பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காக பெற்றோர்கள் மத்தியில் மாற்றங்கள் உருவாக வேண்டும்-மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி.முத்தலிப்

0
301

DSC_0279இக்பால் அலி
உண்மையிலேயே மத்திய மாகாணத்தில் முஸ்லிம்  பட்டதாரி ஆசிரியர் நியமன விடயத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இப்புதிய நியமனத்தில் முஸ்லிம் பட்டதாரி ஆசிரியர்கள் மனவிரக்தியடைந்துள்ளார்கள். அவர்கள் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்ககழகம் சென்று தொழில் நியமனம் பெற்றுக்கொள்ளும் வரையிலும் கஷ்டங்களை எதிர்நோக்கியே வருகின்றார்கள்.

சமீபத்தில் மத்திய மாகாண சபையினால் வழங்கப்பட்ட  புதிய பட்டதாரி முஸ்லிம் ஆசிரியர் நிமயன விடயத்தில் தங்களுக்கு வசதியான பாடசாலை கிடைக்கவில்லையென்கின்ற மனவிரக்தியிலுள்ளனர். ஆசிரியர் சேவையென்பது புனித சேவையாகும். அதை மனச்சந்தோசத்துடன் பரிபூரணமாக, சிரமமின்றி செய்தல் அவசியமாகும். இதைச்செய்வதென்றால் மன ஆறுதலும் மனநிம்மதியும் இருத்தல் வேண்டும்.

எனவே, அந்த வகையில் இவர்களுக்கான  நியாயமான தீர்வைப்பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் ஹலீம் முதல் கொண்டு மத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் உள்ளிட்ட பலர் கூடிய கவனஞ்செலுத்தி வருகின்றனர். இந்த முயற்சிகள் வெற்றியளிக்கப்பட வேண்டுமென்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி.முத்தலிப் தெரிவித்தார்.

முத்தலிப் அபிவிருத்தி மன்றத்தினால் அக்குரணை அஸ்ஹர் ஆரம்ப மாதிரிப்பாடசாலையில் ஐந்தாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு பாடசாலை அதிபர் ஜின்னாஸ் தலைமையில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி.முத்தலிப் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
சிலர் காலடியில் பாடசாலை கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். அது தவறானதாகும். எனினும், ஆசிரியர் பற்றாக்குறையாகக் காணப்படும் பாடசாலைகளுக்கே ஆசிரியர்கள் கட்டாயமாகச் செல்ல வேண்டும். அதே நேரம், அவர்கள் போக்குவரத்துச் சிரமமின்றி செல்லக்கூடிய பாடசாலையாகவும் இருத்தல் வேண்டும்.

கஷ்டப்பட்டுக்கொண்டு சென்று அவர்கள் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாது. ஆசிரியர் தொழில் என்பது சேவை மனப்பாங்கைக் கொண்டது. அந்தத்தொழிலை சிரமங்களின்றிச்செய்ய வேண்டும்.  மன ஆறுதலும், நிம்மதியும் இருத்தல் வேண்டும். எனவே, அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கு ஆளுநரும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் முடிந்தளவு முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆசிரியர் இடப்பற்றாக் குறையைக் கருத்திற் கொண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை வசதிக்கேற்ப புதிய பாடசாலைக்கு மீளவும் நியமனஞ்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி செய்துள்ளார்ககள்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எல்லோருக்கு பொறுப்புக்கள் உள்ளன. அந்த வகையில், சமூகத்தின் தேவை கருதி எதற்காகச் சேவையாற்ற வேண்டுமோ, நாங்கள் அவற்றைத்தெரிவு செய்து சேவையாற்றி வருகின்றோம்.

நாங்கள் சமூக சேவை என்று வரும் போது, இலாபம் நஷ்டம் கணக்குப்பார்ப்பதில்லை. மிகவும் முக்கியமாக எதிர்பார்ப்பது அல்லாஹ்விடத்திலிருந்து கிடைக்கும் கூலி ஒன்றை மட்டும் தான். கல்வி பற்றிய விழிப்புணர்வு போதியளவு பெற்றோர்கள் மத்தியில் இல்லை. நாங்கள் மாணவர்களின் மேம்பாட்டுக்கான தேவையைக்கருத்திற் கொண்டு எந்நேரமும் செயற்படுவதோடு, பெற்றோர்களையும் கல்வியின் பால் அக்கறை கொள்ளச்செய்வதில் கணிசமானளவு பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றோம்.

முஸ்லிம்களுக்கெதிராக  நாட்டில் நிலவும் சமகாலப்பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, எதிர்கால வாழ்வைப்பற்றிச் சிந்தித்து நாம் செயலாற்ற வேண்டியிருக்கிறது.

நம் சூழல் எவ்வாறுள்ளது. நம்முடைய பிள்ளைகள் யாரோடு தோழமை கொண்டுள்ளார்கள். அவர்கள் எங்கே செல்கின்றார்கள் என்பன போன்ற விடயங்களில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிள்ளைகளை பரீட்சையில் சித்தியடையச் செய்வது கஷ்டமான விடயமல்ல. நாம் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கினால், நிச்சயம் வெற்றியடைவார்கள். அவர்களை வெற்றியடைச் செய்வற்காகத்தான் நாமும் உங்களோடு சேர்ந்து பணியாற்றுகின்றோம்.

பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காக பெற்றோர்களின் மத்தியில் மாற்றங்கள் உருவாக வேண்டும். இதற்குப் பொறுமை அவசியமாகும். பிள்ளைகள் அன்றன்று படிக்கும் பாடங்களை பெற்றோர்கள் அவதானித்து, அப்பாடங்களை பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பிள்ளைகளை ஆசிரியர்களாக மாற்றி, பெற்றோர்கள் பொறுமையாக இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாடசாலையில் ஒரு பாடம் நடப்பது 40 நிடமிடமாகும். எனவே, குறைந்தளவு நேரத்தில் பிள்களைகள் முழுமையான கல்வியை பாடசாலையிலிருந்து கற்றுக் கொள்ள முடியாது. கூடுதலான நேரங்கள் பிள்ளைகள் வீடுகளிலேயே பெற்றோர்களின் பொறுப்புகளிலேயுள்ளன. பிள்ளைகளின் கல்வி விடயத்தில் முக்கிய பொறுப்பு பாடசாலைக்கல்ல பெற்றோர்களிடத்திலேயே தங்கியிருக்கிறது.

இதற்காகத்தான் பெற்றோர்கள் பற்றிப் பேசுவதற்காக வளவாளர்களைக் கொண்டு செயலமர்வுகளை நடத்தி வருகின்றோம். மாணவர்கள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து பரீட்சைகள் நடத்தி, அது தொடர்பான செயலமர்வுகளையும் வீட்டிலிருந்து பயற்சிகளைச் செய்வதற்காக ஒரு கையோட்டையும் வழங்கி, பரீட்சையை இலகுவாக எதிர்கொள்வதற்கான வழிகளைக்காட்டி வருகின்றோம். இவையாவும் எமது முத்தலிப் அபிவிருத்தி மன்றம் இலவசமாகச் செய்து வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் எமது முத்தலிப் அபிவிருத்தி மன்றம் மட்டுமல்லாமல், சமூகத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் நலன் விரும்பிகளும், செல்வந்தர்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் நாம் எதிர்காலத்தில் ஏனைய சமூகங்களுடன் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சமூகமாக இருக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண்டி பிரதான வளவாளர் அனஸ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.DSC_0262 DSC_0264 DSC_0272 DSC_0279

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here