்கிரஸின் பிரவேசம் முஸ்லிம் அரசியலில் தோற்றுவித்தது.

ஆகவே. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டு அரசியலில் நன்கு ஆழ அகல வேரூன்றிய ஓர் பாரிய இயக்கமாகுமென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

இந்தப்பிரிவினைகளும், வக்கில்லா விமர்சனக்கோஷங்களும் இன்று நேற்று தோன்றியவையல்ல. பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் காலந்தொட்டே பல வடிவங்களில் இந்த நீர்க்குமிழிகள் தோன்றி மறைந்து வருவனவாகும். இவை ‘எட்டாக்கனியும், ஏட்டுச்சுரக்காயுமாகும்.

தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறி, முதன்முதலில் தலைவருக்கெதிராக அறிக்கையிட்டு வெளியேறி, பெருந்தலைவரின் “ஒற்றுமை” என்ற ஆணையை முதலில் போட்டுடைத்தவர் தான் அப்போதைய தவிசாளர் ‘சேகு இஸ்ஸடீன்’ அவர்கள்.

நானே குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் யாப்பை வரைந்தவன் என்று மார்தட்டும் சேகுக்கு, பெருந்தலைவரின் தாரக மந்திரமான, திருக்குர்ஆனின் அடிப்படை அறைகூவலான “ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்” (ஆல இம்றான்-3 : 103) என்ற அடிப்படைக்கு இலக்கணமாக நடக்கத் தெரிந்திருக்கவில்லை.

இவர் தொடங்கிய அந்த பிரிவினைக்கான பயணம் பின்பு ஹிஸ்புல்லாஹ், பேரியல் அம்மையார் என்று பயணித்து இன்று ஹசனலி, பஷீர் வரையும் சுயநல நோக்கில் நீண்டு செல்வதனைப் பார்க்கலாம்….

(தொடரும்)

பழீல்  BA (Hons)
முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர்
கல்வி,கலாசாரப் பணிப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here