தமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் முயற்சியில் மட்டு.விகாராதிபதி – ஜுனைட் நளீமி

0
383

Untitled-1நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு-மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணி கோரி ஆர்ப்பாட்டமமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மங்கலராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பாடசாலைக்காணியை அத்துமீறி பிடித்துள்ளதாகவும், மாவட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகள் இன ரீதியாகச் செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த காணி தொடர்பில் எவ்விதப்பின்னணியுமின்றி முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி, தமிழ் சகோதர இனத்துடன் முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது.

குறித்த காணியில் 1950களிலேயே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது பதுரியா என அழைக்கப்படும் இப்பிரதேசம் கொண்டயன்கேணி தோட்டம் என அப்போது அழைக்கப்பட்டது. தற்போது பாடசாலை காணி அமைந்திருக்கும் காணி தனியார் குடியிருப்புக் காணியாகவே அமைந்திருந்தது. முஸ்லீம் நபருக்கே அக்காணி சொந்தமாக இருந்ததுடன், பின்னர் ஒரு தமிழ் சகோதரருக்கு அக்காணி இனாமாக வழங்கப்பட்டிருக்கின்றதனை அறிய முடிகின்றது.

குறித்த தமிழ் சகோதரர் பிற்காலத்தில் பாடசாலை அமைக்க அக்காணியை வழங்கியுமுள்ளார். பாடசாலையைச் சுற்றியுள்ள அனைத்து நிலங்களும் முஸ்லிம்களுக்கே சொந்தமாகவுள்ளமை இதற்கு போதுமான சான்றாகும். பாடசாலையின் தென் புறம் அமைந்துள்ள வீதி 1952களில் தமிழ், முஸ்லீம் பிரதேசங்களைப் பிரிக்க போடப்பட்ட எல்லைக்கோடுகளாக அமைந்திருந்ததெனக் கூறுகிறார் பாடசாலை அருகில் குடியிருக்கும் அச்சுமுஹம்மது மீரா லெப்பை ( வயது 65) ‘எனது தந்தை கிண்ணையடிப் பகுதியில் காடு வெட்டி குடியிருக்க முற்பட்ட போது, அப்போதைய தமிழ்ப்பகுதி விதானையார் இங்கு குடியிருக்க முடியாது. இது தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். உங்கள் விதானையாருடன் பேசி உங்களுக்கு எல்லை காட்டுகிறேன் எனக்குறிப்பிட்டார்.

பின்னர் நான் எமது முஸ்லீம் பகுதி விதானையாரான ஈசா லெப்பை அவர்களுடன் கதைத்து, இரண்டு விதானைகளும் பேசி, இந்த வீதியை எல்லை இட்டதுடன், முஸ்லிம்கள் எல்லைக்கப்பால் வர வேண்டாமெனவும் குறிப்பிட்டனர். அதன் பின்னரே நாங்கள் பாடசாலை மைதானக்காணி என இவர்கள் கோரும் இக்காணியில் 1952முதல் வசித்து வந்தோம்’ என அவர் குறிப்பிடுகிறர்ர்.

குறித்த இனங்களுக்கிடையிலான எல்லைப்பிரிகோடு துரதிஸ்டவசமாக தொடர்ந்தும் இந்திய பாகிஸ்தான் பிரிகோடு போன்று அவ்வப்போது இன முறுகலைத் தோற்றுவித்து வந்துள்ளதென்பது கசப்பான அனுபவம். இந்த எல்லை நிர்ணயத்தில் தமிழ் தரப்பிலிருந்து அருணா இல்லம், மேகநாதன் ஐயர் ஆகியோரும் ஈசா லெப்பை விதானையார், சாவல் வட்ட விதானையார், மரைக்கார் போடியார் என அழைக்கப்படும் மீரா லெப்பை என்பவரும் கலந்து கொண்டதாக மீரா லெப்பை கருத்துத்தெரிவித்தார்.

மேகநாதன், சண்முகம், ராஜலிங்கம் பரிகாரி போன்றோர் வீதியின் மறு புறத்திலும், கொஸ்தாப்பார், கண்டியன் நானா, மம்மலி ஹாஜியார், சாவல் வட்டாவிதானை, யாசின் பாவா போன்றோர் இப்பகுதியில் குடி இருந்ததாக குறிப்பிடும் அச்சு முஹம்மது பாத்தும்மா (வயது 77) டீ.எஸ்.சேனநாயக்க காலத்தில் பெரிய வீடுகளும், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கிணறும் அமைத்து தந்ததாகக் குறிப்பதடத்துடன், 1985ம் ஆண்டு இடம்பெற்ற மாணிக்கராசா வன்செயலில் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், எஞ்சிய எச்சங்கள் இந்திய இராணுவம் தமது வீடிருந்த பகுதியில் முகாமிட்டிருந்ததுடன், எல்லா வீடுகளையும் அழித்து விட்டதாக கண்ணீருடன் குறிப்பிடுகின்றார்.

யுத்தத்தினால் பாதிப்படைந்து இடம்பெயர்ந்து மீளக்குடியமர வசதி வாய்ப்புக்களைக் கோரிய போதும், இதுவரை பிரதேச செயலக அதிகாரிகள் ஒரு வீட்டினையாவது கட்டித்தர முன்வரவில்லை எனக்கூறும் ரஹுமா வீவி ( வயது 56) எமது காணிக்கான நிறைய ஆவணங்கள் கடந்த கால வன்செயல்களினால் வீடுகளிலிருந்தே தீயினால் அழிந்து விட்டன. எஞ்சியிருப்பது நில அளவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைபடமும், இன்னும் சில ஆவணங்களும் எனக்குறிப்பிட்டார்.

1956ம் ஆண்டுகளில் அப்போதைய அரசினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கிணறு இடிக்கப்பட்டு நில மட்டம் வரையே வெளித்தள்ளி இருக்கும் நிலையினைச் சுட்டிக்காட்டி இன்று தண்ணீர் எடுப்பதற்குக்கூட மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது எனக்குறிப்பிடுவதுடன், தொண்டு நிறுவனமொன்றினால் தற்காலிக குழாய்க்கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

வன்செயலினால் அழிந்து போன எமது நிலத்துக்கான ஆவணங்களைப்பெற பல முயற்சிகள் மேற்கொண்டும் பிரதேச செயலக அதிகாரிகள் நாளை வழங்குவோம் நாளை வழங்குவோம் என காலத்தையே இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். கடந்த முப்பது வருடமாக இப்பிரதேசம் யுத்த சூன்ய பிரதேசமாகக் காணப்பட்டதுடன், எமது காணியில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் போன்றன முகாமிட்டிருந்ததனால், இதில் மீள்குடியேற முடியாமலிருந்தது.

யுத்தத்திற்குப் பின்னரான சசூழ்நிலையில் மீளக்குடியேற முயற்சித்த வேளை, அதனைத் தடுக்க பல்வேறு நாசகார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பலமுறை எனது தற்காலிக வீட்டுக்கும், வேலிகளுக்கும் தீ வைக்கப்பட்டு இது தொடர்பில் பொலிசிலும் முறைப்பாடு செய்துள்ளேன்.

அத்தோடு, எனது நிலத்தை பாடசாலை விளையாட்டு மைதானத்திற்காக அபகரிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் சிலர் முயற்சித்த போது, பிரதேச செயலகம் எனது காணியில் மீளக்குடியமர அனுமதியளித்து கடிதமும் வழங்கியதுடன், புதிய ஒப்பம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டு, எல்.டி.ஓ ஒப்ப இல.5503 என்ற பதிவில் தனக்கு குறித்த காணி காணப்பட்டதாக நில அழவைப்படப் பிரதியொன்றினைக் காண்பித்தார் ஹசன்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஹசன் தனக்கு சீதனமாக தனது மனைவியின் தந்தை வெள்ளையர் முஸ்தபா லெப்பை இக்காணியை வழங்கியதாகவும், ஏற்கனவே பாடசாலைக்கு மைதானம் தேவை எனக்கூறிய போது, தனது காணியில் ஒரு பகுதியினை இனாமாக வழங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.

சக்தி வித்தியாலயமாகக் காணப்படும் இப்பாடசாலை தமிழ், முஸ்லிம் கலவன் பாடசாலையாகவே ஆரம்பத்தில் அமையப்பெற்றதாகவும், அதனால் தான் பாடசாலைக்கு முஸ்லிம்கள் காணியை வழங்க முன்வந்ததாகவும் காணி உரிமையாளர் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இத்தகைய  பின்னணிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, குறித்த காணி முஸ்லிம்களது பூர்வீகக்காணியாகவுள்ளதினை மறுப்பதற்கில்லை. உண்மையில் பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் அவசியமானதே. குறித்த பாடசாலை ஒரு ஆரம்பப் பாடசாலை என்பதுடன், நூறுக்கும் குறைவான மாணவர்களைக்கொண்டுள்ளது.

இவர்களுக்கான விளையாட்டு மைதானப்பூமி தற்போதுள்ள அளவில் போதுமானதாகவுள்ளது. சில போது, எதிர்கால நோக்கம் கருதி அதனை விஸ்தரிப்புச் செய்ய வேண்டியிருக்குமானால், அதற்கென உரிய முறையில் அணுகி அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே சிறந்தது.

முஸ்லிம் பிரதேசங்களில் அண்மையில் அமைக்கப்பெற்ற பாடசாலைகள் இடப்பற்றாக்குறையினை எதிர்கொள்கின்றன. அதற்காக அருகிலுள்ள தனியார் குடியிருப்புக்களை அடாத்தாகக் கையகப்படுத்துவது அநாகரிமானதும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் செயலுமாகும்.

எனவே, குறித்த காணி விடயத்தில் முறையான கலந்துரையாடலை இரு சமூகப்பிரதிநிதிகளும் எவரும் பாதிப்படையாத வகையில் மேற்கொண்டு தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கடந்த கால உரிமைப்போராட்டங்களின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக தமிழ், முஸ்லிம் சமூகம் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டமையை மறந்து விட முடியாது. எதிர்வரும் காலங்கள் சிறுபான்மையான இரு இனங்களுக்கும் மிக முக்கிய காலப்பகுதியாகும்.

இரு இனங்களும் ஒன்றித்தே தமக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு துண்டு நிலத்துக்காக இரு இனங்களையும் திட்டமிட்ட கலவரத்துக்குள் தள்ளி விட்டு, திட்டமிட்ட குடியிருப்புக்களைப் பெரும்பான்மை மேற்கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலில் கவனக்குவிப்பு திசை மாற்றப்படுவதனை இரண்டு சமூகங்களும் சிந்திக்க வேண்டும்.

இப்பிரச்சினையோடு தொடர்புபட்டுள்ள மதகுரு கடந்த காலங்களில் இனவாத அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலில் இனமுறுகளை ஏற்படுத்தி இருப்பதனை தமிழ் சகோதர சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை காணியில் இரண்டு சமூகங்களுக்கும் நடுவில் மூன்றாம் நபராக களமிறங்கி, இறுதியில் தொல்பொருள் ஆய்வுப்பகுதியாக மாற்றி, பொலிஸ் காவலரண்களை ஏற்படுத்தி இருப்பது ஒன்றே போதுமானது நன்கு சிந்திப்பதற்கு. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்குடா பகுதியில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரின் காணியில் நியாயம் பெற்றுத்தருவதாகக் கூறி மதகுரு ஒருவர் தமிழர் பூர்வீகப்பிரதேசத்தில் பௌத்த சிலையினை வைத்துக்கொண்டு முறுகளை ஏற்படுத்திய சம்பவங்கள் குரங்கு அப்பம் பிரித்த கதையாக இரண்டு இனங்களுக்கும் அமைந்து விடக்கூடாது.

குறித்த தேரரின் அண்மைக்கால அறிக்கைகளை நோக்கும் போது, அவராகவே இத்தகைய அறிக்கைகளை விடுவதாக எண்ணத் தோன்றவில்லை. பாரிய பின்னணியில் இக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றதென யூகிக்க முடிகின்றது. காணி போன்ற விடயங்களில் தமிழ், முஸ்லீம் இனங்களைப் பிரிக்க முயற்சிப்பது போல், அரசியல் ரீதியாகவும் தமிழ், முஸ்லீம் அரசியல் உறவுகளைப் பிரிக்க முயற்சிப்பதனைக் காண முடிகின்றது.

அண்மையில் கௌரவ அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களின் முயற்சியினால் உரிய அரச அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழகக் கல்லூரியின் வேலைத்திட்டங்களை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக முடிச்சுப்போடுவதும், அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் பயங்கரவாத காலப்பகுதியில் பேசிய பேச்சுக்களை நறுக்கி எடுத்து தமிழ் சகோதர இனத்துக்கு பிழையான அர்த்தம் கற்பித்து அமைச்சர் ஹிஸ்புல்லாவை தமிழ் சகோதர இனத்திலிருந்து தூரமாக்கும் நடவடிக்கையினை கச்சிதமாகச் செய்ய முற்படுவதனை காண முடிகின்றது.

இதே போன்றே, ஏனைய முஸ்லீம் அரசியல் பிரமுகர்களையும் தமிழ் சமூகத்திடமிருந்து தூரப்படுத்தும் அரசியல் உள்நோக்கமும் மேற்கொள்ளப்படுகின்றது. தேரர் அவர்கள் குறிப்பிடுவது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு அரச அலுவலகத்திலும் பாரியளவு முக்கிய பொறுப்புக்களை முஸ்லீம் அதிகாரிகள் கொண்டிருக்கவுமில்லை. அதற்காக போராடியதுமில்லை.

மாவட்டத்தில் 25 வீதத்திற்கும் கூடுதலான முஸ்லிம்கள் வாழ்ந்த போதும், இதுவரை ஒரு பிரதி அரச அதிபரை நியமிக்கக்கோரி எங்கும் ஆர்ப்பாட்டங்களோ அழுத்தங்களோ தெரிவிக்கவில்லை. ஆனால், கெவிளியாமடு, சிப்பிமடு பிரதேச பெரும்பான்மைச் சகோதர இனங்களின் குடியேற்றம் தொடர்பில் மாவட்டத்தில் சிங்கள பிரதேச செயலாளர்கள் நியமிக்கக்கோரியமை யாரென தமிழ் சகோதரர்கள் மறந்து விடவில்லை.

திறமை அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை. ஆனால், நாட்டில் எல்லாத்துறைகளிலும் அத்தகைய நடைமுறை  பின்பற்றப்பட்டால் வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழரும், முஸ்லிம்களும் செறிவாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டும் இவ்வாறு கோருவது எத்தகைய எதிர்காலப் பின்னணியைக் கொண்டது என்பதனை தமிழ் சகோதர இனம் புரிந்து கொள்ளும் என நினைக்கின்றேன்.

எனவே, அண்மையில் தமிழ் முஸ்லீம் சகோதர இனங்களுக்கு மத்தியில் வன்முறையைத் தோற்றுவித்து சகோதர இனச்சண்டையை ஏற்படுத்தி, குளிர்காய முனையும் இத்தகைய உண்மைக்குப்புறம்பான நடவடிக்கைகளை தமிழ் சகோதர சமூகம் நன்கு புரிந்து கொண்டு இத்தகைய நபர்களையும், செய்திகளையும் தூரத்தே வைக்கின்ற புத்திசாதுர்யமான நடவடிக்கியினை மேற்கொள்வது சாலச்சிறந்ததாகும்.1 2 3 4 5ereg ff rrrrrr scs sdsasscee ssasa Untitled-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here